கலையில் ஒளிரும் காலம்

ஒவியரும், சிற்பியுமான சுப்பையா முருகேசன் என்னும் எஸ்.முருகேசன் அறுபதாண்டு காலமாக இடைவிடாது செயற்பட்டு வரும் கலைஞர். அவருடைய படைப்புகள் அகமனத்தில் இருந்து உருவாகி அழகு சிதையாமல் படைக்கப்பட்டவை. தனித்தன்மையும், பொதுத்தன்மையும் பெற்று இருப்பவை.
கலையில் ஒளிரும் காலம்
Updated on
2 min read

ஒவியரும், சிற்பியுமான சுப்பையா முருகேசன் என்னும் எஸ்.முருகேசன் அறுபதாண்டு காலமாக இடைவிடாது செயற்பட்டு வரும் கலைஞர். அவருடைய படைப்புகள் அகமனத்தில் இருந்து உருவாகி அழகு சிதையாமல் படைக்கப்பட்டவை. தனித்தன்மையும், பொதுத்தன்மையும் பெற்று இருப்பவை.

அவர் புகழ்பெற்ற சிற்பியான தேவி பிரசாத் ராய் சௌத்திரி, சென்னை ஓவியப் பள்ளி முதல்வராக இருந்த காலத்தில் பள்ளியில் சேர்ந்து படித்தார். படிப்பு என்பது ஓவியம் வரைவதும், சிற்பம் செய்வதும்தான். அதனோடு கலையின் சரித்திரம், அழகியல் நுட்பங்கள், ஒரு படைப்பை எவ்வாறு உயிர்ப்புடன் உருவாக்குவது என்பதுதான்.

முருகேசன் தான் கற்ற பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்து நவீன கலை மரபை நிலைநாட்டிய கே.சி.எஸ்.பணிக்கர், எஸ்.தனபால், கிருஷ்ணாராவ், எஸ்.முனுசாமி, ஏ.பி.சந்தானராஜ் ஆகியோருடன் இணைந்து பள்ளியில் பல ஆண்டுகள் பணியாற்றினார். பணி என்பது கற்பதும், கற்றுக் கொடுப்பதுமாக இருந்தது.

அது அரசியல், சமூகம், கலை

இலக்கியங்களில் புதுமை நிலை கொண்டு வந்த காலம். அதனால் அவர் அதிகமாகக் கவரப்பட்டார். சென்னை நகரத்தில் நடைபெற்ற அரசியல் கூட்டங்களுக்குச் சென்று அனல் பறக்கும் பேச்சுக்களைக் கேட்டார். சென்னை சபாக்களில் சங்கீதம் கேட்டு ரசித்தார். நடனம், நாடகம் பார்த்தார். ராய் சௌத்திரி சிற்பங்கள் செய்வதை உடன் இருந்து கவனித்தார். அவையெல்லாம் சுதந்திரமான ஒரு கலைஞன் தனக்கென்று ஒரு வழியை அமைத்துக் கொள்ள ஆதாரமாக இருந்தன. தன் பாணியில் கண்டவற்றையும், கேட்டவற்றையும், அவற்றின் அடிப்படையில் உருவான கருத்தியலையும் பிரதிபலிக்கும் விதமாக ஓவியங்கள், சிற்பங்கள் படைக்க ஆரம்பித்தார். அவர் படைப்புகள் அவரின் மன எழுச்சியில் உருவானவை. ஆடம்பரம் என்பதையும் வண்ணங்களின் மிகையென்பதையும் தவிர்த்தவை.

முருகேசனின் சிற்பங்கள் மனிதர்கள் வாழ்வியலைச் சொல்வதில் அக்கறைகொண்டு இருக்கின்றன. அதில் முதல் அம்சம் இசை. அதிலும் வாத்திய இசை. கருவிகள் கொண்டு கலைஞர்கள் எழுப்பும் இசையைக் கேட்கும்படியாகவே சிற்பங்கள் செய்து இருக்கிறார். அதாவது அவர் காலத்தில் பிரபலமாக இருந்த புல்லாங்குழல் மாலி, நாதசுர சக்ரவர்த்தி டி.என்.ராஜரத்தினம் பிள்ளை, வீணை தனம் - ஆகியோர் இசையாகவே இருக்கிறார்கள். இசை என்பது கருவி சம்பந்தப்பட்டதில்லை. கலைஞன் சம்பந்தப்பட்டது என்பதையே சிற்பங்கள் நிலைநாட்டுகின்றன.

