

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு
- திருவள்ளுவர்.
"நீர் இல்லாவிட்டால் எந்த உயிரும் வாழாது, உலக ஒழுங்கு கெட்டு, உலக வாழ்வே முடிந்து விடும்' என்றுதான் எல்லா திருக்குறள் உரையாசிரியர்களுமே உரை எழுதியிருக்கிறார்கள். அடியேனும் வள்ளுவர் ஏன் "நீரின்றி அமையாது உலகு'' என்று எழுதினார் என்று பல முறை சிந்தித்துப் பார்த்திருக்கிறேன். உரையாசிரியப் பெருமக்கள் எழுதிய உரை "உயிரினங்களின் வாழ்க்கை' என்ற கோணத்தில் சரியானதுதான். ஆனால், திருவள்ளுவர் அதற்கு மேலும், இன்னொரு பரிமாணத்தைப் பற்றிப் பேசுகிறார்.
"அமையாது', "வாழாது' என்ற இரு சொற்களுமே மூவகைச் சீர்கள்தான். இலக்கணப்படி வள்ளுவர் இந்த இரண்டு சொற்களில் எந்தச் சொல்லைப் பயன்படுத்தியிருந்தாலும் இலக்கண அமைதி வழுவாது. "அமைதல்' என்ற சொல்லிற்கு, "அமைத்தல். உருவாக்குதல்' என்றும் பொருள் கொள்ளலாம். வள்ளுவர், "அமையாது' என்ற சொல்லை ஏன் பயன்படுத்தினார் என்றால், நீரால்தான் இந்தப் புவியின் அமைப்பு, சுற்றுச்சூழல், நிலங்களின் பயன்பாடு, இவற்றின் அடிப்படையில் அமையும் உயிரினங்களின் வாழ்க்கை அனைத்துமே உருவாக்கப்படுகிறது. ஆகவே, நீரின்றி இந்தப் புவியின் மலைகளும், மலைச் சரிவுகளும், பள்ளத்தாக்குகளும், அப்பள்ளத்தாக்குகளில் வீழ்ந்து விளையாடும் நீர்வீழ்ச்சிகளும், பாய்ந்தோடும் ஆறுகளும், ஆற்றுப் படுகைகளும் இவற்றைச் சுற்றிப் பச்சைப் பசேலென பரந்து விரிந்து கிடக்கும் அணிநிழற் காடுகளும், வயல்வெளிகளும் உருவாக முடியாது.
இப்புவியின் வயது 450 கோடி ஆண்டுகள். தொடக்கத்தில் எரிமலைக் குழம்பால் உருவான பலவிதமான பாறைகள்தான் பல்வேறு வடிவங்களில் உயர்ந்தும், தாழ்ந்தும் இருந்தன. இப்பாறைகளில் மழை பொழிந்தபொழுது, சிற்றோடைகளாக அவை உருவாகி மேட்டிலிருந்து, பள்ளத்தை நோக்கி ஓடின. பல சிற்றோடைகள் ஒன்றாகி, சிற்றாறுகளாயின. பல சிற்றாறுகள் ஒன்றாகி ஆறுகளாக நீண்டு, அகன்று ஓடின, கடலில் கலந்தன. படிவப் பாறைகள் உருவாகின. மழைக்காலம் முடிந்தவுடன், நீரோட்டம் நின்று, தண்ணீர் ஆங்காங்கே தேங்கத் தொடங்கியது. அப்பொழுதுதான், நீர் இந்த உலகைக் கட்டமைக்கத் தொடங்கியது.
