கோபுலு என்கிற ஆலமரம்

பழைய புத்தகக் கடைக்காரர்களுக்கு கோபுலு ஓவியங்களின் மதிப்பு நன்கு தெரியும். எனவே கோபுலு படங்களுடன் உள்ள பைண்ட் செய்யப்பட்ட தொடர்கதைகளுக்கு அவர்கள் அதிக விலை கூறுவார்கள். கோபுலுவின் சித்திரங்களுக்காகத் தேடித்தேடி வாங்கும் பழைய புத்தக அன்பர்கள், கூடுதல் விலையை ஒருபோதும் பொருட்படுத்தியதில்லை.
கோபுலு என்கிற ஆலமரம்
Updated on
2 min read

பழைய புத்தகக் கடைக்காரர்களுக்கு கோபுலு ஓவியங்களின் மதிப்பு நன்கு தெரியும். எனவே கோபுலு படங்களுடன் உள்ள பைண்ட் செய்யப்பட்ட தொடர்கதைகளுக்கு அவர்கள் அதிக விலை கூறுவார்கள். கோபுலுவின் சித்திரங்களுக்காகத் தேடித்தேடி வாங்கும் பழைய புத்தக அன்பர்கள், கூடுதல் விலையை ஒருபோதும் பொருட்படுத்தியதில்லை.

ஆனந்தவிகடன் வார இதழைக் கோபுலுவின் ஓவியங்கள் நிறைய அலங்கரித்தன. ஜெகசிற்பியனின் ஆலவாய் அழகன், திருச்சிற்றம்பலம், தேவனின் துப்பறியும் சாம்பு, கொத்தமங்கலம் சுப்புவின் தில்லானா மோகனாம்பாள், ராவ்பகதூர் சிங்காரம், சுந்தாவின் யாருக்கு மாலை, சாவியின் வாஷிங்டனில் திருமணம், நா.பார்த்தசாரதியின் நித்திலவல்லி போன்ற பல தொடர்களின் பாத்திரங்கள், விகடனில் கோபுலுவின் தூரிகையால் உயிர்பெற்றன. அண்மையில் மறைந்த ஜெயகாந்தனின் ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் என்ற அழகியல் செறிவு நிறைந்த தொடர்கதையின் கதாநாயகன் ஹென்றிக்கு கோபுலு வரைந்த உயிரோவியம் மறக்க இயலாதது.

விகடன், குமுதம், கல்கி, தினமணி கதிர் எனத் தமிழின் முன்னணி வார இதழ்கள் அனைத்திலும் கோபுலு வரைந்தார். அமுதசுரபி போன்ற மாத இதழ்களிலும் அவரது ஓவியங்கள் நிறைய வெளிவந்தன. அமுதசுரபி கடந்த பல ஆண்டுகளாகத் தன் தீபாவளி மலர் அட்டையில் கோபுலுவின் சித்திரங்களையே தொடர்ந்து வெளியிட்டு வந்தது.

தினமணி கதிரில் ஓவியம் வரைவதைக் கோபுலு பெரிதும் விரும்பினார். காரணம் கதிர் வார இதழின் பரப்பளவு. மற்ற இதழ்களைப் போல் அல்லாமல் கோபுலுவின் ஓவியம் பெரிதாக கதிரில் வெளியாவதைக் கண்டு மகிழ்ந்தார் அவர்.

சாவியும் கோபுலுவும் இணைபிரியாத நண்பர்களாக இருந்தார்கள். சாவி எழுதிய பயண இலக்கியம் பலவற்றிற்கு, அஜந்தா, எல்லோரா, ஜெய்ப்பூர் உள்ளிட்ட பல இடங்களுக்கு உறுதுணையாக உடன் சென்றவர் கோபுலு. சாவி தன் இறுதிக் காலங்களில் கோபுலுவைத் தன் நடைப்பயிற்சி நண்பராகக் கொண்டிருந்தார். சாவியின் வழிப்போக்கன், வாஷிங்டனில் திருமணம், விசிறி வாழை போன்ற தொடர்களின் வசீகரமான எழுத்து நடைக்குத் தன் தூரிகையால் எழில் சேர்த்த கோபுலு, சாவியின் காலை நடைக்கும் உடன் துணையாக நடந்தார். சாவி காலமானதைத் தன் வாழ்வின் மிகப்பெரிய இழப்பாகக் கருதினார் கோபுலு. தினமணிகதிரில் சாவி ஆசிரியராக இருந்த காலத்தில் கோபுலுவின் ஓவியங்கள் நிறைய கதிரை அலங்கரித்தன. கோபுலுவின் ஓவியங்களோடு தினமணிகதிரில் தொடராக வெளிவந்த ஜெயகாந்தனின் "சில நேரங்களில் சில மனிதர்கள்' நாவல் சாகித்ய அகாதமி பரிசுபெற்றது.

