

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கப் போகிறார் என்கிற செய்தி காட்டுத் தீயாய்ப் பரவிவிட்டது. செய்திகள் வெளியானது குறித்து அதிர்ச்சி அடைந்த ரஜினி, எல்லா வேலைகளும் முடிந்து அறிவிப்பை வெளியிட்டு இருக்கலாம் எனச் சொல்லியிருக்கிறார். தற்போது சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் ஓய்வெடுத்து வரும் ரஜினி, அவ்வப்போது கதை விவாதங்களில் கலந்து கொள்கிறார்.
இப்படம் தவிர தொடர்ச்சியாக அடுத்தடுத்து இரு படங்களில் நடிக்கவும் ரஜினி முடிவு செய்துள்ளார். ஷங்கர் இயக்கத்தில் ஒரு படமும், சுந்தர்.சி இயக்கத்தில் ஒரு படமும் நடிக்க அவர் முடிவு எடுத்துள்ளதாகத் தெரிகிறது. எந்திரன் படத்தின் தொடர் பாகமாக உருவாகும் படத்தை ஷங்கர் இயக்குகிறார். இப்படத்துக்கு நம்பர் 1 என பெயரிடப்பட்டுள்ளது. திரைக்கதை வடிவமைப்பு முடிவடைந்துள்ள நிலையில், படப்பிடிப்புக்காக காத்திருக்கிறார் ஷங்கர். ரஜினிக்கு இணையான கதாபாத்திரம் ஏற்று இப்படத்தில் நடிக்க உள்ளார் விக்ரம். ஷங்கர் கேட்டுக் கொண்டதையடுத்து ரஜினியும் இதை ஒப்புக் கொண்டுள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என 4 மொழிகளில் உருவாக உள்ளது. சந்திரமுகி படத்தின் வேட்டையன் கதாபாத்திரத்தை முன்னிறுத்தி சுந்தர்.சி கதை சொல்லியிருக்கிறார். இந்த திரைக்கதை இன்னும் முழு வடிவம் பெறவில்லை.
பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ஹைக்கூ. நட்சத்திர அந்தஸ்தை முன்னிறுத்தாமல் குழந்தைகளின் உலகத்தை படம் பிடிக்கும் இப்படத்தில் சூர்யா பிரதான கதாபாத்திரம் ஏற்கிறார். அமலா பால், பிந்துமாதவியோடு ஏராளமான குழந்தைகள் நடிக்கின்றனர். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது. சூர்யா, அமலா பால் இரு குழந்தைகள் என மேலும் சில படங்களும் இணைந்து இணையத்தில் வெளியானது. சூப்பர் பவர் அறிவாளிகளாக இருக்கும் குழந்தைகளை இந்த சமுதாயம் எப்படி பார்க்கிறது. அவர்களுக்கு நடக்கும் பிரச்னை என்ன என்பதே படத்தின் கதையாம். இதே பாணியில் அமீர்கானின் 'தாரே ஸமீன் பார்' படம் வெளியானது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படத்தில் சூர்யா தமிழ்நாடன் என்ற பெயரில் குழந்தைகளின் மனநலம் மற்றும் குணங்களை ஆராய்ந்து தீர்வு காணும் கதாபாத்திரம் ஏற்று நடிக்கிறார். அமலா பால் ஆசிரியையாக நடிக்கிறார். தன் குழந்தையின் பிரச்னை என்ன என தெரியாமல், தவிக்கும் அம்மா கேரக்டரில் பிந்துமாதவி நடிக்கிறார். குழந்தைகள் மற்றும் மாணவர்களின் நலனில் அக்கறை செலுத்தும் விதமாக இப்படத்தை குறைந்த முதலீட்டில் உருவாக்கி வருகிறார் சூர்யா.
அடுத்தடுத்து செய்திகளில் உலவிக் கொண்டிருக்கிறார் த்ரிஷா. வருண் மணியனோடு நிச்சயதார்த்த முறிவு ஏற்பட்டு திருமணம் நின்று போன செய்திகள் வெளியான உடனே, அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமானார். செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு ஜோடியாக நடிக்க அவர் ஒப்பந்தமாகியிருந்தார். அந்தப் படத்தின் போட்டோ ஷூட்டிலும் கலந்துகொண்டார். அதைப் பற்றி பெருமையாகவும் பேசினார். அதன்பின் அதிரடி மாற்றங்கள் நடந்திருக்கின்றன. அந்தப்படத்தின் படப்பிடிப்பு இந்த மாதத்திலேயே தொடங்குவதாக திட்டமிடப்பட்டது. முதல் நாளிலிருந்தே த்ரிஷா நடிப்பது போல் காட்சிகளைப் படமாக்கத் திட்டமிட்டிருந்தார்களாம். படப்பிடிப்புக்குத் தயாராகிக் கொண்டிருக்கிற நேரத்தில் படக்குழுவினரைத் தொடர்பு கொண்ட த்ரிஷா, அரண்மனை 2 மற்றும் கமல் படங்களில் நடிக்கவிருப்பதால் இந்தப்படத்தில் நடிக்கத் தேதிகள் இல்லை என்று சொல்லி அதிர்ச்சியளித்திருக்கிறார். படப்பிடிப்புத் தொடங்குகிற நேரத்தில் த்ரிஷா தரப்பின் இந்த வார்த்தையால் செல்வராகவன் தரப்பு கடும் கோபமடைந்துள்ளது. இதையடுத்து புது ஹீரோயின் தேர்வில் ஈடுபட்டிருக்கிறார் செல்வராகவன்.
