தாய்ப்பாய்

சின்ன வயசிலிருந்தே நான் ஒரு புத்தகப்புழு. இந்தப் பழக்கம் அம்மாவிடமிருந்துதான் எனக்குத் தொற்றியிருக்க வேண்டும்.
தாய்ப்பாய்

சின்ன வயசிலிருந்தே நான் ஒரு புத்தகப்புழு. இந்தப் பழக்கம் அம்மாவிடமிருந்துதான் எனக்குத் தொற்றியிருக்க வேண்டும். அம்மாவைப் புத்தகமும் கையுமாகத்தான் பார்த்திருக்கிறேன். அம்மா அந்தக் காலத்திலேயே எட்டாம் வகுப்பு வரை படித்ததை பெருமையாகச் சொல்லிக் கொள்வார். வகுப்பில் ஐந்தாம் ஜார்ஜ் மன்னரை வாழ்த்திப் பாடும் பாடலைப் பாடிக் காட்டுவார். வெள்ளைக்கார துரைகள் பள்ளிக்கூட ஆய்வுக்கு வரும்போது இதைக் கட்டாயம் பாட வேண்டும். தஞ்சாவூருக்கு அருகில் உள்ள புன்னைநல்லூரில்தான் அம்மா பிறந்தார். இந்த ஊர் மாரியம்மன் கோயில் பிரசித்தம். அம்மாவின் பூர்விகம் புன்னைநல்லூர் எழுத்துக்காரத்தெரு. இந்தத் தெருவாசிகள் பெரும்பாலும் நாயுடுகள். தஞ்சாவூர் சரபோஜி மன்னர் அரண்மனையில் ஓலைச்சுவடிகளைப் பிரதி எடுக்கும் பணி புரிந்தவர்கள். அவர்களுக்கு சர்வமான்யமாக இந்தத் தெரு கொடுக்கப்பட்டது. இவ்வளவு விஸ்தாரமாக இதை நான் சொல்வதற்குக் காரணம் எழுத்துப் பித்து என்பது ஏதோ ஒரு வகையில் என் மரபணுவில் புகுந்துவிட்டது.

பள்ளிக்கூடம் விட்டு வந்ததும் நேராக அந்த ஊரில் இருக்கும் கிளை நூலகத்துக்கு ஓடுவேன். என் வயசை ஒத்த பையன்களுடன் விளையாடப் போகாமல் புத்தகமே பழியாகக் (அதாவது கதைப் புத்தகமே) கிடப்பது

அப்பாவுக்குப் பிடிக்கவில்லை. இத்தனைக்கும் அப்பா ஒரு பள்ளிக்கூட வாத்தியார்.

விளையாடப் போனால்தான் என்ன?

ஒல்லியாய் நோஞ்சானாய் இருக்கும் என்னை எந்த விளையாட்டிலும் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள்.

விளையாட்டு மைதானத்தின் ஓரமாக பெரிய பையன்கள் கழற்றித் தரும் சட்டை வாட்சுகளைக் கொடுத்து உட்கார வைத்து விடுவார்கள்.

அப்பா எனக்கு தண்டால், யோகாப்பியாசம் எல்லாம் சொல்லிக் கொடுக்க முயற்சி செய்தார். அவரே யோகாப்பியாசம் எல்லாம் செய்வார். என் விஷயத்தில் அவர் எவ்வளவோ "தலைகீழாக' நின்றும் முடியாமல் போய்விட்டது.

வீட்டின் ஏதோ ஒரு மூலையில் புத்தகத்துடன் பொழுது போவது தெரியாமல் முடங்கிவிடும் என்னை அப்பா திட்டும்போதெல்லாம் அம்மாதான் குறுக்கே விழுந்து தடுப்பார்.

""இந்த வயசிலேயே இவ்வளவு பெரிய விஷயமெல்லாம் படிக்கிறான் நம்ம பையன்னு சந்தோஷப்படாமல் அவனை ஏன் எப்பப் பாத்தாலும் கரிச்சுக் கொட்டறீங்க?''

""கிளாசில இவனைப் பத்தி கேட்டாச்சு. எப்ப பாத்தாலும் எங்கியோ ஏதோ ஒரு லோகத்துல சஞ்சரிக்கிறானாம். கணக்கில் வீக். சயன்ஸில் வீக். உடம்பும் வீக். அவனைக் கெடுத்துடாதே. படிச்சுக்கிட்டே அடுப்பில் காய்கறிகளைத் தீச்சுடுறவளாச்சே நீ... உன் பிள்ளை எப்படி இருப்பான்?''

அப்பாதான் என்றில்லை. பாட்டிக்கும் நான் புஸ்தகமும் கையுமாக இருப்பது பிடிக்காது.

