ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: பித்தமும் பாதங்களில் எரிச்சலும்!

எனக்கு 67 வயதாகிறது. நீரிழிவு மற்றும் இரத்தக்கொதிப்பு இருந்தாலும் அவை நார்மலாகவே இருக்கின்றன.
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: பித்தமும் பாதங்களில் எரிச்சலும்!
Updated on
2 min read

எனக்கு 67 வயதாகிறது. நீரிழிவு மற்றும் இரத்தக்கொதிப்பு இருந்தாலும் அவை நார்மலாகவே இருக்கின்றன. இரு பாதங்களிலும் எப்போதும் எரிச்சல் மற்றும் மதமதப்பு இருந்து கொண்டேயிருக்கிறது. வீட்டில் வழவழப்பான சிமெண்ட் தரை. எப்போதும் குளிர்ச்சியாகவே இருக்கும். செருப்பு போட்டுக் கொண்டுதான் நடக்க வேண்டும். செருப்பைக் கழற்றிவிட்டால் காலை தரையில் வைக்க முடியவில்லை. இடது குதிகாலிலும் வலி உள்ளது. இரவில் அடிக்கடி சிறுநீர் கழிக்க எழுந்திருக்க வேண்டியிருக்கிறது. இவற்றிற்கு மருந்து உண்டா?
 ந.ரேவதி, தென்காசி.
 பித்தத்தினுடைய சேர்க்கையில்லாமல் உடலில் ஒருபொழுதும் எரிச்சல் ஏற்பட வாய்ப்பில்லை என்றும் மதமதப்பு மற்றும் உணர்வற்ற தன்மை போன்றவை வாயுவினுடைய சேர்க்கை இல்லாமல் ஏற்படுவதில்லை என்றும் யோகரத்னாகரம் எனும் ஆயுர்வேத நூல் கூறுகிறது. எரிச்சலுக்கும், மதமதப்புக்கும் நேரெதிரான தன்மை கொண்ட துவர்ப்புச் சுவையை உணவாகவும், மருந்தாகவும் சேர்த்தால் அவை குறைய வாய்ப்பிருக்கிறது. அந்தவகையில் முன் நிற்பது கடுக்காய். கடுக்காய்த்தோல் 4 அல்லது 5 துண்டுகள் எடுத்து 10 மி.லி. விதார்யாதி எனும் நெய்மருந்துடன் வதக்கி தோல் நன்றாக பொன்நிறமாகச் சிவந்ததும் கீழிறக்கி காலையில் வெறும் வயிற்றில் சுவைத்துச் சாப்பிட தங்களுக்கு இருவேறு நன்மைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. தங்களுடைய வயதானது வேகமாக அதிகரிக்காது மேலும் பாத எரிச்சல், மதமதப்பு போன்ற தன்மைகளை இந்த நெய் மருந்தும், கடுக்காயும் போட்டி போட்டுக் கொண்டு குறைக்க நிறைய வாய்ப்பிருக்கிறது.
 ஒரு சில மூலிகைத் தைலங்களை வெளிப்பூச்சாகப் பயன்படுத்தினால் பாத எரிச்சலையும் மதமதப்பையும், குதிகால் வலியையும் ஒரு சேரக் குறைக்கலாம். மஹாமாஷ தைலம், தான்வந்தரம் தைலம், சந்தனாதி தைலம், நிசோஷீராதி தைலம் போன்றவை தங்களுடைய உபாதைக்குப் பயன்படத் தக்கவை. இவை எல்லாவற்றையும் பயன்படுத்தவேண்டிய நிர்பந்தம் இல்லை என்றாலும் தங்கள் ஊரிலுள்ள ஆயுர்வேதமருத்துவரின் ஆலோசனைப்படி இதுபற்றிய விவரம் கேட்டறிந்து பயன்படுத்திக்கொள்ளலாம். நீரிழிவு, இரத்தக்கொதிப்பு போன்றவை நார்மலாக இருந்தாலும் அவற்றில் ஏற்படக்கூடிய ஏற்றத்தாழ்வுகளால் பாத எரிச்சலும், மதமதப்பும், குதிகால் வலியும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அதனால் இவற்றை கட்டுப்படுத்தக் கூடிய நெல்லிச்சாறு 10 மி.லி., 3 கிராம் மஞ்சள்தூளுடன் கலந்து 2 சொட்டு தேன் விட்டு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட இவை இரண்டையும் ஒரு சேர குறைக்க இயலும். ஆனால் முன்னால் குறிப்பிட்ட நெய்யில் வதக்கிய கடுக்காயையும், வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய நிர்பந்தம் இருப்பதால் காலையில் முதலில் நெல்லிச்சாறு கலந்த மஞ்சள்தூள் மற்றும் தேன் சாப்பிட்ட பிறகு சுமார் ஒருமணி நேரம் கழித்து இந்த கடுக்காய் பிரயோகம் செய்யலாம். டீ, காபி ஆகியவற்றின்மீது உங்களுக்கு மோகமிருந்தால் காலையில் அருந்திய நெல்லிக்கனிச் சாறு நன்கு செரித்த பிறகு டீ அல்லது காபி சாப்பிட்டு, அதன் பிறகு சுமார் முக்கால் மணிநேரம் கழித்து கடுக்காய் பிரயோகம் செய்யலாம்.
