

எத்தனையோ முறை இதுபோல ராத்திரி நேரத்துல ஊருக்குப் போயிருக்கேன். ஆனா, எப்பவும் இவ்வளவு படபடப்பாவும், பதற்றமாவும் போனதில்ல. இதுக்கெல்லாம் காரணம் பரசு தாத்தாதான். அவர் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி செல்போன்ல சொன்ன விஷயம் அப்படி...
செல்போன் அடிச்சதும் ""வணக்கம் கோவிந்தராஜ் பேசறேன்''னு சொன்னேன் அவ்வளவுதான். என் குரலைக் கேட்டதும் ""நாந்தாம்பா''ன்னு "ஓ'ன்னு அழ ஆரம்பிச்சுட்டாரு...
""என்னாச்சு.. என்னாச்சு..''ன்னு நானும் பதற்றமாயிட்டேன். எங்க ஊர்ல்ல அவர் ஒரு கம்பீரமான மனிதர். அவரே கலங்கறார்ன்னா... என்னவாயிருக்கும்னு யோசிச்சேன்.
அப்பறம் அவரே, கொஞ்சம் நிதானமா பேச ஆரம்பிச்சாரு..
""நாட்டாமைக்காரரோட பசங்க, அவனுங்க நிலத்த பிளாட் போட்டு விக்கப் போறானுங்களாம். அதோட சேத்து... நம்ம தாமரைக்குளத்தையும் இவன் விக்கப் போறேன்னு வீட்டுல ரெண்டு நாளா குடிச்சுட்டு வந்து தகராறு பண்றான்டா''ன்னு நா தழுதழுக்க சொன்னார். அதுக்கு மேல கொஞ்ச நேரம் சத்தத்தையே காணும். மறுபடியும் ஆத்திரத்த அடக்க முடியாம அழுதிருக்கணும். சகஜ நிலையில அவர் இல்லன்னு தெரிஞ்சுக்கிட்டு, நானே பேசினேன்.
""அவனுக்கென்ன, கிறுக்கா புடுச்சு கிச்சு?'' நானும் வார்த்தை குளறியபடி அவரிடம் பேசினேன்.
""கேப்பார்ப் பேச்சக் கேட்டுக்கிட்டு செய்றான்டா. நான் எது சொன்னாலும்... எங்கிட்ட சண்டைக்கு வர்றான். ஒங்களுக்கென்ன வயசாயிடுச்சு... போயி வேலையப் பாருங்கன்றான்''னு சொல்லும்போதே குரல் உடைந்து கம்மியபடி பேசிக்கொண்டிருந்தார்.
எனக்கும் கையும் ஓடல... காலும் ஓடல... ""இப்ப என்ன செய்யறது''ன்னு யோசிச்சுக்கிட்டேயிருக்கும்போது ""நாளைக்கு நீயும் ஒன் பிரண்டெல்லாம் சேந்து அவங்கிட்ட கொஞ்சம் பேசுங்கடா... எப்படியாவது அவங்கிட்டயிருந்து அந்த தாமரைக்குளத்த காப்பாத்திக் குடுங்கடா...'' என்றார்.
அவர் சொன்னதிலிருந்தே ஒருவிதமான இனம் புரியாத பரிதவிப்பு, வலி, வேதனை என்னன்னு சொல்லத் தெரியாத ஒரு சோகம் என்னை தொத்திக்கிடுச்சு. விஷயத்தைக் கேள்விப்பட்டுட்டு வீட்டுல எப்படி இருக்க முடியும்? அதுவும் தாமரைக்குளம் எங்க வாழ்க்கையோட ஒன்றிப் போன ஓர் அம்சம். உயிர்களுக்கெல்லாம் அதுதான் ஆணிவேர். வாழ்வாதாரங்களை விற்றுவிட்டால் அப்பறம் வயல் ஏது, வாழ்க்கை ஏது?