நீரின் தன்மைகள்
நீருக்கு மூன்று தன்மைகள் உண்டு. நீரின் தன்மை வேதியியல் முறைப்படி pHஎன்ற அளவீட்டால் அளக்கப்படுகிறது. அதனை நீர் எண் என்று வைத்துக் கொள்வோம். நன்னீரின், அதாவது குடிப்பதற்கு ஏற்ற தண்ணீரின் நீர் எண் 7. இந்த நீர் எண் 7க்குக் குறைந்தால் அது அமில நீர் (Acidic) எனப்படும். நீர்
எண் 7ஐ விட அதிகமானால் அது கார நீர் (Alkaline). இந்த நீரின் தன்மைகள்தான் உலகை இந்தப் புவியை அமைத்திருக்கின்றன, உருவாக்கியிருக்கின்றன. நீர் எண்களின் அளவு 1 முதல் 14 வரை என்று வரையறுக்கப்பட்டுள்ளது. நீர் எண் 1 முதல் 6 வரை அமில நீர். நீர் எண் 7 நன்னீர். நீர் எண் 8 முதல் 14 வரை கார நீர். இந்த மூன்று நிலைகளுக்கும் இடையில் பல இடைநிலைகள் உள்ளன. அவற்றை முழுமையாக விளக்கப் போனால் அது வேதியியல் கட்டுரையாகி விடும். ஆகவே, அவற்றைத் தவிர்த்து விடுவோம். தோசையை மட்டும் உண்போம். ஓட்டையை எண்ணத் தலைப்பட வேண்டாம். நன்னீரில் உள்ள ஹைட்ரஜன் அளவு குறைந்தால் நன்னீர் அமில நீராகவும், கூடினால் கார நீராகவும் மாறும்
தேக்கநிலை மாற்றத்தை உருவாக்கும்
பொருண்ம நிலையில் எந்த விதமான தேக்கம் உருவானாலும் அது ஒரு மாற்றத்தை உருவாக்கும். தண்ணீர் தேங்கும்பொழுது, அது எந்த இடத்தில் தேங்குகிறதோ அந்த இடத்தில் உள்ள பாறையின் கனிமங்களுடன் வினை புரியத் தொடங்கும். நாம் பொதுவாக அந்தக் கிணற்றுத் தண்ணீர் இளநீரைப் போல இனிக்கும், இந்தக் கிணற்றுத் தண்ணீர் உப்புக் கரிக்கும் என்று சொல்லிக் கேட்டிருப்போம். அதன் பொருள் என்னவென்றால், இளநீரைப்போல இனிக்கும் கிணற்றில் உள்ள பாறை அல்லது படிமத்தின் கனிமங்கள் நிலைத்த தன்மை உடையவை. அக்கனிமங்களை நீரால் கரைக்க முடியவில்லை அல்லது ஒருவேளை தன்னிடம் தேங்கும் தண்ணீரில் ஏதேனும் அமிலத் தன்மையோ அல்லது காரத் தன்மையோ இருந்தால், அப்பாறையில் அல்லது அப்படிவத்தில் உள்ள கனிமங்கள் அத்தண்ணீரோடு வினை புரிந்து அதனை நன்னீராக மாற்றி விடுகின்றன.
அதேபோன்று, தண்ணீர், தான் தேங்கும் பாறையில் அல்லது படிவத்தில் உள்ள உப்புக் கனிமங்களைக் கரைப்பதால் உப்புத் தண்ணீராக மாறிவிடுகிறது. ஆஸ்திரேலியத் தங்கச் சுரங்கங்களின் தலைமையகம் என்று கல்கூர்லி என்னும் பகுதியைச் சொல்லலாம். கல்கூர்லியிலிருந்து ஏறத்தாழ தெற்கே 300 கி.மீ. தொலைவிலும், மேற்கே 600 கி.மீ. தொலைவிலும்தான் கடல் உள்ளது. ஆனால், கல்கூர்லிப் பகுதியில் உள்ள நிலத்தடி நீரில் கடல் நீரைப்போல 7 மடங்கு உப்பு அதிகமாக உள்ளது. ஏனென்றால், அங்குள்ள பாறைகளில் உள்ள கனிமங்களில் உள்ள உப்பு எளிதில் தண்ணீரில் கரைந்து நிலத்தடி நீரை உப்புத் தண்ணீராக மாற்றி விடுகிறது.
