
பஞ்சகர்மா என்ற ஐந்துவித ஆயுர்வேத சிகிச்சைமுறைகளில் மூக்கு துவாரங்கள் மூலமாக ஆயுர்வேத மூலிகைத் தைலங்களை உறிஞ்சச் செய்யும் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் எண்ணெய் மருந்துகள் எவை என்பதையும், காது கேட்பது மந்தமாகிவிடும் நிலையில் நஸ்யம் என்ற சிகிச்சை பயன்படுமா என்பதையும், அதன் நன்மைகளையும் தெளிவுபடுத்துங்கள்.
எஸ்.பாலாம்மாள், விருகம்பாக்கம், சென்னை.
மூக்கு துவாரத்தின் வழியாக செலுத்தும் மருந்துக்கு நஸ்யம் எனப்பெயர். அதற்கு நாவனம், நஸ்யகர்ம என்ற மற்ற இரண்டு பெயர்களும் உண்டு. மூக்கு துவாரம் தான் தலைக்குச் செல்லும் வழி. அங்கு செலுத்தப்படும் மருந்து தலையின் நடுப்பகுதியில் உள்ள சிருங்காடகம் எனும் இடத்தை அடைந்து அங்கு பரவி தலை, கண்கள், காதுகள், தொண்டை போன்ற இடங்களில் உள்ள நரம்பு துவாரங்களில் நுழைந்து கழுத்துக்கு மேல் உள்ள உறுப்புக்களில் தோன்றிய எல்லாவகை நோய்களையும் அங்கிருந்து விரைவில் வெளியேற்றி விடுகிறது. கார்பாஸôஸ்த்யாதி என்ற மூலிகைத் தைலம் பொதுவாக பஞ்சகர்மா எனும் சிகிச்சைமுறையில் மூக்கில் விடுவதற்காக அதிகம் பயன்படுத்தக்கூடிய ஒரு தைலமாகும். இதற்கு அடுத்ததாக அனு தைலம் எனும் ஆயுர்வேத மூலிகைத் தைலமும் பயன்படுத்தப்படுகிறது. தலைப்பகுதியில் வெறும் வாயுவினுடைய ஆதிக்கத்தினால் ஏற்படக்கூடிய நரம்பு உபாதைகளில் கார்பாஸôஸ்த்யாதி தைலம் பெரிதும் பயன்படும். கபம் அதிக அளவில் தலையில் சேர்ந்து அதனால் ஏற்படக்கூடிய நீர்க்கோர்வை, தலைபாரம், தலையிடி, மூக்கடைப்பு போன்ற உபாதைகளுக்கு அனுதைலம் ஒரு சிறந்த நிவாரணியாகப் பயன்படுத்தப்படுகிறது. க்ஷீரபலா எனும் ஒரு தைல மருந்து இருக்கிறது. பார்க்கின்ஸôனிஸம் எனப்படும் உடல் நடுக்க உபாதை, கழுத்து எலும்பு தேய்மானம், காதினுடைய கேட்கும் திறன் குறையும் தறுவாயில் இந்த தைல மருந்து பயன்படுத்தப்படுகிறது. ஆனால் வெறும் க்ஷீரபலா தைலம் தலைக்கு மட்டுமே பயன்படுத்தக்கூடியது. மூக்கில் பொதுவாக விடப்படுவதில்லை. க்ஷீரபலா 101 எனும் மூலிகை நெய் மருந்தை உருக்கி மூக்கினுள் நோயாளியினுடைய உடல் தன்மை மற்றும் அவருக்கு ஏற்பட்டுள்ள உபாதைக்குத் தக்கவாறு விடக்கூடிய சொட்டுகளைத் தீர்மானித்துப் பயன்படுத்துவதினால் நீங்கள் குறிப்பிடும் காதின் கேட்கும் திறன் குறைபாடானது மாறுவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.
தினப்படி மேற்குறிப்பிட்ட தைல மருந்துகளை நம் முன்னோர் தங்களுக்கு எது பொருந்துமோ, அதைப் பயன்படுத்தி தெளிவான அழகான முகம், விரிந்த மார்பு, வலுவான தோள்கள், நீண்ட கழுத்து, வாயில் நறுமணம், குரலில் இனிமை, புலன்களில் தூய்மை, சுருக்கமற்ற முகம், நரைக்காத முடி முதலியவற்றைப் பெற்றனர். முகத்தில் ஏற்படும் மங்கு எனும் உபாதையை இதன் மூலம் தவிர்த்தனர்.
எண்ணெய்யை மூக்கில் செலுத்தி அதன் பிறகு தண்ணீர்விட்டு வாய் கொப்பளிப்பதால் உதடு வெடித்துக் கடினமாதல், முகவறட்சி, பல் வலி, குரல் தடைபடுதல் போன்றவற்றையும் நம்மால் அகற்ற இயலும். வெறும் தண்ணீரைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, கருங்காலிக்கட்டை, நால்பாமரப்பட்டை எனப்படும் ஆலம்பட்டை, அரசம்பட்டை, அத்திப்பட்டை, இத்திப்பட்டை மற்றும் வேலம்பட்டை ஆகியவற்றைக் கொண்டு கஷாயம் தயாரித்து வாய் கொப்பளித்தால் வாயில் அருவருப்பு, ருசியின்மை, அழுக்கு, துர்நாற்றம், நீர்வடிதல் இவையெல்லாம் நீங்கும். வெதுவெதுப்பான தண்ணீரினால் வாய் கொப்பளித்தால் வாய் லேசாகி விடும். பஞ்சகர்மா எனும் சிகிச்சைமுறையில் மூக்கில் மருந்துவிடுதல் வாய்க்கொப்பளித்தல் என்ற சிறப்பான சிகிச்சைகளுக்குப் பிறகு மூலிகை மருந்துகளை புகைபோட்டு பிடிப்பதால் தலைவலி, கண்வலி, காதுவலி, காதுகேளாமை, கபத்தினால் ஏற்படும் கண்நோய், தலைபளு, ஒற்றைத் தலைவலி, நாட்பட்ட ஜலதோஷம், இருமல், மூச்சிரைப்பு, வாயில் சுவை அறியாமை, வாயிலிருந்து உமிழ்நீர் பெருகுதல், குரல் மாற்றம், வாயிலும் மூக்கிலும் துர்நாற்றம், விக்கல், தொண்டை நோய், பல்வலி, பற்களில் வலுவின்மை, சுவையின்மை, தாடை கழுத்தின் பின்பக்கம் இவற்றில் பிடிப்பு, கிருமிநோய், அரிப்பு, தோல்நோய், முடியில் ஏற்படும் கோளாறுகள், தும்மல், சோம்பேறித்தனம், அதிகதூக்கம், தூங்கும் நேரத்தில் மூச்சுத்திணறல், கழுத்துக்கு மேல் உள்ள உறுப்புகளில் வாதம் கபம் இவற்றால் ஏற்படும் பிணிகளைத் தவிர்ப்பதற்கும், புகைபிடித்தல் எனும் முறை பயன்படுத்தப்படுகிறது.
மேற்குறிப்பிட்ட சிகிச்சை முறைகள் அனைத்தும் வெகு சிறப்பாகப் பயன்படுத்தப்படுமேயானால், கழுத்திற்கு மேற்பட்ட தலையைச் சார்ந்த பலவித உபாதைகளும் நீங்குவதற்கான சிறப்பான ஆயுர்வேத சிகிச்சை என்று குறிப்பிடலாம்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.