மூட்டுச் சவ்வு பிய்ந்து போனால்...!

மனித உடலில் 107 மர்மங்கள் உள்ளதாக ஆயுர்வேதம் கூறுகிறது. இந்த மர்ம ஸ்தானங்களில் அடியோ, கிழிசலோ ஏற்பட்டால் அதற்குச் சிகிச்சை
மூட்டுச் சவ்வு பிய்ந்து போனால்...!
Updated on
2 min read

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்
எனது வயது 59 ஆகின்றது. நான் ஒரு வருடத்திற்கு முன்பு மரத்தில் இருந்து கீழே விழுந்ததால், எனது வலது கால் மூட்டில் Anterior Cruciate Ligament(ACL) என்ற சவ்வானது முற்றிலும் இரண்டாகப் பிய்ந்து விட்டது. இதனால் எனது வலது மூட்டில் வலி மற்றும் வீக்கம் கடந்த ஒரு வருடகாலமாக இருந்து வருகின்றது. சற்று நேரம் ஒரே இடத்தில் நின்றால் கால் மூட்டு மரத்துப் போய் விடுகின்றது. சிறிது தாங்கி நடப்பதால் இடது கால் மூட்டில் வலி ஏற்படுகின்றது. இந்தச் சவ்வானது ஒன்றாக இணைந்து நல்ல நிலையில் வர வாய்ப்பு இருக்கின்றதா? இதற்கு ஆயுர்வேத மருந்துகளைத் தயவு செய்து தெரிவிக்கும்படி வேண்டிக் கொள்கிறேன்.
 ட.ஜீவானந்தம், சிதம்பரம்.                      
மனித உடலில் 107 மர்மங்கள் உள்ளதாக ஆயுர்வேதம் கூறுகிறது. இந்த மர்ம ஸ்தானங்களில் அடியோ, கிழிசலோ ஏற்பட்டால் அதற்குச் சிகிச்சை செய்வது மிகக் கடினமாகும். அந்த வகையில், தங்களுக்கு ஏற்பட்டுள்ள மூட்டினுள்ளே தொடை எலும்பையும், கால் எலும்பையும் இணைத்து வலுப்படுத்த கூடிய, அஇக எனும் தசைநார் கிழிந்துவிட்ட நிலையில் சிகிச்சை செய்வது பெரும் பிரயத்தனமான விஷயமாகும். வைகல்யகரம் அதாவது மனிதரை முடக்கிவிடும் 44 வகை மர்ம ஸ்தானங்களில், கால் மூட்டுப் பகுதியையும் ஸுஸ்ருதர் எனும் ஆயுர்வேத அறுவை மருத்துவசிகிச்சை நிபுணர் தான் இயற்றிய ஸுஸ்ருதசம்ஹிதை எனும் நூலில் சேர்த்திருக்கிறார்.

கிழிந்து போன நிலையிலுள்ள தசைநார்களைக் கூட்டிச் சேர்த்து வலுவடையச் செய்ய முடியுமா என்ற கேள்விக்கு விடை: அது சற்று கடினமான காரியமேயாகும். எது தசை நாரை வலுப்படுத்தியது? கிழிந்த தசைநாரினுள்ளே எது சஞ்சரித்து அதன் வலுவைக் குறைத்தது? வலுவற்ற நிலையில்  ஆதிக்கம் செலுத்திய குணங்கள், வலுவுற்ற நிலையில் எது ஆதிக்கம் செலுத்துகிறது? என்ற கேள்விகளுக்கான விடை தெரிந்தால், மறுபடியும் வலுவான நிலைக்கு அதைத் திருப்பலாம்.

