

இரவு சாப்பிட்ட பாத்திரங்களை எடுத்து ஷிங்கில் போட்டு தண்ணீர் தெளித்து சற்று நேரம் ஊறட்டுமென்று சமையலறையை விட்டு வெளியில் வந்தாள், சாரதா.
கணவன் சந்தானம் ஹாலில் மேஜை விளக்கொளியில் அலுவலகக் கோப்பு ஒன்றை பார்த்துக் கொண்டிருந்தான்.
மாமியார் அவருடைய அறையில் உறங்கிக் கொண்டிருந்தார். அவருக்கென்று ஓர் அறை உண்டு. அவர் ஒரு டைப். டைப் என்றால் சுத்தம், பூஜை புனஸ்காரம், ஆச்சாரம் அனுஷ்டானமென்று இருப்பவர். இரவு எட்டரைக்குள் சாப்பிட்டுவிட்டு ஒன்பது மணிக்கெல்லாம் உறங்கப் போய் விடுவார்.
சாராதாவுக்குத்தான் ஒரு நாளை பார்த்தாற்போல் பத்தரை மணிக்கும் மேலாகி விடும் படுக்கப் போக. கணவரும் மாமியாரும் தூங்கிவிட வீடே ஒரு அமானுஷ்ய அமைதியிலிருக்கும். இன்றுதான் ஏதோ ஆபிஸ் வேலையாய் விழித்துக் கொண்டிருக்கிறான் சந்தானம்.
"உங்களுக்கு பாலா, ஹார்லிக்ஸா? என்ன வேணும்?'' கேட்டாள் சாரதா.
"ரெண்டும் வேணாம். சூடா ஸ்ட்ராங்கா காபி குடு'' என்றான்.
"படுக்கப் போறப்ப காபி குடிச்சா தூக்கம் கெட்டுப் போவும்ங்க''.
"அதுக்காகத் தான் நானும் கேக்கறேன். கொஞ்சம் ஆபிஸ் வேலை இருக்கு. இன்னும் ரெண்டு நாள்ல ஆடிட் வருது''.
கணவனுக்கு காபி கொண்டு வந்து கொடுத்துவிட்டு பத்து பாத்திரங்களைத் தேய்க்க ஆரம்பித்தாள்.
பம்பரமாய்ச் சுழன்று எல்லா வேலைகளையும் செய்தாலும் மனம் என்னவோ கிராமத்திலிருக்கும் அப்பாவையும், தம்பி, தங்கையைப் பற்றியும் நினைத்துக் கொண்டிருந்தது.
இரண்டு மாதத்திற்கு முன்தான் போய் ஒருநாள் தங்கியிருந்து வந்தாள். அம்மா இறந்த பிறகு இரண்டு பிள்ளைகளையும் வைத்துக் கொண்டு அப்பா சிரமப்படுவது அவளுக்கு நன்றாகவே தெரிகிறது. என்ன செய்வது? பெண்ணாகப் பிறந்துவிட்டால் பிறந்த வீட்டையும் பிறந்த வீட்டு சொந்த பந்தங்களையும் மறந்து விட வேண்டுமென்று பெண்கள் தலையில் மட்டும் பிரம்மன் எழுதிவிட்டான் போலும்.
சாரதா திருமணமாகி கணவன் வீட்டுக்கு வந்த ஆறு மாதத்தில், அம்மா பாழும் விஷக்காய்ச்சலுக்குப் பலியாகிப் போனாள். இதுவே அவள் திருமணத்திற்கு முன் நிகழ்ந்திருந்தால், திருமணத்தைத் தள்ளி வைத்துவிட்டு தம்பி தங்கையைப் படிக்க வைக்க அவர்களை ஓரளவு ஆளாக்கிவிட அப்பாவுக்கு உதவியாக இருந்திருப்பாள். புகுந்த வீடு என்ற புதிய வீட்டுக்குச் சென்ற பிறகு அது இயலாத காரியமாயிற்று!
