தெய்வத்தின் நிழல் ரா.கணபதி!

1935 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தியில் பிறந்து 2012ஆம் வருடம் பிப்ரவரியில் சிவராத்திரியன்று மஹா
தெய்வத்தின் நிழல் ரா.கணபதி!

1935 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தியில் பிறந்து 2012ஆம் வருடம் பிப்ரவரியில் சிவராத்திரியன்று மஹா பெரியவருடன் சங்கமமான ரா.கணபதியைப் பார்த்தால் 35 புத்தகங்கள்

எழுதியவர் போல் தெரியாது. எலும்பும் தோலுமாய் இருப்பார். சிறு வயதில் பிடித்த காச நோயின் வடு இறுதிவரை இருந்தது. பேசிக்கொண்டே இருப்பார். திடீரென்று மெளனத்திற்குப் போய் விடுவார். அப்படி இருந்ததால் தான் அவர் எழுத்தும் உணர்ச்சிப்பூர்வமாக இருக்கும். ஆரியாம்பாள் இறப்பின் போது சங்கரர் பட்ட துயரத்தை இவர் வர்ணித்ததை அறிஞர் அண்ணா ரொம்பப் பாராட்டினாராம். அவர் தாயாரும் அந்தச் சமயத்தில் மறைந்ததால் அவர் மன நிலையும் அப்படி இருந்ததாகச் சொன்னாராம்.

இடை இடையே கர்நாடக கீர்த்தனைகளையும் பஜனைப் பாடல்களையும் பாடியிருக்கிறார்.

பெரியவர் கட்டளைப் படிதான் ஆதி சங்கரர் வரலாற்றையும் கணபதி எழுதினார். இவருடைய "ஜய ஜய சங்கர' தொடர் கல்கியில் 1962ஆம் ஆண்டு வெளிவந்தது. 10 ஆண்டுகள் கல்கியில் பணிபுரிந்தார். mail நாளேட்டில் கொஞ்சம் காலம். 25 ஆண்டுகள் எந்தப் பத்திரிகையையும் சாராமல் எழுதினார். புட்டபர்த்தியில் தங்கலாம் என்று சென்ற போது ஸ்ரீ சாய் பாபா ""உன் வேலை இங்கே இல்லை. தெய்வத்தின் குரல் எழுது. அதுவே உன் பிறவிப் பணி'' என்றாராம்.

பல புத்தகங்கள் எழுதியிருந்தாலும், சத்ய சாய்பாபா பற்றி, ஸ்ரீ ராம கிருஷ்ணர் - ஸ்வாமி விவேகானந்தர், ஸ்ரீ சாரதா தேவி பற்றி, மீரா பாய், பகவான் ரமணர் பற்றி என்று பல மஹான்களைப் பற்றி அவர் எழுதியிருந்தாலும் காஞ்சி ஸ்ரீ மஹா பெரியவர் உபன்யாசங்களையும், சம்பாஷணைகளையும் தொகுத்து அவர் ஏழு புத்தகங்களாக வானதி பதிப்பகம் மூலம் கொண்டு வந்த "தெய்வத்தின் குரல்' தான் அவர் எழுத்துக்களுக்கு மகுடம் போல் திகழ்கிறது. "தெய்வத்தின் குரல்' தொகுப்பிற்காக ரா.க. ரொம்பவே சிரமப்பட வேண்டியிருந்தது. காரணம் பெரியவர் ஒரு விஷயத்தை ஓர் இடத்தில் ஆரம்பிப்பார். வேறு இடத்தில் முடிப்பார். ஒவ்வொரு விஷயத்தையும் அலசும்போது முன்னர் விட்டுப் போன விளக்கங்களை வேறு இடத்தில் சொல்வார். கணபதி அனைத்தையும் செவிமடுத்துக் கேட்டு சந்தேகம் இருந்தால் வேறு புத்தகங்களையோ நபர்களையோ பார்த்துத் தெரிந்து கொண்டு அப்படியும் குழப்பம் இருந்தால் பெரியவரிடமே கேட்டு குறிப்பு எடுத்துக் கொள்வார். அதுவும் பெரியவரின் சம்பாஷணைப் பாணியிலேயே இவரும் குறிப்பு எடுத்து எழுதினார். அந்த நூல் "ஸ்ர்ண்ஸ்ரீங் ர்ச் ஞ்ர்க்' என்று ஆங்கிலத்திலும் மற்ற மொழிகளிலும் (ஹிந்தியில் மூன்று தொகுப்புகள் வந்துள்ளன) மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கடராமன் போன்றவர்கள் அந்த நூலை "ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி உபநிடதம்' என்று புகழ்ந்திருக்கிறார்கள்.

