

"தெறி' படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 60-ஆவது படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கியுள்ளது. விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. விஜய்யின் "அழகிய தமிழ் மகன்' படத்தை இயக்கிய பரதன் இப்படத்தை எழுதி இயக்குகிறார். கடந்த 11-ஆம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு, சென்னை பூந்தமல்லியில் உள்ள ஈவிபி ஸ்டுடியோவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். சதீஷ், ஜெகபதிபாபு, டேனியல் பாலாஜி, தம்பிராமைய்யா, ஸ்ரீமன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்கள் ஏற்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். கவிஞர் வைரமுத்து பாடல்களை எழுதுகிறார். பிரவின் கே.எல். படத்தொகுப்பாளராகப் பணிபுரிகிறார். கலை இயக்குநராக பிரபாகர் பணிபுரிகிறார். முதற்கட்ட படப்பிடிப்பு சில நாள்கள் நடைபெறவுள்ள நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மே மாதத்தில் துவங்குகிறது.
முக்தா சீனிவாசனின் "முக்தா பிலிம்ஸ்' பட நிறுவனம் வேதாந்த தேசிகர் 750 வது வருட விழா என்ற பட நிறுவனத்துடன் இணைந்து "தூப்புல் வேதாந்த தேசிகன்' என்ற படத்தைத் தயாரிக்கிறது. 750 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த வேதாந்த தேசிகர், ""கடவுளை வணங்குவதை விட குருவை வணங்கினாலே போதும், அது கடவுளை வணங்குவதற்குச் சமம்'' என்று சொன்னவர். அவர் காஞ்சிபுரம் தூப்புல் என்ற ஊரில் பிறந்தவர். அவரது வாழ்க்கையைச் சித்திரிக்கும் படம் இது. தேசிகர் கதாபாத்திரத்தில் துஷ்யந்த் ஸ்ரீதர் நடிக்கிறார். வேதாந்த தேசிகராக நடிக்கும் துஷ்யந்த் கதை, வசனத்தையும் எழுதுகிறார். முக்தா சீனிவாசன், முக்தா சுந்தர் இருவரும் திரைக்கதை எழுதி இயக்குகிறார்கள்.
மாற்று முயற்சியாக உருவாகி வருகிறது "மற்றொருவன்'. திரைப்படம் முழுவதும் ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே பயணிக்கும் இத்திரைக்கதை தமிழ் சினிமாவுக்கு புதிய வரவு. கதைப்படி ஒரே ஒரு பாத்திரம் கதையின் ஓட்டங்களை விளக்கும். வேறு கதாபாத்திரங்கள் ஒப்புக்காக கூட வடிவமைக்கப்படாதது இதன் சிறப்பு. பிரதான கதாபாத்திரத்தில் ரியாஸ்கான் நடிக்கிறார். மரியா பிலிம் கம்பெனி சார்பில் வேல்முருகன், கே. எம். செபஸ்டின், திருப்பூர் மோகன் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். புதுமுக இயக்குநர் மஜோ மேத்யூ எழுதி இயக்குகிறார். இது உளவியல் சார்ந்த கதை என்றாலும், எல்லோருக்கும் புரிகிற மாதிரியான முழுமையான கமர்ஷியல் படமாக உருவாக்கப்பட்டு வருகிறது. கதாபாத்திரம் கனவுகளிலேயே வாழும். கனவில் காண்பது எல்லாம் நேரில் நிஜத்தில் ஒவ்வொன்றாக நடக்கும். அந்த வகையில் விபரீத கனவுக்கு என்ன நடந்தது என்பது திரைக்கதை. தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நேரடி படமாக இது உருவாகி வருகிறது.
விஜய்யின் "காவலன்' படத்துக்குப் பின் தமிழ் சினிமாவிலிருந்து ஹிந்திக்கு இடம் பெயர்ந்த அசின், அமீர்கான், சல்மான்கான், அபிஷேக் பச்சன், அக்ஷய்குமார் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்தார். இந்நிலையில் தொழிலதிபர் ராகுல் சர்மாவைக் காதல் மணம் புரிந்து கொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கினார். திருமணத்துக்குப் பின் வந்த சினிமா வாய்ப்புகளைத் தட்டி கழித்து வந்த அசின், அது குறித்த விளக்கத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ""என்னைப் பற்றி கற்பனையான செய்திகள் பரவி வருகின்றன. நான் திருமணத்துக்கு முன்பே படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டேன். நடிக்க வேண்டிய படங்களையும் முடித்துக் கொடுத்து விட்டேன். அதுபோல் விளம்பரப் படங்களுக்கான ஒப்பந்தங்களையும் முடித்து விட்டேன். இனி படங்களில் நடிப்பது குறித்து எந்த முடிவையும் எடுக்கவில்லை'' என தெரிவித்துள்ளார் அசின்.
சூர்யா, சமந்தா, நித்யா மேனன் நடிப்பில் விக்ரம் கே குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படம் "24'. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த வாரம் சென்னையில் நடைபெற்றது. டிரெய்லர் மற்றும் பாடல்களும் வெளியிடப்பட்டன.
சூர்யா, ஏ.ஆர்.ரஹ்மான், வைரமுத்து, நித்யாமேனன், இயக்குநர் ஹரி, விக்ரம் கே குமார், சிவகுமார், கார்த்தி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
இதில் சூர்யா பேசுகையில், ""இந்தக் கதையைக் கேட்கும் போது தயாரிக்க வேண்டும் எனத் தோன்றியது. இந்தப் படத்துக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி. நான்கு மணி நேரத்துக்கு மேலாக விக்ரம் கே குமார் கதை சொன்னார். கதை கேட்டு முடித்ததும் நான் எழுந்து நின்று கைத்தட்டினேன். அந்த உணர்வு உங்களுக்கும் ஏற்படும். அப்படி ஒரு படமாக இது இருக்கும்'' என்றார் சூர்யா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.