தம்பி தங்கையும் ஓரளவு நல்லது கெட்டது தெரிந்த வயதாய், அப்பாவுக்கு உதவி புரிபவராய் இருந்தாலும் பரவாயில்லை எனலாம்; அப்படியுமில்லை. சாரதா பிறந்து எட்டு வருஷத்துக்குப் பிறகுதான் தம்பி கணேசன் பிறந்தான். அதற்கடுத்த இரண்டாவது வருஷம் யாழினி பிறந்தாள்.
இப்போது கணேசன் ப்ளஸ் டூ படிக்கிறான். யாழினி பத்தாவது படிக்கிறாள். ஆறு மாதத்திற்கு முன்தான் தங்கை பெரியவளானாள். அந்த சுப நிகழ்வை ஊருக்கும் உறவுக்கும் சொல்லி தன் சக்திக்குத் தகுந்தாற்போல் நடத்தினாள் சாரதா. கணவரும் மாமியாரும் வந்திருந்து தாயில்லாக் குழந்தையாயிற்றே என்ற வகையில் கூடமாட உதவியாய் இருந்தார்கள்.
கிராமத்தில் சின்னதாய் சொந்தத்தில் வீடு இருப்பதும், அரைக்காணி நிலம் இருப்பதும் அப்பாவுக்கு ஓரளவு கை கொடுத்து வருகிறது. எனினும் சென்ற வருஷம் மழை பொய்த்துப் போனதால் கடையில் அரிசி வாங்கி சாப்பிடும் நிலையறிந்து சாரதா மிகவும் வேதனைப்பட்டாள். நிலையான வேலையில்லாது வருமானமில்லாது, அப்பா இரண்டு பேரையும் எப்படிக் கரை சேர்க்கப் போகிறார் என்ற கவலையே அவளைப் பெரிதும் வாட்டியது.
பெண் இல்லாது அப்பா எப்படி துன்பப்படுகிறார் என்பதை எண்ணி எண்ணி சாரதா வருத்தப்படாத நாள் மிகவும் குறைவு. அவளுடைய தலையணையைக் கேட்டால், அவள் ரகசியமாய்க் கண்ணீர் விட்டு அழுததைக் கதை கதையாய் சொல்லும், வாயிருந்தால்!
திருவண்ணாமலையிலிருந்து புதுப்பாளையம் முப்பது மைல் தூரம்தான். பஸ்ஸில் ஒரு மணி நேரத்தில் போய்விடலாம். எனினும் புகுந்த வீட்டு கட்டுப்பாட்டையும் மாமியாரின் கண்டிப்பையும் மீறி அடிக்கடி செல்ல முடிவதில்லை. இரண்டு மாதம் அல்லது மூன்று மாதத்திற்கொரு தடவைதான் ஏதாவது சாக்கு சொல்லிக்கொண்டு போய் வருவாள் சாரதா.
இதுபோன்று சென்ற தடவை சென்றபோது தம்பி கணேசன் நன்றாகப் படிக்கிறான். ப்ளஸ் டூவில் மாநிலத்தில் முதல் மாணவனாக வந்தாலும் வரலாம் என்பதை அறிந்து உள்ளம் பூரித்துப் போனாள். வீட்டுக்கு வந்ததும் கணவனிடம் தம்பியைப் பற்றி பெருமையாகச் சொன்னாள். பிறகு -
"என்னங்க எப்படியாவது அவனை மேல படிக்க வைக்கணும், அப்பாவால முடியாது. நாமதான் உதவி செய்யணும். அவன் படிச்சி வேலைக்குப் போயிட்டா கவலையில்லை. வீட்டை அவன் பார்த்துப்பான்..'' என்றாள்.
"அவன்தான் நல்லா படிக்கிறான்கிறே, ஸ்டேட்ஸ்ல
ஃபஸ்ட் வருவான்கிறே அப்பறம் நாம எதுக்கு உதவி செய்யணும்? முதல் மாணவன்னா அரசாங்கமே எல்லா உதவியும் செய்யும். அதுவுமில்லாம சேவை செய்யற அமைப்பு நிறைய இருக்கு. எல்லாம் அவங்க பார்த்துப்பாங்க. இப்பவே நீ அதைப் பத்திக் கவலைப்படாத''. எங்கே தம்பி படிப்புக்கென லட்சம் லட்சமாய் பணம் கேட்டுவிடப் போகிறாளோ என்று அப்போதே வெட்டு ஒன்று துண்டு இரண்டாகப் பேசிவிட்டான் சந்தானம்.
