கண்மணி டீச்சர்

யாரோ அழைக்க குமார் எழுந்து உட்கார்ந்துவிட்டான். சட்டென்று மனசுக்குள் கண்மணி டீச்சரின் உருவம் வந்துவிட்டுப் போனது.
கண்மணி டீச்சர்
Published on
Updated on
7 min read

""கண்மணி... கண்மணி...''

யாரோ அழைக்க குமார் எழுந்து உட்கார்ந்துவிட்டான். சட்டென்று மனசுக்குள் கண்மணி டீச்சரின் உருவம் வந்துவிட்டுப் போனது. சற்று நேரத்திற்கு முன்னால் கூட கண்ட கனவில் கண்மணி டீச்சர் வந்துவிட்டுப் போனார்கள். டீச்சர் வந்தது மட்டுமே நினைவில் இருந்தது. ஏதோ பேசினார்கள். பாடம் நடத்தியதைப் போல உணர்ந்தான். இல்லை ஏதோ கதை சொன்னார்கள். கதை என்றாலே கண்மணி டீச்சர்தானே? டீச்சருக்கு மட்டும் எப்படி இத்தனை கதைகள் தெரிந்திருக்கிறது?

""கண்மணி... திருப்பூர் வந்துருச்சு...'' யாரோ ஒரு பெண்ணின் குரல். இரயில் சீரான வேகத்தில் ஓடிக் கொண்டிருந்தது. இன்னும் ஒருமணி நேரத்தில் கோயமுத்தூர் வந்துவிடும்.

குமார் அப்பர் பர்த்திலிருந்து கீழே இறங்கினான். ஜன்னலோர இருக்கை காலியாக இருந்தது. இரயில் திருப்பூரை நெருங்கிக் கொண்டிருந்தது.

மணி ஐந்தாகிவிட்டது. எப்படியும் கோயம்புத்தூர் போய்ச் சேர ஆறு மணி ஆகிவிடும். அங்கிருந்து உக்கடம் பஸ் பிடித்து, பிறகு பொள்ளாச்சி போய்ச் சேர எட்டு மணி ஆகிவிடும் என்று தோன்றியது.

முதல் வேலையாகப் போய் செல்வராணியை மருத்துவமனையில் பார்க்க வேண்டும். கல்யாணமாகி நீண்ட வருடங்களாகக் குழந்தை இல்லாமல் இருந்த செல்வராணி இப்போதுதான் உண்டாகியிருக்கிறாள். நிறைமாதம். நேற்று வலி எடுத்தது என்று மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்களாம். நேற்று சாயங்காலம் மாமனார் அலைபேசிக்கு கூப்பிட்டு விஷயத்தைச் சொன்னார்.

இரவு 10 மணிக்கு சேரன் எக்ஸ்பிரஸில் ஏறி உட்கார்ந்தது. அப்போதிருந்தே இந்த, ""கண்மணி... கண்மணி...'' என்று யாரோ ஒரு குழந்தையை அழைக்கும் பெண்குரல் கேட்டுக் கொண்டே இருந்தது. குமாருக்கு கண்மணி டீச்சர் ஞாபகம் வந்ததுவிட்டது. அதுதான் டீச்சர் கனவிலும் வந்துவிட்டார்கள்.

கண்மணி என்பதே அபூர்வமான பெயராகப்பட்டது. அவனுக்குத் தெரிந்து கண்மணி என்கிற பெயர் கண்மணி டீச்சருக்கு மட்டும்தான் இருந்திருக்கிறது.

குமார் முகத்தைக் கழுவிக் கொண்டு வந்து உட்கார்ந்தான். திருப்பூரில் இறங்க வேண்டியவர்கள் படியருகே நின்று கொண்டிருந்தார்கள். இருள் இன்னும் அடர்த்தியாக இருந்தது. எதிரே இருந்தவர் உட்கார்ந்தபடி அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். குமாருக்குத் தூக்கம் வரவில்லை. கண்மணி டீச்சரைப்பற்றிய நினைவுகள் மனசுக்குள் ஓடிக் கொண்டிருந்தன.

