இப்படிக்கு தங்கள் உண்மையுள்ள...

ஆடியின் முதல் வெள்ளிக்கிழமை.
இப்படிக்கு தங்கள் உண்மையுள்ள...

ஆடியின் முதல் வெள்ளிக்கிழமை.

நான்கு மணிக்கே இருள்கரைந்துவிட பகலின் முகம் தெரிய ஆரம்பித்தது.

நாலைந்து பறவைகள் குறுக்கே மேலே பறந்துபோயின.

கொடி கட்டும் கம்பின் உச்சியில் எப்போதும் அமர்ந்து நாலைந்து கொலுசுகளைக் கொட்டியது போல குரலெழுப்பும் அந்த சிறு வெள்ளைப் பறவை இசைகூட்ட நாராயணனுக்கு விழிப்பு வந்துவிட்டது. இயல்பிலேயே 5 மணிக்கு எழுந்துவிடுபவர். ஆடி வெள்ளி என்றால் மூன்று மணிக்கே எழுந்து குளித்துவிட்டு கையில் நெல்லிக்காய் சாறுடன் நின்றிருப்பாள் தையல் நாயகி நாராயணனின் மனைவி.

""என்னப்பா இது?''

""என்ன இது தினமும் ஒரு கேள்வின்னு கேக்கறிங்க? வயசான காலத்துலே எல்லாமும் வந்துடும் முடிஞ்சவரைக்கு நம்ப உடம்ப நாமதான் பாத்துக்கணும். நெல்லிக்காய் சாறு வெறும் வயித்துல குடிச்சா நல்லது. எத்தனை காலத்துக்கு இப்படி பணிவிடை செய்யப் போறேன். இருக்கறவரைக்கும் வாங்கிக் குடிச்சுக்கங்க.''

""ஏம்பா இப்படி ஆடி வெள்ளியதுவுமா பேசறே? கொண்டா குடிக்கிறேன்.''

வெறும் வயிற்றில் நெல்லிச்சாறு லேசான துவர்ப்புடன் இருந்தாலும் தையல்நாயகியின் அன்புபோல குளிர்ச்சியாய் உள்ளிறங்கும்போது மனது உடம்பு ஒருசேர குளிர்ந்துபோகும்.

எழுந்து குளித்துவிட்டு வருவதற்குள் குளியலறைக்குள் நுழைந்து வரவேற்கும் அவளின் காபி மணம்.

காபி குடித்துவிட்டு அப்புறம் தான் எல்லா வேலையும்.

எல்லாமும் முடிந்துவிட்டது. தையல்நாயகி இறந்து போய் ஐந்து வருடங்கள் ஓடிவிட்டன. இந்த ஐந்து வருடங்கள் தனியாகக் கழிந்ததும் எப்படியென்று தெரியவில்லை.

தூரமாய் அடர்ந்திருந்த தென்னை மரங்கள் வேப்பமரங்கள் இவற்றின் பின்னாக அவரை முளைவிட்டதுபோல சிவப்பும் மஞ்சளுமாக சூரியன் மேலெழும்பிக் கொண்டிருந்தது.

எழுந்து பாயைச் சுருட்டி வைத்துவிட்டு தலையணையும் போர்வையையும் அதன் மேல் வைத்துவிட்டு எழுந்தார்.

கீழே கருவேப்பிலை மரத்திற்கருகில் இருந்து ஒரு குயில் கூவியது. கூடவே அக்காக் குருவியின் ஓசையும். அது தன்னுடைய தனிமையை அழைப்பதுபோல் பட்டது.

ஹாலுக்குள் நுழைந்தபோது அவரை வரவேற்றது சூடான சொற்கள்.

""என்னை மட்டும் என்ன இரும்பாலயா செஞ்சிருக்கு? ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பங்கீடு பண்ண வேண்டியிருக்கு. வயசாயியும் வாயடக்கம் இல்ல. எல்லாருக்கும் பண்றத சாப்பிட்டா கௌரவம் போயிடும். எல்லாம் என் தலையெழுத்து''.

சொற்களைத் தயக்கமின்றி வீசிக்கொண்டிருப்பவள் நாராயணனின் மருமகள்.

மகன் நடமாடும். பொம்மையாகி நாளாகி வருடங்களாகிவிட்டன.

