
ராகவன் அண்ணாவுக்கு எப்போது நாடகப் பைத்தியம் பிடித்தது என்று சரியாக ஞாபகமில்லை. அப்போது நாங்கள் கும்பகோணத்துக்குப் பக்கமிருக்கும் நாச்சியார்கோயிலில் வசித்தோம். நாச்சியார்கோயில் என்றாலே கல்கருடனும், பெருமாள் நைவேத்யமான அப்பம் வடையும், பித்தளைக் குத்துவிளக்கும் நினைவுக்கு வரக்கூடும். ஆனால் அந்த ஊரின் இன்னொரு விசேஷம் பலருக்குத் தெரிந்திராது. நாங்கள் குடியிருந்த தெருவுக்குப் பக்கத்துத் தெருவில்தான் பழம்பெரும் நகைச்சுவை நடிகர் ஏ.கருணாநிதியின் வீடு இருந்தது. பெரிய பெரிய திண்ணைகளுடன் கூடிய பழைய காலத்து வீடு. வீட்டுக்கூடத்தில் ஏ.கருணாநிதி நடித்த படங்களின் ஸ்டில்கள் வரிசையாக சட்டமிட்டு மாட்டப்பட்டிருக்கும். அந்த வீட்டுக் குழந்தைகளோடு விளையாடப் போவோம். அண்ணா அந்தப் புகைப்படங்களின் அழகை ரசித்து அதிலேயே மூழ்கி இருப்பான்.
ராகவன் அண்ணாவின் நடை, உடை பாவனைகள் நாடக பாணியில் இருக்கும். எந்த சினிமாக் காட்சியாக இருந்தாலும் ஒரு தடவை பார்த்தால் போதும். அதை அப்படியே தத்ரூபமாக நடித்துக் காட்டிவிடுவான். ஒருமுறை வீரபாண்டிய கட்டபொம்மன் வசனம் பேசும்போது "நீர்தான் ஜாக்சன்துரை என்பவரோ?' என்று அவன் கத்திய கத்தலில் அப்பா எழுந்து வந்து "ஆமாண்டா ஆமாம்!' என்று அவனை மளிகைக்கடைக்கு விரட்டி விட்டார். செக்கிழுத்த செம்மல் வ.உ.சி, வீர சிவாஜி, கர்ணன் என்று அண்ணன் பேசிய வசனத்தின் நிமித்தம் அப்பாவின் குற்றேவல்களைச் சுமக்கும்படி ஆயிற்று. எங்கள் வீட்டுக்கு எதிரே இருந்த சுவரில்தான் "இப்படம் இன்றே கடைசி' என்ற நோட்டீஸ் ஒட்டுவார்கள். அன்றிரவு எங்கள் வீட்டுத் திண்ணையில் தலையணைகளை போர்த்திப் படுக்க வைத்துவிட்டு சினிமா பார்க்க நழுவி விடுவான்.
அவன் வாழ்க்கையையே தலைகீழாகப் புரட்டிப்போட்ட சம்பவம் ஸ்கூல் டிராமாவில் நடித்ததுதான் என்று சத்தியம் பண்ணிச் சொல்லுவேன். இராமாயணத்திலிருந்து ஓரங்க நாடகம். இவன் வந்து சென்றது பத்து நிமிடம்தான். கூனிவேஷம். அப்ளாஸ் அள்ளிக் கொண்டு போயிற்று. அப்படி ஒரு நடிப்பு.
பள்ளி முழுவதும் அவன் நடிப்பு பற்றியே பேச்சு. அன்று முதல் ராகவன் அண்ணா வேறு ஆளாகிப் போனான். கண்ணாடி முன்னால் வெகுநேரம் நிற்பது, தலையை விதம்விதமாக வாரிக்கொள்வது, பவுடரை அப்பிக் கொள்வது, அப்பாவுக்கு அவன் போக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை.
ஒருநாள் பள்ளிக்கூடத்திலிருந்து ஹெட்மாஸ்டரைப் பார்க்கும்படி தாக்கீது வந்தது. அண்ணாவின் வேஷம் கலைந்துவிட்டது. ஒருவாரமாகப் பள்ளிக்கூடம் வரவில்லை. அந்த வருஷம் பப்ளிக் எக்ஸôம். அப்பாவிடம் ஹெச்.எம். என்ன சொன்னார் என்று தெரியவில்லை.
