

ஒரு மொழியைப் படிக்கத் தெரிந்தவர்கள் - எழுதத் தெரிந்தவர்கள் எல்லாம் கடிதம் எழுதுகிறார்கள். தனக்குப் பலரும் கடிதம் எழுத வேண்டுமென்று விரும்புகிறார்கள். அதுபோலவே தான் எழுதும் கடிதம் மற்றவர்களால் படிக்கப்பட வேண்டுமென விழைகிறார்கள்.
கடிதம் என்பது காகிதமோ, எழுத்தோ கிடையாது. அது உள்ளத்தின் வெளிப்பாடு. அன்பு, கருணை, பாசம், கோபம், வெறுப்பு என்பதையெல்லாம் கொட்டிச் சிலர் கடிதம் எழுதியிருக்கிறார்கள்.
பல குடும்பங்களில் கடிதம் பொக்கிஷமாகப் பாதுகாக்கப்பட்டு, தலைமுறை தலைமுறையாகப் படிக்கப்பட்டு வருகின்றன.
மகா ஞானிகள், மன்னர்களுக்கும், சர்வாதிகாரிகளுக்கு நல்லாட்சி புரிய ஆலோசனை சொல்லிக் கடிதம் எழுதியிருக்கிறார்கள்.
அரசியல் தலைவர்கள் தன் கட்சி ஊழியர்களுக்கு உற்சாகமளிக்கும் கடிதங்களை வார, தினசரி இதழ்களில் எழுதி இருக்கிறார்கள். புரட்சியாளர்கள் அரசாங்கத்தை விமர்சித்து திறந்த கடிதம் என்று பத்திரிகைகளில் எழுதியிருக்கிறார்கள்.
தமிழ்ச் சங்கப் பாடல்களில் ஓலை, மடல், திருமுகம் அஞ்சல், கடிதம் கிடையாது. தலைவன் பொருளீட்டச் சென்ற பிறகு முல்லை நிலத்துத் தலைவி காத்து இருக்கிறாளே தவிர, மடல் எழுதவில்லை. படிக்கவும், எழுதவும் தெரிந்த பெரும் குலத்துப் பெண்கள் முல்லைப் பூப்பதைப் பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள்.
தமிழில் மடல், ஓலை அஞ்சல் பற்றி சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகளால் முதன்முதலாகக் குறிப்பிடப்படுகிறது. தமிழில் முதல் கடிதம் எழுதியது ஒரு பெண். மாதவி. புகார் நெய்தல் பரப்பில் கானல்வரி பாடி மகிழ்ந்து கொண்டிருந்த அவள் மீது கோவலன் ஐயமுற்றுப் பிரிந்து தன் வீடு சென்று விட்டான். அது இராப்பொழுது. அவனுக்கு முப்பத்தொரு வயதாகிவிட்டது. மாதவி அவனோடு கூடி வாழ்ந்து ஒரு பெண் மகவைப் பெற்றெடுத்துவிட்டாள்.
"மாந்தளிர் மேனி மாதவி மகற்கு ஆயிரம் கணிகைகள் ஆடிப்பாட' மணிமேகலை என்ற பெயரிட்டவன், அவள் வளர்ந்து பெண்ணாகி இருந்தபோது, மகளையும் தாயையும் பிரிந்து தன் இல்லம் வந்துவிட்டான்.
கோவலன் மனைவி கண்ணகிக்கு பன்னிரண்டு வயதில் திருமணம் நடைபெற்றது. கோவலன் பிரிந்து சென்றதும் வீட்டிலேயே இருந்தாள். வெளியுலகம் அறியாதவள். மாதவி மீது சினமும், வருத்தமும் கொண்ட கோவலன் இருபத்தேழு வயதான தன் மனைவியை அழைத்துக்கொண்டு கால்நடையாகவே காவேரியின் வடகரை வழியாக மதுரைக்கு அழைத்துச் செல்கிறான்.
மாதவியால் கோவலனைப் பிரிந்து இருக்க முடியவில்லை. தாழம்பூ மடலில் எழுத்தாணி கொண்டு செம்பஞ்சுக்குழம்பில் தொட்டு ஒரு கடிதம் எழுதுகிறாள். அக் கடிதத்தைத் தன் உள்ளத் தோழியான வயந்த மாலையிடம் கொடுத்து அனுப்புகிறாள்.
"ஆடல் மகள் ஆதலின்' - என்றுரைத்து மாதவியின் கடிதத்தை வாங்கவே மறுத்து விடுகிறான் கோவலன். அழகும், ஆடவும், பாடவும் தெரிந்து அறிவும் கொண்ட மாதவி, இரண்டாவது கடிதத்தை எழுதுகிறாள். அதனை கோசிக முனிவனிடம் கொடுத்து அனுப்புகிறாள். முனிவன் நெடுவழி நடந்து கோவலனைக் கண்டு மாதவியின் கடிதத்தைக் கொடுக்கிறான். ஓர் ஆண் மகன் வழியாக வந்த கடிதத்தை கோவலன் படிக்கிறான். அதுதான் தமிழில் படிக்கப்பட்ட முதல் கடிதம்.
அடிகள் முன்னர் யான் வீழ்ந்தேன்
வடியாக் கிளவி மனக் கொளல் வேண்டும்
குரவர்பணி அன்றியும் குலப்பிறப்பு ஆட்டியோடு
இரவிடைக் கழிதற்கு, என் பிழைப்பு அறியாது
கையறு நெஞ்சம் கடியல் வேண்டும்.