இவன் ஒன்றாம் வகுப்பு சேருவதற்கு முன்னால் இருந்து கண்மணி டீச்சரைத் தெரியும். அப்போது அரண்மனை வீதியில் ஒரு வீட்டில் வாடகைக்குக் குடியிருந்தார்கள். கண்மணி டீச்சர் தினமும் இவர்கள் வீட்டு வழியாகத்தான் போவார்கள்.

கண்மணி டீச்சர் ஒருநாள் அம்மாவிடம் கேட்டுக் கொண்டிருந்தார்.

""தம்பிக்கு என்ன வயசாகுது?''

""நாலு நடக்குதுங்க...''

""அடுத்த வருசம் பள்ளிக்கூடத்தில சேர்த்திடுங்க...''

குமாருக்கு பள்ளிக்கூடம் என்கிற வார்த்தையே பெரிய பயத்தையும் மிரட்சியையும் தந்திருந்தது. பள்ளிக்கூடம் என்றாலே அடிப்பார்கள், மிரட்டுவார்கள் என்கிற அச்சம்தான் அவனுக்குள் இருந்தது.

இரண்டாம் வகுப்பு படிக்கும்போதுதான் கண்மணி டீச்சர் இவன் வகுப்புக்கு ஆசிரியையாக வந்தார். வகுப்பறை கதைகளால் நிறைந்தது. ஈசாப் கதைகள், பஞ்சதந்திரக் கதைகள், தெனாலிராமன் கதைகள், பைபிள் கதைகள் என்று தினம்தினம் கதைகளால் வேறு ஓர் உலகத்திற்கு அழைத்துச் சென்றார். கண்மணி டீச்சர் பாடம் நடத்தும் அழகே தனி. கதை சொல்லாமல் பாடம் நடத்தியதில்லை. கையில் பிரம்பே இல்லாமல் இருக்கும் கண்மணி டீச்சரை எல்லாருக்குமே பிடிக்கும். அதட்டிப் பேசுவதே அபூர்வம்.

குமார் இரண்டாம் வகுப்புக்கு வந்த பின்னால்தான் "அனா, ஆவன்னா' போடக் கற்றுக் கொண்டான்.

கண்மணி டீச்சருக்கு கல்யாணமாகி இரண்டு மாதங்களோ என்னவோதான் கணவருடன் இருந்தாராம். கண்மணி டீச்சரின் கணவர் வேறு யாரையோ கல்யாணம் செய்து கொண்டு போய்விட்டதாகப் பேசிக் கொண்டார்கள். டீச்சருக்கு இரண்டு தங்கைகள், இரண்டு தம்பிகள். அவர்களுக்கெல்லாம் டீச்சர் கல்யாணம் செய்து வைத்துவிட்டார்கள்.

கண்மணி டீச்சர் எப்போதும் புன்னகை நிரம்பிய முகத்துடன் இருப்பது மாதிரியே தோன்றும். இரக்க குணம் அதிகம்.

குணசேகரனுக்கு அவன் அப்பா நோட்டு வாங்க காசே தராதபோது டீச்சர்தான் நோட்டும் புத்தகமும் வாங்கிக் கொடுத்தார்கள். சிலேட்டு, பென்சில், நோட்டு, புத்தகம் என்று கண்மணி டீச்சர் எத்தனையோ பேருக்கு வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள்.

குமாருக்கு இப்போது நாற்பது வயது. கோயில்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைபார்க்கிறான். அலுவலக வேலையாக பத்து நாட்கள் சென்னையில் இருந்துவிட்டு ஊர் திரும்பிக் கொண்டிருக்கிறான்.

குமார் சென்னைக்கு வருகிறபோதெல்லாம் முத்துரத்தினத்தைப் பார்க்காமல் வருவதில்லை. அவன் சினிமாத்துறையில் இருக்கிறான். அவன்தான் அடிக்கடி கண்மணி டீச்சரைப் பற்றிக் கேட்பான்.

""ஒருநாள் கண்மணி டீச்சரைப் போய்ப் பார்க்கணும். அவங்களுக்கு இப்ப எழுபது வயசுக்கு மேல இருக்குமில்ல.''