""புத்தகம் படிக்கிறது தரித்திரம்டா படிச்சமா பாஸ் பண்ணினமா அப்புறம் தூக்கிப் போட்டுடணும்... உன் அம்மா வழி வம்சம் ஏடு எழுதி எழுதியே வீடு விளங்காமப் போச்சுடா...''

அம்மா என் தலையைத் தடவிக் கொடுத்து ""அவங்க கெடக்கறாங்க. நீ படிடா ராஜா'' என்பார்.

நான் சந்தோஷமாக என் கதை உலகில் சஞ்சரிப்பேன்.

அந்த வருடம் பள்ளி இறுதித் தேர்வில் நான் பள்ளியிலேயே முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்றிருந்தேன். உடம்பு மட்டும் தேறவில்லை.

எனக்கு தமிழ் இலக்கியம் படிக்க ஆசை. அப்பாதான் வற்புறுத்தி என்னை பி.காமில் சேர்த்துவிட்டார். இத்தனைக்கும் அவரே ஒரு தமிழ் ஆசிரியர்.

""பிழைக்கிற வழியைப் பாரு'' என்றார்.

நான் கல்லூரியில் படிக்கும் சமயத்தில் அம்மாவுக்கு ரொம்ப முடியாமல் போய்விட்டது. அப்போதெல்லாம் அம்மாவின் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு ஏதாவது வாசித்துக் காண்பித்துக் கொண்டிருப்பேன்.

அம்மா வியாதியை மறந்து திருப்தியாக கண்களை மூடி ரசித்துக் கொண்டிருப்பார்.

எப்போதும் கற்பனை உலகில் சஞ்சரித்த எனக்கு யதார்த்தம் கசந்ததில் வியப்பில்லை. உடலை வருத்திச் செய்ய வேண்டிய காரியங்களில் எனக்கு உள்ளூர வெறுப்பு.

""ஒரு வேலை செய்ய துப்பு கிடையாது! சாமர்த்தியம் போதாது!'' - அப்பா.

""என் பிள்ளையை என்னான்னு நினைச்சுகிட்டு இருக்கீங்க.. அவன் பெரிய கதாசிரியனா வருவான் பாருங்க!''

""ஐயோ பாவம்! சோத்துக்கு தாளம் போடப் போறான்னு சொல்றே...'' - சொல்லிவிட்டு அப்பா போய்விட்டார்.

பி.காம். முடித்தபின் எனது வேலையில்லாத நாள்கள் அரண்மனை சரஸ்வதி மஹாலிலும் கிளை நூலகத்திலும் கழிந்தன.

ஒருநாள் சரஸ்வதி மஹாலில் பொழுதுபோவது தெரியாமல் படித்துக் கொண்டிருந்தேன்.

மணி இரண்டுக்கு மேலாகிவிட்டது.

தற்செயலாக நிமிர்ந்தால் வெளியே "கேட்' அருகில் அம்மா. ஓடினேன். எனக்காக கொதிக்கிற வெயிலில் சாப்பாடு கொண்டு வந்திருக்கிறார்.

""லைப்ரரியில் கதைப் புஸ்தகம் படிக்கும், வேலை பார்க்கத் துப்பில்லாத மகனுக்கு காரியரில் சாப்பாடு கொண்டு வந்த முதல் அம்மா நீதாம்மா!'' என்றேன்.

""அப்படிச் சொல்லாதே'' என்றார் அம்மா சிரித்தபடி.

""படிக்கறது நல்லதுடா. அது பாட புஸ்தகமாதான் இருக்கணும்னு கிடையாது. இன்னும் சொல்லப் போனா இப்ப படிக்கிற பாரு. இதுதான் வாழ்க்கைக்கு உதவற படிப்பு. அதெல்லாம் சும்மா மார்க்கு வாங்கறதோட மறந்து போற படிப்பு!''

""அம்மா'' என்றேன் நாத்தழுதழுக்க.

அம்மா சிரித்தார். எனக்குப் பிடித்த உருளைக்கிழங்கு வறுவலும் வெண்டைக்காய் சாம்பாரும் தேவாம்ருதமாக இருந்தது.

பெரிய கவளமாக ஒரு கவளம் சோற்றை உருட்டி எங்களையே பார்த்தபடி வாலாட்டிக் கொண்டிருந்த நாய்க்கு வைத்துவிட்டு வந்தார்.

""உன்னைத் தேடிக்கிட்டு ப்ரகாஷ் வந்துட்டுப் போனார்!'' என்றார் அம்மா.

ப்ரகாஷ் ஒரு அதிசய மனிதர். பிரமன் அவரை சாக்ரடீஸ், ஆசார்ய ரஜனீஷ் இருவர் சாயலையும் பிசைந்து செய்தானோ எனும்படியான தோற்றம்.

