விதைக்காத செடி

பட்டம்மா கைநிறைய சாதத்தை எடுத்து வந்து புழக்கடை மாடத்தில் போட்டதும், அங்கே காத்துக் கொண்டிருந்த வெள்ளைப்புறா, ஒவ்வொரு பருக்கையாய் கொத்திக் கொத்தி தன் குஞ்சுகளுக்கு மாற்றி மாற்றி ஊட்டுவதையும், பதிலுக்கு அந்தக் குஞ்சுகளும் பாசத்துடன் அம்மாவைக் கொத்திக் கொத்தி கொஞ்சுவதையும் பார்த்தபடி நின்றாள்.
விதைக்காத செடி

பட்டம்மா கைநிறைய சாதத்தை எடுத்து வந்து புழக்கடை மாடத்தில் போட்டதும், அங்கே காத்துக் கொண்டிருந்த வெள்ளைப்புறா, ஒவ்வொரு பருக்கையாய் கொத்திக் கொத்தி தன் குஞ்சுகளுக்கு மாற்றி மாற்றி ஊட்டுவதையும், பதிலுக்கு அந்தக் குஞ்சுகளும் பாசத்துடன் அம்மாவைக் கொத்திக் கொத்தி கொஞ்சுவதையும் பார்த்தபடி நின்றாள். ""அம்மாடி, வெள்ளைப்புறா! இன்னும் ஒரு மாதமோ இரண்டு மாதமோதான் இந்தப் பாசம் பரிவு எல்லாம். உன் குழந்தைகளுக்கு இறகு முளைத்ததும் பறந்து போயிடும் உன்னை விட்டுட்டு. நீயும் என்னாட்டம் மாடத்தைக் காவல் காத்துண்டிருக்க வேண்டியதுதான்'' வாய்விட்டே சொல்லிக் கொண்டாள்.

கூடத்தில் போன் அடிக்கும் சத்தம் கேட்டதும், உள்ளே விரைந்தாள்.

""என்னம்மா போனை எடுக்க இவ்வளவு நேரமா?'' மறுமுனையில் கத்தினான் பெரியபிள்ளை ராமு.

""என்னப்பா பண்ணறது. வயசாகறதில்லையா, வேகமாக வர முடிகிறதா''

""சரி, சரி, நம்ப வீட்டை வித்துடலாம்னு நாங்க மூன்று பேரும் முடிவு செய்திருக்கிறோம். நம்ப தணிகாசலத் தரகர்தான் ஒரு என்.ஆர்.ஐ பார்ட்டியைப் பிடிச்சுக் கொடுத்தார். ஒன்றரைக் கோடி ரூபாய்க்குப் பேசி முடிச்சிருக்கிறோம். நாங்கள் மூவரும் அந்தப் பணத்தைச் சமமாகப் பிரித்துக் கொண்டு ஆளுக்கொரு வீடு வாங்கிக் கொள்ளப் போகிறோம்''.

""ஏம்ப்பா, நம்ப ராதாவுக்கு...'' அவளையறியாமலேயே குறுக்கிட்டுக் கேட்டாள்.

""ஏம்மா, நீ இன்னுமா அந்த ராதாவை விடவில்லை. அவளுக்கு எதற்கு பங்கு கொடுக்கணும்? அவள் என்ன எங்க கூடப் பிறந்தவளா? அதவிடு... நாங்கள் மூவரும் வீட்டை ரிஜிஸ்தர் பண்ணுவதற்காக அடுத்த வாரம் அங்கு வருவோம். வரதுக்கு முந்தி பேசறேன்'' போனை கட் பண்ணி விட்டான்.

"நீ எப்படிம்மா இருக்கே?'ன்னு ஒரு வார்த்தை இல்லை. போன் அடிச்ச உடனே எடுக்கலைன்னு கத்தறான். வீட்டை விற்கலாமான்னு ஒரு வார்த்தை எங்கிட்ட கேக்கலை. அட கேட்க வேண்டாம். சொல்லக்கூட இல்லையே... போன் பக்கத்திலிருந்த சோபாவில் அப்படியே உட்கார்ந்தாள். ராதாவைக் கூடப் பிறந்தவளான்னு கேக்கறானே... கூடப் பிறந்தால்தானா... கூடவே வளர்ந்தாளே... அந்தப் பாசம் கொஞ்சம்கூடவா இருக்காது?... இன்னமும் இப்படியே இருக்கானே.... ஆயாசமாய் கண்களை மூடிக் கொண்டாள்.

