
என் மகனுக்கு வயது 8. குடலில் நாடா புழுக்கள். எத்தனை மருந்து கொடுத்தாலும் மறுபடியும் வந்துவிடுகிறது. நிறைய கோழை, சளி ஆகியவற்றாலும் அவதிப்படுகிறான். மேலும் அதிகம் விளையாடிவிட்டு வந்தால் மூட்டு வலிக்கிறது என்கிறான். என் 14 வயது மகளுக்கு முகப்பருக்கள் உள்ளன. இதற்கு ஏதேனும் எளிய கைவைத்தியம் உள்ளதா?
-கஸ்தூரி, ஸ்ரீரங்கம்.
குழந்தைகளுக்கு இதுபோன்ற புழுக்கள் ஏற்படுவதற்கு காரணம் என்ன என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும். காரணத்தை நீக்கினால் காரியம் சரியாகிவிடும் என்பதால் அதிக அளவில் பட்சணங்கள், இனிப்பான தின்பண்டங்கள், காரமான சிப்ஸ் வகையறாக்கள், ஐஸ்க்ரீம், குளிர்பானங்கள் போன்றவற்றை அவர்கள் எவ்வளவுதான் கேட்டாலும் குழந்தையின் மீதுள்ள பாசத்தினால் தாயும், தந்தையும் வாங்கித் தருவதை பெருமளவு குறைத்துக் கொள்ள வேண்டும். உறவினர்கள் அதைத் தருவதாக இருந்தாலும் அவற்றைக் கட்டுப்படுத்துவதும் நலமே. இதனால் ஏற்படும் மன வருத்தத்தைக் குறைக்க ரிப்பன் பக்கோடா, முறுக்கு, காராபூந்தி, பாகற்காய் சிப்ஸ், மைசூர் பா, ஜிலேபி போன்றவற்றை தரமான விதத்தில் வீட்டிலேயே தயாரித்து குழந்தைகளுக்கு அவ்வப்போது கொடுத்து வந்தால் அவர்களுக்கும் நம்மீதுள்ள பிணைப்பானது வளரும், குடும்பத்திலும் மகிழ்ச்சியை அது ஏற்படுத்தித் தரும்.
நாடாபுழுக்களை குடலிலிருந்து வெளியேற்ற ஒருபிடி குப்பைமேனி வேரை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து, ஒரு லிட்டர் நீரிலிட்டு 200 மில்லி லிட்டராக அதைச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி குடிக்க பூச்சிகள் நாடாபுழுக்கள் எல்லாம் வெளியேறும். சில பிள்ளைகளுக்கு இந்த தண்ணீரைக் குடிப்பதால் பேதியாகும் வாய்ப்பும் இருக்கிறது. அதுபோன்ற நிலையில் தயிர் சாதம் கொடுக்கலாம். இந்த அளவில் கால் பங்கு மட்டுமே கொடுத்தால் பேதியாகாது. ஆனால் நாடாபுழுக்கள் வெளியேறும். குப்பைமேனி இலைச்சாற்றினை 8 துளிகள் அளவு தடவினால், தொண்டைப்பகுதியிலுள்ள கோழை நன்றாக வெளிப்படும். அல்லது குப்பைமேனி இலையை காய வைத்துத் தூள் செய்து கால் தேக்கரண்டி அளவு உட்கொண்டு வர கோழையானது நன்றாக வெளிப்படும்.
குப்பைமேனிச் செடியின் இலையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து லேசாக நசுக்கி ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து கால் டம்ளர் கஷாயமாக்கி வடிகட்டிக் குடிக்க குழந்தைகளுக்கு ஏற்படும் சளி மற்றும் இருமல் நன்கு கட்டுப்படும். குப்பைமேனி இலைச்சாறு, தேங்காய் எண்ணெய் ஆகியவற்றைச் சம அளவாக எடுத்துக் கொண்டு ஓர் இரும்புச் சட்டியில் விட்டு சுண்டக் காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும். விளையாடிவிட்டு வந்து மூட்டுவலி என்று பையன் கூறும் சமயங்களில், இதனை நன்றாகத் தேய்த்துவிட வலியானது விரைவில் குணமாகிவிடும்.
குப்பைமேனி இலையை மஞ்சளுடன் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி, சிறிது நேரம் வைத்திருந்து பின்னர் கழுவி வர, பெண்களின் முகத்திலுள்ள பருக்கள், புள்ளிகள் மறைவதுடன் முகம் பளபளப்பாக மாறும். 10 குப்பைமேனி இலைகளை நன்கு கழுவி சுத்தம் செய்து பசும்பாலுடன் சேர்த்து அவித்து உண்டு வர, தேக அழகும் ஆரோக்கியமும் ஏற்படும்.
குப்பைமேனியினுடைய முழுத்தாவரமும் கசப்பு மற்றும் காரமான சுவையுடையவை வெப்பத்தன்மையும் கொண்டது. மார்புச்சளி, கபநோய்கள், மூச்சிறைப்பு, இருமல், கீல்வாதம் முதலியவற்றைப் போக்கும். இலை, வேர் ஆகியவை வாந்தி மற்றும் பேதியை உண்டாக்கப் பயன்படுகின்றன. இலை, தளிர்களை நீரில் கொதிக்க வைத்துக் குடிப்பதால் குடல் புழுக்கள் அழிவதோடு உடல் பருமன் மற்றும் தேவையற்ற கொழுப்பைக் குறைக்கும்.
ஒரு தனிச் செடியான குப்பைமேனியானது தனி ஒருவனாக நின்று இத்தனை அற்புதமான வேலைகளைச் செய்வதால் இதனுடைய பயிராக்கமானது தமிழகத்தில் ஊக்கப்படுத்தப்பட வேண்டும். தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலிகை வளர்ப்புகளில் அதிகம் கவனம் செலுத்தினால் மனிதர்களுக்கு ஏற்படும் பல உடல் இன்னல்களுக்கும் இதுபோன்ற சிறு தாவரங்கள் பெரும் நன்மையை அளிக்கக் கூடும். மண்வளமும் பாதுகாக்கப்படும். இயற்கைவளம் மேம்படுவதால் அதுவே மழை பெய்வதற்கும் உதவிடக்கூடும்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.