நாம் உண்ணும் உணவில் பெரும்பகுதி நிலம் மற்றும் நீரின் ஆதிக்கத்தோடு அமையும் போது அவற்றிலுள்ள குணம் மற்றும் செயல்களின் வாயிலாக, தசைநார்களை செரிமானத்தின் சேர்க்கை விசேஷத்தால் சென்றடைந்து வலுவூட்டுகின்றன. இதற்கான ஆதாரத்தை அஷ்டாங்க ஹிருதயம் எனும் ஆயுர்வேத நூல் குறிப்பிடுகையில் - நிலத்தை ஆதிக்கபூதமாகக் கொண்ட பொருட்கள் - கனமானதாகவும், நிரப்புவதாகவும், ஸ்திரத் தன்மையுடையதாகவும், பிணைப்பதாகவும், வளர்ச்சியை ஏற்படுத்துவதாகவும் இருக்கும். நீரின் ஆதிக்கபூதங்களாகிய பொருட்கள்- நீர்த்ததாகவும், குளிர்ச்சியானதாகவும், கனமானதாகவும், வழுவழுப்பைத் தருவதாகவும் இருக்கும், இவற்றிற்கு நேர்எதிரிடையான நெருப்பும், வாயுவும் ஆகாயமும் கொண்ட பொருட்கள் தம் ஆதிக்கத்தின் விளைவாக, தசைநார்களை வலுவிழக்கச் செய்துவிடும்.

அதனால், மேற்குறிப்பிட்ட காரிய-காரண சித்தாந்தத்தை வைத்துப் பார்க்கும் போது தங்களுக்கு நிலம் - நீர், ACL தசைநாரிலிருந்து விடுபட்டுவிட்டதாகவும், மற்றவை வந்து அங்கு குடிகொண்டுவிட்டதையும் ஊகித்தறியலாம். அதனால், நிலம்-நீரை மறுபடியும் தசைநாரினுள் புகுத்துவதற்கான வழிகளை நாம் ஆராய வேண்டும். முட்டியில் சுரந்துள்ள வீக்கம், அதற்குத் தடையாக நிற்கும் என்பதால், கொட்டஞ்சுக்காதி எனும் சூரண மருந்தைப் புளித்த மோருடன் கலந்து, சூடாக்கி வீக்கத்தின் மீது சுமார் 1 மணி நேரமாவது காலை, இரவு உணவிற்கு முன் பற்று இடுதல் நலம். சுமார் 2-3 வாரம் வரை இதைத் தொடர்ந்து செய்தால், வீக்கம் குறைய வாய்ப்பிருக்கிறது. இதன் மூலம், தசை நாரை உட்புறப்பகுதியில் வலுப்படுத்தக் கூடிய சிகிச்சைகளைத்  தொடங்கலாம். அந்த வகையில், ஆயுர்வேத மூலிகைத் தைலங்களாகிய பிண்ட தைலத்தையும், முறிவெண்ணெய்யையும் ஒன்றாகக் கலந்து, இரும்புக்கரண்டியில் சூடாக்கி, பஞ்சில் முக்கி எடுத்து, முட்டியின் மீது போட்டு சுமார் 1 மணி நேரம் ஊறவிடலாம். பற்று இடுவதை நிறுத்தி, இந்தத் தைல மருந்தைக் காலை, மாலை உணவிற்கு முன் முட்டியில் வைத்துக் கட்டிக் கொள்ளலாம்.

கந்த தைலம் எனும் காப்ஸ்யூல் மருந்தைக் காலை, மாலை வெறும் வயிற்றில் இளஞ்சூடான பாலுடன் சுமார் 21 நாட்கள் முதல் 48 நாட்கள் வரை சாப்பிடலாம். முட்டியை வலுப்படுத்தும். சங்கபற்பம், பிரவாளபற்பம், அப்ரகபஸ்மம், லோஹபஸ்மம் போன்ற மருந்துகளை மருத்துவர் ஆலோசனைப்படி சாப்பிடலாம். நவரக்கிழி எனும் ஆயுர்வேத சிகிச்சையையும் இதுபோன்ற தசைநார் கிழிசல் உபாதைக்குச் செய்து கொள்ளலாம். நிலம்-நீர் ஆகியவற்றை மறுபடியும் சம்பாதித்துக் கொள்ளும் ஒருசில வழிகளில் இவை சிறந்த வழிகளாகும்.
(தொடரும்)
பேராசிரியர்  எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
நசரத்பேட்டை } 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com