கே.ஆர். வாசுதேவன், தீபம் நா. பார்த்தசாரதி, கி. கஸ்தூரிரங்கன் என சாவிக்குப் பின் அடுத்தடுத்து வந்த கதிர் ஆசிரியர்களும் கோபுலுவின் பெரும் விசிறிகளாக இருந்தார்கள். கோபுலுவின் படங்களை மிகுந்த ஈடுபாட்டோடு அவர்கள் கேட்டு வாங்கி வெளியிட்டார்கள்.

கி. கஸ்தூரிரங்கன் தினமணிகதிர் ஆசிரியராய் இருந்த காலகட்டத்தில், கஸ்தூரிரங்கனின் தில்லி நண்பரான க.நா. சுப்பிரமணியம் கதிரில் "கோதை சிரித்தாள்' என்ற தொடர் நாவலை எழுதினார். அந்தத் தொடருக்குக் கோபுலு ஓவியம் வரையவிருக்கிறார் என்று சொன்னதும் க.நா.சு. அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இந்திரா பார்த்தசாரதி கதிரில் எழுதிய தொடர்களுக்கெல்லாம் கோபுலுதான் ஓவியங்கள் வரைந்தார்.

÷ராஜம் கிருஷ்ணன் தன் தொடர் நாவலை அத்தியாயம் அத்தியாயமாக அனுப்பமாட்டார். மொத்தமாக எழுதி அனுப்பி விடுவார். அவரது "மண்ணகத்துப் பூந்துளிகள்', "பாதையில் பதிந்த அடிகள்' என்ற இரண்டு நாவல்கள் தினமணிகதிரில் கோபுலுவின் சித்திரங்களோடு தொடர்களாக வெளியிடப்பட்டன.

÷"மண்ணகத்துப் பூந்துளிகள்' நாவல் தொடராக வெளியாகப் போகிறது என்று ராஜம் கிருஷ்ணனிடம் தெரிவித்தபோது, ""அவர் இதுவரை என் படைப்பு எதற்கும் கோபுலு படம் வரைந்ததில்லை. அவரது சித்திரங்கள் என் தொடருக்கு அமையுமானால் மகிழ்வேன்'' என வேண்டுகோள் வைத்தார். அதுபற்றிக் கோபுலுவிடம் சொன்னபோது, ""நான் அவரது எழுத்துகளின் ரசிகனாயிற்றே இதுவரை அவர் படைப்புக்கு நான் ஓவியம் வரைய நேர்ந்ததே இல்லை. அவரது எழுத்துக்கு என் சித்திரம் இடம்பெறுவது எனக்கல்லவா கௌரவம்'' என்று கூறி மிகுந்த ஈடுபாட்டோடு சித்திரங்கள் வரைந்து தந்தார். கோபுலு ஓவியர் மட்டுமல்ல, மிகச் சிறந்த இலக்கிய ரசிகரும் கூட. எழுத்தாளர்கள் தங்கள் படைப்பு கோபுலுவின் ஓவியத்தோடு வெளிவருவதைத் தங்கள் எழுத்துக்குக் கிடைக்கும் பெரிய அங்கீகாரமாகக் கருதினார்கள்.

கோபுலுவைப் பொறுத்தவரை தாமதம் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது. என்று ஓவியம் தருவதாக ஒப்புக்கொண்டாரோ அன்று சரியாக ஓவியம் வரைந்து அனுப்பிவிடுவார். எங்காவது வெளியூர் போவதாக இருந்தாலும் முன்கூட்டியே தகவலைச் சொல்லி ஓவியத்திற்கான கருத்தைக் கேட்டுக் கொண்டு, அந்தக் கருத்தின்படி சித்திரத்தை முன்கூட்டியே அனுப்பிவிடுவார். பணி ஒழுங்கு என்றால் என்ன? என்று இன்றைய ஓவியர்கள் அவரிடம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

÷சில ஆண்டுகள் முன்பு அவரைப் பக்கவாதம் தாக்கி அவரது வலக்கரம் பாதிக்கப்பட்டிருந்தது. ஒரு சில மாதச் சிகிச்சைக்குப் பின் அதிலிருந்து மீண்டார். ஆனால், வலக்கரம் பாதிக்கப்பட்டிருந்தபோதும், இடக்கரத்தால் தூரிகையைப் பிடித்து அவர் முன்போலவே பத்திரிகைகளுக்கு வரைந்து கொண்டிருந்தார். அந்த அபாரமான சாதனை பற்றி அவரிடம் கேட்டபோது, ""சித்திரத்தைக் கையா வரைகிறது? மூளையல்லவா வரைகிறது. கை மூளையின் தூரிகை தானே? வலக்கரம் இல்லாவிட்டால் இடக்கரம். அவ்வளவுதான்'' என்று இயல்பாகக் கூறினார்.

இன்று வாழும் ஓவியர்கள் அனைவராலும் பீஷ்ம பிதாமகர் போலக் கொண்டாடப்பட்ட ஓவியக் கலைஞர் அவர். அவரது புகழ் வரலாற்றின் பக்கங்களில் அழகிய சித்திரங்களாக நிரந்தரமாக இடம் பெற்றிருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com