உருவான பாறையை உருக்குலைக்கும் தண்ணீர்
பாறைக் குழம்பில் (Magma) இருந்துதான் பாறைகள் உருவாயின. பாறைக் குழம்பு குளிரும் பொழுது, முதலில் வெப்ப நிலை குறைவான கனிமம் உருக்கொண்டு படியும். இக்கனிமம், எஞ்சியுள்ள பாறைக்
குழம்போடு வினை புரிந்து மற்றொரு கனிமத்தை உருவாக்கும். இவ்விரு கனிமங்களும் சேர்ந்து எஞ்சியுள்ள பாறைக் குழம்புடன் வினை புரிந்து பிறிதொரு கனிமத்தை உருவாக்கும். இப்படியே, ஒவ்வொரு கனிமமாக உருவாகி, பாறைக் குழம்பு இறுகிப் பாறையாகும். மீதமுள்ள பாறைக் குழம்பு, உருவான பாறையில் எங்கெங்கு இடைவெளிகள் உண்டோ அங்கெல்லாம் போய்ப் படிந்து கொள்ளும். இப்படி உருவான பாறைகளுக்குள்ளும் நுண்ணிய இடைவெளிகள் இருக்கும். அந்த இடைவெளிகளில் தண்ணீர் நுழைந்து, தேங்கி, கனிமங்களைக் கரைத்து பாறைகளை உருக்குலைத்து விடும்.
தண்ணீரில் கனிமங்கள் கரைகிற பொழுது தண்ணீர் ஒரு கரைசலாக (Solution) மாறி விடுகிறது. அப்பொழுது இந்தக் கரைசலுக்கு திறன் (Strength) வந்து விடுகிறது. நீர் எண் அளவைப் பொறுத்து அது காரக் கரைசலாகவோ அல்லது அமிலக் கரைசலாகவோ மாறி விடுகிறது. இந்தக் கரைசல்கள் தங்களுடைய திறனுக்குத் தக்கவாறு, தான் தேங்கியிருக்கிற பாறைகளில் அல்லது படிவங்களில் உள்ள மற்ற கனிமங்களுடன் வினை புரிந்து மேலும் அவற்றைக் கரைக்கின்றன. கடும் பாறைகள் உருக்குலைந்து மணலாகவும், மண்ணாகவும், களிமண்ணாகவும் மாறி விடுகின்றன. இப்படி உருவான மணலும், பல்வகைக் கனிமங்களின் மண்ணும் தண்ணீரால் அடித்துக் கொண்டு செல்லப்பட்டு, அவை படிந்து, இறுகி படிவப் பாறைகள் உருவாகின்றன. இந்த இடைப்பட்ட காலத்தைத்தான் "கல் தோன்றி மண் தோன்றாக் காலம்' என்றார்கள். அந்தக் காலகட்டத்தில், மிகச் சிறிய உயிரினங்களே தோன்றியிருந்தன. மனிதன் தோன்றவில்லை. அதனால் வாளொடு பிறக்கவும் இல்லை.
தங்கம் வைரத்தைத் தள்ளி வரும் தண்ணீர்
உருக்குலைந்த பாறைகளில் இருந்து பல கனிமங்கள் தண்ணீரால் அரித்து எடுத்துச் செல்லப்பட்டு வேறு இடங்களில் படிய வைக்கப்படுகின்றன. இப்புவியில் அதிகமாக உள்ள கனிமம் சிலிகா (SiO2). ஆற்று மணல், கடற்கரை மணல் எல்லாம் சிலிகாதான். அடுத்து அதிகமாக உள்ள கனிமம் அலுமினா (Al2O3). இங்கு ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். சிலிகான் என்றால் அது தனிமம். சிலிகா என்றால் அது கனிமம். அலுமினியம் என்றால் அது தனிமம். அலுமினா என்றால் அது கனிமம். மிகப்பெரும்பாலான தனிமங்கள் ஆக்சிஜனோடு சேர்ந்து, கனிமங்களாகவே உள்ளன. ஏனென்றால், அவை தனித் தனிமங்களாக இயற்கையில் இருக்க முடியாது. கனிமமாகத்தான் இருக்க முடியும்.
தனித் தனிமங்களாக இப்புவியில் இருக்கும் தனிமங்களில் முக்கியமானவை தங்கம், வெள்ளி, வைரம் மற்றும் பிளாட்டினம். பல சிற்றோடைகளில், மக்கள் தங்கம் சலித்து எடுப்பதைப் பார்த்திருப்பீர்கள். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்றால், தண்ணீரால் உருக்குலைக்கப்பட்ட பாறைகளில் இருந்து மணலோடும், மண்ணோடும் கலந்து, ஓடைத் தண்ணீரில் அடித்து வரப்படும் தங்கத்தைச் சலித்து எடுக்கிறார்கள். பின்னர் தங்கம் உள்ள அந்த மண்ணோடு பாதரசத்தைச் சேர்த்து, தங்கத்தைத் தனியே பிரித்து எடுக்கிறார்கள் (மிகவும் ஆபத்தான முறை).
