

காந்திஜியின் கொள்கைகளால் கவரப்பட்டு அவரின் வாக்கு வேதவாக்கு என்று நம்பி செயல்பட்டவர்கள் ஏராளமானவர்கள். அதிலும் காலன்பாக் என்ற ஜெர்மானியர் காந்திஜியின் மீது வைத்திருந்த மதிப்பும் மரியாதையும் எல்லை கடந்த ஒன்று என்றே சொல்ல வேண்டும். காலன்பாக் ஓர் இன்ஜினியர், பெரும் செல்வந்தர். தென் ஆப்ரிக்காவில் காந்திஜியுடன் தோளோடு தோள் நின்று அங்கே அரசுக்கு எதிரான போராட்டங்களில் பங்கெடுத்துக் கொண்டவர்.
அது 1908-ஆம் ஆண்டு - காந்திஜி சிறைவாசம் முடிந்து விடுதலை ஆகி வரப் போகிறார். காலன்பாக்குக்கு ஏக சந்தோஷம். அந்த மகிழ்ச்சியில் காந்தியை சிறைவாசலில் இருந்து அழைத்துப் போவதற்காகக் காத்திருக்கிறார். இதற்காக பெரும் பொருட்செலவில் ஓர் ஆடம்பரமான சொகுசுக் காரை வாங்கி வந்திருந்தார்! காந்தி வெளியே வந்ததும் அவரை ஆவலுடன் கட்டித் தழுவி அந்தப் புதுக்காரை நோக்கி அழைத்துச் சென்றார். அந்தக் காரைக் கண்டதும் அது எதற்கு என்று காலன்பாக்கிடம் விசாரித்திருக்கிறார். காலன்பாக்கின் பதிலைக் கேட்டுக் காந்திஜி எரிச்சல் அடைந்தார்! ""உனக்கு ஏதாவது (மண்டையில்) இருக்கா? நம்மைச் சுற்றி இவ்வளவு பேர் பசியிலும் பட்டினியிலும் வறுமையில் வாடும்போது இவ்வளவு காசு செலவழித்து ஒரு சொகுசுக்காரை வாங்குவது போல முட்டாள்தனம் வேறு எதுவுமில்லை. முதலில் இந்தக் காரை உனக்கு யார் விற்றார்களோ, அவர்களிடமே திருப்பிக் கொடுத்துவிட்டு வா... கிளம்பு'' என்று கடிந்து கொண்டார் காந்திஜி! காலன்பாக் மறு பேச்சு பேசவேயில்லை. உடனே காரை எடுத்துக்கொண்டு போய்க் கொடுத்துவிட்டு வந்துதான் காந்திஜியைப் பார்த்தார்!
இதுபோல இன்னொரு நிகழ்ச்சி. காந்தியும் காலன்பாக்கும் இங்கிலாந்திலிருந்து தென் ஆப்ரிக்காவுக்கு கப்பலில் திரும்பி வந்து கொண்டிருந்தார்கள். காலன்பாக் மிகவும் விலையுயர்ந்த நேர்த்தியான பைனாகுலரை வாங்கி வந்திருந்தார். கப்பலின் மேல்தளத்தில் அந்த பைனாகுலர் மூலம் கடலின் வெளிப்பரப்பைக் கண்டு களித்துக் கொண்டிருந்தார். அந்தப் பக்கம் வந்த காந்தியடிகளின் கண்களில் இது தென்பட்டுவிட்டது. என்ன, ஏது என்று விசாரிக்க ஆரம்பித்துவிட்டார்! உடனே அவருக்கும் காலன்பாக்குக்கும் இடையே ஒரு தீவிரமான விவாதம் கிளம்பிவிட்டது. ஓர் அமைதியான, எளிய வாழ்க்கைக்கு எதெது தேவை, எவையெல்லாம் தேவையில்லாதவை என்பது பற்றித்தான் அந்த விவாதம். காந்திஜியின் கருத்துப்படி ஓர் எளிமையான வாழ்க்கைக்குப் பைனாகுலர் போன்ற ஆடம்பரப் பொருள்கள் தேவையே இல்லை என்பதுதான். அத்தோடு தேவையில்லாதவற்றை வீணாகச் சுமந்துகொண்டு திரியாமல் அவற்றை வீசி எறிவதுதான் அறிவுடமை என்றும் கூறிவிட்டார். காலன்பாக் இதைக் கேட்டவுடன் ஒரு கணம் கூட யோசிக்கவில்லை. தன் கையிலிருந்த அந்த விலையுயர்ந்த பைனாகுலரைத் தூரக் கடலில் வீசியெறிந்துவிட்டார்! அதன் பிறகு தன் மனம் எல்லையில்லாத அமைதியைக் கண்டது என்றும் பிற்பாடு கூறினார்!
"டெஸ்டிநேஷன் போர்பந்தர்' என்ற
பயணக் கட்டுரை நூலில்
ஆ. புருஷோத்தமன்
வேதங்களில் அஜம் என்ற ஒன்றை அக்னியில் ஆகுதி கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது.
அஜம் என்ற சொல்லுக்கு என்ன பொருள்?
ஜம் - பிறப்பு. அ - இல்லை.
அஜம் பிறப்பில்லாதது. மூன்றாண்டுகளான நெல் முளைக்காது. அந்தப் பழைய நெல்லை ஆகுதி தருமாறு வேதங்கள் கூறுகின்றன. இந்த நுட்பத்தை அறியாதவர்கள், அஜம் என்றால் "ஆடு' என்று ஒரு அர்த்தம் உண்டு. அதனால் பழைய நெல்லை ஆகுதி கொடுக்காமல் ஆட்டை நெருப்பிலிட்டு வேள்வி செய்கிறார்கள். இதனை அருணகிரிநாதர், ""அஜ அநியாயம் செய் வேதியரே'' என்று கண்டிக்கின்றார்.
"ஆறிலும் சாவு, நூறிலும் சாவு' என்ற பழமொழி மகாபாரதத்தில் கர்ணனுக்காக எழுந்த பழமொழி. கர்ணன் குந்திதேவியின் வேண்டுகோளின்படி பாண்டவர் பக்கம் சேர்ந்து ஆறு என்ற எண்ணிக்கையுடன் இருந்தாலும் மரணம் வரும். அப்படியின்றி துரியோதனாதியர்களுடன் சேர்ந்து நூறில் ஒருவனாக இருந்தாலும் மரணம் உண்டு! இதுதான் இந்தப் பழமொழியின் உண்மையான பொருள்!
""வாரியார் சுவாமிகள் ரசித்து தொகுத்த பழமொழிகள்'' என்ற நூலிலிருந்து
தொகுப்பு: கேசி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.