
குயில் மீது அது என்னவோ ஓர் ஈர்ப்பு இருந்தது, பாரதிக்கும் பாரதிதாசனுக்கும். அதன் காரணம், ஊரின் சூழலாக இருக்கலாம் என்று நாம் முடிவுக்கு வர இயலாது போயினும், இவர்கள் இருவருமே குயில்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள் என்பது மட்டும் நமக்குப் புரிகிறது.
எட்டயபுரத்து இயற்கை வளமைச் சூழலில் பாரதிக்கும் குயில் அறிமுகமாகி இருக்கக் கூடும்.
புதுச்சேரியில் பாரதி தங்கியிருந்த பத்தாண்டு காலத்தில் குயில் மிக நெருக்கமான தொடர்பில் இருந்திருக்கிறது. முத்தியால்பேட்டைப் பகுதி மடு சார்ந்த மாந்தோப்பு, பாரதியின் மனம் கவர்ந்தது. பாரதிதாசன் புதுச்சேரியில் பிறந்து வளர்ந்தவர்; நகரில் குயில் நடமாட்டம் அதிகம் இருந்திருக்கிறது. புதுச்சேரி நகரில் ஒதியஞ்சாலை, பூவரசஞ்சாலை, ஆலஞ்சாலை போன்ற நீளமான சாலைகளை பிரெஞ்சு இந்திய ஆட்சியே பராமரித்து வந்திருக்கிறது.
நகரின் வெளிப்புற நிலப்பரப்புகளில் மாஞ்சோலைகள் மிகுதி. பொதுவாக இயற்கை அன்னை தனது முழுமாட்சிமையுடன் கொலுவீற்றிருந்ததால் குயில்களின் இன்னோசைக்குப் பஞ்சமில்லை போலும். ஆயினும் கிளி, சிட்டுக்குருவி, புறா, கோழி, சேவல், மைனா, காக்கை போன்ற பறவைக் கூட்டமும் இருந்திருக்க, இந்தக் குயில் எப்படியோ பாரதி நெஞ்சிலும் பாரதிதாசனின் இதயத்திலும் நிலைத்துவிட்டது.
இது இப்படியிருக்க, பாரதி வாழ்க்கையின் ஒரு துளி நிகழ்வினை நினைத்துப் பார்ப்போம். இராமாயண கதாகாலட்சேபம் செய்யும் பலாப்புத்தூர் பாகவதரும் அவரின் சீடர் மிருதங்கம் மணி ஐயரும் பாரதியைச் சந்திக்கிறார்கள் புதுவையில். மகிழ்ந்து வரவேற்கிறார் பாரதியார். இராமாயண கதையின் சில காட்சிகளைச் சொல்லி இதற்கேற்ப சில பாடல்கள் தேவை என்று வேண்டுகிறார்கள்.
இன்ன காட்சி, இன்ன நிகழ்வு, இன்ன ராகபாவனையில் பாடல்கள் தேவை என்று குறிப்பிடுகிறார். ""இப்படி இப்படி எழுதவேண்டும் என்று நீர் சொல்லி நான் கட்டட மேஸ்திரி வேலை போல் எழுதுவது சரிப்படாது'' என்று மறுக்கும் பாரதியார், ""குயிலின் இன்னோசை கேட்க விரும்பினால் அந்தப் பறவை பாடும் போது கேட்டிருக்க வேண்டுமே தவிர, கட்டளையிட்டுக் கேட்க முடியாது'' என்று மறுத்துவிடுகிறார். தம் சீடர் சுப்புரத்தினம் இந்த விருப்பத்தை நிறைவேற்றும் திறன் உடையவர் என்று அவரிடம் அனுப்பி வைக்கிறார்.
பாகவதரின் விருப்பப்படி தமிழாசிரியர் சுப்புரத்தினம் பாடல் எழுதித் தருகிறார். சுப்புரத்தினம் வேறு ஒரு வகையில் குயில் மீதான காதலை வெளிப்படுத்தும் நிகழ்வு இதோ: திரைப்படம் எடுக்கும் முயற்சியில் பாரதிதாசனார் சென்னை தியாகராய நகர் இராமன் தெரு 10-ஆம் எண் வளமனையில் குடியிருந்தார். திரைப்பட முயற்சியில் மிகுந்த தொய்வு. பொருளியல் வகையில் பெரும் தேக்கம். வளமனைக்கு சில ஆயிரம் வாடகை நிலுவை இருக்கையில், எனது கருத்தைச் சொல்கிறேன். ""குறைந்த வாடகையில் ஒரு வீடு பார்த்துக் கொண்டு விடலாமே?'' என்பது எனது கருத்து.