தையல்நாயகி இறந்தவுடனே தானும் இறந்து போயிருக்க வேண்டும் என்பதுதான் நியாயம். ஆனால் அது படைத்தவனுக்குத் தெரிவதில்லை. ஏதோ ஒரு கணக்கு போட்டு யாரை முதலில் அனுப்புவது அடுத்து யாரை அனுப்புவது என்று முடிவெடுக்கிறான். அவன் கணக்கை மாற்றும் வல்லமை யாருக்கும் இல்லை எனும்போது பணி ஓய்வு பெற்றிருக்கும் தன்னால் மட்டும் முடியுமா என்ன?

ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் காந்தி நடுநிலைப்பள்ளியில் கடைசியில் போனால் போகிறதென்று தலைமையாசிரியர் ஆகி பணி ஓய்வு பெற்று கடைசியாக வாங்கிய சம்பளத்தைவிடச் சற்று குறைவாக பணி ஓய்வு ஊதியம் பெறும் பாக்கியத்தைப் பெற்றவர். இரண்டு பிள்ளைகள் பெண்ணும் ஆணுமாக. ஊர் பார்க்கத் திருமணம் பண்ணிக்கொடுத்து ஊர் ஒப்புக்கு வாழ்ந்து கொண்டிருக்கிறாள். எப்போது வேண்டுமானாலும் செத்துப் போயேன் என்கிற வரத்தையளித்த கணவனுடன். ஏன் என்பதற்கு என்ன காரணம் வேண்டுமானாலும் எண்ணிக் கொள்ளலாம். காரணத்தையறிந்தால் மகளின் வாழ்க்கை மாறிவிடுமா என்ன?

அந்த வேதனைதான் தையல்நாயகிக்கு அதிகம் என்பதை அவளின் வேகமான மரணமே காரணம்.

அடுத்த அம்பு இன்னும் கடுமையான வெப்பத்துடன் வந்து அவர்மேல் விழுந்தது.

""நம்மாலே முடியலேன்னா... ஒரு காரியம் பிரயோசனம் இல்லேன்னா.. அடுத்தவங்களுக்கு இடைஞ்சலா இருக்கக்கூடாது.. கதைய முடிச்சிக்கணும்.''

மருமகள் மேல் வேதனையில்லை. இதற்குக்கூட மௌனம் சாதிக்கிற மகனைப் பெற்றதுதான் அவரின் ஆறாத வேதனையாக இருந்தது.

நாராயணனுக்கு வாழ்வதில் விருப்பமில்லைதான். தானாக உயிர் மடித்துக் கொள்ளும் துணிவும் இல்லாமல் இருப்பதுதான்.

நாராயணன் தற்கொலை செய்து கொள்ள முடியாமைக்குப் பல காரணங்கள் இருக்கின்றன. முதலில் அவர் நல்லாசிரியர் விருது பெற்றவர். அவரிடம் படித்த மாணவர்கள் நல்ல நிலைமையில் இருக்கிறார்கள். அவர் பணிபுரிந்தவரை அந்தப் பகுதி மக்களிடம் அவருக்கு நல்ல பெயர் இருந்தது. ஆசிரியராகவே படைக்கப்பட்டு ஆசிரியராகவே கடைசிவரை வாழ்ந்து கொண்டிருப்பதுதான்.

அவர் பணிபுரிந்த காந்தி நடுநிலைப்பள்ளி அவர் பணியில் சேரும்போது தொடக்கப் பள்ளியாக மழைபெய்தால் ஒழுகும் கூரையுடன்தான் இருந்தது. இரண்டு ஆசிரியர்களும் (அவர்களும் எப்போதாவது தான் பள்ளிக்கு வருவார்கள்) நாற்பது பிள்ளைகளும் தான் இருப்பில் இருந்தார்கள். தன்னுடைய முதல் மாத சம்பளத்தில் மூங்கில்களும் கீற்றும் வாங்கி மழைக்கு ஒதுங்கும் இடமாக மாற்றினார். மூங்கில்கள் வாங்கப் போகும்போது கூடவே போய் வாங்கினார்.

""தம்பி நல்ல கழியா கொடுப்பா. பிள்ளைகள் உக்கார்ந்து படிக்கறது'' என்றார்.