சந்தானம் அப்படிச் சொன்னதும் காற்றூதப்பட்ட பலூன் ஊசியால் குத்தப்பட்டு சட்டென்று தொய்ந்து விடுவதுபோல், அவளின் ஆசை ஆர்வம் எல்லாம் ஒரு நொடியில் வடிந்துபோனது!
மனமிருப்போரிடம் பணமிருப்பதில்லை. பணமிருப்போரிடம் நல்ல மனமிருப்பதில்லை என்பது எத்தனை சத்தியமான வார்த்தை! இவர்கள் மெத்த படித்தவர்கள். படித்து அதிகாரியாய் வேலைக்கு அமர்ந்துவிட்டால் மூளையால் மட்டும்தான் சிந்திப்பார்கள் போலும். மனசு என்று ஒன்றிருக்குமா? அதில் நல்ல சிந்தனை உதிக்குமா? எங்கே உதிக்கப் போகிறது, இதயத்தைக் கழற்றி வைத்துவிட்டு இயங்கும் மனிதர்களல்லவா இவர்கள்!
புகுந்த வீட்டை நினைக்கும்போது வெறுப்பாக இருந்தது சாரதாவுக்கு. சிறகொடிக்கப்பட்டு கூண்டுக்குள் அடைக்கப்பட்டிருக்கும் கிளிபோல், பிறந்த வீட்டு சுதந்திரம் பறிக்கப்பட்டு கழுத்தில் பொன்விலங்கு பூட்டப்பட்ட அடிமையாய் தன்னை உணர்ந்து வெதும்பிப் போவாள் பல சமயங்களில்.
இன்றென்னவோ அடிக்கடி அப்பா நினைவாகவே இருந்தது. அதற்குக் காரணமில்லாமலில்லை. இன்று விடியற்காலையில் ஒரு கனவு கண்டாள். யாரோ வாசலில் வந்து நின்று அழைப்பதுபோல்! எழுந்து சென்று கதவு திறக்கிறாள் சாரதா. வெளியில் தம்பியும் தங்கையும் மட்டும் சோக முகத்தோடு. அவர்களைப் பார்த்ததும், "அப்பா எங்கே? நீங்க மட்டும் வந்திருக்கீங்க' என்கிறாள் பயந்த குரலுடன். உடனே கனவு கலைந்துவிடுகிறது. திடுமென எழுந்து உட்கார்ந்த சாரதாவுக்கு அந்த விநாடி முதல் மனம் ஒரு நிலையின்றி தவித்துக் கொண்டிருக்கிறாள்.
இதோ சந்தானத்துக்கு காபி கொடுக்கும்போதும், பத்து பாத்திரங்களைக் கழுவித் துடைத்து அடுக்கியபோதும் அதே நினைவுதான். நாளைக்கு அப்பாவைப் பார்த்து வர கணவனிடம் கேட்கலாமா என எண்ணி ஹாலில் பார்வையை ஓட்டுகிறாள். அங்கு அவனில்லை. படுக்கச் சென்றுவிட்டான். சரி காலையில் கேட்டுக் கொள்ளலாமென்று அடுப்படி வேலையை முடித்துவிட்டு வெளியில் வரும்போது, மேஜை மீதிருந்த தொலைபேசி சிணுங்கியது.
"இந்த நேரத்தில் யார் பண்ணுவது?' - சின்னதாக ஒருவித பயம் மனதைக் கவ்வ, எடுத்து ஹலோ என்றாள்.
"அக்கா, நான்தான் கணேசன் பேசறேன். அப்பாவுக்கு உடம்புக்கு முடியலை, ஆஸ்பத்திரியில சேர்த்திருக்கோம்...''
"அய்யோ... என்ன உடம்புக்கு...''
"ரெண்டு தடவை வாமிட் பண்ணார். அப்பறம் லேசா நெஞ்சை வலிக்குதுன்னார். உடனே நம்ம பக்கத்துவீட்டு மணி மாமா உதவியோட செங்கம் ஆஸ்பத்திரியில சேர்த்திருக்கோம்''.
