ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: அடிக்கடி ஏப்பம் வந்தால்..!

இரைப்பையில் அதிகம் வாய்வழியாக விழுங்கப்பட்ட காற்று இரைப்பையை விரிவாக்குவதனால் அந்தக் காற்றை
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: அடிக்கடி ஏப்பம் வந்தால்..!
Published on
Updated on
2 min read

எனது வயது 42. எனக்கு அடிக்கடி ஏப்பம் வருகிறது. மருத்துவரிடம் சென்றேன். செரிமானம் இல்லை அதனால் வரும் என்கிறார். தண்ணீர் குடித்தால் கூட ஏப்பம் வருகிறது. இரண்டு மாதமாக உள்ளது. இந்த உபாதை தீர வழி என்ன? எதை சாப்பிடலாம் 
- ஒ. ஜெயா, கிருஷ்ணகிரி.

இரைப்பையில் அதிகம் வாய்வழியாக விழுங்கப்பட்ட காற்று இரைப்பையை விரிவாக்குவதனால் அந்தக் காற்றை வாய்வழியாகவே வெளியேற்றுவதுதான் ஏப்பம். இதனால் இரைப்பையில் காற்றின் அழுத்தம் குறைகிறது. காற்று எப்படி அதிகம் இரைப்பையில் சேருகிறது என்றால் உணவையோ அல்லது குடிக்கும் பானத்தையோ விரைவாக உண்பது அல்லது குடிப்பது, காற்றடைத்த குளிர்பானம் அருந்துதல், மனக்கவலையில் சிலர் இரைப்பையில் காற்று நிறைந்திருக்காத நிலையிலும் ஏப்பம் விடுவர். இதை ஒரு பழக்கமாக அவர்கள் கொண்டிருப்பதாலோ அல்லது வயிற்றுப் பகுதியிலுள்ள சுகமற்ற தன்மையை போக்கவோ அவர்கள் அவ்வாறு செய்யக்கூடும். அறிந்தோ அறியாமலோ சிலர் காற்றை விழுங்குவதுண்டு பேசிக்கொண்டே சாப்பிடுவதாலும், சுவிங்கம் சுவைத்துக் கொண்டே இருப்பதாலும், கெட்டியான
சாக்லெட்டை உறிஞ்சிச் சாப்பிடுவதாலும், ஸ்ட்ரா எனும் குழல் வழியாக நீர்ப் பொருட்களான பழரஸம், இளநீர் போன்றவற்றை உறிஞ்சுவதாலோ, புகைப்பழக்கத்தினாலோ வாய்வழியாக சுவாசிப்பதாலோ, காற்றின் அளவு அதிகமாக வயிற்றினுள்ளே செல்லக்கூடும்.
பீன்ஸ், பருப்புவகைகள், ப்ரக்கோலி, பட்டாணி, வெங்காயம், முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், வாழைப்பழங்கள், திராட்சை, கோதுமை ரொட்டிகள் போன்றவை, அதிக ஏப்பத்தை செரிமான நிலையில் ஏற்படுத்துபவை. Type 2 சர்க்கரை உபாதைக்கான சில மருந்துகள், மலமிளக்கிகள், சில வலி நிவாரணிகள் போன்றவையும் வயிற்றில் புண்ணை ஏற்படுத்தி வாயுவை உற்பத்தி செய்யக்கூடும்.
இரைப்பையிலிருந்து மேலே கிளம்பி உணவுக் குழாயினுள் பரவும் அமிலத்தன்மையினாலும் இரைப்பையினுடைய தசைகள் வலுவிழப்பதனாலும், இரைப்பை உட்புற சவ்வுப் பகுதியில் ஏற்படும் தொற்று உபாதைகளாலும், உணவுக்குழாய், இரைப்பை, சிறுகுடல் பகுதிகளில் ஏற்படும் புண்களாலும், பாலிலுள்ள சில புரதங்களைச் செரிமானம் செய்யும் சக்தி இல்லாதிருப்பதாலும், சர்க்கரைச்சத்து செரிமானக் குறைப்பாட்டாலும், H. pylori நுண் உயிரிகளாலும் ஏப்பம் ஏற்படக்கூடும்.
மேலும் gluten எனும் வேதிப்பொருள் நிறைந்துள்ள ப்ரட் வகையறாக்களை செரிக்க முடியாமலாவதும், முழுவதும் செரிமானமாகாத நிலையில், இரைப்பை, உணவை அடுத்தபகுதிக்குத் தள்ளிவிடுவதாலும், செரிமானத்திற்கான சில சுரப்பிகள் pancreas பகுதியிலிருந்து சுரக்காமலிருந்தாலும் தொடர் ஏப்பம் வரக்கூடும். குடல் நழுவி வெளிப்படுதல், IBS எனும் மலம் நொத நொதப்புடன் அடிக்கடி வெளியேறுதல், பித்தப்பை கற்கள், சிறு குடலில் ஏற்படும் Giardia நுண்உயிரிகள் தொற்று, பித்தப்பை அழற்சி, வேகமாக மூச்சுக்காற்றை வெளியேற்றி, உள் மூச்சுக்காற்றை குறைவாக இழுப்பதனால் ஏற்படும் கரிமில வாயுவின் அளவுகுறைதல், குடல் ஒன்றோடு ஒன்று சொருகிக் கொள்ளுதல், உணவுக்குழாய் மற்றும் இரைப்பை கான்சர் உபாதை ஆகியவற்றிலும் தொடர் ஏப்பம் ஏற்படவாய்ப்பிருப்பதாக நவீன ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
அதனால் நீங்கள் இரைப்பைப் பகுதியை குழாய் பரிசோதனை மூலம் ஏதேனும் பிரச்னை உள்ளதா? என்பதைக் கண்டறிந்து, அதற்கேற்றாற்போன்று மருந்து சாப்பிடுவது நலம். வெறும் காற்று மட்டுமே வெளியேறுகிறது என்று அறிந்தால், ஆயுர்வேத மருந்தாகிய வாயுகுளிகையோ, தான்வந்திரம் குளிகையோ ஒன்றிரண்டு, உணவிற்குப் பிறகு சீரகம் போட்டுக் காய்ச்சிய வெந்நீருடன் காலை, இரவு உணவிற்குப் பிறகு சாப்பிடுவது நலம். அஜீரணக்கோளாறும் ஏற்பட்டுள்ள நிலையில் அஷ்ட சூரணம் 1/2-1 ஸ்பூன் (5 கிராம்) சூடான சாதத்துடன் சிறிது நெய்யும் விட்டுக்கலந்து காலை-இரவு அந்த சாதத்தின் முதல் உருளையைச் சாப்பிடவும் மற்ற உபாதைகளுக்கு தனிப்பட்ட மருந்தை பயன்படுத்த வேண்டும்.

(தொடரும்)

பேராசிரியர்  எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, 
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com