சிவகுமார் பற்றி நடிகைகள் !

நானும் அவரும் நடித்த படம் கந்தன் கருணை. எங்கள் இருவரையும் அழைத்துப் போக கம்பெனி வண்டி வந்தது.
சிவகுமார் பற்றி நடிகைகள் !

கே.ஆர். விஜயா
நானும் அவரும் நடித்த படம் கந்தன் கருணை. எங்கள் இருவரையும் அழைத்துப் போக கம்பெனி வண்டி வந்தது. முதலில் அவரை ஏற்றிக் கொண்டு என் வீட்டிற்கு வந்தது. அப்பொழுது அவர் என் வீட்டிற்குள் வர, நான் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தேன். நான் மறந்த இந்த விஷயத்தை, இன்றும் அவர் இதை நன்றாக நினைவு வைத்துக் கொண்டு சொல்வார். அந்த நினைவாற்றல் தான் அவரை இன்று மேடையில் இரண்டு மணிநேரத்திற்கு மேல் கம்பராமாயணத்தை மனப்பாடமாக சொல்ல வைக்கிறது. அவருடன் நான் நிறைய படங்களில் நடித்துள்ளேன். கந்தன் கருணையில் முருகனாக நடித்தவர், பின்னால் எனக்கு தம்பியாக, மகனாக என்று பல வேடங்களில் நடித்துள்ளார்.அவர் செட்டில் இருந்தால் அவர் இருப்பது யாருக்கும் தெரியாத அளவிற்கு அவர் உண்டு அவர் வேலை உண்டு என்று இருப்பார்.

செளகார் ஜானகி
நானும் அவரும் நடித்த பல படங்களில் மோட்டார் சுந்தரம் பிள்ளை முதன்மையானது. அவர் அன்று பால் மட்டுமே அருந்துவார். நாங்கள் எல்லாம் அவரை "பால் பேபி' என்று கூப்பிடுவோம். பால் போலவே வெள்ளை உள்ளத்துக்கு சொந்தக்காரர். அன்றே அவருக்கு இலக்கியம், இலக்கணம் மேல் பற்று அதிகம். நிறையப் படிப்பார். ஒரு சமயம் நாங்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது எனது 14 வது வயதில் சென்னை ஹிந்தி பிரச்சார சபாவில், 1945-46 என்று நினைக்கிறேன், காந்திஜி வருகையை ஒட்டி நான் எங்கள் பள்ளியின் சார்பாக அந்த கூட்டத்திற்கு வாலண்டேயராக சென்றிருந்ததைச் சொல்லி, காந்திஜியையும் பார்த்தேன் என்று கூறினேன்.அடுத்த நாள் படப் பிடிப்பிற்கு வந்தபோது என் கையில் தான் வரைந்த காந்திஜி படத்தை அளித்து எனக்கு இன்ப அதிர்ச்சி அளித்தார். இன்றும் அது என்னிடம் பத்திரமாக இருக்கிறது.

ஜெயசித்ரா
என் முதல் ஹீரோ சிவகுமார் சார்தான். பள்ளி இறுதியாண்டு முடிவதற்குள் நான் சினிமாவுக்கு வந்து விட்டேன். முதல் படம் என்பதால் நிறைய பயம் இருந்தது. "பொண்ணுக்கு தங்க மனசு' எனக்கு முதல் படம். அந்தப் படப்பிடிப்பு நாள்கள் மறக்க முடியாதவை. நாங்கள் நடித்த முதல் படமே பம்பர் ஹிட். ரசிகர்கள் வட்டத்தில் நாங்கள் சிறந்த ஜோடியாக பார்க்கப்பட்டோம். அதன்பின், "சொல்லத்தான் நினைக்கிறேன்', "தேன் சிந்துதே வானம்' என தொடர்ச்சியாக படங்களில் நடித்தோம். அனைத்துப் படங்களுமே ஹிட். ஏ.பீம்சிங் இயக்கத்தில் "பாத பூஜை' படத்தில் நடித்த போது, பக்கம் பக்கமாக வசனங்கள் பேச வேண்டிய இடத்தில் எனக்கு பெரும் உதவியாக இருந்தார். 75 வயது என்பது அவரைப் பொருத்தவரை எண்ணிக்கைதான். அவர் என்றைக்கும் மார்க்கண்டேயர்.

வெண்ணிறஆடை நிர்மலா
சிவகுமார் சார், பந்தா இல்லாத மனிதர், பார்ப்பதற்கு மட்டும் எளிமையான தோற்றத்தில் இருப்பவர் இல்லை. பழகுவதிலும் அவர் எளிமையானவர்தான். அவர் ஒரு குழந்தைமாதிரி. எல்லாரிடமும் ரொம்ப பிரண்ட்லியா பழகுவார். அவருடன் இணைந்து கன்னிப்பெண், பாபு இன்னும் நிறைய படங்களில் நடித்திருக்கிறேன்.
ஷுட்டிங்கின் போது கிடைக்கும் ஓய்வு நேரத்தில் தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருப்பார். சில நேரங்களில், அவர் ஓவியக் கல்லூரியில் படித்தவர் என்பதால், காமெடியான கார்ட்டூன்ஸ் பொம்மைகளை எல்லாம் போட்டு காண்பிப்பார். அவருடன் நடிக்கும்போது எந்தக் குறுக்கீடும், பிரச்னையும் இருக்காது. நல்ல பண்பாளர்.