பாவேந்தர் என்னை நோக்கிக் கேட்ட கேள்வி என்னவென்று நினைக்கிறீர்கள்? நானே சொல்கிறேன்.
"வேறு வீட்டிற்குக் குடி சென்று விடலாம். ஆனால், இந்த மாமரங்கள், இளங்காலை தென்றல் வீசும் நேரத்தில் இங்கு வந்து அமர்ந்து குயில்கள் பாடும் இன்னோசை அங்கே கிடைக்குமா?'
-குயில் ஓசையில் கிறங்கிப்போன உணர்வின் வெளிப்பாடு அல்லவா இது?
பாரதி, பாரதிதாசன் ஆகிய பாட்டுப் புலவர்களுக்குள்ளும் குடி கொண்டிருந்த குணநலன்களின் வெளிப்பாடுதான் இந்த குயில் காதல் என்று கருத இடம் உண்டு. குயில்களின் குணங்கள்தான் யாவை? குயில் எழுப்பும் இன்னோசை அவற்றின் இயல்பு. அந்தப் பறவைக்குரிய அழைப்பு முறை. தானே விரும்பியபோதெல்லாம் இன்னோசை எழுப்புவது. ஆணும் பெண்ணுமாய்க் கூடிக் கலந்து இனப்பெருக்கம் செய்யும் நோக்கில் முட்டை இடுவது, அந்த முட்டைகளை இடுவதற்குத் தங்கள் சொந்த முயற்சியாய் இவை கூடு கட்டுவதில்லை. காகம் கட்டும் கூட்டில் முட்டை இடுவது வழக்கமாகிப் போகிறது.
கூடு கட்டத் தெரியாது இந்தக் குயிலுக்கு. ஆம். பாரதியும் கூடுகட்டத் தெரியாமல் வாடகை வீட்டில் குடியிருந்து, அதனின் அத்தனை இடர்ப்பாடுகளையும் ஏற்க வேண்டியவரானார்.
பாரதிதாசனோ இவர் வேறு மாதிரியாக இருந்திடவில்லை. தம் தந்தையாருக்கு ஏற்பட்ட கடன் சுமையால் சொந்த வீடு ஏலம் போன பின், 1909-இல் தமிழாசிரியர் பணியில் அமர்ந்து 13 சிற்றூர்கட்கு மாற்றப்பட்டு 1939-ஆம் ஆண்டில் புதுச்சேரி நகருக்கு மீண்டும் வந்து சேர்கிறார். அதன் பின் ஆறு ஆண்டுகள் வெவ்வேறு வாடகை வீடுகளில் குடியிருக்கிறார். எல்லா வீடுகளிலும் வீட்டுரிமையாளர்களின் கொடுங்கோன்மை அளவு மீறுகிறது சச்சரவும் வழக்குகளும் உருவாகின்றன.
அப்போதுதான் இவரின் நண்பர் குயில் சிவா இவரிடம் ஒரு வினா எழுப்புகிறார்: ""ஏம்பா எத்தனை காலம் இப்படி துன்பப்படப் போகிறாய்? சொந்தமாக ஒரு வீடு உனக்கு வேண்டாமா? மனைவி மக்களுடன் வீடுவீடாய் மாறி வருவது சரியில்லையே?'' உண்மைதான். சுப்புரத்தினம் விடை கூற முடியாமல் தயங்குகிறார். அப்போது வரும் தகவல் சற்று குளிர்ச்சியாகவே அமைகிறது. பெருமாள் கோயில் தெருவில் ஒரு பெரிய வீடு, வீட்டுக்கு உடையவர் பட்ட கடனுக்காக ஏலம் விடப் போகிறார்கள். நாம் முயன்று பார்க்கலாமே?
