

நடனம், நடிப்பு, இயக்கம் என பல்வேறு முகங்கள் கொண்ட பிரபுதேவா இப்போது தயாரிப்பாளர். வித்தியாசமான கதைக் களம், திறமையான கலைஞர்கள் என அடையாளம் காட்டும் விதத்தில் படங்களைத் தயாரித்து வரும் பிரபுதேவாவின் முதல் தயாரிப்பாக தமிழில் உருவாகி வரும் படம் "போகன்.' கடந்த ஆண்டு வெளிவந்து வெற்றி பெற்ற "ரோமியோ ஜூலியட்' படக்குழு மீண்டும் இப்படத்துக்காக இணைந்துள்ளது. "ஜெயம்' ரவி, ஹன்சிகா நடிக்கும் இப்படத்தை லஷ்மன் எழுதி இயக்குகிறார். "தனி ஒருவன்' படத்துக்குப் பின் அரவிந்த்சாமி கதையின் திருப்புமுனை கதாபாத்திரம் ஏற்று நடிக்கிறார். "ஜெயம்' ரவி, அரவிந்த்சாமி என இருவருக்கும் ஒரே வேடம் என்றாலும், இரு வெவ்வேறு குணாதிசயங்களை வெளிப்படுத்தும் விதத்தில் இருவரின் வேடங்களும் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சௌந்தர்ராஜன் ஒளிப்பதிவில் இமான் இசையமைக்கிறார். தாமரை, மதன்கார்க்கி, ரோகேஷ் ஆகியோர் பாடல் வரிகளை எழுதுகின்றனர்.
கல்வியின் அவசியத்தை உணர்த்தும் வகையில் உருவாகி வரும் படம் "நட்சத்திர ஜன்னலில்.' ஓம் சிவ சக்தி முருகா பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் அபிஷேக் குமரன், அனுபிரியா புதுமுகங்கள் நடிக்கின்றனர். போஸ் வெங்கட், "பாய்ஸ்' ராஜன், ஜீவாரவி, ஸ்ரீரஞ்சனி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்கள் ஏற்று நடிக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் ஜெயமுருகேசன். படிக்கிற வயதில் படிப்பதுதான் சாலச் சிறந்தது. அதிலிருந்து கவனம் சிதறினால் என்னவாகும் என்பதை முன்னிறுத்தும் வகையில் கதை உருவாக்கப்பட்டுள்ளது. சென்னை, புதுவை, கேரளம் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
1991-ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கிய "புது நெல்லு புது நாத்து' படத்தின் மூலம் அறிமுகமான நெப்போலியன், அதன் பின் கதாநாயகன், வில்லன், குணசித்திர வேடம் என அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் தனது முத்திரையைப் பதித்து ரசிகர்களின் கவனம் பெற்றார். தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாக பொறுப்பிலிருந்து, அரசியலில் கவனம் திருப்பிய நெப்போலியன், மத்திய இணை அமைச்சராகவும் உயர்ந்தார். இதனால் சினிமாவிலிருந்து விலகி இருந்தார். இந்நிலையில் மீண்டும் சினிமாவுக்கு திரும்புகிறார். அடுத்தடுத்து வந்த வாய்ப்புகளில் தனக்கே பொருந்தி வருகிற கதாபாத்திரங்களைத் தேர்வு செய்துள்ள நெப்போலியன் "வல்லவனுக்கு வல்லவன்', "கிடாரி', "முத்துராமலிங்கம்' ஆகிய படங்களுக்காக ஒப்பந்தமாகியுள்ளார். தெலுங்கில் "சரபா' படத்துக்காகவும் சிறப்பு வேடம் ஏற்கவுள்ளார். ""சின்ன இடைவெளிக்குப் பின் சினிமாவில் நடிக்கிற இந்த அனுபவம், புதுமையானது. இளம் இயக்குநர்கள் பலர் என்னை முன் வைத்து கதையை உருவாக்கி இருப்பதாக சொல்லி வந்தார்கள். அவர்களுக்காக நடிக்க வந்திருக்கிறேன். இது சுவாரஸ்யமான பயணமாக இருக்கும் என நம்புகிறேன்'' என்றார் நெப்போலியன்.