ராதா என் பெண்... எப்படி இருக்காளோ.. என்ன பண்ணறாளோ... கல்யாணம் பண்ணி... கல்யாணம் என்ன கல்யாணம்... ஊரையும் உறவையும் கூப்பிட்டு, சீரும் சிறப்புமாவா நடந்தது, பக்கத்து வீட்டுப் பங்கஜத்தோட அக்கா பிள்ளை வந்திருந்தப்போ, ராதாவை அவனுக்கு ரொம்பப் பிடிச்சுப்போய் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட, ரொம்ப நல்ல பையன் என்று பங்கஜம் சர்டிபிகேட் கொடுத்ததை வைத்து, அவனுக்கு என் பெண்ணை கல்யாணம் பண்ணிக் கொடுத்து அனுப்பிட்டேன். வேறென்ன செய்ய... பெண்ணுக்குக் கல்யாணம் பண்ண ஆசைப்பட்டுக் கொண்டிருந்த என் கணவர் திடீரென்று நிமிட நேரத்தில் இறந்துவிட்டார். பையன்களும் எந்த ஆதரவும் தரத் தயாராயில்லை.

தன்னந் தனியாகத் தவித்துக் கொண்டிருந்த எனக்கு, பங்கஜம் சொன்ன வரன், கடவுளுடைய செயல் என்றே தோன்றியது. அவர் மேலேயே பாரத்தைப் போட்டுவிட்டு, அவர் சன்னதியிலேயே சிம்பிளா கல்யாணம் முடித்து டெல்லிக்கு அனுப்பியாச்சு. மாப்பிள்ளைக்கு மிலிடரியில் வேலை என்று மட்டும்தான் தெரியும். மற்றபடி அவர் எப்படிப்பட்டவரோ என் பொண்ணு எப்படி இருக்காளோ... குழந்தைகள் பிறந்திருக்கா... ஒன்றுமே தெரியவில்லையே... அவளாவது ஒரு லெட்டர்கூடப் போடக் கூடாதா...

இப்பல்லாம் எனக்கு ரொம்பவே ராதா பத்தின நினைவு வருகிறது. அவளைப் பார்க்கணும்னு ஆசையா இருக்கு. "அம்மா அம்மா'ன்னு குழந்தை எத்தனை பாசமா இருப்பா...

கார் ரிவர்ஸ் எடுப்பதுபோல நினைவு இன்னும் பின்னே பயணப்பட்டது. நமக்கு இப்படி மூன்றும் ஆண் பிள்ளைகளாப் போயிடுத்தே... கைக்கு ஒத்தாசையா ஒன்றாவது பெண்ணாக இருக்கக் கூடாதான்னு கணவரிடம் அடிக்கடி புலம்புவேன். அதானோ என்னவோ, கடவுள் நான் பெறாத பெண்ணாக ராதாவை எனக்குக் கொடுத்துவிட்டார்போல.

ராதா வீட்டுக்கு வந்த தினத்தை கண் முன் கொணர்ந்து மகிழ்ந்தாள்.

வெள்ளிக்கிழமை மாலை... பூஜை அறையில் சுவாமி விளக்கு ஏற்றிக் கொண்டிருந்தேன். ஆபீஸிலிருந்து வரும்போதே ""பட்டு... பட்டு...'' இங்கே வந்து பாரேன்...

""கணவரது உற்சாகக் குரல் கேட்டு விரைந்து வந்தவள் கையில் ""இந்தா, பிடிச்சுக்கோ உன் பெண்ணை'' என்று ரோஜாக்குவியல் மாதிரி அந்த குட்டியூண்டு குழந்தையைக் கொடுத்ததும், எனக்கு ஏற்பட்ட பரவசம் வர்ணிக்கவே முடியாது.

