

சாலையில் நடக்கிறேன். இருபுறமும் மரங்கள். மலர் சொரிந்து என் பயணத்தை ஆசீர்வதிக்கும் மரங்கள். வெயிலுக்குக் குடை பிடிக்கும் மரங்கள். நான் களைப்படையும் போதெல்லாம் தாய்ப் பாசத்தோடு தங்கள் மடியில் என்னை ஆசுவாசப்படுத்தும் மரங்கள்.
நன்றி என் கண்களில் சுரக்கிறது.
மனிதனின் வாழ்க்கைப் பாதையைப் பார்க்கிறேன். அங்கும் வரிசையாக மரங்கள்.
அவன் குழந்தைப் பருவத்தில் தொட்டிலாகி, நடை பழகும் பருவத்தில் நடை வண்டியாகி, பள்ளிப் பருவத்தில் ஏடுகளாகி, மணப் பருவத்தில் கட்டிலாகி, கிழப் பருவத்தில் ஊன்று கோலாகி, இறந்த பிறகும் பாடையாகி, சிதையிலும் உடன்கட்டை ஏறி அவன் சாம்பலோடு சாம்பலாகிக் கலந்து - மனிதனுக்காகவே தங்களை
முற்றிலும் அர்ப்பணம் செய்யும் மரங்கள்.
மனிதனின் தாகத்திற்குப் பானம் தந்து, பசிக்கு உணவூட்டி, உடுத்த உடையாகி, வசிக்க வீடாகி, நோய்க்கு மருந்தாகி, அவன் பயணத்திற்குச் சக்கரங்களாகி, அவன் வேலைகளில் கைகளுக்குக் கைகளாகி, அவன் சுவாசத்திற்காகக் காற்றைச் சலித்துக் கொடுத்து, அவனுக்காக மேகங்களைக் கெஞ்சிப் பிச்சை கேட்டு - ஓ! மரங்கள் மட்டும் இல்லையென்றால் மனிதன் வாழ்ந்திருப்பானா?
சரித்திரச் சாலையைப் பார்க்கிறேன். அங்கும் மரங்கள். அதோ! போதி மரங்கள். பாவ வெயில் மறைக்கும் அறக் குடைகள். அதோ! காவல் மரங்கள்; ஊர்ப் பொதுமன்ற மரங்கள், பொருட்பாலின் அத்தாணி மண்டபங்கள்.
அதோ! வசந்த மரங்களில் மன்மதனின் அம்பறாத் தூணிகள்; வாலிபங்கள் பள்ளியறைப் பாடம் கற்கும் பள்ளியறைகள்.
அதோ! கல்லால மரங்கள்; வீட்டு நெறிக்குக் கை காட்டும் மரங்கள்.
மனிதனைப் பார்க்கிறேன். அவன் மரத்திலிருந்தே கோடரிக் காம்பு செய்து கொண்டிருக்கிறான். தருகின்ற தருக்களின் தயவில் வாழ்ந்தாலும் மனிதன் நன்றி கெட்டவனாகவே இருக்கிறான்.
மனிதனை "மரமே!' என்றால் கோபித்துக் கொள்கிறான். நானோ மரத்தை வசவாக்கியவனைக் கோபிக்கிறேன். மரம் என்பது வசவா?
மனிதன் மரமாக முடியுமா? மனிதனுக்கும் மரத்துக்கும் எத்தனை வேறுபாடுகள்!
மண் மனிதனுக்குப் புதை குழி. மரத்துக்கோ கருவறை. மனிதன் தன்னை மண்ணின் மைந்தன் என்று வெட்கமில்லாமல் சொல்லிக் கொள்கிறான். உண்மையில் மண்ணின் மைந்தர்கள் மரங்களே; மனிதர்கள் அல்லர்.
மரங்கள் சாய்ந்தால் காட்டிலிருந்து வீட்டுக்கு வரும். மனிதன் சாய்ந்தால் வீட்டிலிருந்து காட்டுக்குப் போகிறான்.
மனிதர்களுக்கு ஒரே ஒரு சிபி; ஒரே ஒரு சீதக்காதி; மரங்களில் எல்லாமே சிபிகள், எல்லாமே சீதக்காதிகள்; மரம் கொடுப்பதற்காகவே கைகளை நீட்டுகிறது. மனிதன் வாங்குவதற்காகவே கைகளை நீட்டுகிறான்.
மரம் அத்தனை கைகளாலும் கொடுக்கிறது. மனிதன் வலக் கையால் கொடுப்பதை இடக் கையால் வாங்கிக் கொள்கிறான்.
மரம் வானத்தை நோக்கியே வளர்கிறது; மனிதன் புழுதியிலேயே புரள்கிறான்.
மரமாகத்தான் முடியவில்லை; மரங்களைப் படைக்கவாவது மனிதனுக்குத் தெரிகிறதா?
இதோ! அவன் படைத்த மரங்கள்; தூக்கு மரங்கள், சிலுவை மரங்கள். கழுமரங்கள், கொடி மரங்கள், அத்தனையும் மாமிச பட்சிணி மரங்கள்; மலர்களைத் தின்று முட்களை உற்பத்தி செய்யும் மரங்கள்; வெயிலை விநியோகிக்கும் மரங்கள்.
இந்த அழகில் மனிதன் உயர்திணையாம்; மரம் அஃறிணையாம். சரிதானா?
அப்துல் ரகுமானின் "சொந்தச் சிறைகள்: மரம் என்பது
உயர்திணை' கட்டுரையிலிருந்து.
தொகுப்பு: கேசி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.