ஒன்ஸ் மோர்

அன்னா தாஸ்தயேவ்ஸ்கியின் "காதல்' என்கிற மொழிபெயர்ப்பு நூலைப் படித்துக் கொண்டிருந்தபோது எழுத்தாளர்களின்
ஒன்ஸ் மோர்

அன்னா தாஸ்தயேவ்ஸ்கியின் "காதல்' என்கிற மொழிபெயர்ப்பு நூலைப் படித்துக் கொண்டிருந்தபோது எழுத்தாளர்களின் மனைவிகள் குறித்துச் சற்று சிந்திக்க நேர்ந்தது.
 சாக்ரட்டீஸின் மனைவி குறித்துக் கூறப்படும் "அப்போது இடித்தது. இப்போது மழை' என்ற பிரசித்தி பெற்ற கதையைச் சற்று மறு பரிசீலனைக்கு உட்படுத்தலாம் என்று தோன்றியது. ஓர் ஆசாமி இருபத்திநாலு மணி நேரமும் மோட்டு வளையைப் பார்த்தபடி சிந்தித்துக் கொண்டும், நண்பர்களுடன் உலக விஷயம் பேசிக்கொண்டும், ஷேவ் கூடப் பண்ணிக் கொள்ளாமல் இன்டலெக்சுவல் கெட் அப் வளர்ப்பதும் எந்த மனைவிக்குச் சகிக்கும்?
 சாக்ரட்டீஸின் மனைவியாவது மழையுடன் நிறுத்திக் கொண்டாள். ஹெமிங்வேயின் மனைவிகள் (மூன்று பேர்) அவரையே விசிறிக் கடாசிவிட்டு ஓடியே போனார்கள். (இதில் விசித்திரம், மூவருமே பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள்!)
 டால்ஸ்டாயின் மனைவிக்கு சோவியத் யூனியனின் மூலை முடுக்கெல்லாம் புழங்கும் சகல கெட்ட வார்த்தைகளும் அத்துப்படி. திட்ட ஆரம்பித்தாரென்றால் விளம்பர இடைவேளை கூட இல்லாமல் திட்டித் தீர்த்து விடுவார்! காரணம் ஒரு கணவராக டால்ஸ்டாயின் லட்சணம் அப்படி!
 அவரது ஆன்மிக நாட்டத்தின் விளைவான மனச் சுத்திகரிப்புப் பணியில் இறங்கும்போதெல்லாம் மணிக்கணக்கில் உளறிக்கொண்டே இருப்பார். திடீர் திடீரென்று அழுவார். சிரிப்பார். பேய் பிடித்ததுபோல் துள்ளிக் குதிப்பார். நினைத்துக் கொண்டாற்போல் சாலையில் பாய்ந்து, இலக்கில்லாமல் ஓடத் தொடங்கிவிடுவார்.
 தாஸ்தயேவ்ஸ்கி, இவர்களையெல்லாம் தூக்கிச் சாப்பிடக்கூடிய ஆத்மா. வாழ்வில் அவர் பார்க்காத சீரழிவுகளே கிடையாது. மொடாக்குடியராகவும், சூதாடியாகவும் காக்கை வலிப்பு நோய் உள்ளவராகவும் இருந்த தாஸ்தயேவ்ஸ்கியின் பாதி வாழ்நாள் சிறையில் வேறு கழிந்தது. (தேசத்துரோகக் குற்றச்சாட்டு) அவரை நினைத்து வருந்தியே அவனது முதல் மனைவி மேரி செத்துப் போனாள். (இவள் ஏற்கெனவே திருமணமாகி ஒரு குழந்தையும் உள்ளவள். அந்தக் குழந்தையைத்தான் தாஸ்தயேவ்ஸ்கி தன் சுவீகாரப் புத்திரன் போலக் கடைசிவரை வளர்த்து வந்தான்).
 சிறையிலிருந்தும், சூது பழக்கத்திலிருந்தும் மீண்டு மறுபடியும் எழுதலாம் என்று அவர் முடிவு செய்தபோது, அவருக்கு ஸ்டெனோகிராபராக வந்தவள்தான் அன்னா.