கீழராஜவீதியில் ஒரு ரப்பர் ஸ்டாம்பு கடை வைத்திருந்தார். அதை இலக்கியத் துறைமுகம் என்பார்கள். இங்கே பெரிய எழுத்தாளர்கள் என்ற கப்பல்கள் வந்து போகும். சிறிய எழுத்தாளர்கள் என்ற படகுகளையும் பார்க்கலாம். என்போன்ற கட்டுமரங்களுக்கும் அங்கே இடமுண்டு.

ஒருநாள் ப்ரகாஷ் கடையில் அரட்டை அடித்துவிட்டு வீடு திரும்ப லேட்டாகிவிட்டது. வீடு நோக்கி வேகமாக நடந்தேன். கிருஷ்ணா தியேட்டர் சாலையில் வாகனங்கள் சர, சரவென்று போய்க் கொண்டிருந்தன. என்னைக் கடந்து சென்ற லாரியிலிருந்து "தொப்'பென்று ஏதோ கீழே விழுந்த சப்தம்.

இருட்டு. குனிந்து பார்த்தேன்.

நாலாக மடித்த கெட்டியான கித்தான். தார்ப்பாய். தூக்க முயற்சித்தேன். யானை கனம் கனத்தது. வளையத்தில் கட்டியிருந்த கயிற்றை விடுவித்து கஷ்டப்பட்டு இழுத்தேன். மூச்சு வாங்கியது.

எப்படித்தான் அதை இழுத்தபடியே வீட்டுக்குக் கொண்டுவந்து சேர்த்தேனோ தெரியவில்லை.

வாசலில் அம்மா நின்று கொண்டிருந்தார்.

""என்னடா, அது!''

இரண்டு பேருமாய் சேர்ந்து அதை உள்ளே கொண்டுவந்து சேர்த்தோம்.

""சரியான தார்ப்பாயா இருக்கே! உனக்கு எப்படிடா கிடைச்சுது?''

நான் நடந்ததை விவரித்தேன்.

விடிந்ததும் தார்ப்பாயைச் சுற்றி எங்கள் குடும்பமே கூடிவிட்டது.

அப்பா முதல் தடவையாக முறுவலித்தார்.

""அடேங்கப்பா! லாரியில் போத்தற முரட்டு தார்ப்பாலின்! நெல் காயபோட, படுதா கட்டன்னு ரொம்பவே உபயோகப்படும்! பலே!''

அம்மாவுக்குத்தான் பெருமை பிடிபடவில்லை.

""என் பிள்ளைக்கு சாமர்த்யம் போதாதும்பிங்களே! இப்ப என்ன சொல்றீங்க?''

அப்பா பதிலேதும் கூறாமல் அவ்விடம் விட்டு அகன்றார்.

பக்கத்து வீடு எதிர்வீட்டுக்காரர்களுக்கெல்லாம் ஏன் வீதி முழுவதும் நான் தார்ப்பாய் "சம்பாதித்த' விஷயம் ஒரு தேர்ந்த கதைசொல்லியின் சுவாரஸ்யத்தோடு அம்மாவால் விவரிக்கப்பட்டது.

வீட்டுக்கு வருபவர்களை மடிக்கப்பட்ட அந்த தார்ப்பாய் வெகுவாகக் கவர்ந்தது. எல்லோரும் தவறாமல் கேட்பார்கள்.

""ஏது இவ்ளோ பெரிய தார்ப்பாய்?''

அவ்வளவுதான். அம்மா ஆரம்பித்துவிடுவார்.

ஆனால் தார்ப்பாயை உபயோகிப்பதற்கான சந்தர்ப்பம்தான் வரவில்லை.

அதுபாட்டுக்கு இடத்தை அடைத்துக் கொண்டு கிடப்பதைப் பார்த்துவிட்டு ஒருநாள் அப்பாவும் நானுமாய் அதைக் கஷ்டப்பட்டு பரணில் தள்ளிவிட்டோம்.

தார்ப்பாய் கிடைத்த வருஷம்தான் எனக்கு வேலை கிடைத்தது.

சென்னையில் ஓராண்டு சம்பளத்துடன் பயிற்சி.

அம்மாவுக்கு என்னைப் பிரிவதில் இஷ்டமே இல்லை. பிரிவை ஈடுகட்ட அம்மாவின் கடிதங்கள் அடிக்கடி வரும்.

"பட்டணமெல்லாம் எப்படி இருக்கு? வாரம் தவறாமல் எண்ணெய் தேய்த்துக் குளிக்க மறக்காதே. ராத்திரி ரொம்ப நேரம் கண் விழிக்காதே! கன்னிமாரா லைப்ரரி எல்லாம் போனாயா? ஒருமுறை என்னை அழைச்சுப்போய் அந்த லைப்ரரியை காட்டவும்'

"பீச்சுக்குப் போனாயா? போகிற வழியில் பிளாட்பாரத்தில் பழைய புஸ்தகக் கடை நிறைய இருக்குமாமே...'