சாயங்காலம் அப்பா வாசல் திண்ணையில் உட்கார்ந்தார். முகத்தில் நரசிம்மாவதாரக் களை. கையில் பிரம்பு.
""அவன் வர்றபோது வரட்டும். நீங்க வாங்க சாப்பிட'' - அம்மா கூப்பிட்டார்.
அப்பா பேசவில்லை. அண்ணா வரவில்லை.
நான் சாப்பிட்டுவிட்டுப் படுத்தேன். தூக்கத்தில் கனவு வந்தது. கனவில் ராகவன் அண்ணா வந்தான். அண்ணா கிருஷ்ணபரமாத்மா வேஷத்தில் நின்றான். அப்பா அவனை அப்படியே சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தார். அவர் கையிலிருந்த பிரம்பு கிருஷ்ணன் கை புல்லாங்குழலாக மாறி இருந்தது.
காலையில் அப்பா திண்ணையில் தூங்கிப் போயிருந்தார்.
அண்ணா வரவில்லை. அன்று முழுவதும் வரவில்லை. அதற்கு அப்புறமும் வரவில்லை.
அம்மாதான் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்கப் போனார். கூடவே நானும் போனேன்.
""யாரும்மா? பள்ளிக்கூட டிராமாவில் கூனிவேஷம் போட்ட புள்ளதானே? கவலைப்படாதீங்க. கிடைச்சுடுவான். ராமருக்கு சீதை கிடைச்சாப்பலே உங்களுக்கு உங்க பையன் கிடைச்சுடுவான்!'' - நாமம் போட்ட ரைட்டர் நாயுடு சொன்னார்.
நாயுடு சொன்னது பலித்துவிட்டது. சீதை கிடைத்துவிட்டாள். அதாவது நாடகத்தில் சீதையாக ஸ்த்ரீபார்ட் வேஷம் போட ஒரு நடிகன் கிடைத்துவிட்டான். எங்கள் ராகவன்தான் கிடைக்கவில்லை.
ஊர்ஊராகப் போகிற டிராமா கம்பெனியில் அண்ணா சேர்ந்துவிட்டான்.
எங்கள் உறவினர் ஒருவர் மதுரைக்குப் போய்விட்டு வரும்போது ஒரு கசங்கிய சிவப்புக்கலர் நோட்டீஸை அப்பாவுக்குத் தெரியாமல் அம்மா கையில் கொடுத்தார்.
அம்மா அதைப் பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டு அடிக்கடி எடுத்துப் பார்த்து அழுவார்.
அந்த நோட்டீஸை நானும் பார்த்தேன். சாணிப் பேப்பரில் மோசமாக அச்சடித்திருந்த வாசகங்கள். அருச்சுனனாக நடிக்கும் உங்கள் அபிமான எஸ்.ஆர்.கே. ராகவன் என்றிருந்தது.
எஸ்.ஆர்.கிருஷ்ணசாமியின் மூத்த மகன்.
அப்பா மட்டும் அந்த நோட்டீஸைப் பார்த்தால் பிராணனை விட்டு விடுவார். அம்மாவுக்கு அந்த நோட்டீஸ்தான் ராகவன் ஸ்தானத்தில் இருந்தது.
"டேய் மாதவா. நம்ம ராகவன் நடிச்ச நாடகத்தைப் பாக்கணும்டா. அழைச்சிகிட்டுப் போயேன்'.
ராகவனின் நாடகக் கம்பெனி ஒருவிதமான நாடோடி ரகம் என்று தெரிந்தது. குக்கிராமங்கள் பட்டிதொட்டியாகப் பார்த்து நாடகம் போட்டார்கள். தேடிக்கொண்டு போனால் காணாமல் போனார்கள்.