"இப்ப எப்படியிருக்கு?''
"கொஞ்சம் பரவால்ல. இருந்தாலும் எங்களுக்குப் பயமாயிருக்கு. யாழினி அழுதுகிட்டே இருக்கா. நீ பக்கத்தில இருந்தா எங்களுக்கு தெம்பா இருக்கும்கா...'' என்றபோது அவன் அழுததை சாரதா உணர்ந்தாள்.
"பயப்படாதப்பா... நான் உடனே புறப்பட்டு வரேன்...'' தம்பிக்கு தைரியம் சொன்ன சாரதாவுக்கு கையும் குரலும் நடுங்கியது. படுத்திருந்த கணவனை எழுப்பி விஷயம் சொன்னாள்.
"சரி. அதுக்கு இப்ப என்ன செய்யறது. மணி பதினொன்னாவுது. எப்படிப் போறது? விடிஞ்சதும் போய்க்கலாம்.''
"சேலம், பெங்களூரு போற நைட் சர்வீஸ் பஸ் ஏதாவது இருக்கும்ங்க. இல்லேன்னா டூ வீலர எடுத்துட்டு வாங்க, நாம ரெண்டு பேரும் போவலாம்''.
"உன்னை இந்த அன் டைம்ல தனியா அனுப்ப மாட்டேன். அம்மா திட்டுவாங்க. எனக்கு ரொம்ப அசதியா இருக்கு. இந்த நிலைமைல வண்டி ஓட்டி வர முடியாது. ஓட்டினா எங்கேயாச்சும் மோதி உங்கப்பா மாதிரி நானும் படுத்துக்க வேண்டியதுதான்...''
"என்னையும் அனுப்ப மாட்டீங்க. நீங்களும் கூட வர மாட்டீங்க. நான் எப்படி போறது? அங்க ரெண்டு புள்ளைகளும் அழுதுகிட்டே இருக்குமே...'' வாய்விட்டு முணுமுணுத்தாள்.
"ஏன் இப்படி பறக்கிறே. ஆஸ்பிட்டல்ல சேர்த்திருக்காங்க. நல்லா இருக்காங்கன்னு தம்பி சொல்லியிருக்கான். அப்பறமேன் அவசரப்படுறே. ராத்திரி பொழுது போவட்டும், விடிஞ்சதும் போகலாம்...?'' என்று சொல்லிவிட்டு படுத்தவன், அடுத்த இரண்டாவது நிமிடத்தில் தூங்கிவிட்டான்.
யாராயிருந்தாலென்ன, இப்படியென்று கேள்விப்பட்டதும் எப்படி தூக்கம் வரும்? நெஞ்சில் ஒரு படபடப்பு வரவேண்டாமோ! இதென்ன கல்யாணமா, கொண்டாட்டமா நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாம் என்பதற்கு? அப்படி எப்படி இருக்கிறாரோ? அதுகள் இரண்டும் என்ன செய்கிறதோ? சாப்பிட்டதோ, இல்லையோ? சாரதாவால் இருப்புக்கொள்ளவில்லை. விடியட்டும் விடியட்டும் என்று விடியும் வரை விழித்திருந்து விடிந்ததும் முதல் பஸ்ஸைப் பிடித்து ஆஸ்பிட்டல் போய்ச் சேர்ந்தாள் சாரதா.
அவள் போய்ச் சேர்ந்த பத்தாவது நிமிடம் அப்பா போய்ச் சேர்ந்தார். சாரதா வந்ததை அறிந்ததும் கண் விழித்துப் பார்த்தார். எதுவும் பேசவில்லை. இரண்டு கண்களிலும் கண்ணீர் வழிந்தது. ஏதோ சொல்ல முயன்று முடியாமல் போகவே, சாரதாவை தீர்க்கமாக ஒரு தடவை பார்த்துவிட்டு கண்களை மூடிக்கொண்டார். அவ்வளவுதான்! அழுது புரண்டாள் சாரதா. தம்பி தங்கையைக் கட்டிக்கொண்டு சிறுபிள்ளைபோல் அழுதாள்.