சுஹாசினி
நானும் அவரும் இரண்டு படங்களில்தான் நடித்துள்ளோம். சக நடிகர் என்ற முறையில் அவர் மிகவும் கடுமையாக உழைப்பவர்.எனக்கு நடனமும், பாட்டும் ஓரளவிற்கு தெரியும். அவருக்கும் அவை இரண்டும் தெரிந்தாலும், தான் சரியாக படத்தில் பண்ணவேண்டும் என்று விரும்புவார். "சிந்து பைரவி' படத்திற்காக ஒரு சரணத்தில் சுரங்கள் அதிகம் உள்ள நிலையில், அவர் அதை மனப் பாடம் செய்ய ஆரம்பித்தார். நான் நமக்குத்தான் சுரங்கள் தெரியுமே என்ற நினைப்பில் இருந்தேன். அவர் மனப்பாடம் செய்வதைப் பார்த்த பின், எனக்கே பயம் வந்து, நானும் சுரங்களைப் படிக்க ஆரம்பித்தேன். அந்த அளவிற்கு உழைப்பாளி. இவை எல்லாம் விட என் தந்தைக்கு மிகவும் நெருக்கமானவர். "வாடா போடா' நண்பர்கள். நான் வீட்டிலிருக்கும் போது ஒருநாள் அவர் என் தந்தையாருடன் உட்கார்ந்திருந்தார். நான் அவரை வரவேற்று விட்டு சமைக்க சென்றேன். என்ன சமைக்கிறே, என்றார். பாஸ்தா என்றேன். அது என்ன பாஸ்தாவோ, பீட்சாவோ என்றார். என்மகனுக்கு பிடிக்கும், உங்களுக்கும் தரட்டுமா என்று கேட்க, சரி தா என்றார். கொஞ்சம் கொடுத்தேன். அந்த அளவிற்கு எங்கள் குடும்பத்துடன் நெருக்கமானவர். அவரது மகன்கள் சூர்யா, கார்த்தி இருவரும் எங்கள் மெட்ராஸ் டாக்கீஸ் மூலம் திரையுலகத்திற்கு வந்தவர்கள் என்று சொல்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

ராதிகா
நானும் சிவகுமாரும் பல படங்களில் நடித்திருக்கிறோம் என்றாலும், எங்கள் தொலைக்காட்சி தொடரில் அவர் நடிக்கும்போது தான் நாங்கள் தினமும் சந்திக்க முடிந்தது. அவரிடம் இருந்து நான் நிறையக் கற்றுக் கொண்டேன். ஒருமுறை நானும் அவரும் இணைந்து நடிக்க வேண்டிய படம். எனக்கு தேதிகள் ஒதுக்க முடியவில்லை. படப்பிடிப்பு இரவுதான் முடியும் என்ற நிலை. இதை நான் முன்பே சொல்லி விட்டேன். நான் காலை மாலை படப் பிடிப்பு முடிந்த பின்னர் இவரது படப் பிடிப்பிற்கு ரொம்பவும் அசதியாகச் சென்றேன். என்னை பார்த்த இவர் நிலைமையை உணர்ந்து, தான் தனியாக நடிக்க வேண்டிய காட்சிகளை எல்லாம் எடுக்க சொல்லிவிட்டு, என்னை காரிலேயே படுத்துக்கொள்ள சொன்னார். இன்று போல் அன்று கேரவன் எல்லாம் கிடையாது. நானும் அசதியில் படுத்தவுடன் தூங்கி விட்டேன். ஒரு காட்சி நடித்து விட்டு வந்து பார்த்தால் சிவா சார் என் முகத்தில் கொசு கடிக்காத அளவிற்கு காரின் குளிர் சாதனத்தை ஓட செய்து விட்டு, சென்றார். அப்படி அவர் செய்யவில்லை என்றால் கொசு கடித்து என் முகமெல்லாம் வீங்கி இருக்கும். இன்றும் அவர் எனக்களித்த தஞ்சை பெரிய கோயில் ஓவியம் என்னிடம் பத்திரமாக இருக்கிறது.

சச்சு
நான் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்த நேரம். சிவகுமார் அப்பொழுதுதான் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமானார். இந்தப் படத்தை தயாரித்ததோ பத்திரிகையாளர் இராவணன். முதல் நாள் படப் பிடிப்பு நடக்க காலையிலேயே நாங்கள் இருவரும் வந்து விட்டோம். என் ஒப்பனையாளர் எனக்கு ஒப்பனை செய்ய ஆரம்பித்தார். சிவகுமார் அவர்கள் புதுமுகம் என்பதால் அவர் தனக்கு தனியாக ஒப்பனையாளரை வைத்துக் கொள்ளவில்லை. இதை பார்த்த நான், என் ஒப்பனையாளரிடம் எனக்கு ஒப்பனை முடிந்தவுடன் அவருக்கு ஒப்பனை செய்யச் சொன்னேன். இதை நாங்கள் சந்திக்கும் போதெல்லாம் நினைவு படுத்துவார்.