 அன்னாவுக்கு தாஸ்தயேவ்ஸ்கியின் எழுத்து மேல் ஒரு மாளாக் காதல் இருந்ததால்தான் அவளால் அவரைச் சகித்துக்கொள்ள முடிந்திருக்கிறது. தனது நாட்குறிப்புகளில் அவரைப் பற்றிய குறைகளைக்கூட இயல்பானதுபோல் எழுதி வைக்க முடிந்திருக்கிறது.
 அந்த ஒருவகையில் தாஸ்தயேவ்ஸ்கி மற்ற எழுத்தாளர்கள் பொறாமை கொள்ளத்தக்க செல்வந்தன் என்றுதான் சொல்ல வேண்டும்.
 பிரசித்தி பெற்ற இலத்தீன் அமெரிக்க எழுத்தாளரான காபிரியேல் கார்ஸியா மார்க்வஸூக்கு 1982-ஆம் ஆண்டு நோபல் பரிசு கிடைத்தபோது அவரது வீட்டை உலகப் பத்திரிகையாளர்கள் எல்லாரும் முற்றுகை இட்டார்கள்.
மார்க்வஸின் மனைவியிடம், ""உங்கள் கணவருக்கு நோபல் கிடைத்தது பற்றிச் சந்தோஷம்தானே?'
என்று அவர்கள் கேட்டதற்கு அந்தப் பெண்மணி சொன்ன பதில்:
""அவருக்கு நோபல் பரிசு கிடைத்தது இருக்கட்டும். இத்தனை காலமாக அவரைச் சகித்துக் கொண்டு வாழ்ந்து வருகிறேனே எனக்கொன்றும் பரிசு தர மாட்டார்களா?''
எந்த தேசத்தில் எந்த மூலையில் இருந்தாலும் எழுத்தாளர்கள் ஒரே ஜாதி. சற்றும் புரிந்துகொள்ள முடியாத கல்யாண குணங்களுடனும் நொடிக்கு நொடி மாறும் மனநிலையுடனும் எப்போதும் உணர்ச்சிப் பெருக்குடனும்தான் எந்தக் காலத்திலும் அவர்களால் இருந்திருக்க முடிந்திருந்தது.
 ஒருமுறை எழுத்தாள நண்பர் ஒருவரைக் காண அவர் வீட்டிற்குப் போயிருந்தேன். அவர் வீட்டில் இல்லை. காப்பி கொடுத்த அவர் மனைவியிடம் மரியாதைக்கு நாலு வார்த்தை பேசினேன். அவ்வளவுதான். அவருக்கு எத்தனை நாள் ஆதங்கமோ, தன் கணவரைப் பற்றிச் சரம் சரமாகக் குறைப்பட்டுக் கொண்டார். அவர் எப்போதும் கதைகளில் மட்டும் வாழ்வது பற்றி. கரண்ட் பில் குறித்த அக்கறை இல்லாமல் இருப்பது பற்றி. உணவு ருசி கூடினாலும் குறைந்தாலும் ஒரு பொருட்டில்லாமல் இருப்பது பற்றி. உறவினர்களுடன் பழகாதது பற்றி.
 ""அதெல்லாம் அப்படித்தாங்க இருக்கும். உங்ககிட்ட அன்பா இருக்கார் இல்லியா? அது போதுமே!''
என்றேன் ஆறுதலாக. அதைக் கேட்டுச் சில கணம் தாமதித்த அந்த அம்மையார் பிறகு சொன்னார்: ""உங்கிட்ட சொல்றதுக்கு என்னப்பா? அவருக்கு ஆபீஸ் ப்யூன் மேல இருக்கற அன்புதான் என் மேலயும். விழுந்து பிராண்ட அங்க அவன். இங்க வீட்ல நான். என்ன பெரிய அன்பு வாழுது?!''
"154 கிலோ பைட்' என்ற நூலில் பா.ராகவன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com