ஒன்ஸ் மோர்

எஜமானர்களாக மேலே உள்ளவர்களை உற்சாகப்படுத்த "ஆமாம்' போடுகிறவர்கள் எல்லாத் துறைகளிலும் உண்டு. ஆனால் எல்லாரும் அப்படியல்ல.
ஒன்ஸ் மோர்

எஜமானர்களாக மேலே உள்ளவர்களை உற்சாகப்படுத்த "ஆமாம்' போடுகிறவர்கள் எல்லாத் துறைகளிலும் உண்டு. ஆனால் எல்லாரும் அப்படியல்ல. விதிவிலக்கானவர்களும் உண்டு. அப்படிப்பட்டவர் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டியவர் அமரர் "சாண்டில்யன்'.

 நாங்கள் சேர்ந்து பணியாற்றிய நாளேட்டின் ஆசிரியர் தாம் உயிரோடு இருக்கும்போதே தம் புதல்வரை தமக்கு அடுத்தபடியாக ஆசிரியராக வரப் பட்டம் கட்டிவிட்டார்! புதல்வரும் பட்டதாரிதான். ஈடு இணையிலாத பெரும்புகழ் பெற்று ஜொலித்துக் கொண்டிருந்த ""ஸ்டில்'' புகைப்பட நிபுணர் நாகராஜ ராவ் அப்போது எங்களுடைய நாளேட்டின்

""ஸ்டாஃப்'' புகைப்படக்காரர். அவரைப்போலவே தாமும் படம் எடுக்க ஆசை கொண்ட புதிய ஆசிரியராகப் பட்டம் சூட்டப்பட்டிருந்த அன்பர் படாதபாடு பட்டார். படங்களாக எடுத்துத் தள்ளினார்.

 அப்படி எடுத்த படங்களை அவரோடு மிக நெருக்கமாக இருந்த எங்கள் மூவரிடமும் அடிக்கடி காட்டி, ""எப்படி நான் எடுத்த படங்கள்? நாகராஜராவ் எடுப்பதுபோல - ப்ரொஃபஷனல் ஸ்டாண்டர்டுக்கு இருக்கிறது இல்லையா?'' என்று நாள்தோறும் எங்களை நச்சரித்து ஓயாமல் கேட்டு நாங்கள் பாராட்ட வேண்டும் என்று எதிர்பார்த்தார்! எங்களுக்கோ தர்ம சங்கடம். அவர் எடுத்த படங்களோ  சுமாரான படங்கள்! அபிப்ராயம் கேட்பவரோ எங்கள் வருங்கால எஜமானர். ஆனால் சாண்டில்யனோ சிறிதும் தயங்கவில்லை. ""ஸார்! நீங்க கோபிச்சுக்கக் கூடாது. நாங்கள் உங்களிடம் சேவை செய்ற ஆசிரிய இலாகா ஊழியர்கள். உத்யோகம் கொடுத்திருக்கிறீர்கள். சம்பளம் தருகிறீர்கள். அதற்காக நீங்கள் பிடிக்கிற, பிடித்த படங்களெல்லாம் நாகராஜராவ் எடுக்கும் படங்களுக்கு நிகர் என்றோ, "புரஃபஷனல் ஸ்டாண்டர்டு' உள்ளவை என்றோ சொல்ல முடியாது. உங்கள் படங்கள் தரமில்லை. பட்டவர்த்தனமாக சொல்றதுக்கு மன்னிக்கணும். உங்கள் கோபம் அதிகமாகறதுக்கு முன்னாலே இதோ என் வேலையை வேணும்னா ராஜிநாமா செய்துடறேன்'' என்று கால்கடுதாசியைக் கையில் எடுத்து விட்டார் சாண்டில்யன்!

 அருகே இருந்த பல உதவி ஆசிரியர்களும், நிபுணர் நாகராஜராவும், "சாண்டில்யனின்' துணிச்சலையும், நகைச்சுவைப் பூச்சோடு வெளியிட்ட உண்மையான விமர்சனத்தையும் கேட்டு வியந்து எங்களை அறியாமல் வாய்விட்டு உரக்க நகைத்துவிட்டோம்! ஆசிரிய இளவரசும் தமக்கும் நகைச்சுவை உணர்வு உண்டு என்ற பாணியில் கர ஒலி எழுப்பியவாறு சாண்டில்யன் கைபிடித்துக் குலுக்கினார்.

 ஹரிகதைகள் செய்வதில் புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் சடகோபாச்சாரியார் மெத்தப் படித்த அறிஞர். சாண்டில்யனின் மாமனார். கதை நிகழ்த்த வேண்டிய நாட்களில் மாலையில் புறப்படும் முன்பாகக் குரலுக்கு இதமாக இருக்கும் என்பதற்காகத் தமக்கு மட்டும் பாதாம் அல்வா தயாரிக்கச் செய்து நெல்லிக்காய், நெல்லிக்காய் அளவில் இளஞ் சூட்டோடு உள்ளங்கையில் உருட்டி வைக்கச் சொல்லி உட்கொள்வார்.

 ஒருநாள் தற்செயலாக "சாண்டில்யன்' தனது நண்பருடன் மாமனார் சடகோபாச்சாரியார் இல்லம் போக நேர்ந்தது. அன்று பாகவதருக்கு கதாகாலட்சேபம் செய்யப் போக வேண்டிய நாள், தமது வழக்கப்படி அவர் பாதாம் அல்வா உருண்டைகளை உள்ளங்கையில் வாங்கி வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருந்தார். மாப்பிள்ளையைக் கண்டதும் ""வாங்கோ வாங்கோ... உட்காருங்கோ... ஸார் யாரு? நண்பரா? நீங்களும் உட்காருங்கோ ஸார். உள்ளே சூடா உருளைக்கிழங்கு பஜ்ஜி போட்டிருக்கா... சாப்பிடறேளா மாப்ளே?'' என்று உபசரித்தார்! மாமனாரின் மனப்போக்கு சாண்டில்யனுக்குப் புரிந்துவிட்டது! (அதாவது மாப்பிள்ளைக்கு பாதாம் அல்வா கிடையாது!)

சட்டென்று ""அதெல்லாம் வேண்டாம் மாமா. பஜ்ஜி, கிஜ்ஜின்னு இந்த எண்ணெய்ப் பண்டங்கள் உங்களுக்கு எப்படி ஒத்துக்காதோ, அதேமாதிரிதான் எங்களுக்கும் சரிப்படறதில்லை. அதனாலே, நீங்க உள்ளங்கையில வாங்கி வாங்கி எதையோ உள்ளே தள்ளிக்கொண்டு இருக்கேளே, அதையே கொண்டு வரச் சொல்லுங்கோ!'' என்றார் சாண்டில்யன்! இதைக் கேட்டுப் பாகவதரும் சமையற்கட்டில் இருந்த அத்தனைபேரும் உரக்கச் சிரித்துவிட்டார்கள்!

 நகைச்சுவை கூடிய பேச்சிலும், நமுட்டு விஷயங்களிலும் சமயோசிதமாகச் செயல்படும் திறமையிலும் சிறந்த தமது மாப்பிள்ளை "சாண்டில்யனிடம்' சடகோபாச்சாரியார் பெருமதிப்பு வைத்திருந்தார்.

 எழுத்தாளர் "நீலம்' எழுதியுள்ள

"சாண்டில்யனின் நகைச்சுவை விருந்து' என்ற நூலிலிருந்து.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com