குயில் சிவா கூறி முடிக்கவில்லை. அதற்குள், பணம் என்ற பெரிய கேள்விக்குறியை எடுத்து வீசுகிறார் தமிழாசிரியர் சுப்புரத்தினம்.
இவரைத் தேற்றி ஒப்புதல் பெறுவதற்கு குயில் சிவா பட்டபாடு கொஞ்சமல்ல. குயில் என்கிற செல்லப் பெயர் பாரதியாரால் இடப்பட்டது இந்த சிவாவுக்கு. பாரதியின் அணுக்கத் தொண்டர், பாரதிதாசனின் இளம்பருவ நண்பர். நலம் விரும்பும் நல்ல உள்ளத்தவர். அந்த வீடு பெருமாள் கோயில் தெருவில் இருக்கிறது. அவர் அளித்த விளக்கம் இது. பரம்பரையாய் அரசியல் பொறுப்புகளில் இருந்த செல்வந்தர் - அவரின் வழித்தோன்றல்கள் - உறவினர்கள் பெருமளவில் வசிக்கும் தெரு அது.
அங்கே இந்தத் தமிழாசிரியர் சொந்த வீடு வாங்கி அமர்வதை அந்த மேட்டுக்குடி தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஏலம் விடப்படுவது புதுவை நீதிமன்றத்தில், அங்கே வழக்கறிஞர்தான் ஏலம் கேட்க வேண்டும். எந்த வழக்கறிஞரும் இந்தத் தமிழாசிரியருக்காக ஏலம் கேட்க முடியாதபடி மேட்டுக்குடி கட்டுப்பாடு விதித்திருக்கிறது. அதையும் மீறிக் குயில் சிவாவின் வழக்கறிஞர் மூலமாக ரூ. 4005-க்கு ஏலம் எடுத்தாயிற்று.
அடுத்த நாள் சில நல்ல உள்ளங்கள் வீடு வந்து சந்தித்து, ""அய்யோ வாத்தியாரேஇந்த வீட்டிலா குடியமரப் போகிறீர்கள்?'' என்று வருத்தமாகப் பதறிக் கேட்கிறார்கள். எல்லா இடக்கு மடக்குகளையும் மீறி குடியமரும் ஏற்பாடுகள் நடக்கின்றன.
பாவேந்தரின் பெரு நோக்கு பல நேரங்களில் குயில் சிவாவுக்கு அதிக எரிச்சலை மூட்டுகின்றது. வெளியூர்களிலிருந்து வரும் அன்பர்கள் இந்த வீட்டில் சில நாட்கள் தங்கியிருக்க விரும்பினால் எல்லா வசதிகளும் அமைய வேண்டும் என்கிறார் பாவேந்தர். இதில் குயில் சிவாவுக்கு உடன்பாடில்லை.
குழந்தைகளோடும் துணைவியோடும் ஒரு குடும்பம் வந்து அமர்ந்துவிட்ட பிறகு, தமக்குள்ள ஆசிரியப் பணிக்கும் கவிதைப் படைப்புக்கும் ஏற்பவே வீடு அமையவேண்டும் என்கிறார் சிவா. மிகப் பெரிய அளவிலான அறை ஒன்று இடிக்கப்பட்டு குளியல் அறையும் கழிப்பறையுமாக மாற்றப்படுகிறது. "விருந்தினர்க்கு இது வசதியாகுமாம்' - தமிழாசிரியர் கருத்து. வீட்டின் பின்புறம் இருந்த சிறுசிறு அறைகள் முழுவதுமாக இடிக்கப்படுகின்றன. நல்ல காற்றோட்டம், சரியான வெளிச்சம், தூய தண்ணீர் தேவை என்பது தமிழாசிரியரின் விளக்கம்.
""மாடிக்கு செல்லத் தனியாக ஒரு வழி திறக்க வேண்டும்'' என்கிறார் ஆசிரியர். அது பாதுகாப்பற்றது என்கிறார் குயில் சிவா. கதவுக்குத் தாழ்ப்பாள் பொருத்துவதில், கைப்பிடி பொருத்துவதில், படிகள் அமைப்பதில், நடு முற்றத்தை மூடுவதில்... எல்லாவற்றிலும் இருவரும் கருத்தொற்றுமை இன்றி இழுபறி. குயில் சிவா நடைமுறை வாழ்க்கையில் நனைந்து வருபவர். தமிழாசிரியர் கூடு கட்டத் தெரியாத குயில் -தான்.
