ஒன் ஸ் மோர்

பார்வை பல வகைப்படும். அகப்பார்வை, புறப்பார்வை, நினைத்துப் பார்ப்பவை, நிமிர்ந்து பார்ப்பவை, தாழ்ந்து பார்ப்பவை, சரியாகப் பார்ப்பவை...
ஒன் ஸ் மோர்

பார்வை பல வகைப்படும். அகப்பார்வை, புறப்பார்வை, நினைத்துப் பார்ப்பவை, நிமிர்ந்து பார்ப்பவை, தாழ்ந்து பார்ப்பவை, சரியாகப் பார்ப்பவை...

கண்களால் பார்ப்பவை, கருத்தால் பார்ப்பவை, கல்விப் பார்வை, அனுபவப் பார்வை, அலட்சியப் பார்வை, தேடிப் பார்ப்பவை, தின்று பார்ப்பவை, உடுத்திப் பார்ப்பவை, உழுது பார்ப்பவை, நடந்து பார்ப்பவை, ஓர்ந்து பார்ப்பவை... இப்படி...

பார்வை பல கோணம், பல பிரிவு பயன்களும் அப்படியே! ஆனால் எதையும் அகந்தையுடன் பார்க்காமல் அருளால் பார்க்க வேண்டும் என்பது மேலோர் வாக்கு மட்டுமன்று, வேத வாக்குமாகும்.

ஆணவப் பார்வை ஆபத்தானது; அருட்பார்வை அகப்பூரிப்பை, ஆயுள் விருத்தியை, மனித சமுதாயத்தை மேன்மைப்படுத்துவது.

உலகத்தில் உள்ள அனைத்தும் நம்மை உற்றுப் பார்க்கின்றன என எண்ணினால் தவறு செய்திடத் தோன்றாது. அதை இன்னும் சற்றே உயர்த்திச் சொன்னால் ஆண்டவன் நம்மை, நமது செயல்களைக் கூர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறான் என்கிற நினைவு நெஞ்சத்தில் பதிந்திருக்கும் மனிதனால் தவறிழைத்திட இயலாது. காணாமல் செய்வதுதானே களவு? இறைவன் கண்டு கொண்டிருக்கிறான் என்கிற நினைவு இருந்துகொண்டே இருந்தால்?...

ஒரு நிகழ்வு -

மாணவர்கட்குப் பாடம் சொல்லிக் கொண்டிருந்தார் ஆசிரியர். அது தத்துவப் பாடம். இறைநெறி பற்றியது. பல நாள்களாக நடந்து கொண்டிருக்கின்ற - நடத்தப்படும் பாடம்.

ஒரு மாணவனை மட்டுமே பார்த்துப் பாடம் சொல்லி வந்தார் ஆசிரியர். ஏனைய மாணவர்கட்கு வருத்தம். மாணவர்கள் அனைவரும் ஆசிரியரின் சமநோக்குக்கு உரியவர்கள்தானே? ஏன் நம்மையெல்லாம் விட்டு விட்டு அவனையே பார்த்தபடி பாடம் நடத்துகிறார்...?

ஒருநாள் ஆசிரியரிடம் கேட்டே விட்டார்கள். ""ஐயா... நாங்களும் உங்கள் மாணவர்கள்தானே? எங்களையெல்லாம் பாராமல் அவன் ஒருவனையே பார்த்துப் பாடம் நடத்துகிறீர்களே... இது சரிதானா?''

இக்கேள்விக்கு ஆசிரியர் பதில் கூறிடவில்லை. ஒவ்வொருவரிடமும் ஒவ்வோர் கொய்யாப் பழத்தைக் கொடுத்து, ""யாரும் காணாத இடத்தே சென்று அறுத்தெடுத்து வாருங்கள்'' என்றார். மாணவர் யாவரும் தனித்தனி இடங்களுக்குச் சென்று பழங்களை அறுத்தெடுத்து வந்தனர். ஆசிரியர் எந்த மாணவனைப் பார்த்துப் பாடம் சொல்லி வந்தாரோ, அந்த மாணவன் பழத்தை அறுத்திடாமல் கொணர்ந்து வைத்தான். ""நீ ஏன் அறுத்திடவில்லை?'' என்று அம்மாணவனிடம் கேட்டார் ஆசிரியர். மாணவன் சொன்னான்.

""நீங்கள் யாரும் காணாத இடத்தில் அல்லவா பழத்தை அறுத்து வரப் பணித்தீர்கள். எல்லா இடத்தையும் ஆண்டவன் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறான்? யாரும் பார்க்காத இடம் இல்லையே!''

என்று.

ஆசிரியர் ஏனைய மாணவர்களைப் பார்த்தார். அந்த மாணவனை ஒப்ப, கூர்த்த அறிவுப்பார்வை தங்கட்கில்லை என்பதறிந்து நாணமுற்றிடலாயினர் அம்மாணவர்கள்.

இது கல்விப் பார்வை ஆகின்றது அல்லவா?

ஆண்டவன் சொன்னானாம் தாயுமான அடிகளாரிடம், ""அருளாலே எதையும் பார்'' என்று. ஆனால் தாயுமானவர் தனது அறிவுக்கண் கொண்டு பார்த்திடலானாராம். கண்டது என்ன? எங்கும் இருளன்றி வேறெதும் அவருக்குத் தென்படவில்லையாம். அவரே சொல்லுகிறார்:

"அருளாலே எவையும்பார் என்றான் - அதை

அறியாதே சுட்டி என் அறிவாலே பார்த்தேன்

இருளான பொருள் கண்டதல்லால் - கண்ட

என்னையும் கண்டிலன் என்னேடி தோழி!'

ஆம். இருட்டில் தன் உருவம்கூடத் தனக்குத் தெரியாதுதானே! தான் யார்? தன் உருவம் எது? எதற்காக இறைவன் நம்மைப் படைத்தான்? என்ன சொல்லியனுப்பினான் உலகிடை நம்மை இறைவன்?

இதைத் தெரிந்துகொள்ள அருட்பார்வை வேண்டும். அறிவுப் பார்வை ஒன்றினைக் காட்டும் - ஆனால் உணர்வைத் தூண்டிட அறிவுக் கண்ணிற்குச் சக்தி கிடையாது. அருள் நோக்கிற்குத்தான் உய்த்துணரும் உள்ளார்ந்த நோக்குண்டு. குட்டரோகியை அறிவுக்கண் கொண்டு பார்த்தால் அருவருப்புத்தான் தோன்றும். ஆனால், அருட்கண் கொண்டு பார்த்தால் இரக்கம் பிறக்கும். அதன் காரணமாய் உதவிடும் உள்ளக்கசிவு, அன்பின் ஊற்றுச் சுரந்து விடும். வேண்டியது அறிவுக் கண்களா, அருள் பார்வையா?

(பேரா.சு.சண்முகசுந்தரம் தொகுத்த கவி.கா.மு.ஷெரீப் கட்டுரைகள். "பார்வை' என்ற கட்டுரையிலிருந்து)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com