பரசு தாத்தாவோட பையன் எங்களோட மூணு வருஷம் பெரியவன்தான். சின்ன புள்ளையில எல்லாரும் ஒன்னா கூடிக்கிட்டிருந்தோம். அப்புறம் படிப்பு வேலைன்னு எல்லாரும் பிரிஞ்சிட்டோம். இருந்தாலும் ஊர்ல ஒரு நல்லது கெட்டதுன்னா எல்லாரும் ஒன்னு கூடுவோம். அதனால, நாங்கெல்லாரும் சொன்னா அவன் கேப்பான்னு நினைக்கிறாரு. அவன் ஒரு முசுடுப் பய. குரங்கு புடியாட்டம் புடிச்ச புடியிலேயிருப்பான்.
நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை லீவுதான். அதான் ராத்திரின்னு கூட பாக்காம சென்னையிலிருந்து சிதம்பரம் போற பஸ்சுல ஏறி சொந்த ஊருக்குப் போயிட்டிருக்கறேன்.
ஆட்ட வித்து, காட்ட வித்து கடைசியில ஊரோட வாழ்வாதாரத்தையே விற்கப் பாக்குறானே...ன்னு என்னுடைய உள்ளக்குமுறல அடக்க முடியாம தானாவே பஸ்சில புலம்பிக்கிட்டிருந்தேன். பக்கத்தில உட்காந்திருந்தவரு என்னை ஒரு மாதிரியாப் பாத்துட்டு திரும்பிக்கிட்டாரு. என் வலி இவருக்கென்ன தெரியும்?
நான் திரும்பி அவரை ஒரு பார்வை பாத்துட்டு நாளைக்கு எப்படி பேசறது, என்ன பேசறதுன்னு யோசிச்சுட்டிருந்தேன்.
எங்க சொத்து நான் என்ன வேணும்னாலும் செய்வேன். ஒங்களுக்கென்னடான்னு கேட்டா என்ன செய்யறது. சனத்துக்காகவும், சந்ததிக்காகவும் அவங்கிட்ட பேசித்தான் ஆகணும்.
இன்னும் பொழுது விடியலையேன்னு ஒரே தவிப்பு. அக்கம் பக்கத்து சீட்டுல இருக்குறவங்கெல்லாரும் நல்லா தூங்கறாங்க. நானும் கண்ண மூடித் தூங்க பாத்தேன் முடியல. மண்ணுக்குள்ளேருந்து முளைத்தெழும் விதைபோல, என் மனக்கண் முன் ததும்பி, தளும்பி பசுமையா... காட்சி குடுத்தது, எங்க ஊர் தாமரைக் குளம்.
அது எங்க ஊர் பரசு தாத்தாவோட குளம். அதுல தாமரை நிறையாயிருக்குறதால தாமரைக்குளம்ன்னு பேர் வந்துச்சா என்னான்னு தெரியல? அப்பெல்லாம் நீரூற்றிலிருந்து வர்ற தண்ணிய வீணாக்காம குட்டையா வெட்டி வச்சிருக்காங்க. நாளடைவில குட்டை விரிவடைஞ்சி குளமா மாறிடுச்சுன்னு பெரியவங்க சொல்லுவாங்க. அப்பெல்லாம் வசதியானவங்க மட்டும்தான் குளமே வச்சுருப்பாங்களாம். அப்படித்தான் பரசு தாத்தாவோட முன்னோர்களும் அவங்களுடைய கொல்லைக்கு தண்ணி பாய்ச்சிறதுக்காக குளத்த வச்சுருக்காங்கன்னு சொல்லுவாங்க.
""போரு தண்ணிய விட குளத்து தண்ணியிலதான், பயிருக்கு சத்து அதிகமாம். ஏன்னா, அந்த குளத்த சுத்தியிருக்குற மரத்தோட தழை, பாசி, மீனோட அழுக்கு இதெல்லாம் செடிக்கு நல்லது''ன்னு எங்க ஆச்சி சொல்லும்.