நாடக விளம்பரத் தட்டிகளில் ஒரு பெண் விபரீதமாக உடையணிந்து "நாட்டிய நட்சத்திரம்' என்று பெயர் எழுதியிருக்க, தப்பும் தவறுமான தமிழில் நாடகத்தின் கனல் பறக்கும் வசனங்கள்!
அண்ணாவின் பிரிவு, அம்மாவை உருக்கிவிட்டது.
"ஒழிஞ்சுது சனியன் என்று இரேன்!' என்பார் அப்பா பேப்பரிலிருந்து தலையை நிமிர்த்தாமல்.
""பார்த்துகிட்டே இருங்க. என் பிள்ளை பெரிய சினிமா ஸ்டார் ஆகி கார் பங்களான்னு வாங்கத்தான் போறான்''
"பைத்தியமே' என்பதுபோல் பார்ப்பார் அப்பா.
அம்மா எது செய்தாலும் அதில் ராகவனின் சோகம் ஒட்டிக் கொண்டிருந்தது.
""அம்மா உனக்கு நானில்லையா?'' என்று தேற்றினேன்.
""உனக்கும்தான் முப்பதுக்குமேல் வயசு ஆகப்போறது. கல்யாணமே பண்ணிக்காமல் முரண்டு பிடிக்கறே..'' என்பார் அம்மா.
அண்ணா வீட்டைவிட்டு ஓடிப்போனான். நான் "என்னைவிட்டே' ஓடிக் கொண்டிருக்கிறேன். இதுதான் வித்தியாசம் - ரமணர் மாதிரி. தியானத்திலும் ஞானத்தேடலிலும் என்னைக் கரைத்துக் கொண்டிருந்தேன்.
அப்பாவுக்கு ஏதோ விசித்திரமான காய்ச்சல். எந்த மருந்துக்கும் கட்டுப்படாத காய்ச்சல்.
நாச்சியார் கோயிலை விட்டு தஞ்சாவூர் கருந்தட்டான்குடிக்கு வந்து விட்டோம். குதிரைகட்டித் தெருவில் பெரிய வீடாகப் பார்த்து குடிபெயர்ந்தோம். அப்பாவை தஞ்சாவூர் பெரிய ஆஸ்பத்திரியில் சேர்த்துப் பார்த்துக் கொள்ள இந்த ஏற்பாடு.
அப்பா பாதியாக இளைத்துவிட்டார். ரெட்டை மஸ்தான் தர்காவுக்கு எதிரில் காற்றோட்டமான வார்டு. பால், பழம், ரொட்டி எல்லாம் தாராளமாகக் கொடுத்தும் எதையும் சாப்பிட மாட்டார். டாக்டருக்குத் தெரியாமல் மங்களாம்பிகா ஓட்டலில் என்னைவிட்டு ரவா தோசை வாங்கிச் சாப்பிட்டார்.
ஆஸ்பத்திரியில் இருந்து நடந்தே கருந்தட்டான்குடிக்கு வருவேன். பஜாரில் சிவா இட்லிக்கடைக்கு எதிரே கதிரவன் சிகை அலங்கார நிலையத்திலிருந்து என்னைப் பார்த்து கையாட்டுவார் சிங்காரம். சிவப்பாக இருப்பார். வயதானவர். நடுவகிடு எடுத்து கோடுமாதிரி மீசை வைத்து அசப்பில் எம்.ஆர்.ராதா மாதிரி இருப்பார். அவருக்கு ராகவன் அண்ணா நாடகக் கம்பெனியோடு ஓடிப்போன கதையெல்லாம் சொல்லி இருக்கிறேன். முதல் தடவை முடிவெட்டப்போனபோது நான் சொன்ன கதையைக் கேட்டுவிட்டு கத்திரிக்கோல் காதருகே பேசுவதை நிறுத்தியது.
ஒருநாள் ஆஸ்பத்திரியில் இருந்து கிளம்ப லேட்டாகிவிட்டது. பாலோபா நந்தவனம் அருகே வந்தபோது இருட்டிவிட்டது. காடா விளக்கு வெளிச்சத்தில் பெரிய மீசையும், பைஜாமாவுமாக ஓர் ஆசாமி பீமபுஷ்டி அல்வா விற்றுக்கொண்டு இருந்தான்.