"லிங்கூ' என்கிற கவிதைத் தொகுப்பு மூலம் இலக்கிய உலகிலும் பரவலாக அறியப்பட்டவர் லிங்குசாமி. தற்போது "செல்ஃபி எடுத்துக்கொள்கிறது மரம்' என்ற கவிதை நூலை வெளிக் கொண்டு வந்துள்ளார். கவிஞர் அப்துல் ரகுமான், இயக்குநர்கள் கெüதம் வாசுதேவ்மேனன், பார்த்திபன், சசி, பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட வெளியீட்டு விழாவில் லிங்குசாமி பேசும் போது... ""நல்ல கவிதையை ரசிக்கும் மனசுதான் என்னை படைப்பாளனாக மாற்றியது. எனக்குள் ஆதியில் தோன்றியது கவிதையாகவே இருந்திருக்கிறது. பிறகுதான் கதை எல்லாம் வந்தது. சென்னையில் இறங்கிய போது சில கவிதைகளும், கொஞ்சம் நம்பிக்கையும்தான் கையில் இருந்தது. காசு, பணம் வேண்டாம். கவிதை போதும் பிழைத்துக் கொள்ளலாம் என்றிருப்பேன். எதுவுமே இல்லையென்றாலும் கவிதை இருக்கிறது பார்த்துக் கொள்ளலாம் என நினைத்ததுண்டு. நான் எப்போதும் கவிதையை ரசிக்கும் மனதோடு இருப்பேன். எவ்வளவு சோதனை வந்தாலும் கவிதைகளுக்கு முன்னால் அதெல்லாம் ஒன்றுமில்லை. இந்த மனநிலையோடு அடுத்த படத்தை தொடங்குகிறேன். இனி எல்லாம் கடந்து போகும் என நம்புகிறேன்'' என்றார் லிங்குசாமி.
1996-ஆம் ஹாலிவுட்டில் வெளிவந்து கதைக் களம் மற்றும் வசூல் ரீதியாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய படம் "இன்டிபென்டன்ஸ் டே.' ஹாலிவுட் சினிமா வரலாற்றில் வசூலை வாரிக் குவித்த முதல் பத்து படங்களில் இப்படத்துக்கு இப்போது வரை இடமுண்டு. அந்நிய கிரகத்திலிருந்து கிளம்பி வந்த எதிரிகள் கூட்டம், மனித இனத்துக்கு எதிராகத் தாக்குதல் நடத்த முயற்சிக்கிறது. இதனால் ஒருங்கிணைந்த மனிதர்கள் அவர்களிடமிருந்து தங்களைப் பாதுகாக்க எடுக்கும் முயற்சிகள்தான் கதை. சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின் இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகியுள்ளது. மனித இனத்துக்கு எதிராகத் தாக்குதல் நடத்தி 20 ஆண்டுகள் ஆன பின், அந்த எதிரிகள் கூட்டம் மீண்டும் அசுர பலத்துடன் தாக்குதல் நடத்த வருகிறது. அறிவியல் வளர்ச்சியால் நாளுக்கு நாள் வளர்ந்து விட்ட மனித இனம் அவர்களை எவ்வாறு எதிர் கொள்ளப் போகிறது என்பது இரண்டாம் பாகத்தின் சாரம். முதல் பாகத்தில் நடித்திருந்த பில் ஃபுல்மேன், ஃஜெப் ஆகியோர் இப்படத்திலும் நடித்துள்ளனர். முதல் பாகத்தை இயக்கி ரொனால்ட் இப்படத்தையும் இயக்கியுள்ளார். ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் வரும் 24-ஆம் தேதி வெளியாகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.