கெüதம்மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் "அச்சம் என்பது மடமையடா' படத்தின் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த பல்லவி சுபாஷ் தற்போது அப்படத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார். படம் மிகவும் தாமதமாவதால் அவர் விலகிக் கொண்டார் என்று சொல்லப்படுகிறது. அதற்குப் பிறகு இந்தப்படத்தில் நாயகியாக நடிக்க வைப்பதற்காகப் பல பெயர்களைப் பரிசீலித்து வந்த கெüதம்மேனன், சிம்பு ஜோடியாக சமந்தாவை தேர்வு செய்துள்ளார். சமந்தா இப்போது விக்ரமுடன் "பத்து எண்றதுக்குள்ள', சூர்யவுடன் "24', தனுஷ் படம் என மூன்று படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இது தவிர தெலுங்கிலும் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். எனவே அவருடைய தேதிகள் கிடைப்பது கடினமாக இருக்கிறதாம். இருந்தாலும் கெüதம் மேனன் படத்தில் நடிக்க சமந்தா தயாராக இருப்பதால் தேதிகள் எப்போது என்பதை முடிவு செய்துவிட்டு அதுபற்றிய அறிவிப்பை வெளியிடலாம் என்று படக்குழு காத்திருக்கிறது. சமந்தாவை நடிக்க வைக்க இன்னொரு காரணமும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. "விண்ணைத் தாண்டி வருவாயா' படத்தின் தெலுங்குப் பதிப்பில் சமந்தா நடித்திருந்தார். இந்தப் படத்தையும் அதுபோலவே தமிழ் தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் உருவாக்கத் திட்டமிட்டுள்ளார் கெüதம்மேனன்.
மோஹித் சூரி இயக்கத்தில் வித்யா பாலன், இம்ரான் ஹாஷ்மி, ராஜ்குமார் ராவ் நடிக்கும் இந்தி படம் ஹமாரி அதுரி கஹானி. விஷேஷ் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தை ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் வெளியிடுகிறது. குடும்பம், கணவன் மனைவி உறவு என கதையம்சம் கொண்ட இப்படம் ஜூன் 12ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் படத்தின் டிரெய்லர் கடந்த வாரம் வெளியாகியுள்ளது. எதையுமே வித்யாசமாக செய்யும் வித்யா பாலன் இப்படத்திற்காக நிஜமாகவே அறை வாங்கியுள்ளார்.
படத்தின் ஒரு காட்சியில் வித்யாபாலன், ராஜ்குமார் ராவ் இருவருக்கும் சண்டை வலுவாகி வித்யா பாலன் கன்னத்தில் ராஜ்குமார் ராவ் "பளார்' என அறைவது போல் காட்சி உள்ளது. இந்த காட்சி எடுக்கும் போது டேக் சொன்னதும் ராஜ்குமார், வித்யா பாலன் கன்னத்தில் உண்மையிலேயே ஓங்கி அறைந்து விட்டாராம். ஒரு நிமிடம் மொத்த படக்குழுவும் அதிர்ச்சியில் உறைந்து போக, பிறகு வித்யா பாலன் காட்சியை முடித்துவிட்டு, ""நான்தான் அறைய சொன்னேன். காட்சி இயல்பாக வர வேண்டும் என்பதற்காக நானும் ராஜ்குமாரும் இணைந்து தான் இந்த முடிவு எடுத்தோம்'' என கூறியுள்ளார். இந்த ஒற்றைக் காட்சி சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரெய்லரில் கூட இடம் பிடித்துள்ளது.
அஜித் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் சென்னையில் தொடங்கியுள்ளது. அஜித்துக்குத் தங்கையாக இப்படத்தில் நடிக்கிறார் லட்சுமிமேனன். முதற்கட்ட படப்பிடிப்பில் அஜித் - லட்சுமிமேனன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாகி வருகின்றன. ஸ்ருதிஹாசன் உடனான அஜித்தின் காட்சிகள் பின்னர் படமாக்கப்படுகின்றன. கடந்த மாதம் ப்ளஸ் டூ தேர்வை எழுதி முடித்த லட்சுமிமேனன் தேர்வில் தோல்வியடைந்து விட்ட
தாகச் செய்திகள் வெளியாகின. இத்தகவல் வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக் உள்ளிட்ட இணைய தளங்களில் வேகமாகப் பரவியது. லட்சுமிமேனனின் ரசிகர்கள் இந்த பதிவுக்கு வருத்தம் தெரிவித்தன. இத்தகவல் அறிந்த லட்சுமிமேனன் அதற்கு வாட்ஸ் ஆப் மூலமாக பதிலளித்து இருந்தார். அதில்... ""நான் ப்ளஸ் டூ தேர்வு எழுதியது உண்மைதான். ஆனால் எனக்கு இன்னும் தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. ஜூன் மாதத்தில்தான் முடிவுகள் வெளியாகி வருகின்றன'' என செய்திகள் அனுப்பிய லட்சுமிமேனன், அஜித் பட படப்பிடிப்பில் இருக்கும் போட்டோவையும் அனுப்பி வைத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.