கொல்லி மலையிலிருந்து ஓடி வரும் ஓடைகளில் மக்கள் இன்றும் தங்கம் சலித்தெடுக்கிறார்கள். ஏனென்றால், கொல்லி மலையில் உள்ள பாறைகளில் தங்கம் இருக்கிறது. தன்னைப் புகழ்ந்து பாடிய புலவர்களுக்கு, தன் மலையில் பிறந்த தங்கத்தால் செய்த மாங்கனியைக் கொடுத்தான் கொல்லிமலையை ஆண்ட வள்ளல் ஓரி. "தன் மலைப் பிறந்து தாவின் நனிப் பொன்னும் கொடுத்தான்'' என்று சிறுபாணாற்றுப் படை ஓரியைப் பற்றிப் பேசும்.
தனித் தனிமமாகக் கிடைக்கும் இன்னொரு தனிமம் வைரம். எல்லா உலோகங்களையும் வேதியியல் முறையில் பிரித்தெடுக்கலாம். ஆனால், வைரத்தை அப்படிப் பிரித்தெடுக்க முடியாது. தனித்தனிக் கற்களாகத்தான் வைரத்தைப் பிரித்தெடுக்க முடியும். வைரக் கற்கள் உள்ள பாறைகளைத் தண்ணீர் உருக்குலைக்கும் பொழுது வைரக் கற்கள் பாறையிலிருந்து உதிர்ந்து மண்ணோடு கலந்துவிடும். அந்த மண்ணிலிருந்துதான் வைரக்கற்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன. மத்தியப் பிரதேசத்தில் உள்ள பன்னா என்ற இடத்தில் மழைக்காலத்தில் இன்றும் மக்கள் வைரக் கற்களைப் பொறுக்கி எடுக்கின்றனர். தங்கம், வெள்ளி, செம்பு, காரீயம், சிங்க் போன்ற உலோகக் கனிமப் படிவங்கள் தண்ணீரால் அடித்துக்கொண்டு வரப்பட்டு வளமிக்க கனிமப் படிவங்களாகப் படிந்துள்ளன. தண்ணீர், இந்த முறையில் கனிம வளத்தை வெட்ட வெளிக்கு கொண்டு வருகிறது.
கனிமப் படிவங்களைக் கட்டமைக்கும் தண்ணீர்
பல கனிமப் படிவங்களின் கட்டமைப்பில் தண்ணீர் பெரும் பங்காற்றுகிறது. வெப்ப நிலை வேதியியல் மாற்றங்கள், குளிர்நிலை வேதியியல் மாற்றங்கள் என்று வேதியியல் மாற்றங்களை இரு வகையாகப் பிரிக்கலாம். பல இரசாயனத் தொழிற்சாலைகள் வெப்பநிலை வேதியியல் வினைகளின் அடிப்
படையில் இயங்குகின்றன. இயற்கையில் ஏற்படும் வெப்ப நிலை வேதியியல் மாற்றங்கள் பெரும் பூகம்பங்கள் ஏற்படும்பொழுது நடக்கின்றன. அப்பொழுது ஏற்கெனவே இருந்த பாறைகள் உடைந்து, உருகி, உருக்குலைந்து உருமாறும். இந்த உருமாற்ற நிகழ்வின் (Metamorphism) போது பல புதுக் கனிமங்கள் உருவாகும்.