ஓவியம், சிற்பத்திற்காக மத்திய அரசு வழங்கும் மிக உயர்ந்த விருதான "லலித்கலா அகாதமி தேசிய விருது' உள்பட பல விருதுகள் பெற்ற முருகேசன், தன் ஐம்பதாண்டு கால படைப்புகளில் இருந்து ஓவியங்கள், சிற்பங்கள் என்று சிலவற்றைத் தேர்ந்தெடுத்து சென்னை லலித் கலா அகாதமியில் காட்சிக்கு வைத்திருந்தார். அவை, அவரின் படைப்பாற்றல், கலை ஈடுபாடு, அழகியல் பார்வை, சமூக நோக்கு ஆகியவற்றைப் பிரதிபலிப்பதாக இருந்தது.

முருகேசன் படைப்புகளில் முதன்மை பெறும் ஓர் அம்சம், வாழ்வியல் சார்ந்த யதார்த்தம். அதாவது இருத்தல் என்பதையே தன் படைப்புக்களுக்கு ஆதாரமாகக் கொண்டிருக்கிறார். அவர் மதுரையில் பிறந்தவர். இளம் பருவத்தில் மதுரை மாவட்டத்தில் சல்லிக்கட்டுக்களைக் கண்டு களித்திருக்கிறார். எருதும் அவற்றைத் தழுவிப்பிடிக்கும் இளைஞர்களும், திமிறியோடும் காளைகளும், திரண்டு நிற்கும் பெருங்கூட்டமும் அவர் சிற்பத்தில் இயல்பு என்பது மாறாத முறையில் படைத்திருக்கிறார். அந்தப் படைப்புகளில் ஏறுகள்போல மனிதர்களும் களத்தில் முதன்மை பெறுகிறார்கள். ஒவ்வொருவருடைய இயல் ஊக்கமும் கலாபூர்வமாக வடிக்கப்பட்டிருக்கிறது.

அது உடல்மொழியின் அசலான வெளிப்பாடு என்று குறிப்பிட வேண்டும்.

சிற்பியெனப் பெயர் பெற்றிருக்கும் முருகேசன் ஓவியராகத்தான் வாழ்க்கையைத் தொடங்கினார். ஆகவே அவர் தொடர்ந்து ஓவியங்கள் வரைந்து கொண்டிருக்கிறார். அவரின் கோடுகள் தனித்துவம் பெற்றவை. அவரின் ஆளுமை என்பதை எளிதாகவே நிலைநாட்டுகின்றவை. அதோடு அவர் கவர்ச்சிகரமான வர்ணங்களையோ - ஆடம்பரமான காட்சிகளையோ அதிகமாக வரைந்ததில்லை. இயல்பான வாழ்க்கை என்பதை இயல்பான முறையில் படைத்து வருகிறார்.

அவர் படைப்புகளில் சிறப்பாகக் குறிப்பிட வேண்டிய ஓவியம், பெண்களின் தலைமுடியைப் பிரதானமாகச் சித்திரிக்கும் ஓவியம். விதவிதமாகத் தங்களின் தலைமுடியை அழகு மிளிர சூடிக் கொண்டிருக்கும் பெண்களை அதற்காகவே கண்டு ரசிக்க முடிகிறது.

ஒரு கலைஞன் தன் படைப்புகள் பற்றி அதிகம் பேசுவதில்லை. ஆனால், அவன் படைப்புகள் - கலை பற்றியும் - அழகியல் பற்றியும், தத்துவம் பற்றியும், வரைந்த பாணி பற்றியும், செய்த முறை பற்றியும் மற்றவர்களைப் பேசவும், விமர்சிக்கவும் செய்து விடுகின்றன என்பது முருகேசன் படைப்புகளைப் பார்த்ததும், பேசவும், எழுதவும் இயல்பாகவே நேர்ந்துவிடுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com