""சாரிம்மா, உன்னிடம் நான் அனுமதிகூட கேட்கவில்லை. எங்க ஆபீஸில் அவ்வப்போது சின்னச் சின்ன வேலைகள் செய்து தரும் எலெக்டீரிஷியனும் அவன் மனைவியும் நேற்று இரவு குடிசையில் தூங்கும்போது பாம்பு கடித்து இறந்து விட்டனர். பிறந்து பத்தே நாட்கள் ஆன இந்தக் குழந்தை தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்ததால் தப்பியது. அனாதை இல்லத்துக்குப் போகவிருந்த குழந்தையை நான் எடுத்து வந்துட்டேன்... உனக்கு சம்மதம்தானே...''

""என்னங்க நீங்க கரும்பு திங்கக் கசக்குமா, கோலக்ஷ்மி மாதிரி பெண் குழந்தை வீடு தேடி வந்திருக்கு... இனிமேல் இவ, ராதா. உடனே பெயரும் வைத்து, நம் மகள்ங்க'' என்று அந்த நிமிஷமே உடமையாக்கிக் கொண்டேன்.

""அய், குட்டிப்பாப்பா, தங்கச்சி பாப்பா...'' ராமு, ரகு, ரவி மூன்று பேருக்கும் கொண்டாட்டம்... சதா தங்கச்சிப் பாப்பாவுடன் தான் விளையாட்டு. நால்வரும் ஒன்றாகப் பாசமாகத்தான் வளர்ந்தார்கள். எங்கள் கண்ணே பட்டுவிடும்போல.... எல்லாம் வீட்டுக்கு அந்த விருந்தாளி வரும் வரை தான்.

கணவருக்குத் தூரத்து உறவு என்று சொல்லிக்கொண்டு வந்தவர், வந்தமா, இருந்தமா என்று இல்லாமல், குழந்தைகள், ராமு, ரவி, ரகுவின் பிஞ்சு மனங்களில் நஞ்சை விதைத்துவிட்டுப் போனார். அவர் போனதும், மூன்று பேரும் எங்களிடம் வந்து, ""ராதா எங்கள்கூடப் பிறந்தவள் இல்லையாமே... யாரோ ஒரு கூலிக்காரருக்குப் பிறந்த அனாதையை நாங்கள் தங்கையாக இனிமேல் ஏற்றுக்கொள்ள மாட்டோம்'' என்று குதித்து ஆர்ப்பாட்டமே பண்ணினார்கள். எங்களுக்குத் தூக்கிவாரிப் போட்டது.

""நம் வீட்டில் தானேடா பிறந்ததிலிருந்து உங்களோடு கூடவேதானே வளருகிறாள்? நம் வீட்டுப் பெண்தான்டா. உங்கள் தங்கைதான்டா கண்ணுகளா... யாரோ சொன்னதையெல்லாம் கேட்கக் கூடாது... அம்மா அப்பா நாங்கள் சொல்றோம்ல...'' ஊஹும் எங்கள் கொஞ்சல் கெஞ்சல் எதையும் அவர்கள் கடைசி வரை ஏற்கவேயில்லை.

ராதா எங்களோடு சமமா உட்கார்ந்து சாப்பிடக்கூடாது... பள்ளிக்கு வரக் கூடாது. விளையாடச் சேர்த்துக்க மாட்டோம்னு எப்பவும் ஒரே ரகளையாயிருந்தது. அவர்களோடு போராடி, ராதாவை ஸ்கூல் பைனல் படிக்க வைப்பதற்குள் படாத பாடு பட வேண்டியிருந்ததே...

""அம்மா, வேலை முடிஞ்சிருச்சம்மா'' வேலைக்காரியின் குரலில் எழுந்து உள்ளே போய், அவளுக்கென்று எடுத்து வைத்திருந்த சாப்பாட்டைக் கொடுத்து அனுப்பிவிட்டு வந்தாள். சொல்லி வைத்ததுபோல் காத்திருந்த நினைவுகள் தொடர ஆரம்பித்தன.

ராமுக்கும் ரவிக்கும் கல்யாணம் முடித்ததும், கணவர் எத்தனை ஆசையாய் ராதா கல்யாணப் பேச்சை ஆரம்பித்தார். "படுபாவி பசங்க. அவரை நோகடிச்சு சாகடிச்சுட்டாங்களே...'

