மனசுல பதிஞ்சது எல்லாம் வெளியாக வேண்டாமா?
புதியபார்வை தொடங்கிய நேரம். ஓர் இதழுக்கும் இன்னோர் இதழுக்கும் தொடர்பு இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு கட்டுரைத் தொடரோ, தொடர் கதையோ எழுதப்பட வேண்டும் என்ற முடிவில் சில எழுத்தாளர்களை அணுகியபோது அவர்கள் தயங்கினார்கள். "" பத்து இதழாவது வெளிவரட்டும்'' என்று இழுத்தார்கள். அவர்கள் பயம் அவர்களுக்கு.
நான் ஏற்கெனவே எழுதி வைத்திருந்த " மனிதம்' என்ற தலைப்பிட்ட நாவலைத் தொடராக வெளியிட யோசனை தெரிவித்தார், கலைஞன் மாசிலாமணி. அப்போது எனக்கு உற்ற துணையும் நல்ல ஆலோசகராகவும், என்னைத் தேற்றுகிறவராகவும் அவர் இருந்தார். இந்த முடிவை புதியபார்வை ஆசிரியர் ம. நடராசனிடம் தெரிவித்தபோது, ""உங்கள் முடிவுப்படி செய்யலாம்' என்று பச்சைக்கொடி காட்டினார்.
எழுத்தாளர் பெயர் போடாமல், எழுதுவது யார்? என்று வாசகர் பங்கேற்புக்கு விட்டுவிடலாம். அது உடனடி கவனத்தைக் கவரும் என்று முடிவு செய்தோம்.
இதன்படி, தொடர்கதைக்குப் படம் போட கோபுலுவைக் கேட்டுக்கொள்வது என்று முடிவு. ஏற்கெனவே குங்குமத்தில் இருந்த 15 ஆண்டுகளில் - ஏராளமான தொடர்களுக்கு சித்திரம் வரைந்ததினால் உள்ள நெருக்கம்.
கோபுலுவிடம் தொடர்பு கொண்டு பேசினேன்: ""கீழத்தஞ்சை மாவட்டக்கதையாக 1890-இல் தொடங்கி ஒரு நூற்றாண்டு தொடர்ந்து நடைபெறும் கதை. ஐந்து தலைமுறைகளின் வாழ்க்கைக் கதை. மூன்று பாகங்களில் சொல்லத் திட்டமிட்டிருக்கிறோம். கதையின் சம்பவங்கள் அந்தந்தக் காலகட்டத்தைப் பிரதிபலிக்கும் வகையில் சித்திரங்கள் அமைய வேண்டும். எழுத்தாளர் பெயர் பத்தாவது அத்தியாயத்தில்தான் அறிவிக்க எண்ணம்'' என்று கூறியதும்,
கோபுலு ""ஓ! தாராளமாக! கதைக்குத்தானே படம், பேஷாச் செய்யலாம்'' என்று பெருந்தன்மையோடு சம்மதம் தெரிவித்தார்.
" மனிதம்' என்கிற நாவலின் தலைப்பு " நல்லநிலம்' என்று மாற்றப்பட்டது. தொடர்கதை ஆரம்பமாயிற்று. பத்து இதழ்கள் வரை எழுதுவது யார்? என்ற அறிவிப்பில்லை. அந்தப் பத்து அத்தியாயங்களுக்கிடையே கோபுலு எழுதுவது யார் என்ற கேள்வியை எழுப்பவே இல்லை. பத்து இதழ் - மாதமிருமுறை என்றவகையில் ஐந்துமாதங்களுக்குப் பிறகுதான் எழுத்தாளர் விவரம் தெரியவரும். பிரபல எழுத்தாளர்கள் இதுகுறித்து சிலாகித்தாலும் சிரித்து மழுப்பிவிடுவேன். வாசகர்கள் பெரும்பாலானோரின் கருத்து " எழுத்தாளர் சூடாமணி'தொடரை எழுதுகிறார் என்று இருந்தது. அதுதவிர தங்களுக்குத் தெரிந்த எழுத்தாளர்களின் பெயரையெல்லாம் வாசகர்கள் எழுதியிருந்தார்கள்.