கடைசி வரை பார்க்க முடியாமலே போய்விட்டது. போன வருடம்தான் கண்மணி டீச்சர் இறந்து போனார்கள். அப்போது குமார் கம்பெனி விஷயமாக சென்னையில் இருந்தான். ஊருக்கு வந்த பின்னால்தான் டீச்சர் இறந்தபோன விஷயமே தெரிந்தது.

இவன் இரண்டாம் வகுப்பு படிக்கும்போது டீச்சருக்கு முப்பத்தைந்து வயதுக்குப் பக்கம் இருக்கும்.

நான்காம் வகுப்பு படிக்கும்போது குமாரின் பள்ளி வாழ்க்கையில் ஒரு சம்பவம் நடந்தது. அந்த சம்பவம் எப்போதாவது நினைவிற்கு வரும். அதை நினைக்கும்போதெல்லாம் கண்மணி டீச்சரின் ஞாபகம் வராமல் போகாது. இவன், பாரதிஆனந்த், சந்திரன், முத்துரத்தினம், முருகேசன் எல்லாரும் ஒரு வரிசையில்தான் உட்கார்ந்திருப்பார்கள். இடது பக்கம் மாணவிகள். வலது பக்கம் மாணவர்கள். குமார் வரிசையில் கடைசியாக இடது ஓரத்தில் உட்கார்ந்திருந்தான். இவனுக்கு நேராக நீலா உட்கார்ந்திருப்பாள்.

நீலாவின் அப்பா போலீஸ்காரர். பள்ளிக்கூடத்திற்குப் பக்கத்தில்தான் நீலாவின் வீடு இருக்கிறது. கொஞ்ச நாட்களுக்கு முன்னால் நீலா ஓர் அழகான பேனாவைக் கொண்டு வந்திருந்தாள். அதை ஹீரோ பேனா என்று சொன்னாள். விலை முப்பத்தைந்து ரூபாயாம். குமாரின் அப்பாவுக்கு கூலி வேலை. ஒருநாளைக்கு ஐந்து ரூபாயோ, பத்து ரூபாயோதான் கிடைக்கும். நீலாவிடம் ஓர் அழகான பென்சில் பாக்ஸ் இருக்கிறது. அதில்தான் ஹீரோ பேனாவைப் போட்டு வைப்பாள். மூடி தங்கக் கலரில் பளபளக்கும். கீழ்ப்பாகம் மரக்கலரில் இருக்கும்.

குமாரின் அப்பாவுக்கு சங்கீதத்தில் ஆர்வம் உண்டு. அடிக்கடி கோயில்களுக்கு பஜனைப் பாட்டுகள் பாடப் போவார். மிருதங்கமும் வாசிப்பார். குமாருக்கு "உலகம் சமநிலை பெற வேண்டும்' பாட்டு ரொம்பவும் பிடிக்கும். ராம்ஸ் தியேட்டரில் "அகத்தியர்' படம் பார்த்துவிட்டு, சீர்காழி கோவிந்தராஜன்தான் உண்மையிலேயே அகத்தியர் என்று நினைத்துக் கொண்டிருந்தான். மேல் உலகத்தில் இருக்கும் சாமிகள் சினிமாவுக்காக நடித்துக் கொடுத்துவிட்டுப் போகும் என்று நம்பிக் கொண்டிருந்தான். இரட்டை வேடப் படங்களைப் பார்த்துவிட்டு, இரண்டு எம்.ஜி.ஆர்கள், இரண்டு சிவாஜிகள் இருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்த காலம்.