எனக்கு நெனவு தெரிஞ்ச காலத்துலயிருந்தே அந்த தாமரைக்குளத்துலதான் நானு, கருப்பன், கொட்டாபுளி, மச்சக்கண்ணு எல்லாரும் குளிப்போம். இன்னொரு பக்கத்துல ஆடு, மாடு குளிப்பாட்டிக்கிட்டிருப்பாங்க. பங்குனி, சித்திரைக்கெல்லாம் அவுச்ச நெல்லுலயிருந்து ஆவி வர மாதிரி ஒரே அனலடிக்கும். வெயில் கொடுமை தாங்காம எருமை மாடும், நாங்களும் தண்ணியிலதான் கெடப்போம்.
சனிக்கெழமைன்னா எங்கம்மா நல்லெண்ணெயைத் தலையில தேய்ச்சுவிட்டு, சீக்கா பொட்டலத்த கையில குடுத்துடுவாங்க... நான் நேரா குளத்துல வந்துதான் எண்ணெய் தேய்ச்சுக் குளிப்பேன். நிறையப் பேர் இப்படித்தான் குளிப்பாங்க.
நாங்க குளிக்கறதுக்கு போனா அவ்வளவு சீக்கிரத்துல கரையேற மாட்டோம். இளங்கன்று பயமறியாதுன்னு சொல்லுவாங்க. அதுபோல அந்த வயசுல எங்களுக்கு எதுவும் தெரியல. தண்ணிக்குள்ள காச போட்டுட்டு மொதல்ல யாரு எடுக்கறதுன்னு போட்டி போட்டுக்கிட்டு தேடிக்கிட்டிருப்போம். தண்ணிக்குள்ளே கடப்பாரை நீச்சல் அடிப்போம், பல்டி அடிப்போம், அதுல கிடைக்கற ஆனந்தத்துக்கு அளவேயில்ல... அப்படிப்பட்ட குளத்துக்கு இன்னிக்கு ஒரு ஆபத்துன்னு கேள்விப்படும்போது மனசுக்கு ரொம்ப கஷ்டமாயிருக்கு.
அப்பல்லாம் அந்த குளத்து தண்ணியிலதான் நிறையப்பேரு சமைப்பாங்க.
""இதுல போயா சமைக்கிறீங்க''னு கேட்டா, ""இந்த தண்ணியில சமைச்சாதான் சாப்பாடு ருசியாயிருக்கும்''னு சொல்லுவாங்க. அந்த அளவுக்கு தண்ணியும் தேங்கா தண்ணிபோல தெளிவாயிருக்கும்.
குளம் இருக்கறதால தவிச்ச வாய்க்கு தண்ணியாவது கெடைச்சிட்டிருக்கு. அதுக்கும் ஊர்ல்ல சிலபேர் வேட்டு வைக்க பாக்குறானுங்க.
பஸ் பாண்டிச்சேரி பஸ் ஸ்டாண்டுக்குள்ள வந்துக்கிட்டிருந்தது. பஸ்டாண்டில விரல் விட்டு எண்ற அளவுக்கு ஒரு சில கடைங்க திறந்திருந்துச்சு. மெர்க்குரி விளக்கு வெளிச்சத்துல பஸ்ஸ்டாண்டே தங்கம்போல தகதகன்னு மின்னிக்கிட்டிருக்கு. வாட்சைப் பாத்தேன். மணி நாலாயிருந்தது. எப்படியும் ஆறு ஆறரைக்கு சிதம்பரம் போயிடலாம்ன்னு நினைச்சுக்கிட்டே கண்ண மூடினேன். மனம் மறுபடியும் குளத்தில இறங்க ஆரம்பிச்சது.
பகல் பூராவும் பரசு தாத்தா அவர் கொல்லைக்கு தண்ணி கட்டுவாரு. ராத்திரியிலதான் பக்கத்து கொல்லைக்கெல்லாம் தண்ணி கட்டவுடுவாரு. விளையற விளைச்சல்லையும் அவருக்கு மூணுல ஒரு பங்கு குடுத்திடணும். அப்படித்தான் ஒருநாள் ராத்திரி கொட்டாபுளி கொல்லைக்கு தண்ணி பாய்ச்ச நானு, கொட்டாபுளி, கருப்பன், மச்சக்கண்ணு நாலு பேரும் போயிருந்தோம். அப்போ, யாருக்கும் தெரியாம நைசா குளத்துல தூண்டிலைப் போட்டு மீன் பிடிச்சோம். அன்னிக்குப் பாத்து சிலேபி கெண்டயும், விராலும் மாட்டிகிச்சு. கிடைச்ச மீனை நாலு பேரும் பிரிச்சு எடுத்துக்கிட்டோம். ராத்திரியோட ராத்திரியா அம்மாகிட்ட கொண்டாந்து குடுத்து, குழம்பு வைக்க சொன்னேன்.