குளிர் நிலை வேதியியல் மாற்றங்கள் தண்ணீராலேயே பெரும்பாலும் ஏற்படும். தண்ணீர் ஒரு படிவத்தில் தேங்கி அதனோடு வினை புரிந்து சேர்கிறபொழுது அப்படிவத்தில் நீரேற்றம் (Hydration) செய்யப்படுகிறது. அந்த நிலையில், வெப்ப நிலை வேதியியல் மாற்றத்தை போலவே, குளிர் நிலையில் ஏற்கெனவே இருந்த கனிமங்கள் குழையத் தொடங்குகின்றன. இப்படிவங்களில் உள்ள நீர் ஆவியாகும்பொழுது நீரளவு குறையும் (Dehydration). அப்பொழுதும், பல புதிய கனிமங்கள் உருவாகும், மிகப் பெரும்பாலும் பல வகை உப்புக்கள் இந்த வகையில்தான் உருவாகின்றன.
நம் உடல் வேர்த்து, மீண்டும் குளிர்கிறபொழுது நம் உடலில் உப்பு பூப்பது இப்படித்தான். ஏரிகளில், குளங்களில், குட்டைகளில் நீர் வற்றுகிறபொழுது, களி மண் காய்ந்து, இறுகி வெடித்திருக்கும் களிமண் ஏடுகளின் மீது உப்பு படிவதும் இந்த முறையில்தான். பல கனிமப் படிவங்கள் இந்த வகையில் உருவாகியுள்ளன. ஆஸ்திரேலியா, இந்தியா, பிரேசில் உள்ளிட்ட பல நாடுகளில் இரும்புக் கனிமப் படிவங்கள் குளிர்நிலை வேதியியல் மாற்றத்தாலும், அதைத் தொடர்ந்து நீரால் கொண்டு செல்லப்பட்டும் படிய வைக்கப்பட்டு உருவாகியுள்ளன.
நீரும் நிலக் கட்டமைப்பும்
மழைக் காலத்தில் மேட்டிலிருந்து பள்ளத்திற்கு ஓடி வரும் தண்ணீர், ஏற்கெனவே உருக்குலைக்கப்பட்ட பாறைகளிலிருந்த மணலையும், மண்ணையும் அரித்து, வண்டலாகத் தன்னோடு கொண்டு வரும். நீரோட்டத்தின் வேகம் குறைகிறபொழுதோ அல்லது தன் ஓடு பாதை திரும்புகிற பொழுதோ நீரில் உள்ள வண்டல் கீழ்த்தரையில் படிந்து விடும். நீரின் வேகத்தால் அரிக்க முடியாத படிவங்கள் உள்ள பகுதிகளில் ஆறுகள் தன் வேக ஆற்றலுக்குத் தகுந்தவாறு தன் ஓடு திசையை மாற்றிக் கொள்ளும். அதனால்தான் ஆறுகள் வளைந்து நெளிந்து ஓடுகின்றன (படம் பக்.6இல்).
என்றைக்கு நிலப் படிவங்கள் தன் திறனை இழக்கின்றனவோ அன்று ஆறு நேராக அவற்றை ஊடறுத்து இந்த லாடம் போன்ற பகுதியைத் துண்டித்து விடும். அப்பொழுது அந்தப் பகுதி முற்றிலும் நீர் சூழ்ந்து ஒரு தீவாகி விடும். அப்படிக் காவேரி ஆற்றில் பல தீவுகள் உள்ளன. அவற்றுள் மிகவும் முக்கியமான தீவு திருவரங்கம்.
உலகைக் கட்டமைக்கும் பணியில் நீரின் பங்கு பற்றி இங்கே தரப்பட்டுள்ள தகவல்கள் ஒரு துளி மட்டும்தான். கடல் நீர் மட்டத்தின் ஏற்ற இறக்கங்கள் அவற்றால் ஏற்படும் புவி மாற்றங்கள் கணக்கிலடங்காதவை. புவி இயக்கத்தின் எல்லா நிலைகளிலும் நீர் பெரும்பங்கு வகிக்கிறது. உயிரினங்களின் வாழ்விற்கு எப்படி நீர் இன்றியமையாததோ அதேபோல் இப்புவியின் கட்டமைப்பும் நீரின்றி அமையவே அமையாது. ஆதலினால்தான் "நீரின்றி அமையாது உலகு' என்றார் திருவள்ளுவர்.
டாக்டர். அண்ணாமலை மகிழ்நன், PhD.,
புவியியல் அறிஞர்
ஆஸ்திரேலிய கல்வித்துறை ஆலோசகர்.
படங்கள் உதவி: wordpress.com
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.