தன்னுடைய குரலை சீர்காழி கோவிந்தராஜன் குரல்போல பாவித்து பாட்டைப் பாடிக் கொண்டிருப்பான். அப்பா கேட்டுவிட்டு, ""நல்லாப் பாடறியே...'' என்று சொல்லிவிட்டு அகத்தியர் பாட்டு புத்தகத்தை வாங்கி முழுப் பாட்டையும் பாடச் சொன்னார். அவரும் எப்படிப் பாட வேண்டும் என்று பாடிக் காட்டினார். சோமந்துறைசித்தூரில் ஒரு பஜனைக் கச்சேரிக்கு கூட்டிப் போனார். மைக்கெல்லாம் வைத்திருந்தார்கள். திடீரென்று அப்பா இவனைப் பாடச் சொல்லிவிட்டார். இவனும் பாட ஆரம்பித்துவிட்டான். சுதி சேராத பாட்டுக்கு ஆர்மோனியம் வாசிப்பவர் வாசிக்க முடியவில்லை. திணறிப்போனார். மிருதங்கம் வாசிப்பவர் சமாளித்துக் கொண்டு மிருதங்கம் வாசித்தார். ஏதோ செய்யுளை ஒப்புவிப்பதுபோல இடைவெளியில்லாமல் வேகமாகப் பாடி முடித்துவிட்டான்.

""பரவாயில்லப்பா... நல்ல குரல்வளம் இருக்கு...'' என்று யாரோ ஒருவர் பாராட்டினார்.

""எத்தனாம் வகுப்பு தம்பி படிக்கிறே?''

""நாலாம் வகுப்பு'' என்றான் குமார்.

கேட்டவர் அந்த ஊர் பள்ளிக்கூடத்து தலைமையாசிரியராம்.

""நல்லா பாடுறே தம்பி... இந்தப் பேனாவை நேத்துதான் வாங்கினேன்... இதை உன்னோட பாட்டுக்குப் பரிசாகக் கொடுக்கிறேன். தொடர்ந்து முயற்சி பண்ணு. பெரிய பாடகனா வரணும்'' என்று வாழ்த்தினார்.

எல்லாரும் கைதட்டினார்கள்.

குமார் பேனாவைப் பார்த்தான். நீலாவிடம் இருந்த அதே மாதிரியான ஹீரோ பேனா.

""பேனாவைப் பத்திரமா வச்சுக்கோ... பள்ளிக்கூடத்துக்குக் கொண்டு போக வேண்டாம். ஆறாவது ஏழாவது போகும்போது கொண்டு போய்க்கோ...'' என்று அப்பா பெட்டியில் பேனாவைப் பத்திரமாக வைத்தார்.

ஆனால் குமார் அடுத்தநாள் ஒரு காரியம் செய்தான். பள்ளிக்கூடத்தில் எல்லாருக்கும் இந்தப் பேனாவைக் காட்டவேண்டும் என்று ஆசைப்பட்டான். அப்பாவுக்குத் தெரியாமல் பெட்டியைத் திறந்து பேனாவை எடுத்து புத்தகப் பையில் வைத்துக்கொண்டான்.

காலையில் வந்ததும் நீலாவிடம், ""இங்க பார்த்தியா... நீ வச்சிருக்கற மாதிரியே பேனா...'' என்றான்.

பேனாவைப் பார்த்ததும் நீலாவின் முகம் வித்தியாசமாக மாறியது.

""டேய்... இது என்னோட பேனாடா... நேத்திருந்து காணோம்... நீ தூக்கி வச்சிட்டியா? கொடுடா...'' என்று பிடுங்க வந்தாள்.

""இது என்னோட பேனா...'' கால்சட்டைப் பைக்குள் பேனாவை வைத்துக் கொண்டான்.

""இரு இரு... எங்க அப்பாகிட்டச் சொல்றேன்''

""நீலா... இது என்னோட பேனா. நேத்து சித்தூர்ல கோயில்ல பாடினதுக்கு கொடுத்தாங்க.''

""பொய்யா சொல்றே... நேத்திருந்து பேனாவைக் காணோம்னு தேடிட்டு இருந்தேன். கொடுத்திருடா... இல்லாட்டி டீச்சர்கிட்டச் சொல்லிடுவேன்''.

""இல்ல நீலா... எங்கம்மா மேல சத்தியமா எம்பேனா...''

""இரு எங்கப்பாவைக் கூட்டிட்டு வர்றேன்''

மதியம் உணவு இடைவேளையின்போது நீலா வீட்டிலிருந்து அவள் அப்பாவைக் கூட்டிவரப் போய்விட்டாள்.

குமாருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. ஆனால் பயம் பிடித்துக்கொண்டது.

பேனாவைத் தெரியாமல் எடுத்துக் கொண்டு வந்த விஷயம் அப்பாவுக்குத் தெரிந்தால் தோலை உரித்துவிடுவார்.

பள்ளிக்கூட வாசலில் இவன் பையன்களோடு விளையாடிக் கொண்டிருக்கும்போது நீலா அவள் அப்பாவைக் கூட்டிக் கொண்டுவந்தாள்.

""யாரு?'' என்று நீலாவின் அப்பா கேட்டார்.

குமாருக்கு நீலாவின் அப்பாவைப் பார்த்ததுமே உயிரே போய்விட்ட மாதிரி ஆகிவிட்டது. அந்த முறுக்கு மீசையும் முரட்டுத் தோற்றத்துடன் கூடிய உருவமும் கிலியை ஏற்படுத்திற்று.

""இவன்தான்'' என்று குமாரைக் காட்டினாள் நீலா.

""எங்கடா பேனா...'' நீலாவின் அப்பா மிரட்ட,

வயிற்றைக் கலக்கியது.

""இல்லீங்க... இது என்னோட பேனாங்க...''

""எங்க எடு பார்க்கலாம்...'' என்று கையை நீட்டினார்.

""ம்ஹும்... என்னோட பேனாங்க... நான் தரமாட்டேன்.''

""டேய்... எடுடான்னு சொல்றனல்ல'' என்று கையை ஓங்கினார்.

குமார் நடுங்கிப்போய் நின்றான். அழுகையே வந்துவிட்டது.

""சார்... சார்...'' என்று கண்மணி டீச்சர் ஓடிவந்தார்.

""என்ன சார் என்ன பண்றீங்க எதுக்கு பையனை அடிக்க கையை ஓங்கறீங்க?'' என்று கண்மணி டீச்சர் அதட்டினார். அதற்குள் மாணவர்கள் கூட்டம் கூடிவிட்டது. மயில்சாமி வாத்தியார், ஹெலனா மேடம் எல்லாரும் வந்துவிட்டார்கள். மற்ற ஆசிரியர்கள் மதியம் சாப்பிட வீட்டுக்குப் போயிருந்தார்கள்.

""பேனாவைத் திருடிட்டானுங்க டீச்சர்'' என்றார் நீலாவின் அப்பா.

""அதுக்கு அடிப்பீங்களா? எங்ககிட்ட வந்து நீங்க சொல்லியிருக்கணும்... நீங்க பாட்டுக்கு அடிக்கக் கையை ஓங்கறீங்க''

""முப்பத்தஞ்சு ரூபா பேனாங்க...''

""இருக்கட்டுங்க சார்... நாங்க எதுக்கு இருக்கறோம்?இது பள்ளிக்கூடம். இவங்க எல்லாரும் எங்களோட மாணவர்கள்... நாங்க விசாரிச்சுக்கறோம்.''

நீலாவின் அப்பா குமாரை முறைத்தபடி பார்த்துக் கொண்டிருந்தார்.

""குமார்... இங்க வா...'' என்று கண்மணி டீச்சர் அருகில் அழைத்தார்.

""எதுக்கு அழறே? கண்ணைத் தொடைச்சுக்க

குமார்'' கண்களைத் துடைத்துக்கொண்டான்.

""டீச்சர்... இது என்னோட பேனாங்க டீச்சர். நேத்து சித்தூர் கோயில்ல பாட்டுப் பாடுனதுக்கு அந்த ஊர் பெரிய வாத்தியார் பரிசா கொடுத்தாருங்க டீச்சர்...'' தேம்பிக்கொண்டே சொன்னான். பேனாவை கண்மணி டீச்சரின் கையில் கொடுத்தான்.

""அழுகாதடா குமார்... இங்க உன்னை யாரும் அடிக்கமாட்டாங்க. நான் இருக்கறேன். என்ன பாட்டுப் பாடினே?''

""உலகம் சமநிலை பெறவேண்டும் பாட்டுங்க டீச்சர்.''

""பொய் சொல்றான்... நம்பாதீங்க டீச்சர்'' என்றார் நீலாவின் அப்பா.