அம்மா... திட்டிகிட்டே செஞ்சாங்க... ""அர்த்த ராத்திரியில ஏன்டா இம்சப் பண்ற... பரசு தாத்தாவுக்கு தெரிஞ்சுதுண்ணா ஒங்கள குளத்துப் பக்கமே தலைக்காட்டவுட மாட்டார்..''ன்னு சொல்லிகிட்டே அம்மியில மிளகா சாந்தறைச்சி குழம்பு வச்சித் தந்தாங்க. எந்நேரமாயிருந்தாலும் அதை சாப்புட்டுதான் தூங்குனேன். அம்மா கையால வைக்கற குழம்புக்கு ருசியே தனி. அதுவும் மறுநாள் வச்சிருந்து சாப்பிட்டா..ப்...பா தேன் மாதிரியிருக்கும். இப்ப நினைக்கும்போதே நாக்குல எச்சிவூறுது. அள்ள அள்ள குறையாத அமுதசுரபி போல அந்த தாமரைக்குளத்தால இப்படித்தான் பல பேர் பசியாறியிருக்காங்க.
குளத்த சுத்தி தென்ன மரம், புங்க மரம், நீர் நொச்சி, கடப்பை மரம், நாணலு, கோரைப்புல்லு, அருகம்புல்லுன்னு பச்சைப்பசேலுன்னு பாக்கறதுக்கே அழகாயிருக்கும். நாங்க ஒவ்வொருத்தரா கரைக்கு வந்து, புங்க மரத்து மேல ஏறி பொத்து பொத்துன்னு தண்ணியில குதிப்போம். நீச்சல் கத்துக்கறவங்க காரோட டியூப் இல்லன்னா சொரக்குடுக்கைய இடுப்புல கட்டிக்கிட்டு கத்துப்பாங்க. எவ்வளவு அட்டகாசம் பண்ணாலும் தாயைப்போல தாங்கியிருக்கு அந்த குளம்.
பஸ்சுலயிருந்து வெளியில பாக்கும்போது மரங்கலெல்லாம் கூட்டம் கூட்டமாக பின்னாடி ஓடற மாதிரியிருக்கு. சில்லுன்னு வெளிக்காத்து மூஞ்சில பட்டதும், குளத்து தண்ணி மேலபட்ட மாதிரி இதமாயிருக்கு. இன்னும் கொஞ்ச நேரந்தான், அப்பறம் ஊர் போய் சேந்திடலாம்.
ஆடு, மாடு ஓட்டிக்கிட்டு வர்ற பொம்பள சனங்களும் வெயில் காலத்துல புழுக்கம்
தாங்காம குளத்துல குளிப்பாங்க. பெரும்பாலும் ஊர்ல்ல இருக்கற எல்லாருக்கும் நீச்சல் தெரியும். தாமரைக் குளத்துல ரொம்ப தூரம் நீச்சல் அடிச்சிகிட்டுப் போக முடியாது. தாமரைக்கொடி கால்ல சிக்குச்சுன்னா... உள்ளே மாட்டிப்போம். கூட ஆளிருந்தா தப்பிச்சுக்கலாம். அப்படித்தான் ஒருமுறை குளிக்க வந்த ஒரு பொண்ணு தண்ணியில மூழ்கிடுச்சு. ""அய்யோ அம்மா''ன்னு அலறல் சத்தங் கேட்டு நாங்கதான் அந்த பொண்ண தண்ணியிலயிருந்து அலக்கா தூக்கிக்கிட்டு வந்து கரையில போட்டு காப்பாத்தி இருக்கோம். அந்த குளத்தால பல பேர் வாழ்ந்து இருக்காங்களே தவிர யாரும் வீழ்ந்ததா சரித்திரம் இல்லை.