வாங்கிய கழிகள் உளுத்துப் போய்விடாமலிருக்க அதன்மேல் தார் அடித்து காயவிட்டு பின் கட்டி கீற்றுப் போட்டார். ஒவ்வொரு சிறு விஷயத்திலும் கவனமாக இருந்தார். பள்ளிக்குப் பக்கத்தில் மார்க்கெட் இருந்தது. ஒவ்வொரு கடையாகப் போய் பள்ளிக்கூடத்திற்கு என்று பணம் வசூல் செய்து பெஞ்சுகள் வாங்கிப் போட்டார். பெஞ்சுகள் செய்த ஆசாரியிடம்,

""பள்ளிக்கூடத்துக்குப்பா.. நல்ல உறுதியா செய்.. காலத்துக்கும் உம்பேரு சொல்லணும்..

நாளைக்கு உம்புள்ளயும் படிக்கும்.. இதுகூட புண்ணியம் தான்..'' என்றதும் அந்த ஆசாரி, ""சார்.. எனக்கு கூலி வேண்டாம் சார்.. நான் இலவசமா செஞ்சு தரேன்'' என்றார்.

""வேண்டாம்பா.. கூலிய கொறச்சு வாங்கிக்க.. உனக்கும் குடும்பம் இருக்குல்ல..''

எல்லாவற்றுக்கும் குறிப்பேடு போட்டு கணக்கு எழுதி வைத்தார். அதேபோன்று மார்க்கெட்டில் வசூலித்த பணத்திற்கு பள்ளியின் பெயர் போட்டு ரசீது எழுதி கொண்டு போய்க் கொடுத்துவிட்டு வந்தார். மார்க்கெட்டில் அவரின் மேல் மரியாதை கூடியது.

""உங்களுக்கு இன்னும் செய்யணும். என்ன வேணும் கேளுங்க சார்'' என்றார்கள்.

""உங்க பிள்ளைகளை என் பள்ளிக்கூடத்துலே சேருங்க போதும்..''

கைகூப்பி சொல்லிவிட்டு வந்தார்.

அடுத்து நிர்வாகத்திடம் பேசி.. மாவட்ட கல்வி அலுவலரிடம் ஒப்புதல் வாங்கி எட்டாவது வரைக்கும் கொண்டு வர பாடுபட்டார்.

ஒப்புதலுக்குப் பணம் செலுத்த வேண்டியிருந்தது.

தையல்நாயகி கழுத்தில் போட்டிருந்த நகையைக் கழட்டிக் கொடுத்தாள்.

""கல்யாணம் ஆகி பத்து வருமாச்சு. குண்டுமணி நகைகூட உங்களுதுன்னு போடலே..

எனக்குக் கொடுப்பினை இல்ல.. நான் போட்டிருக்கறதயும் கழட்டி கேக்கறீங்க..''

எதுவும் பேசாமல் நின்றார்.

""சரி ஒரு பேச்சுக்குதான் சொன்னேன்.. வருத்தப்படாதீங்க.. பள்ளிக்கூடத்துக்கு தானே கேக்கறீங்க.. நாலு புள்ளங்க படிச்சா நம்ப புள்ளங்களுக்கு ஒருவழிய ஆண்டவன் காமிப்பான்.''

காந்தி தொடக்கப்பள்ளி நடுநிலைப் பள்ளியாயிற்று.

நினைவுகளைக் கலைத்தார்.

ஓய்வூதியமாக வரும் பணத்தில் தனக்கென்று சிறுதொகையை ஒதுக்கிக் கொண்டு மிச்சத்தை மகனிடம் தந்துவிடுகிறார். ஒதுக்கி வைத்ததில் தான் பெரும்பாலும் சாப்பாடு. ஆனால் அந்தத் தொகை மாதம் முழுக்க வராது. வராத நாட்களில் வீட்டில் சாப்பிட வேண்டும். வளைத்துப் பிடித்து சாப்பிடுபவர் இல்லையென்றாலும் ஒத்துக் கொள்ளும் உணவை மட்டுமே சாப்பிடுவதால் அது பிரச்சினையாகிறது.

""வயசான காலத்துலே கூட வாயக் கட்டலேன்னா என்ன மனுஷன்?''

ஈரமில்லாமல் பேசிக் கொட்டினாள்.

வயதாகிவிட்டால் ருசிக்கு சாப்பிடக் கூடாதா? ஏதேனும் சட்டம் இருக்கிறதா என்ன?