""இந்த ராதா, யாரோ அனாதை... அவளுக்கு நாம் எதற்கு கல்யாணம் செய்ய வேண்டும்... பேசாமல் வீட்டு வேலை, சமையல் வேலைக்கு அனுப்புங்கள்... நாலு காசாவது கிடைக்கும்...'' மூன்று பேரும் ஒன்றுபோல் கூறவும் அவருக்கு ரொம்பவே வருத்தமாயிற்று.

""ஏன்டா, இப்படி ஈவிரக்கமில்லாமல் பேசுகிறீர்கள். நீங்கள் எங்களுக்கு பிள்ளைகள் என்றால் அவள் எங்கள் பெண்ணடா. உங்களை மாதிரித்தானே அவளையும் வளர்த்தோம்...''

""எப்படியோ போங்க... நீங்க ரெண்டு பேருமே அந்த அனாதையைக் கட்டிண்டு அழுங்க. எங்களை விடுங்க... அவள் கல்யாணத்துக்குன்னு நாங்கள் பணமெல்லாம் கொடுக்க முடியாது''.

வெறுப்பும் நெருப்புமாய் வார்த்தைகள்... அறியாத வயதில் புரியாமல் ஏதோ பேசுகிறார்கள்? போகட்டும் என்று நினைத்தால்... இப்படி வளர்ந்து கண்ணியமான வயதிலேயும் இப்படியா...

""நீங்களுமாச்சு... உங்கள் பணமுமாச்சு... போங்கடா எல்லோரும்... கடனோ உடனோ பட்டு, என் பெண் கல்யாணத்தை நான் நடத்துவேனாக்கும்...'' கொந்தளிக்கும் கோபம் தலைக்கு ஏறக் கத்தியவர், அப்படியே மார்பைப் பிடித்துக்கொண்டு சாய்ந்துவிட்டாரே... கண்முன் அந்தக் காட்சி தோன்ற, பட்டம்மா கண்களில் கண்ணீர் பொங்கியது.

அப்பாவின் காரியங்கள் முடிந்ததும், என்னையும் ராதாவையும் இங்கேயே விட்டு விட்டு எல்லோரும் அவரவர் இடத்துக்குச் சென்று விட்டனர். கடைசி மகன் ரகு, தான் காதலித்த பெண்ணைத் தானே மணந்துகொண்டு செட்டிலாகி விட்டான்.

வெகுதூரம் வேக வேகமாய் ஓடிவந்து ஒரு ஸ்டேஷனில் நிற்கும் ரயில்போல, நம் வாழ்க்கையிலும் காலம் ஓட்டமாய் ஓடிக் களைத்துப் போய் முதுமை என்ற ஸ்டேஷனில் நின்று திரும்பிப் பார்க்கும்போதுதான் புரிகிறது. நம்மிடம், நமக்குத் தெரியாமலே எத்தனை மாற்றங்களைச் செய்து விடுகிறதென்று. நாலு குழந்தைகளையும் வளர்க்கும்போது உடம்பில் எத்தனை திடம், ஆசை, சுறுசுறுப்பு... அத்தனையும் தொலைந்து காணாமல் போயிடுத்தே...

தோற்றத்தில் மாற்றம், உடம்பில் தளர்ச்சி, எல்லாத்தையும் மீறி மனசு... அது அரவணைப்பைத் தேடி அலைகிறதே... யார் அதை எனக்குத் தரப் போகிறார்கள்...

ராதா கல்யாணம் ஆனதுமாவது, தனியே இருக்க வேண்டாம் என்று அழைத்துப் போவார்கள் என்றுதான் நம்பினேன். அப்படித்தான் ராதாவிடம் சொன்னேன். எங்கே... மூன்று பிள்ளைகள் என்று பெயர்தான். யாரும் என்னை இதுவரை கூப்பிடவில்லை. இன்று பேசின மாதிரி எப்பவாவது முக்கியம்னாதான் பேசவே செய்வார்கள். அதற்காகத்தான் சமீபத்தில்தான் இந்த போனையே வாங்கினார்கள்.

மகராஜன் என் கணவருடைய பென்ஷன் வருதோ பிழைச்சேன்... ஏதோ வேலைக்காரியோட உதவியோடு வாழ்க்கை ஓடிண்டிருக்கு... அது சரி. இப்ப வீட்டை வித்துட்டா... நான் இங்கே இருக்க முடியாதே... யாராவது கூட்டிண்டு போய்தானே ஆகணும்... ஒருவிதத்தில நிம்மதி... எங்கேயானாலும் சரி... கடைசிக் காலத்திலாவது பிள்ளை குடும்பம்... பேரன் பேத்திகளோடு கழிக்கலாமே...