சித்திரை வைகாசியில குளத்துல தண்ணி வத்தும். அந்த சமயத்துல பரசு தாத்தா தண்ணிய எறச்சிட்டு மீன் பிடிக்கச் சொல்லுவாரு... அந்த குளத்துல விராலு, சிலேப்பி, கெண்டை, வளப்புக்கெண்டை, கெளுத்தி, செந்நெல்லு, குறவை, தேளி, மயல, ஆரா, விலாங்கு எல்லாம் இருக்கும். இதுல... தேளி, விலாங்கு, கெளுத்திக்கெல்லாம் முள்ளிருக்கும். இதெல்லாம் சேத்துலதான் பதுங்கியிருக்கும்.
சேத்துல மீன்பிடிக்க எறங்கும்போதே அம்மா சொல்லுச்சு ""நீ கரையிலே இரு... முள்ளு மீனெல்லாம் நிறையாயிருக்கு... போன வருஷம் பால்காரர கெளுத்தி மீனு.. குத்தி ரத்தம் கொடகொடன்னு ஊத்துச்சு, அதைப் பாத்ததும் அவருக்கு மயக்கமே வந்துடுச்சு''ன்னு சொல்லி என்னை பயங்காட்டிட்டு கரை மேலே நிக்க வச்சுட்டு அவுங்க மட்டும் மீன் பிடிக்க போனாங்க.
நானும் ""ம்..ம்..''ன்னு கேட்டுக்கிட்டிருந்துட்டு அவங்க குளத்துக்குள்ள எறங்கன்னவுடனே... கொஞ்ச நேரங்கழிச்சு ஊர்க்காரங்களோடு சேந்துகிட்டு, நானும் குளத்துல எறங்கிட்டேன். மீனுப்புடிக்கற சாக்குல தை தக்கான்னு சேத்துல குதிச்சி விளையான்டேன். அப்ப தேளியோ... விலாங்கோ தெரியல கால்ல குத்திடுச்சு... ரெண்டு நாளா கால் கொடச்சல் தாங்கலதான்... இருந்தாலும் மறுபடியும் அந்த குளத்துலதான் போய் நிப்போம்.
மாட்டுப் பொங்கலுக்கு மாட்டையும், கன்னுக்குட்டியையும் குளிப்பாட்டிட்டு வர்றோம்ன்னு சொல்லிட்டு அதை ஓட்டிகிட்டுப்போய் குளத்துல விட்டுட்டு... நாங்க நல்லா தண்ணியில தம்பட்டம் அடிப்போம். மாட்டு மேல ஏறி ஒக்காந்துகிட்டு தண்ணியில ஜாலியா ""அய்... அய்...''ன்னு கத்திக்கிட்டே சுத்தி சுத்தி வருவோம். நேரமாயும் சாப்பிட போகலைன்னா... எங்கம்மா தேடிக்கிட்டு நேரா குளத்துக்குதான் வரும். அங்கதான் நாங்க தேன் குடிச்ச வண்டு மாதிரி, தண்ணியில மெதந்துக்கிட்டிருப்போம். இந்த மாதிரி குளத்தயெல்லாம் விட்டுட்டா... ஊர்ல்ல இருக்கற ஜீவராசிங்க என்ன பண்ணும்?
விவசாய வேலை செய்யறவங்க, மதியான சாப்பாட்டுக்கு குளக்கரையில இருக்கற மரத்து நிழலுல ஒக்காந்து பழைய சோத்தையும், பச்ச வெங்காயத்தையும் சாப்பிட்டு, அப்படியே கொஞ்ச நேரம் அசந்து படுத்தாங்கன்னா.. ப்பப்பா... அந்த சுகமே தனி.. நிழலோட அருமை வெய்யில்லதான் தெரியும்பாங்க அதுபோல குளத்தோட அருமை... ஊர்ல்ல தண்ணியில்லைனாதான் தெரியும்.