செய்தியறிந்து கணவனும் மாமியாரும் வந்தார்கள். ஆஸ்பிட்டல் முறைப்படி அப்பா வீட்டுக்குக் கொண்டு வரப்பட்டார். தகவல் தெரிந்தும் தெரியப்படுத்தியும் ஊரும் உறவும் கூடியது. அன்று மாலையே அப்பா எரியூட்டப்பட்டார். மறுநாள் பால்தெளி முடிந்து சொந்தங்கள் சொல்லிக் கொள்ளாமல் போனது.
சந்தானம் வந்தான். "நீ மட்டும் ஏன் இங்க இருக்கணும். பத்து நாள் கழிச்சி வரலாம் வா. அங்க எனக்கும் அம்மாக்கும் சாப்பாட்டுக்கு என்ன செய்யறது''. கொஞ்சம்கூட இரக்கம், தயவு தாட்சண்யமின்றி கூப்பிட்ட கணவனை எரித்துவிடுவதுபோல் முறைத்துப் பார்த்தாள், சாரதா.
"ஏய் நீ வா. அந்த அநாதைப் பசங்களை தனியா விட்டுட்டு அவமட்டும் எப்படி வர முடியும். உனக்கு கொஞ்சம்கூட இதுவே இல்லியே...'' என்று மாமியார் கடிந்துகொள்ள அம்மாகூட போய்விட்டான் சந்தானம்.
பதினாறாம் நாள் காரியத்திற்கு கணவனும் மாமியாரும் வந்திருந்தார்கள். அக்கம் பக்கத்து ஜனங்களின் உதவியோடு காரியத்தை குறையின்றி முடித்தாள் சாரதா. மாமியார் மதிய உணவு முடிந்ததும் புறப்பட்டுவிட்டார். ஏனோ சந்தானம் மட்டும் இரவு தங்கினான். அது சாரதாவுக்கு ஆச்சரியமாகவும் சற்று ஆறுதலாகவும் இருந்தது.
மறுநாள் காலை புறப்பட்டான். "சாரதா வா போகலாம்'' என்றான்.
இதோ வரேன் என்று தம்பியையும் தங்கையையும் உடன் அழைத்து வந்தாள். அவன் திடுக்கிட்டு, "என்ன அவங்களையும் ஏன் கூட்டிட்டு வரே?'' என்றான்.
"இதுக இனிமே எங்கே போகும்? என்னை விட்டா இவங்களுக்கு யார் துணை? யார் பாதுகாப்பு? மூத்தவ ஒருத்தி இருந்தும் இதுகளை அனாதையா விட்டுட்டுப் போயிட்டா பாருன்னு நாளைக்கு ஊர் பேசும்ங்க. இவர்களுக்கு ஒரு நல்லது செஞ்சி வழிகாமிச்சி விடுற வரைக்கும் நம்மகூட இருக்கட்டும்ங்க..''
"சொல்றதைக் கேளு, இதெல்லாம் அம்மாவுக்குப் பிடிக்காது. நம்மால முடிஞ்ச உதவி பண்ணலாம். இவங்க இங்க இருக்கட்டும்''.
"என்ன இப்படி பேசுறீங்க. இதுமாதிரி உங்களுக்கொரு நிலைமை வந்தா, உங்க தம்பி தங்கச்சிய விட்டுக் கொடுத்துடுவீங்களா? இல்லே, இதே வீட்ல நான் மூத்த பிள்ளையா பொறந்திருந்திருந்தா இவங்களைக் கரை சேர்க்கிற கடமை எனக்கிருக்கு இல்லையா? அதுமாதிரி நினைச்சிக்குங்களேன்.''
"மூத்த ஆண்பிள்ளையா பொறந்திருந்தால்ல அந்தப் பேச்சு. இப்ப நீ பொம்பளை. அந்த வீட்டுக்கு வாழ வந்துட்டே. என்ன செய்யறது...''
"உங்க வீட்டுக்கு வாழ வந்துட்டா என்னோட தாய் வீட்டையோ, சொந்த பந்தங்களையோ மறந்துடணுமா? அப்பா இருந்தா நான் ஏன் கேக்கப் போறேன். பெரியவங்க துணையில்லாம என்ன செய்வாங்க பாவம்!''