மஹா பெரியவர் மிகச் சில சமயங்களில் ஆன்மீகம் தவிர இதர விஷயங்களைப் பேசியதும் உண்டு. அந்த நேரங்களில் ஹாஸ்ய நொடிகளும் உண்டு. அதிலும் பலப் பல விஷயங்கள் வெளி வரும் என்பார் கணபதி. அவரே பெரியவரை சமயம் வாய்த்தபோது ஒருமுறை ""ஏன் உங்களை பெரியவான்னு கூப்பிடறா'' என்று கேட்டாராம். அவர் நமுட்டுச் சிரிப்புடன் ""பெரிய வாய். ஓயாம பேசறேன் இல்லயா, அதனாலோ என்னவோ'' என்றாராம். ""இல்லை. மஹா வாக்கியங்களை உபதேசம் பண்ற வாய்''என்றார் இவர்.

""சரி அப்ப ஏன் பெரியவாள்னு சொல்றா'' என்று பீடாதிபதி கேட்டதற்கு ""எங்க காம க்ரோதத்தை நீங்க வாளால் அறுத்து எரியறதாலே'' என்று சட்டென்று கணபதி சொன்னாராம். தான் சார்ந்துள்ள "காமகோடி' என்கிற பீடத்திற்கான பெயர்ப் பொருத்தத்தைப் பெரியவர் ஒருமுறை சொன்னாராம். ""காமகோடின்னா தர்மார்த்த காமகோடின்னுஅர்த்தம். காமத்தின் கோடியிலே என்ன இருக்கும்? மோஷம்''என்றாராம்.

ரா.கணபதியின் "மைத்ரீம் பஜத' புத்தகத்திலிருந்து மஹா பெரியவர் சம்பந்தமான ஒரு சம்பவம்: சென்னை சம்ஸ்கிருதக் கல்லூரியில் ஸ்ரீ மஹா பெரியவர் முகாமிட்டிருந்த சமயம். ஒரு சின்ன பெண் ஸ்ரீ ராம ஜயம் எழுதிய நோட்டு கொடுத்து வெள்ளிக் காசு பெரியவரிடம் கேட்டது. அப்போது ஒரு லட்சம் நாமம் எழுதினால் தங்கக் காசும் 12,500 எழுதினால் வெள்ளிக் காசும் பெரியவர் தந்த சமயம். வெள்ளிக் காசு கேட்டவுடன் மலர்ந்த முகத்துடன் நோட்டை வாங்கிக் கொண்டு காசு கொடுத்து அனுப்பினார். சற்று நேரத்திலேயே கண்ணைக் கசக்கிக் கொண்டு அவள் திரும்ப இவரிடம் வந்து நின்றாள். ""காசு எங்கேயோ தொலைந்து போய்விட்டது'' என்று அழுதாள்.

 ""நீ எவ்வளவு எழுதினாய்'' என்று பெரியவர் கேட்டார்.

 ""8,500 நாமம் எழுதினேன்''.

""பின்னே ஏன் 12,500 எழுதினது போல் வெள்ளிக் காசு கேட்டாய்?''

""பொய் சொன்னேன்''.

""அது தப்பு இல்லயா, அப்படிச் செய்யலாமா?''

என்று அவளைக் கேட்டவர் அங்கிருந்த பக்தர்களைக் கேட்டார்.

""இந்தச் சிறுமி பாவம் அறியாமல் 12,500 ராம நாமாக்களுக்குப் பதில் 8,500 நாமா எழுதியுள்ளது.  இன்னொரு 4,000 நாமா குறைகிறது. நீங்க எழுதி சரி செய்ய முடியுமா''?