மலையைக் கரைத்துச் சாப்பிடும் சாப்பாடு இல்லை. நாகரிகச் சாப்பாட்டின் கடுகளவு வாசமும் இல்லை. பசிக்கிற வயிற்றுக்கு முக்கியமாக செரிக்கிற தன்மைக்கு ஒரு பிடி உணவு. அது எதுவோ அதுதான். நல்ல உணவுகூட வேண்டாம். ருசிகூட வேண்டாம். உப்பும் காரமும் சரியாக இருந்தால்போதும். இதுகூட தவறா? வயிறும் பசியும் எல்லோருக்கும் ஒரே உணர்வுடன்தானே படைக்கப்பட்டிருக்கிறது ஒன்றுமட்டும் தெளிவாக நாராயணனுக்குப் புரிந்தது. மருந்து மாத்திரை போல சாப்பிடவேண்டும். மருந்து மாத்திரைகளுக்குப் பயன்படுத்தும் இறுதி தேதி போல வயதானவர்களுக்கும் அதிலும் குறிப்பாக பணி ஓய்வூதியம் வாங்கிக் கொண்டு மனைவியை இழந்தவர்களுக்கு இறுதி குறிப்பிட்டுவிடவேண்டும். மானங்கெட்டுத்தான் சாப்பிட வேண்டியிருக்கிறது. சீக்கிரம் மரணம் வந்துவிட்டால் பரவாயில்லை. அதுகூட தம்மை சோதிப்பதாகவே நாராயணன் எண்ணி நொந்து போனார்.

எவ்வளவு சீக்கிரம் அழைத்துக் கொள்ள முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அழைத்துக் கொள் என்று கடவுளிடம் வேண்டிக் கொண்டு சட்டையை மாட்டிக் கொண்டு கடைத்தெருவிற்கு வந்து வழக்கம்போல ஒரு தேநீரைச் சாப்பிட்டுவிட்டு அந்தக் கடையில் இருந்த பேப்பரை விடாமல் வாசித்துக் கொண்டிருந்தார்.

எவ்வளவு நேரம் செய்தித்தாளை வாசிக்க முடியும்?

பேப்பரை மடித்து வைத்துவிட்டுத் திரும்ப நடந்தார். கடைத்தெரு ரோட்டைவிட்டுத்

தெருவுக்குள் திரும்பும் போதுதான் கவனித்தார். காந்தி நடுநிலைப்பள்ளியின் அருகே வண்டிகள்

நின்று கொண்டிருப்பதை.

"என்னவாயிற்று?' அருகே வேகமாகப் போனார். பள்ளிக்கூட உரிமையாளரின் மகன் நின்று கொண்டிருந்தான். நின்றான் என்பதைவிட ஆட்டத்தில் இருந்தான். காலையிலேயே ஒரு சுற்று முடித்துவிட்டான் போலும்.

பள்ளிக்கூடம் திறக்கப் பத்துநாள்கள் இருந்தன.

அருகே போனார். இவரைக் கண்டதும் ""வாங்க சார்...'' என்றான்.

""என்னப்பா வண்டிங்க நிக்குது?'' என்றார் சற்று பதட்டமுடன்.

""பிரச்னையாயிடுச்சு சார்.. சொத்துப் பிரச்னை.. எங்கப்பா எந்த உயிலும் எழுதாமப் போயிட்டாரு. பள்ளிக்கூடத்த யாரு நடத்தறது? இதெல்லாம் தொல்லைப் புடிச்சது சார்.. அதான் இடிச்சுப்புட்டு மனையா வித்திடலாம்னு.. நல்ல விலைக்குப் போவும்.''

அதிர்ந்துபோனார்.

""என்னப்பா சொல்றே நீ?'' அதிர்ச்சி மாறாமல் கேட்டார்.

""பின்னே என்ன சார் பண்றது? நமக்கு டீச்சர் வேலை ஒத்துவராத வேலை சார். முன்ன மாதிரி பசங்க இல்ல சார்.. எல்லாம வேற ஸ்கூலுக்குப் போவுது. டீச்சருங்களுக்கு சம்பளம் கொடுக்க முடியலே. வேற யாரும் வாங்கற மாதிரி விலை படிஞ்சு வரலே சார்.. ஒரேவழி மனையாக்குறது தான்.. எனக்கும் தம்பிகளுக்கும் பிரச்னையாயிடிச்சு.. வர்றத மூணு பங்கு போட்டுட்டா பிரச்னை தீர்ந்திடும் சார்..''