சரிதா
என்னைப் பொருத்தவரை சினிமாவிற்கு அப்பாற்பட்ட ஒரு மனிதராக நான் சிவகுமார் சாரை பார்க்கிறேன். நான் சொல்ல வந்தது அவரது குடும்பத்தையும், அவர் எந்த அளவிற்கு சிறந்த ஒரு குடும்பத் தலைவராக இருந்து, தனது மனைவி, குழந்தைகளை பேணிப் பாதுகாத்தார் என்பதையும்தான். இன்று அவரது வாரிசுகளான சூர்யா, கார்த்தி ஆகிய இருவரையும் எந்த அளவிற்கு அவர் வளர்த்து ஆளாக்கினார் என்பது, அவருடன் நான் நடிக்கும் போதெல்லாம் எனக்கு தெரியும். அவர் ஒரு சிறந்த ல்ண்ஸ்ரீற்ன்ழ்ங் ல்ங்ழ்ச்ங்ஸ்ரீற் குடும்பத் தலைவர். இந்த பெருமை இவருக்கு மட்டும் சொந்தமில்லை,. இவரது மனைவிக்கும் அதில் பெருமளவில் பங்குண்டு.

ஸ்ரீதேவி
எப்படி நான் சிவகுமார் அவர்களை மறக்க முடியும்? நாங்கள் இருவரும் நான்கு படங்களில் நடித்திருக்கிறோம். இவை எல்லாமே என் ஆரம்பகாலப் படங்கள். நடிப்பை பொருத்தவரை நான் பல விஷயங்களை அவரிடம் கற்றேன். ஒரு நல்ல மனிதரிடம் கற்பது பெருமையான விஷயம். இவை எல்லாம் தான் நான் மேலும் உயர எனக்கு அடித்தளமாக அமைந்தது. கண்ணன் ஒரு கை
குழந்தை, மச்சானை பார்த்தீங்களா, கவிக் குயில், சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு என்ற நான்கு படங்கள் மிகப் பெரிய படங்கள் என்று சொல்வதை விட, அவருடன் நடித்ததுதான் பெரிசு என்பேன்.

ஸ்ரீப்ரியா
நாங்கள் இருவரும் அரை டஜன் படங்களுக்கு மேல் நடித்திருந்தாலும் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது,என்னவோ ஆட்டுக்கார அலமேலுதான். வெள்ளிவிழா படம் என்றாலும் எனக்குப் பிடித்த நடிகர்களில் சிவா சாரும் ஒருவர். அவரது பண்பும், பாசமும் கண்டிப்பாக எல்லோரையும் கவர்ந்து விடும். படப்பிடிப்பு தளத்திலேயே அவரது நற்பண்புகளை ஒருவரால் காணமுடியும். யார் வந்தாலும் வரவேற்று உபசரிப்பார். அவர்களுக்கு ஏற்றாற்போல் பேசுவதில் அவரை வெல்ல யாராலும் முடியாது. காரணம், அவர் அதிகமாக புத்தகங்கள் படிப்பார், செய்திகளையும் விடமாட்டார். சொல்லப்போனால் எதையும் ஒழுங்காக செய்வதில் சமர்த்தர்.

சுமித்ரா
அவர் சக நடிகர்களின் நட்புக்கும் பாசத்திற்கும் உரியவர். அவர்களுக்கு உதவுவதில் முன்னிற்பவர். ஒருமுறை வெளிப்புறப் படப்பிடிப்பின்போது இது நடந்தது. வேலை முடிந்தவுடன் எல்லோரும் கிளம்பினோம். என் காரில் நானும் எனது உதவியாளரும் ஏற, கார் கிளம்பியது. நான் சீக்கிரம் கிளம்பியதற்கு காரணம் இருட்டத்தொடங்கி விட்டது. நாங்கள் இருந்த அறைக்கு செல்ல ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகும். அரை மணி நேர பயணத்திற்கு பின் நாங்கள் சென்ற கார் திடீர் என்று நின்று விட்டது. நடுக்காடு. இன்று இருப்பது போல் கையில் செல்போன் வசதியும் இல்லை. நாங்கள் என்னசெய்வது என்று புரியாமல் பயத்துடன் நின்றிருந்தோம்.
அதேசமயத்தில் சிவகுமார் அவர்களின் கார் வந்து, எங்கள் கார் அருகில் நின்றது. சிவகுமார் இறங்கி விவரத்தைக் கேட்டறிந்தார். அவர் காரில் எங்களைப் பத்திரமாக அழைத்துச் சென்றார்.
உதவி என்று யாரும் கேட்காமல் செய்யும் பழக்கம் கொண்டவர் சிவா சார்.

தொகுப்பு: சலன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com