யாரோ என்னைத் தொடுவது மாதிரி இருந்தது. திரும்பினால் அரைகுறை வெளிச்சத்தில் அண்ணா மாதிரி... மாதிரி என்ன அண்ணாவேதான்!
பாகவதர் கிராப். அது பரட்டையாக இருந்தது. அழுக்கு ஜிப்பா. ஆளே மாறிப் போய்விட்டான். பயல் ரொம்ப கெட்டுப்போய் விட்டான்போல. என் முன்னால் பீடிபிடித்தான் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
நகம்கூட வெட்டவில்லை. கை நகங்கள் ஏதோ பிராணியின் நகம்போல நீண்டு வளர்ந்திருந்தது. பின்னாலிருந்து என்னைத் தொட்டபோது யாரோ தோளைப் பிராண்டுவதுபோல இருந்தது.
""நாந்தாண்டா ராகவன்'' என்று கரகரத்த குரலில் அழுவது மாதிரி சொன்னான்.
""ஐயோ, அண்ணா!'' - ஓடிப்போய் கட்டிக்கொண்டேன். கடவுளே, அவன் உடம்பிலிருந்து அப்படி ஒரு துர்க்கந்தம்!
""டேய் தம்பி... போயிட்டேன்டா... தொலைஞ்சு போயிட்டேன்.. நான் பழைய ராகவன் இல்லேடா.. என்னைத் தொடாதே..'' - அழுதான்.
""இப்போ எங்கே அண்ணா நாடகம்?'' என்று கேட்டு வைத்தேன்.
சட்டென்று பிரகாசமாகி ""இங்கேதான்டா சாலியமங்கலத்துல! அவசியம் வாடா! இது தெருக்கூத்து ரக நாடகம்டா!'' என்றான்.
""சரி, வரேன்! நீ ஒரு தடவை வந்து அம்மாவைப் பாத்துடு''
""அதுமட்டும் வேண்டாம்டா... என்னைப் பாத்ததா யார்ட்டயும் குறிப்பா அம்மாகிட்டே சொல்லிடாதே.. சொல்ல மாட்டேன்னு சத்தியம் செஞ்சு கொடு.''
சத்தியம் செய்து கொடுத்தேன்.
திடீரென்று ""யோவ், உன்னை எங்கே எல்லாம் தேடுறது?'' என்ற குரல் கேட்டது.
இருட்டுக்குள் இருந்து ஒரு பெண் தோன்றினாள். ஜிகினா ப்ளவுஸ். தாறுமாறாக கொசுவம் வைத்த ஜரிகை. டாலடிக்கும் புடவை. அழிந்த கண் மை. அதீத உதட்டுச்சாயம்... காலில் கொலுசா? சதங்கையா? என்று சொல்ல முடியாத அணிகலன்.
ஜல்ஜல்லென்று கால் மாற்றி நின்றாள்.
""தம்பி யாரு?''
""என் தம்பிதான்!''
""அய்யே... இதானே வேண்டாம்கறேன்.. இதப்பாத்தா அய்யர் ஊட்டு புள்ளை கணக்கா இருக்குது!''
""இவரும் அய்யர் வீட்டுப் பிள்ளைதான். என்னுடைய அண்ணா..'' என்றேன்.
""நீ சும்மா இரு'' - ராகவன் அதட்டினான்.
""இந்தா உனக்கு வேண்டியதை வாங்கிக்கொண்டு போய்ச்சேரு...'' அவள் கையில் ஏதோ கசங்கிய ரூபாய்த்தாளை திணித்தான். "உனக்கு டீயும் பன்னும்தானே வேணும்.. போய் சாப்பிடு போ!''
அந்தப் பெண் பணத்தை வாங்கிக்கொண்டு என்னை கிறக்கமாக ஒரு பார்வை பார்த்துவிட்டுச் சென்றாள்.
சாலியமங்கலத்துக்குப் போக முடியவில்லை. திடீரென்று அப்பாவை ஆஸ்பத்திரியிலிருந்து டிஸ்சார்ஜ் செய்துவிட்டார்கள். எண்ணெய் தீர்ந்துவிட்டால் விளக்கின் சுடர் சின்னதாகிக் கொண்டே வருமே அப்படி இருந்தது அப்பாவின் நிலைமை.