புதுச்சேரியில் பிறந்து வளர்ந்த இந்த சுப்புரத்தினக் குயில் பல்லாண்டு காலத்துக்குப்பின் சொந்த வீட்டில் குடிஅமர்ந்து விட்டதால் பலருக்கு எரிச்சல். சிலருக்கு சரி தொலையட்டும் என்கிறதான மனநிலை. இந்தக் குயில் தன் நண்பரான குயில் சிவாவின் ஆதரவில் எப்படியோ அமர்ந்து விட்டது ஒரு வீட்டில்.
பாரதி அயலவரின் ஆட்சியின் கீழ் அடக்கு முறையைத் தவிர்த்துப் புதுவையில் பாதுகாப்புத்தேடி வந்து புதுச்சேரியில் இருந்த 10 ஆண்டுகளில் மூன்று வீடுகளில் காலம் கழித்தார்.
எந்த வீட்டின் உரிமையாளரும் அவரிடம் கடுமையாக நடந்ததில்லை. மாறாகச் சில வேளைகளில் பாரதிக் குயிலின் பாட்டுத்திறத்திலே மெய் மறந்து வாடகைப் பணம் வாங்க வந்ததையும் மறந்து சென்றிருக்கிறார்கள்.
வெல்லச்சு கிருஷ்ணசாமி செட்டியார் பாரதியிடம் வாடகை கேட்க வருவார். பாரதியின் பாட்டின் வசமாகிப் பரவசமாகித் திரும்பி விடுவதுதான் வழக்கம்.
ஒரு தொகை அஞ்சல் வழியாகப் பாரதிக் குயிலுக்கு வந்தது. அஞ்சல் ஊழியர் தர வீட்டுக்கு வருகிறார். கையில் பெற்ற தொகையைத் தம்முன் வந்து நின்றிருக்கும் ஏழைக்கு வழங்கிவிடுகிறார் பாரதி. உதிர்த்த புன்னகையே அவரின் அக ஒளியை எடுத்துக் கூறுகிறது என்றெல்லாம் தகவல்கள் நாம் அறிவோம்.
குயில் என்ற சின்னஞ்சிறிய பாட்டுப் பறவைக்கு வாழ்வியல் அறிவு அதிகம் இல்லை போலும். ஒரு சிட்டுக்குருவி உரிய காலத்தோடு தன் கூட்டை உருவாக்கி முட்டையிட்டுத் தாய்மையில் திளைக்கிறதே, காக்கையும் ஏனைய பறவைகளும் மேற்கொள்ளும் இந்தப் பருவ கால ஒழுகலாறு ஏன் குயிலிடம் காணப் பெறவில்லை?
ஓ... அவை தம் கவிதையை மனிதகுல மாண்புக்கு இன்னோசை மூலம் தெரிவிக்கும் செயல்பாட்டிலேயே கவனம் கொள்கின்றன. இப்படித்தான் நாம் கொள்ள வேண்டியிருக்கிறது. இதற்கு ஒரு சான்று காணலாம்.
பாரதியின் பாட்டுத்திறத்தை உலகறியச் செய்தது குயில் பாட்டு என்கிற குறுங்காப்பியம்.
குக்குக் கூவென்று குயில் பாடும் பாட்டினிலே
தொக்க பொருளெல்லாந் தோன்றியதென் சிந்தைக்கே
என்கிற முன்னுரைக் குறிப்பாகக் குயில் பாட்டு தொடக்கமாவது நம் கருத்துக்குச் செறிவு ஆகும்.
காதலை வேண்டிக் கரைகின்றேன், இல்லையெனில்
சாதலை வேண்டித் தவிக்கின்றேன்...
காதல் காதல் காதல்
காதல் போயிற் காதல் போயிற்
சாதல் சாதல் சாதல் ...