பொய்தீர் காட்சிப் புரையோய் போற்றி,
பொருள்:
அடிகளே... தங்கள் முன் நான் அடிபணிந்து இருக்கிறேன். அவை பொருளற்ற சொற்களே! எனினும் மனம் இரங்க வேண்டும். இரு முது குரவர்க்கும் பணி செய்வதை மறந்து விட்டீர்களே. உயர் குடி பிறந்த மனைவியுடன் இரவின் கடைசி யாமத்தில் ஊரை விட்டுப் போகிறீர்களே. அதற்கு என் பிழையெதென்று அறியாமல் செயலற்று போகிறது. பெருந்துயர் நீங்க திரும்ப வர வேண்டும். பொய்மையின்றி உண்மையையே கண்டுணரும் உயர்ந்தவரே'
கோவலன் மாதவியின் கடிதத்தைப் படித்துவிட்டு தன் தந்தைக்கு அனுப்பி வைத்தான். பழங்காலத்தில் குடும்பத்தினர்களுக்கிடையில் எழுதிக் கொள்ளப்பட்ட கடிதங்கள் பற்றி அறியவில்லை. ஆனால் எழுதத் தெரிந்தவர்கள் நேரடியாகவும் - எழுதத் தெரியாதவர்கள் மற்றவர்கள் மூலமாகவும் கடிதங்கள் எழுதிக் கொண்டு இருந்து இருப்பார்கள்.
ஆங்கிலேயர்களின் ஆட்சி ஏற்பட்ட பிறகு தபால்துறை செயற்பாட்டிற்கு வந்த பிறகு மக்கள் வேலையின் பொருட்டுப் புலம் பெயர்ந்தார்கள். புதிய வேலை, புதிய இடம் பற்றியும் - பிரிந்து வந்த பெற்றோர்கள் மனைவி மக்களின் நலம் பற்றியும் கடிதங்கள் எழுதிக் கொண்டார்கள். கடிதம் எழுதுவது ஒரு கலையாகவே மாறிவிட்டது.
தபால் நிலையங்களில் தபால்களைப் படித்துச் சொல்லவும், கடிதங்கள் எழுதவும் கூட பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தார்கள். தபால் கொண்டு வந்து கொடுக்கும் ஊழியர் சமூகப் பிரமுகராக இருந்தார். அவர் அரசு ஊழியர். அவரை வழிமறிக்கவோ, தாக்கவோ கூடாது. அவருக்குத் தொல்லை கொடுத்தவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட்டார்கள்.
பத்திரிகைகள் வந்ததும் அரசியல்வாதிகள் அரசுக்குக் கடிதங்கள் எழுத ஆரம்பித்தார்கள். அவைதான் திறந்த கடிதம். திறந்த மடல். அது அரசியல் விமர்சனம். ஆளும் அரசாங்கத்தைக் கடுமையாக விமர்சித்து எழுதினார்கள்.
மகாத்மா காந்தி இரண்டாவது உலக மகாயுத்தத்தைத் தொடங்கிய ஹிட்லருக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் போர் பிரச்னைகளுக்குத் தீர்வு இல்லை என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால், அவர் கடிதம் ஹிட்லர் வசம் சேர்க்கப்படவே இல்லை. பிரிட்டிஷ் அரசு முடக்கிவிட்டது.
தமிழக அரசியல் தலைவர்களில் அண்ணா எழுதக் கூடியவராகவும், பத்திரிகை ஆசிரியராகவும் இருந்தார். அவர் தன் கட்சிக்காரர்களுக்கு "தம்பிக்கு' என்ற பெயரில் வாரந்தோறும் கடிதம் எழுதினார். அதுதான் திறந்த கடிதம்.
கடிதம் என்பது தனிப்பட்ட உணர்வின் வெளிப்பாடு. அறிவு கொண்ட மனிதர்கள் கடிதம் என்பதை பல்வேறு வகைகளில் பயன்படுத்திக்கொண்டு வருகிறார்கள். டெலிபோன், இன்டர்நெட் வந்துவிட்டதால் கடிதம் எழுதுவது குறைந்துவிட்டது. படிக்கவும் ஆளில்லை என்று சொல்லப்படுகிறது. கடிதம் எத்தனை பேர்கள் எழுதுகிறார்கள் - எத்தனை பேர்கள் படிக்கிறார்கள் என்பது முக்கியமல்ல.
எல்லாக் காலங்களிலும் கடிதம் எழுதக் கூடியவர்களும் படிக்கக்கூடியவர்களும் இருக்கிறார்கள். ஒளரங்கசீப் மன்னரானதும், அவருக்கு ஆரம்பக் கல்வி போதித்த ஆசிரியர், "என்னால்தான் நீ பெரிய ராஜாவாகி இருக்கிறாய். உன் அறிவு என் மூலம் பெற்றது. எனவே எனக்கு மந்திரி பதவி கொடு' என்று கடிதம் எழுதினார்.
அதற்கு ஒளரங்கசீப், "நான் ராஜாவானது என் ராஜதந்திரத்தால், நீ வெறும் அரிச்சுவடி ஆசிரியர். நீ அதற்குத்தான் சரியான ஆள்' என்று உடனே கடிதம் எழுதிவிட்டார்.
கடிதம் போர்த்துக்கீசியரின் சொல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.