முதன் முதலாய்...

பின்னணிப் பாடகர் ஒருவருக்கு ஹைதராபாத்தில் சிலை வைக்கப்பட்டிருக்கிறது. நூறு படங்களுக்கு மேல்
முதன் முதலாய்...
Published on
Updated on
2 min read

டி.எம்.சௌந்தர்ராஜன் - கிருஷ்ண விஜயம்

ஏ.எம்.ராஜா          - மருமகள்

ஜிக்கி          - ஞான சௌந்தரி

பி.பி.சீனிவாஸ்          - ஜாதகம்

மேலே குறிப்பிட்ட படங்கள் அந்தப் பின்னணிப் பாடகர்கள் முதன்முதலில் பாடிய படங்களின் பெயர்கள்.

-வி.ந.ஸ்ரீதரன், சென்னை

பாடகருக்கும் சிலை!

பின்னணிப் பாடகர் ஒருவருக்கு ஹைதராபாத்தில் சிலை வைக்கப்பட்டிருக்கிறது. நூறு படங்களுக்கு மேல் இசையமைத்த இவர் விடுதலைப் போராட்டக் காலத்தில் விடுதலைப் பாடல்கள் பாடியதற்காக பதினெட்டு மாதம் சிறையில் இருந்தார்.

இவர்தான் பிரபல பின்னணிப் பாடகர்:

கண்டசாலா

-"திரை இசை அலைகள்' என்னும் நூலில் இருந்து: வி.ந.ஸ்ரீதரன்.

"கெளரவத்துக்கே பேரு'

கே.பாலசந்தரின் ""பாமா விஜயம்'' படத்தில் "சவுகார் ஜானகி, ஜெயந்தி, காஞ்சனா' என நாயகியர் மூவர் நடித்திருந்தாலும் கௌரவ வேடம் தாங்கிய ராஜஸ்ரீதான் டைட்டில் வேடம் ஏற்றார். இதே ராஜஸ்ரீயின் வேடத்தை மலையாளத்தில் ஏற்றவர் நடிகை நக்மா.

"நாடோடி மன்னன்' படத்தில் "சம்மதமா நான் உங்கள்' பாடலை பி.பானுமதி சொந்தக் குரலில் பாடி நடித்திருப்பார். பாடலின் இறுதிக்காட்சியில் அவர் குரலுக்கு வாயசைத்து நடித்த பெருமை இன்னொரு டூப் நடிகைக்குக் கிட்டியது. ஆம். லாங்ஷாட் காட்சியில் "எம்ஜிஆர்-பானுமதி' இருவருக்காக டூப் நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

-எஸ்.மந்திரமூர்த்தி, நாகர்கோயில்.

பெயரில் என்ன இருக்கிறது?

1970-களில் ஒரே சமயத்தில் தமிழில் மஞ்சுளா நடித்து வந்ததைப்போல் கன்னடத்திலும் ஒரு மஞ்சுளா நடித்து வந்தார். ""புதுவெள்ளம், மாலை சூடவா, எடுப்பார் கைப்பிள்ளை, காலம் பதில் சொல்லும்'' போன்ற தமிழ்ப் படங்களிலும் நடித்தார் கன்னட மஞ்சுளா. இப்போது அந்த இரு மஞ்சுளாக்களுமே உயிருடன் இல்லை.

வெண்ணிற ஆடை நிர்மலா ""உஷா குமாரி'' என்ற பெயரிலும், ரோஜா ரமணி ""ஷோபனா'' என்ற பெயரிலும் மலையாளப் படங்களில் நடித்து வந்தனர். இதைப்போன்றே ""வெற்றி விழா'' சசிகலா ""ரஜினி'' என்ற பெயரிலும் சிவரஞ்சனி ""ஊஹா'' என்ற பெயரிலும் தெலுங்கில் வலம் வந்தனர். ஆரம்பகாலப் படங்களில் ""பத்மினி'' என்ற பெயரிலேயே பண்டரிபாய் நடித்து வந்தார். பாடகி ஜிக்கியின் பெயர் குறிப்பிடப்

படும்போது கிருஷ்ணவேணி என்ற அடைமொழி பெயரும் இடம்பெற்றது.

-எஸ்.மந்திரமூர்த்தி, நாகர்கோயில்.

இது என்ன பெரிய வேலையா?

நானும், கக்கனும் (அமைச்சராக இருந்தபோது) ஒருசமயம் ஒரே ரயில் பெட்டியில் பிரயாணம் செய்ய நேர்ந்தது. இருவரும் மதுரை விருந்தினர் விடுதியில் ஒன்றாகத் தங்கினோம். நான் அக்காலத்தில் மிகவும் ஆடம்பரப் பிரியனாய் இருந்தேன். எலக்ட்ரிக் ஷேவரில்தான் சவரம். ஒடிகோலன் கலந்த Aftershave Lotion, ஸ்நோ பவுடர் இத்யாதிகளுடன் நான் இருப்பதைப் பார்த்துச் சிரித்தார் கக்கன்.

"இது என்னங்க அவ்வளவு பெரிய வேலையா? நம்ம வழக்கம் இவ்வளவுதாங்க' என்று சொல்லி ஒரு பிளேடை எடுத்தார். குறுக்கில் பாதியாக உடைத்தார். ஒரு பாதியால் மளமளவென்று முகச்சவரம் செய்து கொண்டார். ஒரு கீறல், ஒரு வெட்டு, சிறு ரத்தக்கசிவு ஒன்றுமில்லாத அந்த லாகவத்தை நான் ரசித்தேன்.

அவரது குரலும் சிரிப்பும் என் செவியில் இப்போதும் ஒலிக்கிறது. சிந்தையில் அவர் முகம் தெரிகிறது. மேலும் கக்கன் சொன்னார், "இது ஜெயிலிலிருந்த காலத்துப் பழக்கம். மந்திரியானா மாறிடுமா? ஒரு சின்ன வித்தியாசம் உண்டுங்க, அந்தப் பாதியை இப்ப சமயத்திலே மறந்து அப்படியே போட்டுடறேன். முந்தியெல்லாம் அதையும் பத்திரமா எடுத்து வெச்சுக்குவோம். எப்பவும் சிக்கனமா இருக்கிறதுதாங்க நல்லது'

நான் காந்திஜியை நினைத்தேன்.

(ஜெயகாந்தனின் "யோசிக்கும் வேளையில்' என்ற நூலிலிருந்து)

-நெ.இராமன், சென்னை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com