 இரவில் படுக்கும் முன் பாதங்களைக் கழுவி நன்றாகச் சுத்தம் செய்த பிறகு ரோஜா பன்னீருடன் சேர்த்து அரைக்கப்பட்ட வெட்டிவேர், சந்தனம், விலாமிச்சைவேர், பதிமுகம், கோரைக்கிழங்கு, பற்பாடகப் புல் ஆகியவற்றின் விழுதை சுமார் ஓர் அங்குலம் கனத்திற்கு பாதங்களில் பூசி அரை, ஒரு மணிநேரம் ஊற வைத்து கழுவிவிடுவதன்மூலமாக பாத எரிச்சலையும், மதமதப்பையும் வெகுவாக குறைக்கலாம். நீங்கள் அணிந்திருக்கும் செருப்பானது கடினமான தன்மையுள்ளதாக அல்லாமல் நல்ல குஷன் வைத்து தைக்கப்பட்டதாக அணிந்து கொள்வது நலம். குதிகாலில் எலும்புகள் ஏதேனும் வளர்ந்துள்ளதா என்பதை எக்ஸ்-ரே மூலம் கண்டறிந்து அதற்குத் தக்கவாறு வைத்தியம் செய்துகொள்வது அங்குள்ள வலியைப் போக்கிட உதவும்.
 இரவில் அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கான காரணத்தையும் கண்டறிய வேண்டியுள்ளது. மாலை ஏழுமணிக்கு பிறகு அதிக அளவில் நீர் பருக வேண்டாம். அதற்கு மாற்றாக, தர்ப்பைவேர் சுமார் பதினைந்து கிராம் எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் கொதிக்கவிட்டு அரை லிட்டராக வற்றியதும் வடிகட்டி அந்த தண்ணீரை மதியம் முதல் மாலை வரை சிறிது சிறிதாகப் பருகி வர இரவில் அதிக அளவில் சிறுநீர் போக்கை கட்டுப்படுத்த முடியும் என்று அஷ்டாங்கஹ்ருதயம் எனும் ஆயுர்வேதபுத்தகத்தில் நீரிழிவு பற்றிய வர்ணனையில் கூறப்பட்டிருக்கிறது. இதன்மூலம் சிறுநீரகங்களின் செயல்திறனும் அதிகரிக்கக் கூடும் என்பதை நாம் ஊகித்து அறியலாம். தனியா, நெல்லிவற்றல், சந்தனக் கட்டையின் சிராத்தூள் ஆகியவற்றைக்கொண்டு முன் குறிப்பிட்டதுபோல காய்ச்சிய தண்ணீரும் இரத்தக் கொதிப்பை மட்டுப்படுத்துவதுடன் அவற்றினுடைய துவர்ப்பு மற்றும் கசப்புச் சுவையினால் பாத எரிச்சலையும் மட்டுப்படுத்தக்கூடிய வாய்ப்பிருக்கிறது.
 (தொடரும்)
 பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,
 ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
 நசரத்பேட்டை } 600 123 (பூந்தமல்லி அருகே)
 செல் : 94444 41771
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com