ஏரி, குளம், கிணறுன்னு இருந்தாத்தானே மழை பேஞ்சா தண்ணி நிக்கும். நிலத்தடி நீரும் உயரும்...? இப்படியெல்லாம் ஊருக்கே ஒழைச்ச வத்தாத செல்வத்த துத்து மனைக்கட்டுப் போட எப்படிதான் மனசு வந்துச்சோ தெரியல? எப்ப தூங்கினேன்னு தெரியல திடீர்ன்னு பஸ்சோட ஹாரன் சத்தம் என்னோட தூக்கத்தை கலைச்சுடுச்சு. முழிச்சுப் பாத்தேன். பஸ் சிதம்பரம் பஸ்டேண்டுக்குள்ள வந்திடுச்சு. பொழுதும் பள பளவென விடிஞ்சிடுச்சு.
காலையிலே பரசு தாத்தாவோட வீட்டுக்கு முன்னாடி நானு, கருப்பன், கொட்டாபுளி, மச்சக்கண்ணு எல்லாரும் வந்து நிக்கிறோம். பெரிய சுத்துக்கட்டு போட்ட முற்றம் வைத்த வீடு. வீட்டு வாசல்ல சாணி தெளிச்சு, பெருக்கி, கோலம் போட்டிருக்காங்க. பரசு தாத்தாவோட பெரிய பையன் வெளிதிண்ணையில சாஞ்சிக்கிட்டு பேப்பர் படிச்சிக்கிட்டிருக்கான். எங்களுக்கு பிரண்டுதான் இருந்தாலும் கல்யாணத்துக்கப்பறம் ஆளே மாறிட்டான்ன்னு எல்லாரும் சொல்லுவாங்க. ஆனா, நம்மல பொருத்தவரைக்கும் அப்படியில்ல.
நாங்க வந்தத எப்படியும் அவன் பாத்திருக்கணும்? இருந்தாலும், பாக்காதது மாதிரியே ஒக்காந்திருக்கிறான். இதே ஊர்லே பொறந்து வளந்தவனுக்கு எப்படித்தான் இப்படி மனசு வந்துச்சோ தெரியல? கூட வந்தவனுங்க கசமுசன்னு பேசறது அவன் காதுல விழுந்திருக்கணும்.. பளிச்சின்னு வெள்ளை வேட்டி, சட்டையில எங்கோ வெளியில போறதுக்கு கிளம்பியிருக்கற மாதிரி தெரியுது.
""என்னடா... காலையிலே வந்திருக்கீங்க... ஊர்ல்ல எதாவது விசேஷமா?'' பேப்பரை இறக்காமலே கேட்டான். பண்ணக்காரங்களெல்லாம் வேலையாளுங்ககிட்ட நேருக்கு நேரா பாத்துப் பேச மாட்டாங்க. இது அவங்களோட வழக்கம். அதுபோலத்தான் இவனும் பேசறான்.
எங்க பிரண்டு மாதிரி பேசல... யாரோ ஊர் பேர் தெரியாதவங்கிட்ட பேசற மாதிரி பேசறான். ஏன்னா, பத்தாவதுக்கு மேல வெளியூர்ல்ல போய் படிச்சிட்டு வந்திருக்கான்ல்ல. அப்படித்தான் இருப்பான்.
நாங்க ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கிட்டோம். எல்லாரும் நீயே பேசுங்கற மாதிரி மொகத்தாலே ஜாடை காட்டினானுங்க. சின்ன வயசிலிருந்தே நான்தான் எப்பவும் தைரியமாப் பேசுவேன். "தடால் புடால்'ன்னு பேசமாட்டேன். அதனாலதான் என்னையே பேச சொல்றானுங்க.
""நாட்டாமைக்காரரோட பசங்க, பிளாட் போட்டுயிருக்கற நிலத்தோட சேத்து... நம்ம தாமரைக்குளத்தையும் விக்கப்போறதா கேள்விப்பட்டோம்...''ன்னு சாந்தமாகவும், சன்னமாகவும் கேட்டேன். அவன்கிட்டேயிருந்து எந்த பதிலும் இல்லை. திருப்பி கேக்கலாம்ன்னு பாத்தேன் அதுக்குள்ள... அவனே ""ஆமாம், அதுக்கென்ன இப்போ...'' பேப்பர எறக்காமலே கேட்டான்.