என்றெல்லாம் சில மெய்யறிவுத் தொடர்களைப் பாடும் பாரதி, தம் பாவியத்தின் நிறைவாக, வேதாந்தமாக விரித்துப் பொருளுரைக்க யாதானும் சற்றேயிடமிருந்தாற் கூறீரோ? என்பதாக ஆன்ற தமிழ்ப் புலவர்க்கு வேண்டுகோள் விடுக்கிறார். குயில் பாட்டு இவ்வாறிருக்க, நடைமுறை வாழ்வியலின் ஓர் உண்மை நம் நெஞ்சில் வந்து சேருகிறது.
குயில் என்ற பறவையை ஒரு கூண்டில் அடைத்து வைத்து நம் வீட்டில் வளர்த்திடல் இயலாது. கிளி, புறா, மைனா, கோழி போன்ற பறவைகள் வீட்டுப் பறவைகளாக வளர்க்க முடிகின்றது.
குயில் அப்படி கூட்டுப் பறவையாக வாழ்வதில்லை. இது கோட்டுப்பறவை. தன் விருப்பமாய் முழு உரிமைகளோடு வாழ்வியல் துய்க்கும் வகையினது.
மனிதனின் கட்டளைக்கிணங்கி இன்னோசை எழுப்பாது, மனிதனின் விருப்பம் ஏற்று வீட்டில், கூட்டில் அடைந்து வாழ்ந்திடா இயல்புடையது.
இந்தப் பண்புகளையே பாரதி, பாரதிதாசனாரின் உயிர்ப் பண்புகளாக நாம் கண்டுணர முடிகிறது.
பாரதிதாசனை முழுதாக உலகம் அறிந்து பாராட்டி மகிழச் செய்ததில் அவரின் "குயில்' இதழுக்கு அளவிறந்த பங்கு உண்டு.
குயில் என்கிற பெயரைத் தமது திங்கள் இதழுக்குச் சூட்டியதற்குக் காரணம், ஏதேனும் உண்டோ உண்டு. அவரே குயில் பண்பின் உருவம்.
குயில் தனது தொண்டினைப்பற்றித் துல்லியமாக அறிவித்த பாடல் வரிகள் நாம் படித்தறிய வேண்டியவை.
ஓயாது சுற்றும்முற்றும் பார்க்கும் ஒளிக்குயில்தான்
இவ்வுலகம் இன்னல் நிறைந்ததென எண்ணிற்றா?
எவ்வலியும் தன்னிடத்தே இல்லை என அஞ்சிற்றா?
மாவின் கிளையை மணிக்காலால் தான் பற்றிப்
பாவின் இனிமைதனைப் பாரோர்க்குப் பார்க்கின்ற
நேரத்தில், தன்விழியின் நேரிலுள்ள மாந்தளிரை,
ஆர அருந்தத் தொடங்கும் அவாவோடு.
பொன்னாய்ப் பொலியும் தளிரும், புதுமெருகில்
மின்னாய் மிளிர்கின்ற மென்தளிரும், பிள்ளைகளின்
மேனி எனப்பொலியும், மிக்கொளிசெய் நற்றளிரும்
ஆன கிளிச்சிறகின் ஆர்ந்த பசுந்தளிரும்,
கொத்தாய் இருக்கும், குயிலலகுச் சாமணத்தை
வைத்தெடுத் துண்ணும்; இடையிடையே, மேல்கரும்பின்
சாறுநிகர் பாடல்தரும், தன் சிறகடித்து
மற்று மொருகிளைக்கு மாறும், மறுநொடியில்
முற்றிலும் அஞ்சும், மகிழும் முடிவினிலே,
சேய்மையிலோர் சோலைக்குச் செல்லும் குயிலினிடம்
தூய்மை மிகு பண்பொன்று கேட்பர்: சுவையைப்
படியளக்கும் வையத்தார் உண்ணும் படியே
குடியிருப்பொன்றில்லாக் குயில்
கூடு கட்டத் தெரியாத குயில்களான பாரதியும் பாரதிதாசனும் நாடு போற்றும் நற்கவிஞர்களாகப் பொலிந்தமைக்கு அவர்களே குயில்களாகத் தம்மை வரித்துக் கொண்டதால்தான்--அவ்விதமே வாழ்ந்ததால்தான் என்றுகண்டு நாம் பெருமை கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.