""சார்... பையனோட மூஞ்சியைப் பாருங்க சார்... பொய் சொல்ற மாதிரியா தெரியுது. நீங்க உங்க வீட்டில எதுக்கும் தேடிப் பாருங்க.''

""இல்லீங்க டீச்சர் நல்லாத் தேடிப் பார்த்துட்டோம். இவன்தான் திருடிட்டுப் பொய் சொல்றான். நீங்களும் அதை நம்பறீங்க. ஒரு அடிபோட்டா உண்மையைச் சொல்லிடுவான். திருட்டு ராஸ்கல்... பேனாவைத் திருடிட்டு நல்லா நடிக்கறான் பாரு...''

""சார்... வார்த்தைகளை விடாதீங்க சார். இங்க இருக்கற குழந்தைக எல்லாரும் நல்லவங்கதான். எதையும் தீர விசாரிக்காம ஒரு முடிவுக்கு வராதீங்க. பையனோட அப்பாகிட்ட கேட்போம். அந்த சித்தூர் ஹெட்மாஸ்டர்கிட்டயும் கேட்டுப் பார்ப்போம்... அப்புறம் ஒரு முடிவுக்கு வருவோம்.''

""என்னங்க டீச்சர் நீங்க, கையும் களவுமா மாட்டியிருக்கறான். நாலு சாத்து சாத்தி விசாரிக்காம... என்னனென்னமோ பேசிட்டு இருக்கறீங்க. திருட்டு நாயி... முழிக்கறதைப் பாரு... இந்த வயசிலேயே என்ன திருட்டுத்தனம்?''

""சார்... பொறுமையாப் பேசுங்க... தவறான வார்த்தைகளை உபயோகப்படுத்தாதீங்க...''

மேற்கொண்டு கண்மணி டீச்சர் ஏதோ சொல்லவருவதற்குள், நீலாவின் தம்பி, ""அப்பா... அப்பா...'' என்று கூட்டத்தை விலக்கிக் கொண்டு வந்தான். அவன் கையில் ஹீரோ பேனா.

""பேனா கெடைச்சிருச்சு... சாமி படத்துப் பின்னால இருந்துச்சு'' என்றான்.

நீலாவின் அப்பா திகைத்துப்போனார்.

""சாமி படத்துக்குப் பின்னாலயா இருந்துச்சு?''

""ஆமா... அம்மாதான் பார்த்து எடுத்துக் கொடுத்துச்சு...''

அவருக்கு இந்த சூழ்நிலையை எப்படிச் சமாளிப்பது என்று தெரியவில்லை. கோபம் நீலாவின் பக்கம் திரும்பியது.

""கழுதை... பேனாவை எங்கயோ வெச்சுட்டு காணோம்னு சொல்லிட்டிருக்கறே... எல்லாம் உன்னாலதான்...''

""இல்லப்பா... நீங்கதான் ஏதோ எழுதணும்னு பேனாவை எடுத்து எழுதிட்டு, பேனாவை சாமி படத்துக்குப் பின்னால வெச்சிங்களாம். அம்மா சொன்னாங்க...'' என்றான் நீலாவின் தம்பி.

""சரி விடு... பேனா கெடைச்சிருச்சல்ல... சாரிங்க டீச்சர்'' என்று சொல்லிவிட்டு நழுவப் பார்த்தார்.

""சார்... ஒரு நிமிஷம்...'' என்றார் கண்மணி டீச்சர்.

நீலாவின் அப்பா நின்று திரும்பி டீச்சரைப் பார்த்தார்.

""என்கிட்ட எதுக்கு மன்னிப்பு கேட்கறீங்க? உங்களால இந்த சின்னப் பையனோட மனசு எவ்வளவு வேதனைப்பட்டிருக்கும்? தயவுசெஞ்சு அவன்கிட்ட மன்னிப்பு கேளுங்க...''

நீலாவின் அப்பாவின் முகம் மாறியது. தடுமாறிப்போய் நின்றார்.

""சின்ன விஷயம்... இதுக்குப்போய்...'' என்று இழுத்தார்.

