திரைக் கதிர்

போராட்டம், கடின உழைப்பு, வறுமை, இழப்புகளைத் தாண்டி திறமை இருந்தால் வெற்றி நிச்சயம் என்பதற்கு உதாரணமாக, இளம் திறமையாளர்கள் பலர் இன்றைய சினிமாவில் கவனிக்கத்தக்க இடம் பிடித்துள்ளனர்.
திரைக் கதிர்
Updated on
2 min read

போராட்டம், கடின உழைப்பு, வறுமை, இழப்புகளைத் தாண்டி திறமை இருந்தால் வெற்றி நிச்சயம் என்பதற்கு உதாரணமாக, இளம் திறமையாளர்கள் பலர் இன்றைய சினிமாவில் கவனிக்கத்தக்க இடம் பிடித்துள்ளனர். குறும்பட ஆர்வலர்களின் புத்தம் புதுச் சிந்தனைகள் தமிழ் திரையுலகை வேறு ஒரு தளத்துக்கு அழைத்துச் சென்றுள்ளது. இதில் இனம் கண்டு கொள்ளப்படாத பல திறமையாளர்கள் இன்னும் வெளிச்சத்துக்கு வர முடியாத சூழல் உள்ளது. அப்படியானவர்களுக்கு மேடை அமைத்து கொடுக்கிறார் இயக்குநர் ரமேஷ் செல்வன். "உளவுத்துறை', "ஜனனம்', "வஜ்ரம்' உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ள ரமேஷ் செல்வன் இதற்காக குறும்படத் திருவிழாவினை ஏற்பாடு செய்துள்ளார். அரசு திரைப்படக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் மற்றும் தமிழ் ஃபிலிம் ஃபேன்ஸ் சொசைட்டி ஆகியவற்றோடு இதற்காக கை கோர்த்து பணியாற்றவுள்ளார். தகுதியான இடத்தைப் பிடிக்கும் படங்களுக்குப் பரிசுகள் வழங்குவதுடன், அந்தப் படங்களை மத்திய, மாநில அரசின் விருதுகளுக்கு அனுப்பி வைக்கும் ஏற்பாடுகளையும் இந்த அமைப்பு மேற்கொள்கிறது. தகுதியான படைப்பாளிகளுக்கு அடையாளம் ஏற்படுத்தும் விதமாக திரைப்படம் எடுக்கும் வாய்ப்பையும் ஏற்படுத்தி கொடுக்க உள்ளது இந்த அமைப்பு.

சுமார் 3 வருட இடைவெளிக்குப் பின் தமிழ் சினிமாவுக்கு திரும்பியுள்ள மாதவன் "இறுதிச் சுற்று' படத்தின் மூலம் அழுத்தமான பதிவை ஏற்படுத்தியுள்ளார். இனி இடைவெளி இல்லாமல் கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க முடிவெடுத்துள்ள மாதவன், தனது அடுத்த படத்துக்கான பணிகளில் இறங்கி விட்டார். முதலாவதாக புஷ்கர் காயத்ரி இயக்கும் படத்தில் நடிக்கிறார். "இறுதிச்சுற்று' படத்தின் கதை விவாதம் மற்றும் ஆக்கப் பணிகளில் இயக்குநர் சுதாவுக்கு உதவியாக இருந்த புஷ்கர், மாதவனிடம் சொன்ன கதை இது.

"வ குவாட்டர் கட்டிங்' படத்துக்குப் பின் இப்படத்தை புஷ்கர் காயத்ரி இயக்கவுள்ளார். விக்ரம் எனப் பெயர் கொண்ட மாதவன் என்கவுன்டர் சிறப்பு அதிகாரியாகவும், வேதா எனப் பெயர் கொண்ட விஜய் சேதுபதி "கேங்ஸ்டர்' தலைவனாகவும் கதாபாத்திரங்கள் ஏற்கிறார்கள். படத்தின் படப்பிடிப்புகள் உடனடியாகத் தொடங்கவுள்ளது. முதலில் மாதவன் பங்கேற்கும் காட்சிகள் படமாகவுள்ளன.