ஒருநாள் அப்பா எங்கள் எல்லோரையும் தன் கட்டில் அருகே அழைத்தார்.
""குழந்தைகளா! இன்னிக்கு காலம்பர மூணு மணிக்கு எங்க அம்மா வந்துட்டா! இன்னும் இங்கே என்னடா பண்ற? அப்டீங்கறா...
உங்களுக்கெல்லாம் ஒரு உண்மையைச் சொல்லிடறேன்... இந்த நிலம், நீச்சு, வீடு, வண்டி எல்லாம் உங்க அம்மா கொண்டு வந்த சீதனம்...''
""அதுக்கென்ன இப்போ?'' - அம்மா மூக்கை உறிஞ்சும் சத்தம் கேட்டது.
""இல்லே... நான் போனப்புறம் உயில் அது இதுன்னு எழுதாம போயிட்டனேன்னு பேச்சு வரப்படாது... எல்லாம் உங்க அம்மா பேர்ல இருக்கு... அம்புஜம் இங்கே வா...''
அம்மாவின் தலையைத் தொட்டு, ""கவலைப்படாதே. ராகவன் வருவான்'' என்றார்.
ஏமாற்றம். கழுகுகள் அங்குமிங்கும் நடை பழகின. அப்பா போனதும் பறந்து போய்விட்டன.
எனக்குள்ளே இருந்து பட்டினத்தடிகளும் தாயுமானவரும் சிரித்தார்கள்.
அம்மாவின் அந்திமமும் நெருங்கிவிட்டது.
எல்லாமே படுக்கையில்தான். கழுகுகளின் அழுகை சொல்லி மாளாது. அம்மாவின் மூச்சு பெரிய இழுப்பாக வந்துவிட்டது. ஆனாலும் உயிர்ப்பறவை கூண்டை விட்டுப் போவதாக இல்லை.
எனக்குள் ஒரு வேகம். கிளம்பிவிட்டேன்.
"ராகவன் அண்ணாவோடு வருகிறேன்'
எங்கெல்லாமோ சுற்றி காஞ்சிபுரம் அருகே ஒரு ஊரில் கண்டுபிடித்தேன்.
நான் போனபோது நாடகம் ஆரம்பித்துவிட்டது.
டிக்கட்டை வாங்கிக்கொண்டு உள்ளே நுழைந்தேன்.
மேடையில் நடந்த நாடகத்தில் மனம் லயிக்கவில்லை. அண்ணாவை எப்படிச் சந்திப்பது?
திடீரென்று ஒரு காட்சி. மேடையில் பிணம்போல் யாரையோ கிடத்தியிருக்கிறது.
""அம்மா! அம்மா! போய்விட்டாயா அம்மா! இந்தப் பாவியின் முகத்தில் முழிக்க வேண்டாமென்று போய்விட்டாயா தாயே! அம்மா என்னைப் பார்! உன் பிள்ளை வந்திருக்கேன் பாரம்மா! அம்மா பார்க்க மாட்டியா? பார்க்கவே மாட்டாயா?''
தலைவிரி கோலமாக அழுதபடி ஓடி வருவது ராகவன் அண்ணாவேதான். "மடேர், மடேர்' என்று தலையை மேடைமீது மோதிக்கொண்டு கதறுகிறான் அண்ணா. மேடை கிடுகிடாய்க்கிறது.
""அடடா! என்ன தத்ரூபமான நடிப்பு சார்!'' பக்கத்தில் யாரோ சொன்னார்கள்.
அண்ணாவின் கதறல் உச்சத்தைத் தொட்டது!
பல வருஷங்களாக அம்மாவைப் பார்க்காத சோகம் வெடித்துச் சிதறியது. அடிவயிற்றிலிருந்து எழுந்த கேவல் பயங்கரமாக இருந்தது. ஏக்கத்தின் பெருநாதம் அலைகளாய் எழுந்து உள்வாங்கியது.
நான் எழுந்துகொண்டேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.