டெல்லியில்... லெப்டினெண்ட் கர்னல் ராஜசேகர் வீடு... வாசலில் வந்து நின்ற ஜீப்பிலிருந்து இறங்கிய சேகர், அங்கு இருந்த கூர்க்காவின் சல்யூட்டை ஏற்றுக்கொண்டு உள்ளே போனவன் உடனே திரும்பி வந்தான். ""மேம் சாஹேப்... கஹாங் ஹை...'' செக்யூரிட்டியை விசாரிக்க அவன் தோட்டத்தைக் காட்டினான்.

குல் மோஹர் மரத்தினடியில்... ராதா உட்கார்ந்து எங்கேயோ பார்த்துக்கொண்டு...

""என்ன ராதா மேடம், அசோக வனத்து சீதை மாதிரி இங்கே வந்து... நான் வந்ததுகூடத் தெரியாமல்... என்னாச்சுமா...'' வேடிக்கையாய் ஆரம்பித்தவன், ராதாவின் அப்செட் மூடைப் புரிந்துகொண்டு கனிவாக முடித்தான்.

""என்னவோ போங்க... எனக்கு இப்பல்லாம் என் அம்மா நினைவு வருகிறது. அம்மாவைப் பார்க்கணும்னு ரொம்ப ஆசையாயிருக்கு. இப்ப நீங்கள் இவ்வளவு பெரிய பதவியிலே இருக்கிறதைப் பார்த்தா எவ்வளவு சந்தோஷப்படுவாங்க தெரியுமா...? இந்த வீடு... தோட்டம்... ஆள்... அப்டின்னு அதுமட்டுமா... நம்ம குழந்தைகளைப் பார்த்தா அப்படியே பூரிச்சுப் போயிடுவாங்க...'' ராதாவின் குரல் படிப்படியாக சுருதி குறைந்து அழத் தயாராக நின்றது.

""எனக்குப் புரிகிறதம்மா உன் மனசு. ஆனால் உங்கம்மாவை எப்படி கான்டாக்ட் பண்றதுன்னே புரியல்லியே. நீயும் உன் அண்ணன்கள் மூவருக்கும் தனித்தனியாக எத்தனை லெட்டர்கள் போட்டிருப்பாய்... ஒருவராவது ஒரு பதிலாவது போட்டார்களா... போனிலும் எத்தனை முறை முயற்சித்தாலும் எடுப்பதில்லை. நீயோ, உங்கம்மா கிராமத்திலே தனியா இருக்க மாட்டாங்க. அண்ணன் வீட்லேதான் இருப்பாங்கன்னு சொல்றே... எங்க சித்தி அங்கிருந்தாலாவது, விசாரிச்சுத் தெரிஞ்சுக்கலாம்.

சரி... நான் ஒன்று செய்யறேன். இன்னும் இரண்டு நாளில் உனக்கு சென்னைக்கு ஃப்ளைட் டிக்கெட் வாங்கித் தரேன். அங்கிருந்து ஒரு டாக்சி வைத்துக்கொண்டு உங்கள் கிராமத்து ஊருக்குப் போ... எப்படியும் ஊர்க்காரங்களுக்கு உங்கம்மா இருக்கிற இடம் தெரிஞ்சிருக்கும். விசாரிச்சுண்டு நேரா அங்கே போய் அம்மாவைப் பாத்துடு. முடிந்தால் அவங்களை நீ இங்கே கூட்டிக்கொண்டு வந்துவிடு. ரிட்டன் டிக்கெட் இரண்டாக புக் பண்ணிடறேன்...''

