ஒன்ஸ் மோர்

தீபாவளி வந்தது. வீர வாலிபர் லண்டனிலுள்ள இந்தியர்களையெல்லாம் ஓரிடம் கூட்டிப் பண்டிகை கொண்டாட ஏற்பாடு செய்தனர்.
ஒன்ஸ் மோர்

தீபாவளி வந்தது. வீர வாலிபர் லண்டனிலுள்ள இந்தியர்களையெல்லாம் ஓரிடம் கூட்டிப் பண்டிகை கொண்டாட ஏற்பாடு செய்தனர். சீமையிலிருக்கும் செல்வ மாணவர் ஐரோப்பிய நாகரிகத்தில் மோகங் கொண்டு இந்தியாவை மறவாமல் நினைப்பூட்டவும், இந்திய விடுதலைக்கு ஒரு தாகத்தைக் கிளப்பவுமே அந்நாள் கொண்டாடப் பெற்றது.
 அச்சமயமே மகாத்மா காந்தியடிகள் தென்னாப்பிரிக்கா சத்தியாக்கிரகம் நடத்தினார். ஏழை இந்தியர் துயரத்தை பார்லிமெண்டில் எடுத்துரைக்க அவர் லண்டனுக்கு வந்திருந்தார். ஐயர் (வ.வே.சு) உடனே சென்று காந்திஜியைக் கண்டார். 
பிறகு அவர் சொன்னதையே குறிக்கிறேன்:
 "காந்திஜியைப் பார்த்ததுமே பரம சாத்வீகர் என்றறிந்தேன். அவர் பாரிஸ்டர் அந்தஸ்துக்கேற்றபடியே ஐரோப்பிய உடையணிந்திருந்தார். என்றாலும் அவர் முகத்தில் பாரத தர்மஜோதி விளங்கியது. என்னைப் புன்னகையுடன் வரவேற்றார். பழைய நாற்காலிகளில் இருவரும் அமர்ந்து பேசினோம். அவர் தமது தென்னாப்பிரிக்கா சத்தியாகிரகத்தைப் பற்றியும், சாத்வீக எதிர்ப்பைக் குறித்தும் இனிமையாக, தெளிவாக, படாடோபமில்லாமல் நிதானமாகவே பேசினார். நான், "இந்த வழியில் நமது இந்தியா விடுதலை பெறாதே... நாம் சிவாஜி, கரிபால்டிபோல் தீவிரமான சேனா பலமும் ஆயுத பலமும் பெற்றாலே, இவ்வளவு பெரிய பீரங்கிப் படை கொண்ட அரசாங்கத்தை இணக்கி விடுதலை பெறலாம்'' என்றேன். அவர் நான் சொன்னதையெல்லாம் நிதானமாகக் கேட்டுப் புன்னகை புரிந்து, "உலகில் சத்தியமே பெரியது; சத்தியமே கடவுள். கடவுளுக்கு மிஞ்சியது ஒன்றுமில்லை. சத்தியமே ஜெயம். அதில் சந்தேகமில்லை. அரிச்சந்திரன் எவ்வளவு வருந்தினாலும், முடிவில் அவன் உண்மையே வென்றது. நமது பக்கம் சத்தியமும் தருமமும் இருந்தால், கத்தி தீட்டாமலே சாந்தமான வைராக்யமான அஹிம்சா தருமத்தால் வெற்றி பெறலாம். அறம்செயும் சத்தியமும் ஒன்றுதான்'' என்றார். அவர் கொள்கை அப்போது எனக்கு ஏறவில்லையென்றாலும் அவரிடம் எனக்கொரு பக்தி, விசுவாசம் உண்டானது...    எங்கள் தீபாவளி கூட்டத்திற்குத் தலைமை வகிக்க மோகன்தாஸ் காந்தியையே வேண்டினோம். அவர் ஒருவரே தைரியமாக எங்கள் இந்திய வீட்டிற்கு வரச் சம்மதித்தார். கூட்டத்தின் நோக்கத்தைக் கேட்டார். "இந்திய வாலிபருக்கு இந்திய உணர்ச்சி தருவதே நோக்கம்'' என்றோம். "அது மிக நல்லது. ஆனால் நாம் இந்தியர். இந்திய உணர்ச்சியுடன் கூடுகிறோம்! ஆதலால் அன்று விருந்தும் முற்றிலும் இந்திய முறைப்படியே சாத்வீகமாயிருக்க வேண்டும். அதையும் நீங்களே தயாரிக்க வேண்டும்'' என்றார். "ஆஹா'' என்று மகிழ்ச்சியுடன் கூறி வந்தோம்.