"இதோ பார்... திரும்பவும் சொல்றேன். இவங்க இங்கயே இருக்கட்டும். அப்பப்பொ நாம வந்து பார்த்துக்கலாம்...'' என்ற கணவன் மீது கோபம் குமுறிக் கொண்டு வந்தது. அப்படியே சட்டையைப் பிடித்திழுத்து அறைய வேண்டும் போலிருந்தது.
"என்ன பேசாம இருக்கே.. சரி, இவங்களுக்கு உதவி, துணை, பாதுகாப்புங்கிறியே. உன்னால என்ன முடியும்? எப்படி இவங்களைக் கரை சேர்ப்ப?''
"பொண்ணுன்னா கிணத்துத் தவளையா இருக்கணுமா, இல்லே எல்லாரும் அப்படித்தான் இருப்பாங்கன்னு நெனைக்கிறீங்களா? நானும் டிகிரி படிச்சிருக்கேன். கம்ப்யூட்டர் கோர்ஸ் முடிச்சிருக்கேன். என்னை வேலைக்குப் போக வேணாம்னு நீங்களும் உங்கம்மாவும் சொன்னதால நான் போகல. போக வேண்டிய சூழ்நிலை வந்தா போறதிலே என்ன தப்பு? என் படிப்புக்கு பத்தாயிரம் ரூபாய் சம்பளத்துல ஒரு வேலை கெடைக்காதா என்ன...!'' - சாரதா.
"அப்போ நீ ஒரு முடிவோடதான் இருக்கே போல...''
"பின்ன, இவங்களை நம்ம கூட அழைச்சிட்டுப்போக நீங்க சம்மதிக்கலேன்னா வேற வழியில்ல. அம்மாவையும் அப்பாவையும் இழந்துட்டு ஆதரவில்லாம அக்கா அக்கான்னு என்னையே சுத்தி வர்ற இவங்களை விட்டுட்டு எப்படிங்க வர்றது...''
"ஓ.கே. நான் போறேன். நீ மட்டும் வர்றதா இருந்தா ரெண்டு நாள்ல வா. இல்லேனா இங்கேயே இருந்துக்க'' என்று விர்ரென்று புறப்பட்டவனை, "ஒரு நிமிஷம்' என்று நிறுத்தினாள்.
"என்னைக்காவது ஒரு நாள் உங்க மனசாட்சி உறுத்தும், அன்னைக்கு அப்படி செஞ்சிட்டோமேன்னு! அன்னைக்கு வாங்க... அது வரைக்கும் நான் இங்கதான் இருப்பேன்'' என்றாள் திடமாக. அவன் போய்விட்டான்.
உள்ளே சென்றாள் சாரதா. அவள் கண்கள் கலங்கியிருந்ததைப் பார்த்து, "மாமா என்னக்கா சொன்னாங்க?'' என்றான் தம்பி. அவள் எங்கோ பார்த்தபடி அமைதியாய் இருந்தாள்.
"நாங்க இங்கேயே இருந்துக்கிறோம்க்கா. மாமாகூட நீங்க போங்க. யாழினிக்கு சமைக்கத் தெரியும். நானும் இனிமே வயல்வேலைல்லாம் கத்துக்கிட்டேன்னா நாங்க சமாளிச்சிக்குவோம்'' என்றான் கணேசன் தலைகுனிந்தபடி.
"அதெல்லாம் ஒண்ணும் வேணாம். அக்கா மேல உண்மையான பாசமிருந்தா சொல்றதைக் கேளுங்க. நீ நல்லா படிச்சி பெரியாளா வரணும். உங்க ரெண்டு பேருக்கும் ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சுக் கொடுக்காம நான் இங்கேர்ந்து போக மாட்டேன்'' என்ற சாரதா, குஞ்சுகளை தன் இறக்கைகளால் இறுகச் சேர்த்துக் கொள்ளும் கோழியைப்போல் தன் தம்பியையும் தங்கையையும் இரு கைகளாலும் அணைத்துக் கொண்டாள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.