அத்தனை ஆறுதலான அன்பான கணவர். எப்படி அரவணைத்துப் பேசுகிறார்? அம்மாவிடம் பெருமையாய் சொல்லணும்னு மனசுக்குள் பரவசம். கணவரின் பொறுப்பான அணுகுமுறையில் மனம் நெகிழ்ந்தது. இவர்கள் உரையாடலைக் கவனித்துக் கொண்டிருந்த குழந்தைகள், பிரபுவும் ப்ரீத்தியும் ""அம்மா... அம்மா, பாட்டியைக் கூட்டிண்டு வாம்மா... பாட்டியைப் பார்க்கணும்னு ஆசையாக இருக்கு'' என்று ஓடிவந்து அம்மாவைக் கட்டிக்கொள்ள, ராதாவுக்கு அப்பவே பறக்கணும்போல் இருந்தது.

வீடு ரிஜிஸ்திரேஷன் முடிந்துவிட்டது. பிள்ளைகள் மூவரும் குடும்பத்தோடு வந்திருந்தனர். இரண்டு நாட்கள் முன்பே, பட்டம்மா தன் துணிமணிகள், கணவருடைய போட்டோ, இரண்டு சாமி படங்கள், ராதாவின் சின்ன வயசு போட்டோ மற்றும் தன் பென்ஷன் ரிக்கார்டு, பேங்க் பாஸ்புக் என்று தேவையானவற்றை ஒரு சிறிய பையில் எடுத்து வைத்துக் கொண்டு தயாராயிருந்தாள், யாருடன் போகப் போகிறோம் என்று தெரியாமலேயே... இரவு ஏழு மணிக்குக் கிளம்பணும் என்று அவர்களுக்குள்ளே பேசிக்கொள்கிறார்களே... என்னிடம் யாரும் எதுவும் சொல்லவில்லையே... ஒரு மாதிரித் தவிப்பாய் உணர்ந்தாள்... மாலை நான்கு மணி இருக்கும். மருமகள்கள் சமையலறையில் காபி தயாரித்துக் கொண்டிருந்தனர்.

ராமு அம்மாவின் பக்கத்தில் வந்து உட்கார்ந்தான். ""அம்மா, நாங்கள் எல்லோரும் இன்று ஊருக்குக் கிளம்புகிறோம்... வீட்டை வாங்கியவரிடம் ஒரு வாரம் டயம் கேட்டிருக்கிறேன். அதனால் நீ பாட்டுக்கு இங்கே இரு. அடுத்த வாரம் வந்து உன்னை அழைத்துப்போய் நல்ல முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுகிறேன். நீ இங்கே தனியா ஃப்ரீயா இருந்தே உனக்குப் பழக்கம். எங்கள் வீடுகளிலெல்லாம் குழந்தைகள் சத்தமும் அமர்க்களமுமாய் இருக்கும்... உனக்குச் சரிப்பட்டு வராது.''

"நான் குழந்தைகளோடு இருக்கணும்னு எவ்வளவு ஆசையாய் காத்துண்டிருக்கேன். இவன் இப்படிச் சொல்கிறானே...' ஏக்கமாய் பிள்ளையையே பார்த்தாள். ராமு அதைக் கவனிக்காதவன்போல் மேலே பேசினான்:

""இங்கே செலவழிக்கும் உன் பென்ஷன் பணத்தை அங்கே கொடுத்துவிட்டால் போதும். நன்கு கவனித்துக் கொள்வார்கள். முடிந்தபோது நாங்களும் வந்து உன்னைப் பார்ப்போம்''.

பட்டம்மா திகைத்துப் போனாள். நான் பெற்ற பிள்ளை என்னிடம் எத்தனை ஜாலக்காய் பேசுகிறான். இந்த வீட்டுக் காவலுக்காகத்தான் என்னை இத்தனை நாட்கள் விட்டு வைத்திருந்தார்களோ... பேசத் துடித்த வார்த்தைகளையும் பொங்கி வந்த கண்ணீரையும் அடக்கிக் கொண்டாள். கேவலம் புழுவைப் பார்ப்பதுபோல மூவரையும் பார்த்தாள். ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. இடத்தைவிட்டு எழுந்திருக்காமல் அசையாமல் உட்கார்ந்திருந்தாள், எல்லோரும் ஊருக்குக் கிளம்பும் வரையிலும்.

அரை மணி நேரம்தான் ஆகியிருக்கும். மறுபடி வாசலில் கார் சத்தம். எதையாவது மறந்து போயிருப்பார்கள். அசிரத்தையாக அப்படியே அமர்ந்திருந்தாள்.