பயிற்சிக்காலம் என்பதால் விடுமுறை கிடைப்பது சுலபமாக இல்லை. தீபாவளி சமயம் கிடைத்த விடுமுறையைப் பயன்படுத்திக் கொண்டு ஊருக்கு வருவதாய் லெட்டர் போட்டேன்.

"நீ இல்லாதபோது ப்ரகாஷ்தான் வந்து புஸ்தகங்கள் கொடுத்துவிட்டுப் போகிறார்... கஷ்டப்பட்டு வெயிலில் வந்து தந்துவிட்டுப் போகிறார்... அவர் தருகிற புஸ்தகங்கள் வேற மாதிரி இருக்கிறது... ஆனால் நல்ல புஸ்தகங்கள்...'

அம்மாவோடு கொண்டாடிய அந்த தீபாவளியை மறக்க முடியாது.

அம்மாவுக்கு என் சூட்கேஸில் ஒரு சர்ப்ரைஸ் இருந்தது. திறந்தேன்.

எல்லாம் பிரபலமான சஞ்சிகைகளின் தீபாவளி மலர்கள்!

அவருக்குப் பிடித்த எழுத்தாளர்களின் கதை, கவிதைகள், வண்ண வண்ண ஓவியங்கள், வழவழ தாளில் தத்ரூபமாய் கடவுள் படங்கள், விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் ஜோக்குகள்.

"இதுதான்டா நிஜமான தீபாவளி விருந்து!' என்று பூரித்துப் போனார் அம்மா.

தீபாவளி முடிந்து பட்டணம் திரும்பினேன்.

அம்மாவிடமிருந்து கடிதமே இல்லை. அப்பாதான் எழுதியிருந்தார்.

"அம்மாவுக்கு திடீரென்று உடம்பு சரியில்லாமல் போய் பெரியாஸ்பத்திரியில் சேர்த்திருக்கிறது. நீ கவலைப்படாதே பயப்படும்படியாக ஒன்றுமில்லை.'

பிறகு அப்பாவிடமிருந்து கடிதமில்லை.

ஒருநாள் மாலை வந்த தந்தி "அம்மா சீரியஸ். உடனே புறப்படு' என்றது.

பதறியடித்துக்கொண்டு ஓடினேன்.

ரயிலில் குண்டாக, முன் நரையுடன் நெற்றியில் குங்குமத்துடன் யாரைப் பார்த்தாலும் அம்மா மாதிரியே இருந்தது.

"அம்மா, அம்மா' என்று மனம் அரற்றியது.

விடிகாலை. ஸ்டேஷனில் ரிக்ஷா வைத்துக்கொண்டு "சீக்கிரம் போப்பா... சீக்கிரம் போப்பா' என்று புலம்பி -

தெருமுனை திரும்பியதும் தெரிந்துவிட்டது.

வீட்டுக்கு முன்னால் பெட்ரோமாக்ஸ் விளக்கு. உள்ளே மெல்லிதாய் அழுகுரல்.

அம்மாவை முற்றத்தில் கிடத்தியிருக்கிறது.

வீடுகொள்ளாத கூட்டம்.

என்னோடு சேர்ந்து வானமும் அழ ஆரம்பித்தது.

பொட்டுப் பொட்டாய்த் தூறல்கள்.

மழைக்கு ஒதுங்க வீட்டுக்குள் இடமில்லை. அறந்தாங்கி மாமா அங்குமிங்கும் ஓடினார். அவர் கண்ணில் பரணிலிருந்து நீட்டிக் கொண்டிருந்த தார்ப்பாய் பட்டது.

இரண்டு பேராய்ச் சேர்ந்து அதைக் கீழே இறக்கினார்கள்.

விரித்தபோது அதன் முழு விஸ்தீரணம் பிரமிக்க வைத்தது. அப்படியே முற்றத்தின்மீது பந்தல்போலக் கட்டினார்கள்.

மேலே கூரை வேய்ந்ததுபோல் அம்மாவையும் துஷ்டி கேட்க வந்தவர்களையும் மழையில் நனையாமல் காப்பாற்றியது அந்த தார்ப்பாய்.

கும்பலில் யாரோ சொன்னார்கள்: "இந்த முற்றத்துக்குன்னே கச்சிதமா அளவெடுத்துச் செஞ்சமாதிரி அமைஞ்சு போச்சுது பாருங்க!'

அப்பா கண்ணீர் ததும்ப என்னைப் பார்த்தார்.

கால்கள் துவள என் தோள்மீது சரிந்து குழந்தை மாதிரி அழ ஆரம்பித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com