வெகு எளிதாக சொல்லிவிட்டான், பிரச்னை தீர்ந்திடும் சார். மூணு பேர் பங்கு போட்டுவிட்டா பிரச்னை தீர்ந்திடுமா? படிக்கிற புள்ளங்களுக்கு என்ன வழி வேற பள்ளிக்கூடத்துப் போற வசதியிருந்தா ஏன் இங்க படிக்க வர்றாங்க? யாருமே வசதியான வீட்டுப் பிள்ளைங்க இல்ல . வேலை பாக்கற வாத்தியாருங்களும் அப்படித்தான். எல்லாம் நடுத்தரக் குடும்பம்.. ஆசிரியர் பயிற்சி முடிக்கவே படாதபாடு பட்டவங்க. ஆனாலும் தரமானவர்கள். அவங்களோட கதி..

அண்ணாந்து ஒருமுறை பள்ளிக்கூடத்தைப் பார்த்தார். முகப்பில் வளைவு போடப்பட்டு நடுவில் காந்தியும் இருபுறமும் சரஸ்வதியும் அமைக்கப்பட்ட முகப்பு. "பிச்சைப் புகினும் கற்கை நன்றே' என்கிற சிமெண்ட் எழுத்துக்கள் உடைந்திருந்தன. கூரைக் கட்டிடத்தை ஓட்டுக் கட்டிடமாக மாற்ற என்ன பாடுபட்டார்? தன்னுடைய பணம்.. வசூல் பணம்.. அதற்காக நான்கு வருடங்கள் அலைந்து திரிந்து வசூலித்துக் கட்டினார். நிருவாகத் தரப்பில் கொஞ்சம் தொகை தரப்பட்டது. நடுநிலைப் பள்ளியானதும் இவருடைய முயற்சியால் பிள்ளைகள் சேர மேலும் மூன்று ஆசிரியர்களைப் பணி நியமனம் செய்துகொள்ள அரசு ஒப்புதல் அளித்தது. வந்த ஆசிரியர்களிடம் உறுதிமொழிப் பத்திரம் ஒன்றை எழுதி கையொப்பம் வாங்கிக் கொண்டார்.

அதில் பின்வருமாறு இருந்தன வாசகங்கள்.

"காந்தி நடுநிலைப்பள்ளியில் ஆசிரியனாக சேரும்............... என்கிற பெயருடைய நான் முழுநேரமும் ஆசிரியனாகவே செயல்படுவேன். என்னுடைய திறமை முழுக்கவும் கல்வியில் செலுத்தி நல்ல மாணவர்களை இந்தப் பள்ளியில் உருவாக்குவேன். இப்பணியைத் தேசத் தொண்டாகவே கருதுவேன். இதற்கென அரசு அளிக்கும் ஊதியத்தைத் தவிர வேறு எதனையும் பெறமாட்டேன். மாணவர்களை என் பிள்ளைகளாக எண்ணி ஒரு தகப்பனுக்குரிய பொறுப்போடு நல்ல பண்புகளையும் ஒழுக்கத்தையும் கற்பிப்பேன். இதிலிருந்து ஒருபோதும் தவறமாட்டேன்.

என்னுடைய சுயநினைவோடும் விருப்பத்தோடும் இந்த உறுதிமொழிப் பத்திரத்தில் கையொப்பமிடுகிறேன்.

இப்படிக்கு,

தங்கள் உண்மையுள்ள,

பணியில் சேர்ந்த மூன்று ஆசிரியர்களும் முழு விருப்பமோடு எழுதிக் கொடுத்து அப்படியே கட்டுப்பட்டும் பணிசெய்தார்கள்.

சட்டென்று கண்களில் நீர் கோர்த்தது. கட்டுப்படுத்தினார். கட்டுப் படுத்த முடியவில்லை. உடைந்து அழுதார். இந்த நடுநிலைப் பள்ளியைப் பள்ளியாக உருவாக்க நாராயணன் பட்ட பாடுகள் கொஞ்சநஞ்சமல்ல. பல நாட்களில் பட்டினி கிடந்திருக்கிறார். ஒவ்வோர் அலுவலக வாசலிலும் நாட்கணக்கில் காத்துக் கிடந்தவர். மாணவர்களுக்குரிய உதவித் தொகையை வழங்கி ஊக்கப்படுத்தியவர். ஏற்கனவே பணியாற்றி ஓய்வுபெற்ற ஆசிரியர்களுக்கு வரவேண்டிய நிலுவைத் தொகைகளை வாங்கி வீடுதேடிப்போய் கொடுத்துவிட்டு வந்தவர். ஆண் பிள்ளைகளுக்கும் பெண் பிள்ளைகளுக்கும் எனக் கழிப்பறைகள் கட்டியவர். அதனைச் சுத்தமாகவும் பராமரித்தவர்.

