திரைக் கதிர்

மனிதர்களின் ஆராய்ச்சி சில நேரங்களில் விபரீதங்களை விளைவித்துவிடும். இதன் பின்னணியை கற்பனையாகக் கொண்டு ஹாலிவுட்டில் இதுவரை வந்த படம் பெரும் அளவில் வெற்றிப் பெற்றுள்ளன.
திரைக் கதிர்
Updated on
2 min read

* மனிதர்களின் ஆராய்ச்சி சில நேரங்களில் விபரீதங்களை விளைவித்துவிடும். இதன் பின்னணியை கற்பனையாகக் கொண்டு ஹாலிவுட்டில் இதுவரை வந்த படம் பெரும் அளவில் வெற்றிப் பெற்றுள்ளன. அந்த பாணியில் அடுத்து கவனத்தை ஈர்க்க வருகிறது, "கொங் ஸ்கூல் ஐஸ்லேண்ட்.' மனிதர்களின் வாடையே இல்லாத இயற்கைச் சூழலில், அமைதியாக வாழ்ந்து வரும் ராட்சசக் குரங்குகளின் கூட்டத்தை தனது ஆராய்ச்சிக்காக ஒரு குழுவினர் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கின்றனர். மிகப் பெரிய தோற்றத்துடன், பலம் பொருந்திய அந்த குரங்குகள் அவர்களுக்குச் சவால் விடும் வகையில் திகழ்கின்றன. இந்த இரு தரப்புக்கும் இடையிலான சம்பவங்களே படத்தின் திரைக்கதை. 1973-ஆம் கால  கட்டங்களில் நடைபெறுவதாக அமைக்கப்பட்டுள்ள இக்கதையை டான் கில்ரி, மேக்ஸ் இருவரும் இணைந்து எழுதியுள்ளனர். டாம் கில்ட்சன், சாம்வேல் ஜாக்சன், ஜான்குட்மேன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கூப்பர், எட்ஜர் இருவரும் இணைந்து இயக்கியுள்ள இப்படம், வரும் 10-ஆம் தேதி தமிழில் வெளியாகவுள்ளது. 

* சென்னை பின்னணியில் உருவாகியுள்ள படம் "மாநகரம்'. ஸ்ரீ, சந்தீப், ரெஜினா, சார்லி, முனிஸ்காந்த் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். வரும் 10-ஆம் தேதி படம் வெளியாகவுள்ளது. இக்கதையில் சென்னைக்கு தரப்பட்டிருக்கும் இமேஜ் குறித்து இயக்குநரிடம் பேசுகையில், " சென்னை என்றாலே வன்முறை என்ற அளவில்தான் இதுவரை பெரும்பாலான கதைகள் உருவாகியுள்ளன. ஆனால், அது போல் இல்லாமல் வேறு ஒரு பார்வையில் சென்னை மாநகர வாழ்க்கையைப் படம் பிடித்துள்ளோம். படம் பார்க்கும் ஒவ்வொருவரும் சென்னையைப் பெருமையாக எண்ணும் அளவுக்கு திரைக்கதை இருக்கும். ஒவ்வொருவருக்கும் புது அனுபவத்தைத் தருவதாக இப்படம் அமைந்துள்ளது'' என்றார். 

* ஆடம்பர வாழ்க்கைக்காக குறுக்கு வழிகளில் பணம் தேடும் இளைஞர்கள் குறித்து உருவாகி வரும் படம் "கேக்கிறான் மேய்க்கிறான்.' சபா, லுப்னா, அமீர், நரேன், சபீதா ஆனந்த், மதுமிதா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் சாம் இமானுவேல். சமீபமாக அரங்கேறும் குற்றச் செயல்கள் அனைத்தும் ஆடம்பர வாழ்க்கைக்கான பணத் தேடல்களை மையமாகக் கொண்டு நடைபெறுகின்றன. குறிப்பாக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தங்களின் அத்தியாவசியத் தேவை அல்லது ஆடம்பர தேவைகளுக்காக குறுக்கு வழிகளில் பணத்தை அடைய முயற்சி செய்கின்றனர். இதற்காக அவர்கள் தேர்வு செய்யும் முறைகள் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கும் விதமாக முடிந்து விடுகின்றன. அப்படி தங்களின் ஆடம்பரத் தேவைகளுக்காக பணத்தை அடைய முயற்சிக்கும் நான்கு இளைஞர்கள் குறித்த வாழ்க்கையைப் படம் பிடிப்பதே திரைக்கதை. அஸ்விகா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு மதுரை, திருநெல்வேலி, கோவளம், பூவாறு உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று முடிந்துள்ளது. இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன.  

* அமானுஷ்யம், பேய் உள்ளிட்ட பின்னணிகளைக் கொண்டு படங்கள் உருவாக்குவதற்கு பெரும் பட்ஜெட் தேவையில்லை என்பதால், அது தொடர்பான படங்களின் வரத்து அதிகரித்துள்ளது. இந்த வரிசையில் அடுத்து இணைய வருகிற படம் "அமாவாசை.' முழுக்க முழுக்க இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகி வருவது இப்படத்தின் தனிச்சிறப்பு. ஜெயாஸ் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாக உருவாகி வரும் இப்படத்தில் ஜெய் ஆகாஷ் கதாநாயகனாக நடிக்கிறார். தன்யா மௌரியா கதாநாயகியாக நடிக்கிறார். ராஜேஷ் விவேக், ஜீவா, ஷ்ரான், சாக்ஷி, ஷோகன், ப்ரீத்தி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். நீண்ட இடைவெளிக்குப் பின் முமைத்கான் இப்படத்தின் ஒரு பாடலுக்கு நடனமாடுகிறார். இளம் தலைமுறை ரசிகர்களின் ரசனை ஓட்டங்களுக்கு ஏற்ப படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் ராஜேஷ் சவந்த் தெரிவித்துள்ளார். ராஜஸ்தானின் உதய்பூர், ஜோத்பூர் மற்றும் சென்னை உள்ளிட்ட நகரங்களில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. சென்னையில் பிரத்யேக அரங்குகள் அமைக்கப்பட்டு பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.  தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 3 மொழிகளில் உருவாகும் இப்படத்துக்கு பாலிவுட் இசையமைப்பாளர் சையத் அஹமத் இசையமைக்கிறார். படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.  

* இவோக் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாக உருவாகி வரும் படம் "படை வீரன்.' பிரபல பின்னணி பாடகர் விஜய் யேசுதாஸ் கதாநாயகனாக நடிக்கிறார். புதுமுகம் அம்ரிதா கதாநாயகியாக நடிக்கிறார். இயக்குநர் பாரதிராஜா, "கல்லூரி' அகில், கலையரசன், "தெய்வம் தந்த வீடு' நிஷா, இயக்குநர் மனோஜ்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்கள் ஏற்று நடிக்கின்றனர். மணிரத்னத்தின் உதவியாளர் தனா இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். ராஜவேல் மோகன் ஒளிப்பதிவில், கார்த்திக் ராஜா இசையமைக்கிறார். புவன் ஷ்ரீனிவாசன் படத்தொகுப்பு செய்கிறார்.  தேனி மாவட்ட பின்னணியில் இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் அரவிந்த்சாமி கடந்த வாரம் வெளியிட்டார்.  
- ஜி.அசோக்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com