""இல்லீங்க, நம்ம தாமரைக்குளமும் அடிபடுதுன்னு கேள்விப்பட்டோம்'' சொல்லி முடிக்கறதுக்குள்ள பட்டுன்னு பேப்பரை மடக்கிட்டு ""அதனால, உங்களுக்கென்ன பிரச்னை'' முகத்தை விறைப்பா வச்சுக்கிட்டு ஆவேசமாக் கேட்டான். கொஞ்ச நேரம் எங்க எல்லாரையும் முறைச்சுப் பாத்துட்டு மறுபடியும் பேப்பரால முகத்தை மூடிக்கிட்டான்.
இதை அவங்கிட்ட நாங்க எதிர்பார்த்ததுதான். இப்படி யாரும் அவங்க வீட்டு முன்னாடி வந்து நின்னு பேச மாட்டாங்க. அந்த கோபமும் ஆத்திரமும் அவனுடைய பதில்ல தெரிஞ்சுது. பதிலுக்குப் பதில் பேச ஆரம்பிச்சா வாக்குவாதத்தில் தொடங்கி, கைகலப்பாகி சண்டையில முடிஞ்சுடும். இந்த நேரத்தில பொறுமைதான் அவசியம். பின்னாடியிருந்து ""சீக்கிரம் நியாயத்தை கேளுடா''ன்னு முணுமுணுக்கறானுங்க. ஆத்திரக்காரனுக்கு புத்திமட்டுன்னு தெரியாதா. பரசு தாத்தாவுக்காக நாங்க கொஞ்ச நேரம் கம்முன்னு இருந்துட்டு... அப்புறம் நாந்தான் மெதுவா ஆரம்பிச்சேன்.
""இது எங்க பிரச்னை மட்டும் இல்லீங்க. இது ஊருக்கே உள்ள பிரச்னை. இந்த தாமரைக்குளத்தையே நம்பி, நாப்பது அம்பது ஏக்கர் நிலமிருக்கு. ஊர் மக்களும் இதுலதான் பொழங்கறாங்க. இப்ப போய் நீங்க ப்ளாட் போடறவங்களுக்கு விட்டுக்குடுத்தீங்கன்னா நிலத்தடி நீரும் குறையும். பயிறு பச்சையெல்லாம் காயும். வெளியூரு போயி பெரிய படிப்பெல்லாம் படிச்சவரு இதெல்லாம் ஒங்களுக்கு சொல்ல வேண்டியதில்ல. நீங்கதான் பெரிய மனசு பண்ணி ஊருக்கு உதவணும்''.
அவனுக்கு கோபம் தலைக்கேறியிருக்கனும். அதனால்தான் முகமெல்லாம் வேர்த்துடுச்சு. தோள்ல்ல போட்டிருந்த துண்டால முகத்தை அழுந்த துடைச்சுகிட்டே, ""ஆய்... நீங்கெல்லாம் யெங்கூட பழகிட்டதால மரியாதையாப் பேசிகிட்டிருக்கேன். இது எங்க பாட்டன் பூட்டன் காலத்து சொத்து, அதைப் பத்தி பேசறதுக்கு ஒங்களுக்கெல்லாம் எந்த ரைட்சும் கிடையாது...
நீங்க நெனைக்கற மாதிரி யாரும் இப்ப வேலைக்கு வரதும் கிடையாது. அப்படியே வந்தாலும், முந்தி மாதிரி யாரும் சரியா வேலை செய்யறதும் கிடையாது. காடுகரையும் காஞ்சி கருகுது. எங்களுக்கு வேற வழி தெரியல. அதை இப்ப தூர் வாறணும்ன்னா அம்பதாயிரத்துக்கு மேல செலவாகும். மறுபடியும் ஆட்டையும் மாட்டையும் குளத்துள்ளவுட்டீங்கன்னா... மண்ணெல்லாம் சரிஞ்சு மறுபடியும் அஞ்சாறு வருஷத்துல தூர் வாற வேண்டியிருக்கும். எங்கப்பா மாதிரி என்னையும் இளிச்ச வாயன்னு நெனைச்சிங்களா?...''