""தப்பில்லீங்க சார்... மன்னிப்பு கேட்கறதில தப்பில்ல. நீங்கதான் கடுமையா நடந்துகிட்டீங்க. குழந்தைக கடவுளுக்குச் சமம். மன்னிப்புக் கேளுங்க... யோசிக்காதீங்க...''

நீலாவின் அப்பா டீச்சரின் முகத்தைப் பார்த்தார். பிறகு குமாரைப் பார்த்தார்.

""தம்பி... மன்னிச்சுக்க தம்பி... அவசரப்பட்டு உன்னைத் தப்பாப் புரிஞ்சுக்கிட்டு பேசிட்டேன். மன்னிச்சுக்க தம்பி...'' என்று அவன் தோளை ஆதரவாகத் தட்டிக் கொடுத்துவிட்டார்.

""நீங்களும் என்னை மன்னிச்சுக்குங்க டீச்சர்'' என்று சொல்லிவிட்டு குற்ற உணர்வோடு அந்த இடத்தைவிட்டு அகன்றார்.

""குமார்... நீலாவைத் தப்பா நினைச்சுக்காதே... அவளும் சின்னப்பொண்ணுதானே. ரெண்டு பேனாவும் ஒரேமாதிரி இருந்ததாலே குழம்பிப்போயிட்டா. சரியா?'' என்றார் கண்மணி டீச்சர்.

""சரிங்க டீச்சர்'' என்று நீலாவைப் பார்த்து புன்னகைத்தான். அவளும் இவனைப் பார்த்து புன்னகைத்தாள்.

குமார் ஆறாம் வகுப்பிற்கு பெரிய பள்ளிக்கூடத்தில் சேர்ந்தான். அப்போதுதான் ஊருக்குள் புதிதாக நூலகம் திறந்திருந்தார்கள். பிரேயரில் கணக்கு ஆறுச்சாமி வாத்தியார் நூலகம் வந்திருக்கும் தகவலைத் தெரிவித்தார். உறுப்பினர்களாகச் சேரச் சொல்லி அறிவுறுத்தினார். குமார் அடுத்த நாளே ஐந்து ரூபாய் கட்டி நூலக உறுப்பினராகச் சேர்ந்துவிட்டான். கண்மணி டீச்சர் சொன்ன கதைகளையெல்லாம் அங்கேதான் படித்தான். டீச்சர் இந்தக் கதைகளையெல்லாம் எங்கே படித்திருப்பார்கள் என்பதை நினைக்க ஆச்சரியமாக இருந்தது.

எட்டாம் வகுப்பு வரை நீலா இங்கேதான் படித்தாள். அதற்குப் பின்னால் அவளுடைய அப்பாவுக்கு மாற்றல் வந்து கோயமுத்தூரில் துடியலூர் பக்கமாக குடிபோய்விட்டார்கள். அதற்குப் பின்னால் நீலாவைப் பார்க்கவே இல்லை.

கண்மணி டீச்சரைப் பார்ப்பது என்பது எப்போதாவது நிகழ்ந்து கொண்டேயிருந்தது.

பத்தாவது முடித்தவுடன் இவனை அப்பா மில் வேலைக்கு அனுப்புவது என்று முடிவு செய்திருந்தார். டீச்சர் ஒருநாள் இவன் வீட்டு வழியாகப் போகும்போது அப்பாவைப் பார்த்துப் பேசினார். பத்தாவது வரை படித்ததுபோதும் என்று முடிவு செய்திருந்த அப்பாவிடம், ""ஒரு ரெண்டு வருஷம்... பிளஸ்-டூ முடிக்கட்டுமே அப்புறம் வேணும்னா வேலைக்குப் போறதைப் பத்தி யோசிக்கலாம்'' அப்பாவின் மனசை இளக வைத்தார்.

""குமார்... பிளஸ்-டூவில நல்லாப் படிச்சு, நல்ல மார்க் வாங்கி அப்பா அம்மா பேரைக் காப்பத்தணும்...'' என்று கண்மணி டீச்சர் வாழ்த்திவிட்டுப் போனார்.

