
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்
என் வயது 46. பதினைந்து நாட்களுக்கு முன்பு என்னுடைய சொந்த கிராமத்திற்குச் சென்றிருந்தபோது அங்குள்ள தண்ணீரைப் பருகியதால் இண்ற்ழ்ர்க்ஷஹஸ்ரீற்ங்ழ் ந்ர்ள்ங்ழ்ண் எனும் கிருமிகள் சிறுநீரில் அதிக அளவில் வெளியேறத் தொடங்கிவிட்டன. ஒவ்வொருமுறையும் சிறுநீர் கழிக்கும்பொழுது கடும் எரிச்சலும் வலியும் ஏற்படுகின்றன. இவை குணமாக ஆயுர்வேத மருந்துகள் உள்ளனவா?
கலைச் செல்வி, சென்னை.
நாம் குடிக்கும் தண்ணீர் சுத்தமற்றதாக இருந்தால், அதிலுள்ள கிருமிகளின் வரவானது சிறுநீரகங்களைப் பாதிக்கக் கூடும். தண்ணீரிலுள்ள நச்சுத்தன்மை மற்றும் கிருமிகளை சிறுநீரகம் வடித்து வெளியேற்றச் செய்யும் முயற்சியில், அவை அனைத்தும் சிறுநீர் வழியே எடுத்துச் செல்லப்படும் நிலையில், வழிநெடுக உட்புறச் சுவர்களில் படிந்து விடாப்பிடியாக பிடித்துக் கொள்ளும்போது, அதுவே கிருமி தொற்றாகவும் நச்சுத் தன்மையாகவும் பாதையைப் பாதித்து, சிறுநீர் கழிக்கும்போது சூடாகவும், வலியுடனும் வெளியேறுகிறது. சிறுநீர் ஏன் சூடாக வெளியேறுகிறது என்பதற்கான காரணத்தை ஆயுர்வேதம் குறிப்பிடுகையில், வேண்டாத பொருட்களின் வரவை எதிர்த்துப் போராடும் தன்மை கொண்ட, பித்தத்தின் குணங்களாகிய ஊடுருவும் தன்மையும், சூடான தன்மையும் அப்பகுதியைத் தாக்கும்போது அங்கு ஏற்படும் சூடே அப்பொருட்களை அழிக்கிறது. அத்துடன் நில்லாமல், அவற்றை வெளியேற்றவும் செய்கிறது. இம்முயற்சியை மனிதர்களால் தாங்க முடியாத நிலை வரும்போது எரிச்சலாலும் வலியாலும் துடித்துப் போகின்றனர். இதில் செய்ய வேண்டிய சிகிச்சை அனைத்தும் கிருமி மற்றும் நச்சுத் தன்மையை அழிப்பதுடன், பித்ததோஷத்தின் சீற்றத்தையும் மட்டுப்படுத்துவதேயாகும்.
உடலுக்குத் தேவையற்ற பிசுபிசுப்பான நீர் மற்றும் தடித்த கொழுப்பான பொருட்களை வெளியேற்றும் முக்கியமான செயலைச் செய்யும் சிறுநீரை, சற்று அளவில் கூட்டினால், வழி நெடுக உள்ள அழுக்குகளை அடித்துச் செல்லும். வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் நிலையில், நதியில் மட்டை, இறந்து போன மிருகங்களின் உடல், சிலைகள் போன்றவை அடித்துச் செல்லப்படுவதை நாம் காண்பதை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம். அந்த வகையில் தர்ப்பைப்புல் வேர், நன்னாரி வேர், கரும்புவேர், வெள்ளரி விதை, பூசணிக்காய் விதை, பீர்க்கங்காய் விதை, சுரைக்காய் விதை, புடலங்காய் விதை, வெண்டைக்காய் வித்து மற்றும் நெருஞ்சில் விதை ஆகியவற்றை வகைக்கு 5 கிராம் வீதமெடுத்து அவை நன்கு மூழ்குமளவு மண் பானைத் தண்ணீரில் இரவு முழுதும் ஊற வைத்து, மறுநாள் காலை வடிகட்டி, வெறும் வயிற்றில் சுமார் 21 நாட்கள் வரை சாப்பிடலாம். இதனால் சிறுநீரகங்களில் ஏற்பட்டுள்ள கிருமித்தொற்று மற்றும் நச்சுத்தன்மை நன்றாக நீங்கக் கூடிய வாய்ப்பிருக்கிறது.
உணவில் சிறுநீர் பெருக்கிகளாகிய வாழைப்பூ, வாழைத்தண்டு, சுண்டைக்காய், சிறுகீரை மற்றும் நீர்க்காய்கள் ஆகியவற்றை அதிக அளவில் சேர்க்கவும். தயிருக்கு மாற்றாக நன்கு கடைந்து வெண்ணெய் நீக்கிய மோர் சாப்பிடலாம். அதிக அளவில் உடல் சூட்டை ஏற்படுத்தும் காரம், புளி, உப்பு மற்றும் புலால் உணவு வகைகளைத் தவிர்க்கவும். கொழுப்பை அதிகப்படுத்தும் பன் பட்டர் ஜாம், பால்பொருட்கள், ப்ரட் வகையறாக்கள், சீஸ் போன்றவற்றைத் தவிர்க்கவும். எளிய உடற்பயிற்சியான நடைப்பயிற்சியை சுமார் 30 நிமிடங்கள் முதல் 40 நிமிடங்கள் வரை செய்வதால் உடலுக்குத் தேவையற்ற கொழுப்பை கரைத்து வெளியேற்றும் சிறுநீரகச் செயல்பாடானது நன்றாக மேம்படும். ஆயுர்வேத மருந்துகளாகிய பலா புனர்நவாதி கஷாயம், ப்ருஹத்யாதி கஷாயம், வீரதராதி கஷாயம், சுகுமாரம் கஷாயம், வஸ்தி ஆமயாந்தகம் க்ருதம், தசமூல ஹரீதகி லேஹ்யம், சந்தனாஸவம், உசீராஸவம், ப்ரவால பஸ்மம், சிலாஜது பற்பம் போன்ற தரமான எண்ணற்ற மருந்துகள் உள்ளன. மருத்துவரின் ஆலோசனைப்படி இவற்றில் ஏதேனும் இரண்டு, மூன்று மருந்துகளைத் தேர்ந்தெடுத்து கவனத்துடன் நீங்கள் சாப்பிட்டு வந்தால், இந்த பிரச்சனைக்கான தீர்வு விரைவில் ஏற்படும். ஒரே இடத்தில் அதிக நேரம் அமர்ந்திருந்தாலும் கிருமிகளின் வளர்ச்சியானது நொதநொதப்புடன் கூடிய பாதைகளில் அதிகரிக்கக் கூடுமென்பதால் நீங்கள் சோம்பலான வாழ்க்கைமுறையை கைக்கொள்ளாமல் சுறுசுறுப்புடன் இருப்பதற்கும் பழகிக் கொள்ளவும்.
(தொடரும்)
பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
நசரத்பேட்டை } 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.