பத்தாவது இதழில் " நல்லநிலம்' - எழுதுபவர்: பாவைசந்திரன் என்று அறிவிப்புடன் பெயர் வெளியானது. பலருக்கும் இது ஆச்சரியம். இதற்கான உண்மைக் காரணம் இதற்கு முன்பு நான் நாவல் எழுதாததே! அதுவரை மற்றவர்களின் எழுத்துக்களைத் தேடித்தேடி வாங்கிச் செப்பனிட்டு வெளியிடுவதுதான் எனது பணியாக இருந்தது.
கதையை எழுதுவது நான்தான் என்று கோபுலு அறிந்ததுமே என்னைப் போனில் கூப்பிட்டுப் பெரிதும் பாராட்டினார். ஒரு கட்டத்தில் ""பட்டுநெசவு போல் அழகான நெசவு உங்கள் எழுத்து. எழுத வர்றது, நெறைய எழுதுங்கோ'' என்று அத்தியாயத்துக்கு சித்திரம் அனுப்புகையில் குறிப்பு போல எழுதியனுப்பினார்.
எனது எழுத்தைவிடவும் அவரது சித்திரங்கள் பேசின. ஏராளமான கதாபாத்திரங்கள் காமு என்கிற காமாட்சி, சுப்புணி என்கிற சுப்ரமணியன், மாணிக்கம்பிள்ளை. லட்சுமி, குழந்தைவேலு, மீனாம்பா, கதிர்வேலு, நமசிவாயம், பஞ்சாங்கக்கார அய்யர், கோகிலத்தம்மா, சீத்தாம்மா ஆகிய கதாபாத்திரங்கள் அவரது ஓவியத்தில் உயிர் பெற்றனர்.
இன்னொரு சந்தர்ப்பத்தில், "" பிராமணிக்கலான கதைகளுக்கு ஏராளமான சித்திரங்கள் தீட்டியிருக்கீங்க. இந்தக் கதைக்கு படம் வரைவதில் சிரமமாகத் தோணுதா?'' என்று கேட்டேன்.
"" "உயிர்த்தேன்' - "செம்பருத்தி' - "ஊரார்' - "ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு உலகம்' கதைகள் பிராமணர் அல்லாதார் சம்பந்தப்பட்ட கதைகள்தானே! ஒரு காலத்தில் பிராமின் கதைகளா வந்தது. காலப்போக்கில் அது மாறிட்டே வர்றது. ஒண்ணும் சிரமமில்லே -
மனசுல பதிஞ்சது எல்லாம் வெளியாக வேண்டாமா?''
என்றார்.
முதல் அத்தியாயத்தில் தொடங்கி 72 அத்தியாயங்கள் கிட்டதட்ட 3 ஆண்டுகளாக வெளிவந்த தொடர். முதல் பாகம் முடிவுற்றது.
தற்போது கோபுலுவின் 72 ஓவியங்களுடன் நல்லநிலம் முதல்பாகத்தின் இரண்டாம் பதிப்பு விற்பனையில். அவரிடம் முதல்பிரதியுடன் சிறிய அளவில் பணம் வைத்த கவரையும் அளித்தேன். அவர் பதறினார். ""எனக்குப் புத்தகம் மட்டும் போதும். பணத்தை வேறு நல்லவிஷயத்துக்குப் பயன்படுத்திக்கோங்கோ'' என்று குழந்தை போல் சிரித்தார். அந்தச் சிரிப்புதான் "நல்லநிலம்' நாவலுக்கும் எனக்கும் கிடைத்த மிக உயர்ந்த விருது!
அட்டைப்பட ஓவியம் : மணியம் செல்வன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.