 அடுத்த சனிக்கிழமை மாலை 7 மணிக்கு விருந்து. நாங்கள் அங்குமிங்கும் அலைந்து தேடி எப்படியோ இந்தியச் சரக்குகள் வாங்கிச் சமையல் செய்தோம். நான் கூட்டத்திற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தேன். டாக்டர் ராஜனும் திருமலாச்சாரியும் இன்னும் நாலைந்து பேரும் பாகசாலைக் காரியம் பார்த்தனர். அப்போது மணி ஆறு. நான் சமையல் எப்படியிருக்கிறது என்று பார்க்கப் போனேன். அங்கே ராஜன், "தண்ணீர் கொண்டு வாரும், பாத்திரம் கழுவும், இதைச் சுத்தி செய்யும், அதைச் செய்யும்'' என்று ஒருவரை வேலையேவிக் கொண்டிருந்தார். அவர் சுறுசுறுப்
பாக எல்லா வேலையும் செய்து கொண்டிருந்தார். எனக்குத் திடுக்கிட்டது. "என்ன ராஜம்? இவரே நமது தலைவர் மோகன்தாஸ் காந்தி!'' என்றதும் எல்லோரும் திடுக்கிட்டனர்!  "ஐயா... மன்னிக்க வேண்டும். அபவாதம் செய்து விட்டோம். அடையாளம் தெரியவில்லை. மன்னிக்க வேண்டும்'' என்று ராஜன் காந்தியை வேண்டினார். நானும் மன்னிப்புக் கேட்டேன். காந்திஜி பக்கென்று சிரித்தார்! "நானல்லவா உங்களை இவ்வளவு கஷ்டப்படுத்தியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். லண்டனில் இந்திய முறைப்படி விருந்திடுவதன் கஷ்டத்தை நான் அறிவேன். ஆதலால் என் கடமையைச் செய்யவே வந்தேன் இங்கு'' என்று சகல காரியங்களையும் செய்து முடித்து, தட்டுகளைப் பரிமாறி, உணவு வைத்து எல்லோரையும் அமர்த்திய பிறகே அந்த மகான் தாமும் எங்களிடையே அமர்ந்து உண்டார்! ஆஹா! அதை இன்று நினைத்தால்கூட என் உள்ளம் சிலிர்க்கிறது... என்ன சுத்தமான ஹிருதயம், எவ்வளவு இனிமையான பேச்சு! தற்பெருமை சிறிதும் கிடையாது. இன்னும் பத்து நாள் அவருடன் பேசியிருந்தால் நான் நிச்சயமாக அஹிம்சா தருமத்தையே அனுஷ்டித்திருப்பேன். மோகன்தாசர் என்னை மோகனாஸ்திரத்தால் அப்போதே வசப்படுத்தி விட்டார். அவர் யாரையும் துச்சமாக நினைக்காமல் தத்துவத்தையே பிடித்துச் செல்கிறார்.
 அந்த மகானுடன் உண்ட அந்த விருந்து தேவாமிருதமாய் இருந்தது. எல்லாரும் பரம்மானந்தமாய்ச் சாப்பிட்டோம். லண்டனில் அதுவரையில் அப்படிப்பட்ட இந்தியச் சாப்பாடு சாப்பிட்டது கிடையாது!
"யோகி ஸ்ரீசுத்தானந்த பாரதியார்' எழுதிய 
"வீரவிளக்கு வ.வே.சு ஐயர்' என்ற நூலிலிருந்து.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com