தாளிடாத கதவைத் திறந்துகொண்டு ஓடி வந்தாள் ராதா. கார் ஊருக்குள் நுழைந்ததுமே அவளுக்கு எல்லா விஷயங்களும் தெரிந்துவிட்டன. ""அம்மா, நல்ல வேளை நீங்கள் இருக்கிறீர்களே... நீங்களும் ஊருக்குப் போயிருப்பீர்களோன்னு பயந்து போயிட்டேன்...'' தன்னை வந்து கட்டிக்கொண்ட ராதாவைப் பார்த்த பட்டம்மாவுக்கு, திடீர்னு இவள் எப்படி வந்தாள் என்றுகூட தோன்றாமல் பிரமை பிடித்த நிலையில்...

""ராதா, பாத்தியாம்மா, உங்கண்ணன்கள் என்னை உதறி விட்டுப் போயிட்டான்கள்'' என்று கூறியவள் மனம் உடைந்து குலுங்க குலுங்க அழுதாள். ""அம்மா, அழாதீர்கள் அம்மா, உங்களை அழைத்துப் போகத்தான் வந்திருக்கிறேன். உங்கள் மாப்பிள்ளையும், பேரக் குழந்தைகளும், உங்களைப் பார்க்க ஆவலோடு காத்துண்டிருக்காங்கம்மா'' அம்மாவை அணைத்துக்கொண்டு தேற்றினாள்.

""நிஜமாகவா... என்னை டெல்லிக்குக் கூட்டிண்டு போறியா கண்ணு... ஆமாம்... இத்தனை நாளா இந்த அம்மாவின் ஞாபகமே உனக்கு வரல்லியா?'' தாபம் பொங்கக் கேட்டாள்.

ராதா விவரங்களைச் சொன்னதும், மனசு பதறியது... எப்படி ஒரு நெஞ்சழுத்தம் இந்தப் பிள்ளைகளுக்கு... எரிச்சலும் கோபமும் பொங்கியது பிள்ளைகளின் மீது. என்ன செய்ய முடியும்... மனதில் போட்டு ஆத்திக்க வேண்டியதுதான்.

ராதா, தன்னை அழைத்துப் போகிறாள் என்ற சந்தோஷத்தில் மிதந்தவள், காலையில் சீக்கிரமே எழுந்து புறப்படத் தயாரானாள்.

வீட்டைப் பூட்டி, சாவியைத் தரகர் வீட்டில் கொடுத்துவிட்டு வந்தாள்.

திண்ணையில் உட்கார்ந்து, தயாராய் வைத்திருந்த உள்நாட்டுத் தபால் உறையை எடுத்து எழுதினாள்.

""பாசமற்ற பிள்ளைகளின் அம்மா பாசத்துடன் எழுதுவது,

நாம் பூமியில் விதைகளை ஊன்றிச் செடிகள் வளர வைத்துப் பராமரிப்போம். சிலசமயம் நாம் விதைக்காமலே சில செடிகள், விதைத்தவைகளுடன் கூடவே வளரும். சமயத்தில், நாம் விதைத்த செடிகள் பலன் தராமல் போகும்.

அதேசமயம், நாம் விதைக்காத செடி பூத்துக் குலுங்கி பலன் தரும். நான் கஷ்டப்பட்டு விதைத்த செடிகள் நீங்கள் மூவரும், என்னைப் புறந்தள்ளிவிட்டுப் போய்விட்டீர்கள். நான் விதைக்காத செடிதான், எனக்கு நிழல் தர ஓடோடி வந்திருக்கிறது. நான் அந்த நிழலில் இளைப்பாறப் போகிறேன்.

இப்படிக்கு,

அம்மா வேண்டாம் என்று ஓடிய பிள்ளைகளின் அம்மா.

கடிதத்தைத் தண்ணீரைத் தொட்டு ஒட்டினாள். இரண்டு வீடு தள்ளி இருந்த தபால் பெட்டியில் போட்டாள். காரில் ஏறி அமர்ந்து, ராதாவின் தோளில் சாய்ந்து கொண்டாள். சிலுசிலுவென்று வீசிய காலைக்காற்று உடலை வருட, எதிரில் நிற்கும் நிம்மதியான வாழ்க்கையை நினைத்துப் பரவசமும் பெருகியது பட்டம்மாவுக்கு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com