அங்கேயே கூட்டத்தில் இருந்த அனைவருக்கும் தாளும் எழுது கோலும் வழங்கப்பட்டன. 4000 பூர்த்தியானதும் அந்தச் சிறுமியிடம் அவர் சொன்னார்:

 ""நீ 8500 தான் எழுதினதா நிஜத்தைச் சொன்னதால இவங்களை வெச்சு மீதியை எழுதிட்டேன். கணக்கு சரியாப் போயிடுத்து. வெள்ளிக் காசு தரலாம்னாலும் நீ உண்மையைச் சொன்னதுக்கு உனக்கு தங்கக் காசே தரேன்'' என்று தங்கம் எடுத்துக் கொடுத்தார்.

என்ன அற்புதமான பேரம் பாருங்கள். சிறுமி செய்த தவறுக்குப் பரிகாரமாக 4000 நாமம் எழுதும் புண்ணியம் பக்தர்களுக்கு. தவறை ஒப்புக் கொண்டதால் சிறுமிக்கு வெள்ளிக்குப் பதில் தங்கக் காசு கருணா சாகரம் என்று இதனால் தான் அவருக்குப் பெயரோ?

 "கருணைக் கடலில் சில அலைகள்' என்ற அவர் புத்தகத்திலிருந்து இன்னொரு சம்பவம்: ஓர் இளைஞன் ""தான் படித்து இரண்டரை வருஷம் ஆகியும் வேலை கிடைக்கலை,

ஏழ்மையான குடும்பம், சகோதரி வேறு கல்யாணத்திற்கு நிற்கிறாள், எல்லோரும் அவனை  "தண்டச் சோறு' என்று திட்டுகிறார்கள்'' என்று சொல்லி அவரிடம் அழுதான்.

அவனைக் காத்திருக்கச் சொல்லிவிட்டு தன் முக்கிய பணிகளை அவர் பார்த்துக் கொண்டிருந்த வேளையில் ஒரு வாரியத்தின் மேற்பார்வைப் பொறியாளராக இருந்த ஓர் அதிகாரி தரிசனத்திற்கு வந்தார். அவரிடம் மஹா பெரியவர் தன் துறவுக் கோலைச்சுட்டிக் காட்டி ""இந்த தண்டத்துக்கு ஒரு வேலை போட்டுத் தருவீங்களா'' என்று கேட்க அவர் அதிர்கிறார். ""ரெண்டரை வருஷம் ஆச்சாம். வேலை கிடைக்கலையாம். படிச்ச பையன். ஏழ்மையான குடும்பம். ஒரு வேலை கிடைக்குமா? எல்லாரும் அவனை தண்டம்னு திட்டறாங்களாம்''.

""உத்தரவு பெரியவா''.

அந்த இளைஞனைக் கூப்பிட்டு அந்த சந்தோஷ செய்தியைச் சொல்லியபடி தன் துறவுக் கோலை சுவரில் சார்த்துகிறார். ""உம். ஒரு தண்டத்துக்கு வேலை கிடைச்சாச்சு.

இன்னொரு தண்டம் பார்த்துக் கொடுத்திருக்கு. தண்டம் தான் எங்களுக்கு ரக்ûக்ஷ. ப்ரஹ்மசாரிகளுக்கும் தண்டம் ரக்ûக்ஷ. ராஜ தண்டத்துக்கு அடங்கித் தான் நீதி, நியாயம்.

இந்த லோகத்திலே எதுவும் தண்டமில்லை'' என்று திருவாய் மலர்ந்தருளினார் பெரியவர்.

ரா.கணபதியின் ஏழாவது "தெய்வத்தின் குரல்' தொகுப்பை மஹா பெரியவர் பார்க்கவில்லை. அது வெளி வந்த ஆண்டு 2000. அதற்குப் பிறகு இரண்டு தொகுப்புகளுக்கு கணபதியிடம் விஷயம் இருந்ததாம். "ஆனால் என் புத்தியில் இருந்து எழுத வெச்ச பேய் மலை ஏறிடுத்து. என்னாலே இனி எழுத முடியாது'' என்று நிறுத்திக் கொண்டுவிட்டார். ""அது என்னவோ வந்து ஆட்டம் காட்டிட்டுப் போயிட்டா பெரியவா'' என்று மஹாசுவாமிகளின் வாழ்க்கையைப் பற்றி முத்தாய்ப்பாய் சொல்கிறார் ரா.க.

ஆட்டம் போட்டது பெரியவர் மட்டுமா? ரா.கணபதியும் தான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com