ஐம்பதாண்டுகள் பழமையானது. பள்ளிக்கூட உரிமையாளரின் தாத்தாவின் தொண்டில் உருவானது. உரிமையாளர் உயிருடன் இருந்தவரை நாராயணன் சொற்களுக்கு உயிர் இருந்தது.

அந்தப் பகுதி ஏழை மக்களின் ஒரே அமுதுசுரபி.

உணரவில்லை. உடைத்துப் போடத் தயாராகிவிட்டனர்.

எல்லாம் முடிந்துவிட்டதாக நாராயணன் உணர்ந்தார்.

அவரால் தடுக்க முடியாது. பள்ளிக்கூடமாக இருந்தாலும் இன்னொருவரின் சொத்து அது. கல்விக்கூடமாக எண்ணுபவருக்குதான் அது கோயில். சொத்தாக எண்ணுபவருக்கு செங்கல்லும் கண்ணாடியும் கலந்த வெறும் கட்டிடம்தான்.

பொக்லைன்கள் இயங்க ஆரம்பித்தன.

முதலில் வாசலில் இருந்து தொடங்கினார்கள்.

கோர அரக்கனின் பற்களைப் போல உயர்த்திக் கொண்டு அந்த பொக்லைனின் பற்கள் வாசல் வளைவின்மேல் பற்றின.

நாராயணனால் அதனைப் பார்க்கமுடியவில்லை.

வாயிலோடு முன்பிருந்த தலைமையாசிரியரின் அறை சரிய ஆரம்பித்தது. நாராயணன் கத்தினார்.

""ஏம்பா உங்க தாத்தாவோட போட்டோவும் சரசுவதி போட்டோவும் இருந்துச்சுப்பா''

""அத நேத்தே கழட்டிப்போட்டாச்சு சார்.. பின்னாடி தகரம் துருப்பிடிச்சுப் போச்சு..

கழட்டும்போது பிரேம் கைய கிழிச்சிடிச்சு.. டாய்லெட் பக்கம் தூக்கிப் போட்டாச்சு''

வெறுப்புடன் கிழிப்பட்ட விரலைப் பார்த்தபடியே சொன்னான்.

நாராயணன் உள்ளுக்குள் துடித்தார்.

என்ன செய்யமுடியும் ஒரு யானையை? ஒரு சிறிய எறும்பு சிறிய எறும்புதான். யாரும் தன்னை நசுக்கிவிடும் நிலையில்தான் நாராயணன் இருந்தார். சரியானபடி எறும்பு புகுந்துவிட்டால் யானையையும் சாய்த்துவிடும் அல்லவா.

முடிவெடுத்தார்.

விடுவிடுவென்று போய் பொக்லைன் இடித்துக் கொண்டிருந்த அந்த இடிபாடுகளுக்கிடையில் படுத்துக் கொண்டார்.

யாரும் எதிர்பார்க்கவில்லை. அதிர்ந்து போனார்கள்.

""யோவ் லூசு வாத்தி.. உனக்கு சாவறதுக்கு என் இடம் தான் கெடச்சுதா?'' என்றபடி ஓடிவந்தான். எழுந்திருய்யா.

""முடியாது இடிக்கிற நிறுத்து'' உறுதியாகப் பேசினார். கூட்டம் கூடிவிட்டது. அவர் தலைக்குமேலே எப்ப வேணாலும் விழுவேன் என்கிற நிலையில் ஒரு மர உத்திரம் ஆட்டம் காட்டிக் கொண்டிருந்தது. ஏதும் அசம்பாவிதம் நடந்துவிட்டால் போலீஸ் கேசாயிடும்.

""என் அப்பனோட சொத்துய்யா.. உனக்கு என்ன ஆவப்போவுது. எழுந்திருய்யா ஏற்கனவே இருக்கிற பிரச்சினை போதாதுன்னு நீ வேற''

அவர் கையைப்பிடித்து தூக்க முரண்டு பிடித்தார்.

எழுந்துவராமல்.

""சார்..எழுந்து வாங்க சார்..அவங்க சொத்து..நீங்க பண்ணறது நல்லாயில்ல ..''