""நீ ஒன்ன மட்டுந்தான் பாக்கற... ஒங்க பாட்டன் முப்பாட்டன்ங்க அப்படி நெனைச்சிருந்தா நமக்கிந்த அமுதசுரபி கெடைச்சிருக்குமா?''ன்னு கூடவந்தவனுங்க கொஞ்சம் வேகமா பேசிக்கிட்டே என்னையும் தாண்டி முன்னாடி வந்தானுங்க. ஆளாளுக்குப் பேச ஆரம்பிச்சுட்டா பிரச்னை பெரிதாகி காரியம் கெட்டுடும்ன்னு நாந்தான் அவனுங்கள ""ஆய்... கம்முனுயிருங்கடா''ன்னு சொல்லி அடக்கனேன்.
""எல்லாரும் சேந்து வந்து தகராறு பண்ணுறீங்களா... உங்ககிட்டெல்லாம் என்னடா பேச்சு வேண்டிகெடக்கு''ன்னு ஆத்திரமா சொல்லிக்கிட்டே வீட்டுக்குள்ள போகப் பார்த்தான். அவனைத் தடுத்து நிறுத்தும் விதமாக ""தலைமுறை தலைமுறையா உங்க குடும்பம் இந்த ஊருக்காக எவ்வளவோ செஞ்சிருக்கு... தயவு செஞ்சி தாமரைக்குளத்தை வித்துடாத..'' கெஞ்சிக் கேட்டேன்.
""புரியாத ஆளுங்களா இருக்கீங்களே. இப்பவே அவுங்க நெலத்தோடு சேத்து குடுத்தாதான் நல்ல ரேட்டுக்கு விக்க முடியும். அப்பறம் அதை மட்டும் தனியா வித்தா யார்றா வாங்குவா?''ன்னு சொல்லிக்கிட்டே வீட்டுக்கு உள்ள போகும்போது அவனுடைய பையன் உள்ளிருந்து ஓடி வந்தான்.
""அப்பா... நீரின்றி அமையாது உலகுன்னு தலைப்புல தண்ணியப்பத்தியும், மழைநீர் சேமிப்பைப்பத்தியும் ஒரு கட்டுரை எழுதிக் குடுத்திங்கதானேப்பா. அதுக்கு எனக்கு முதல் பரிசு கிடைச்சுருக்குப்பா...''
""எப்படி இவ்வளவு தத்ரூபமா எழுதியிருக்கன்னு டீச்சரெல்லாம் கேட்டாங்கப்பா. அதுக்கு நான் என்ன சொன்னன்னா, எங்களுக்கு சொந்தமா குளமிருக்கு மிஸ். அதுல மழைத்தண்ணி, ஆத்து தண்ணி, ஊத்துத்தண்ணியெல்லாம் வீணாக்காம எங்கப்பா சேமிக்கறாருன்னு சொன்னம்பா... அப்பறம், நம்ம குளத்த நம்பித்தான் அங்க நிறைய விவசாய நிலங்களேயிருக்குன்னு நீங்க எழுதிக் கொடுத்தத அப்படியே சொன்னம்பா...''ன்னு சொல்லிட்டு மறுபடியும் அவனே தொடர்ந்தான்.
""அப்பா... அவுங்களுக்கு நம்ம குளத்த ரொம்ப புடிச்சுப்போச்சுப்பா. சம்மர் வெக்கேஷன்ல்ல எங்க ஸ்கூல்ல இருக்கற டீச்சரெல்லாம், நம்ம குளத்தப் பாக்க வர்றாங்களாம்பா...''ன்னு சொல்லிக் கொண்டிருந்தான்.
அந்த தாமரைக்குளம், தனது அடுத்த வாரிசாக பரசு தாத்தாவின் பேரனை அடையாளப்படுத்திக் கொண்டிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.