தற்போது எடுக்கவிருக்கும் ஒரு படத்துக்கு "நல்லவாயன் நாறவாயன்' என வித்தியாசமான தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் முக்கியப் பிரச்னையாக இருந்து வரும் இட ஒதுக்கீட்டுப் பிரச்னையை அலசும் அரசியல் படமாக உருவாகி வருகிறது. இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டு 68 ஆண்டுகள் கழித்தும் ஒடுக்கப்பட்ட மக்களின் நிலை உயர்ந்தபாடில்லை. இதற்குக் காரணம் அரசியல் அமைப்பா? பெருகி வரும் ஊழலா? நலிந்து வரும் சமுதாய அமைப்பா? ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களா? என அலசும் விதமாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் வேடத்தில் அஜ்மல் நடிக்கிறார். ஆருஷி, சந்தோஷ், பன்ச்சி, நாசர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். பாஸ்கர்ராவ் இயக்குகிறார்.

அடுத்த பேய்ப் படமாக உருவாகி வருகிறது "சவுகார்பேட்டை.' சில உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இப்படத்தில் ஸ்ரீகாந்த், ராய் லெட்சுமி, வடிவுக்கரசி, சுமன், தலைவாசல் விஜய், கோவை சரளா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் வடிவுடையான் இப்படத்துக்கான வித்தியாசமான முறையில் சில காட்சிகளை உருவாக்கி உள்ளார். குறிப்பாக பேய் படங்களில் பல காட்சிகள் சுடுகாட்டுப் பின்னணியைக் கொண்டதாக இருக்கும். பெரும்பாலும் அவ்வித காட்சிகளுக்கு சுடுகாட்டின் மாதிரி செட் அமைக்கப்படுவது வழக்கம். ஆனால் இதில் நிஜமான சுடுகாட்டு காட்சிகள் இடம் பெறுகின்றன. ஷாலோம் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படம் இம்மாதம் 26-ஆம் தேதி வெளி வருகிறது.

"தெறி' படத்தையடுத்து விஜய் நடிக்கும் 60-ஆவது படத்தின் வேலைகள் வேகம் பிடித்துள்ளன. "கில்லி', "வீரம்' ஆகிய படங்களுக்கு வசனம் எழுதியிருப்பதோடு, விஜய் நடித்த "அழகிய தமிழ் மகன்' படத்தை இயக்கிய பரதன் இப்படத்தை இயக்கவுள்ளார். இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஒப்பந்தமாகியுள்ளார். படத்தொகுப்பாளராக பிரவீன் பணியாற்றவுள்ளார். நகைச்சுவைப் பகுதிக்கு நடிகர் சதீஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். விஜய் ஜோடியாக நடிக்க காஜல் அகர்வால், நயன்தாரா உள்ளிட்ட முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்த நிலையில், எதிர்பாராத விதமாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். நயன்தாரா, காஜல் உள்ளிட்டோர் பெயர்கள் பரிசீலனையில் இருக்கும் போது கீர்த்தி சுரேஷ் வந்தது எப்படி? என விசாரித்தால்... ""இந்தப் படத்தின் நாயகி பற்றிய பேச்சு வந்தவுடனே, இதுவரை விஜய்யுடன் நடிக்காத நடிகை இருந்தால் புதிதாக இருக்கும் என்று பேசப்பட்டது. விஜய்யும் சம்மதம் தெரிவித்தார். இந்த நேரத்தில் "ரஜினிமுருகன்' படத்தின் வெற்றி மற்றும் அந்தப்படத்தில் கீர்த்திக்குக் கிடைத்த வரவேற்பு ஆகியவற்றை கொண்டு கீர்த்தி சுரேஷை ஒப்பந்தம் செய்துள்ளதாக'' தெரிவிக்கிறது படக்குழு. மே மாதத்தில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com