"" அவங்க சொத்துதான். ஆனா அது சரஸ்வதியோட கோயில். பல புள்ளங்க இத நம்பித்தான் இருக்கு பாடுபட்டு இத உருவாக்கியிருக்கேன்.. இத இடிக்க விடமாட்டேன் என் உசிரே போனாலும்'' - நாராயணன் உறுதியான குரலில் பேசினார்.

பொக்லைன் நிறுத்தப்பட்டது.

நாலைந்து பேர்களாக சேர்ந்து நாராயணனை வலுக்கட்டாயமாக தூக்கினார்கள். அவரைத் தூக்கி அப்பால் நகரவும் அந்த மர உத்திரம் கீழே விழவும் சரியாக இருந்தது. நினைத்துப் பார்த்து அதிர்ந்தார்கள்.

நாராயணனை ஓங்கி அறைந்தான்.

""கிழட்டுப் பயலே.. உன் அப்பன் வீட்டு சொத்தா இது? ஒழுங்கு மரியாதையாப் போயிடு..

அவ்வளவுதான் உனக்கு மரியாதை''

அவன் அறைந்ததில் வாயிலிருந்து ரத்தம் ஒழுகியது.

""ஏம்பா வயசானவரு..இப்படி அறைஞ்சிட்டியே..?''

""வேலய பாத்துக்கிட்டுப் போங்கய்யா.. ஞாயம் பேச வந்துட்டீங்க''

எழுத முடியாத வார்த்தைகளில் திட்டிப் பேசினான்.

நாராயணன் மறுபடியும் கட்டிடம் நோக்கி நகர்ந்தார்.

""முடியாது.. நீங்க இடிக்கக் கூடாது''

இது சரிப்பட்டு வராது என்று போலீசுக்குத் தகவல் சொன்னார்கள். போலீஸ் வந்தது.

""ஏன் சார் பிரச்னை பண்ணறீங்க? இது உங்க சொத்தா. அவங்க அப்பா சொத்து. அவங்க இஷ்டம்.. தேவையில்லாம நடந்துக்கறீங்க.. ஆசிரியரா இருக்கறதால சொல்றேன். போங்க சார்..''

""இல்ல இன்ஸ்பெக்டர் சார். இந்தப் பள்ளிக்கூடத்த உருவாக்க அத்தனை பாடுபட்டிருக்கோம் சார். இது கோயில் சார். இங்க உள்ள பல ஏழைப்புள்ளங்களுக்கு இதவிட்டா கதிஇல்ல சார். இடிக்சுக் கொட்டிட்டா அவங்க வாழ்க்கையில மண் விழுந்துடும் சார். தயவுசெய்து தடுத்து நிறுத்துங்க சார்''

இன்ஸ்பெக்டர் நிதானமாகப் பேசினார்.

""உங்க உணர்வு புரியுது சார். நாங்களும் எதுவும் செய்யமுடியாது சார். இது அவரோட சொந்தப் புராப்பர்டி.. பாகப் பிரச்னை.. உங்களுக்கும் எங்களுக்கும் தேவை இல்லாதது. வேணா நீங்க ஒரு பெட்டிஷன் கொடுங்க. ஜாய்ண்ட் பெட்டிஷன். கலெக்டர் தான் இதுல முடிவெடுக்க முடியும்''.

நாராயணன் மறுபடியும் பேசினார்.

""வாங்க போகலாம்'' என்று அவரை வலுக்கட்டாயமாக ஜீப்பில் ஏற்றி அவர் வீட்டு வாசலில் கொண்டுபோய் விட்டுவிட்டுப் போனார்கள்.

""அடக்கடவுளே.. இது ஒண்ணுதான் பாக்கியிருந்துச்சி.. போலீசும் வந்துடுச்சா.. உள்ளத கவனிக்கவே துப்பில்ல.. இதுல ஊரு பிரச்னை வேறு.. எல்லாம் என் கழுத்தறுத்துட்டு தான் போவும்போல'' மருமகள் திட்டத் தொடங்கினாள்.

வீட்டிற்குள் போனார்.

குளித்துவிட்டு சாமியைக் கும்பிட்டுப் படுத்துக் கொண்டார்.

மதியம் சாப்பாட்டிற்காக நாராயணனை எழுப்பும்போது நாராயணன் எழுந்திருக்கவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com