ஒன் ஸ் மோர்

ஒன் ஸ் மோர்

ஊத்துமலை மன்னர் இருதாலய மருதப்ப தேவர் தமிழ் மீதும் தமிழ்ப் புலவர்கள் மீதும் பெரும் மரியாதையும் மதிப்பும் வைத்திருப்பவர். அதுவும் காவடிச் சிந்து பாடிய செந்தமிழ்க் கவிஞர் அண்ணாமலை ரெட்டியார் மீது மிகவும் அன்பும் பாசமும் கொண்டவர். அவரது அன்பில் ரெட்டியாரே திணறிப் போனார். ஒருசமயம் அண்ணாமலை ரெட்டியார் உடல் நலம் குன்றித் தமது ஊராகிய சென்னிகுளத்தில் வீட்டில் படுத்த படுக்கையாய் இருந்தார். ரெட்டியார் வாடி வதங்கிப் படுக்கையில் சுருண்டு கிடக்கும் செய்தி மன்னருக்குக் கிடைத்தது. கவிஞரைப் பார்க்கச் சென்னிகுளம் சென்றார். மன்னரைக் கண்டதும் கவிஞரின் முகத்தில் புன்னகை மின்னலாய் மின்னியது.

""வாடா மருதப்பா! வாடி விட்டேன் பார்த்தாயா?'' என்றார் கவிஞர். உடன் வந்தவர்கள் மன்னரை "வாடா' என்று மரியாதை இல்லாமல் கவிஞர் அழைக்கிறாரே என்று வருந்தினர்.

தமிழ்ப் புலமைமிக்க மன்னரோ புன்னகையுடன், ""நான் வாடாமல் இருப்பதால்தானே வாடி இருக்கும் உன் வாட்டம் தீர்க்க ஓட்டம் பிடித்து வந்திருக்கிறேன்'' என நயம்பட சொன்னார். சாகும்போது மன்னரின் அந்த நயம்மிகு தமிழைக் கேட்டவுடன் கவிஞரின் கைகள் தாமாகவே குவிந்தன. கண்கள் மலர்ந்து பனித்தன.

ஒருநாள் ஊத்துமலை மன்னரும் காவடிச் சிந்து புகழ் அண்ணாமலை ரெட்டியாரும் இன்னும் சிலரும் ஒரு காட்டு வழியே நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். மன்னரும் உடன்வந்தவர்களும் முன்னால் நடந்தனர். அண்ணாமலை ரெட்டியார் சற்றுப் பிந்தி மெதுவாக நடந்து வந்தார்.

அதைக் கண்ட மன்னர், ""புலவரே... என்ன பிந்தி விட்டீர்கள்? என்னோடு வேகமாக நடந்து வாருங்கள்'' என்றார். அதற்கு அண்ணாமலை ரெட்டியார் சிரித்துக் கொண்டே, ""முட்டாளோடு எப்படி வேகமாக நடந்து வர முடியும்?'' என்றார்.

மற்றவர்கள் மன்னரை இவர் முட்டாள் என்று சொல்கின்றாரே என முகம் சுளித்தனர். மன்னர் முகத்திலோ புன்னகை. அதைக் கண்ட மற்றவர்கள் முட்டாள் எனப் புலவர் சொன்னதைச் சட்டெனக் கண்டிக்காமல் மன்னர் புன்னகை புரிகிறாரே எனக் குழம்பினார். அவர்களுக்கு புலவர் இப்படி விளக்கினார்:

""முட்டாள் என்பதை முள் + தாள் எனப் பிரிக்க வேண்டும். தாள் என்றால் காலடி (பாதம்) எனப் பொருள்படும். அதாவது முள் தைத்த காலடியோடு எப்படி மன்னரோடு வேகமாக நடந்து வர முடியும் என்றுதான் சொன்னேன். மன்னரை முட்டாள் என நான் குறிப்பிடவில்லை. அதன் பொருளை மன்னர் புரிந்து கொண்டார். அதனால்தான் புன்னகைத்தார். உங்களுக்குப் புரியவில்லை. அதனால்தான் மன்னரைத் திட்டுவதாய் புரிந்து கொண்டீர்கள்''. உடன் வந்தவர்கள் புலவரின் சொல்வன்மையையும் மன்னரின் செந்தமிழ்ப் புலமை வன்மையையும் கண்டு வியந்து பாராட்டினர்.

மதுரகவியார் தம் நண்பர் பதுமனாருடன் காட்டு வழியே போய்க் கொண்டிருந்தார். அப்போது கண்ணுக்கு எட்டிய தொலைவில் ஓர் ஆலமரம் தென்பட்டது.

மதுரகவியார் தன் நண்பரிடம் ""அந்த ஆலமரம் வியப்புக்குரிய ஆலமரம். அதில் மாதுளை இருக்கிறது'' எனச் சுட்டிக்காட்டி கூறினார். பதுமனாருக்கு வியப்பு மேலிட்டது. ""என்ன... ஆலமரத்தில் மாதுளையா?'' என வியப்போடு வினவினார். மரத்தின் அருகில் வந்ததும் அம்மரத்தின் கிளைகளை எல்லாம் உற்று உற்றுப் பார்த்தார் பதுமனார். அதில் ஆலம் பழங்கள் மட்டுமே இருந்தன. மாதுளை எங்கும் தென்படவில்லை.

மதுரகவியார், ""பதுமனாரே... கிளைகளைப் பார்க்காதீர். அடிமரத்தைப் பாருங்கள். அதில்தான் மாதுளை உள்ளது'' என்றார்.

பதுமனார் அடிமரத்தைப் பார்த்தார். அதில் ஒரு மாதுளை (பெரிய துளை) ஒன்று இருந்தது! அப்போதுதான் அவருக்கு மதுரகவியாருடைய சிலேடை புரிந்து அவரின் சொல் விளையாட்டை நினைத்து மகிழ்ந்து சிரித்தார்!

ஒருமுறை நாகையில் கிருபானந்த வாரியார் ஸ்வாமிகளின் இலக்கியப் பேருரை நிகழ்ந்தது. அதில் சைவ சமயத்தின் சிறப்புகள், திருநீறு இடுவாரின் பெருமைகள் பற்றிப் பேசிக்கொண்டே வந்தார். திடீரென்று, ""திருநீறு இட்டார் தாழ்ந்தார், திருநீறு இடாதார் வாழ்ந்தார்'' எனக் குறிப்பிட்டார்! கேட்டவர்கள் திகைத்தனர். என்ன, சுவாமிகள் இப்படி மாறுபடப் பேசுகின்றாரே என்று திடுக்கிட்டனர். சபையோரின் இந்தத் திடுக்கிடலைச் சற்று நேரம் ரசித்த சுவாமிகள், பின்பு புன்னகையோடு அதற்கு விளக்கம் சொன்னார்.

திருநீறு இட்டு ஆர் தாழ்ந்தார்?

திருநீறு இடாது ஆர் வாழ்ந்தார்?

என அத்தொடர்களைப் பிரித்துப் பொருள் சொன்னதும் எழுந்த கரவொலி விண்ணைப் பிளந்தது!

"திருக்குறள் விருந்தும், நகைச்சுவை விருந்தும்' என்ற நூலில் வெ.அரங்கராசன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com