இவனை மட்டுமல்ல. செந்தில், முத்துரத்தினம், பாரதிஆனந்த், ஆனந்தவேல், சிவக்குமார், ஆனந்தி, உமா, மகாலட்சுமி என்று பலருடைய வீட்டிலும் போய் பேசி படிப்பைத் தொடரக் காரணமாக இருந்திருக்கிறார்.

வாழ்க்கை ஓரளவிற்கு நல்ல நிலைமையில் இருப்பதற்குக் காரணம் கண்மணி டீச்சர்தான் என்பதை குமார் மறக்கவில்லை. பிளஸ்-டூ முடித்தபோது கல்லூரியில் சேர்க்கச் சொல்லி அப்பாவிடம் பேசியது, கல்லூரி முடித்துவிட்டு வேலை தேடிக் கொண்டிருந்தபோது, ""கோயில்பாளையத்தில ஒரு கம்பெனி இருக்கு. அங்க வேலைக்கு ஆள் எடுக்கறாங்க. ஒரு அப்ளிகேஷன் போடு'' என்று ஆலோசனை தந்தது... என்று கண்மணி டீச்சர் அவன் வாழ்க்கைப் பாதையில் தொடர்ந்து கொண்டிருந்தார்கள்.

கண்மணி டீச்சருக்கு என்று இவன் எதுவுமே செய்தததில்லை. டீச்சரின் இறுதி ஊர்வலத்தில்கூட கலந்து கொள்ள முடியவில்லை. கடைசி நாளில்கூட போய்ப் பார்க்க முடியாமல் போய்விட்டது. அந்த வருத்தம் எப்போதாவது தோன்றி மனசை உறுத்திக் கொண்டேயிருக்கும்.

இரயில் வடகோவையைத் தாண்டிக் கொண்டிருந்தது.

""கண்மணி... கோயமுத்தூர் வந்தாச்சு... எழுந்திரு...''

குழந்தையைத் தாய் எழுப்பும் குரல்.

இரயில் கோவை ஸ்டேஷனுக்குள் நுழைந்தது.

இரயில் நின்றதும் கூட்டத்தோடு கூட்டமாக இறங்கினான்.

""கண்மணி மெதுவா... பார்த்து இறங்கு...'' கண்மணி என்கிற பெயருள்ள அந்த சிறுமியைப் பார்த்தான். ஏழு வயது இருக்கும். கண்மணி அம்மாவிற்கு விளையாட்டுக் காட்டிக் கொண்டு கூட்டத்திற்குள் புகுந்து ஓடியது. அந்தக் குழந்தையின் அம்மா விரட்டிக் கொண்டு ஓடினாள்.

குமாரின் அலைபேசி அழைத்தது. அம்மா அழைக்கிறாள்.

""சொல்லும்மா...'' என்றான் குமார்.

""குமாரு... செல்வராணிக்கு பெண் குழந்தை பொறந்திருக்கு...''

""நான் கோயம்புத்தூர் வந்துட்டேன். நேரா ஆஸ்பத்திரிக்கு வர்றேன்...''

குமாருக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அதீத உற்சாகத்தில் மனசு மிதந்தது.

""கண்மணி... நில்லு...'' அந்தக் குழந்தை இவன் மேல் மோதி நின்றது. குழந்தையைப் பிடித்துக் கொண்டான்.

""நீ தான் கண்மணியா?'' என்று கேட்டான்.

பதில் சொல்லாமல் சிரித்தது.

குழந்தையின் தாய் ஓடிவந்தாள். குழந்தையை அவளிடம் ஒப்படைத்தான்.

""வாலு...'' செல்லமாகத் தட்டிக்கொண்டு கூட்டிக்கொண்டு போனாள்.

குழந்தை சத்தமாக சிரித்துக் கொண்டே போனது.

கண்மணி...

குமார் குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது என்று முடிவெடுத்துவிட்டான்.

கண்மணி

கண்மணி டீச்சருக்கான நன்றியை இப்படியாவது செய்ய முடிந்ததே. செல்வராணியிடம் சொன்னால் ரொம்பவும் சந்தோசப்படுவாள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com