

சைக்கிள் இன்று ஏழைகளின் வாகனம் என்றாகி விட்டது. ஆனால் நூற்று ஐம்பதாண்டுகளுக்கு முன்பு அது பிரபுக்கள், தலைவர்கள், சிற்றரசர்களின் வாகனமாக இருந்தது. 1860-ஆம் ஆண்டுகளில் உலகம் போற்றும் நாவலாசிரியரான டால்ஸ்டாய், சைக்கிளில் தான் தன் பண்ணையைச் சுற்றி வந்தார். அவர் பண்ணை இல்லத்தில் சைக்கிளோடும் மனைவியோடும் நிற்கும் அபூர்வ புகைப்படம் ஒன்றிருக்கிறது.
மகாத்மா காந்தி சைக்கிள் ஓட்டி இருக்கிறார். அன்று அவர் சபர்மதி ஆசிரமத்தில் இருந்தார். மாலைப் பொழுது. பிரார்த்தனைக் கூட்டத்திற்குச் செல்ல வேண்டும். ஆனால் தொண்டர்கள், ஊர் மக்கள் என்று பலரும் அவரிடம் வந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அவருக்கு பிரார்த்தனைக்கான நேரம் நெருங்கி விட்டது. சாவகாசமாகப் பேச்சை முடித்துக் கொண்டு வெளியில் வந்தார். அப்பொழுது மகாத்மாவின் நண்பர் ஒருவர் சைக்கிளில் வந்து இறங்கினார்.
காந்தி, அவரிடம் இருந்து சைக்கிளை வாங்கிக் கொண்டு, தாவியேறி வேகமாக மிதித்து பிரார்த்தனை கூட்டத்திற்கு சரியான நேரத்தில் சென்றடைந்தார்.
சைக்கிள் பற்றி பல ஐரோப்பிய எழுத்தாளர்கள் கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் எழுதியிருக்கிறார்கள். ஹெச்.ஜி.வெல்ஸ், வில்லியம் சரோயன், சாமுவேல் பெக்கெட் குறிப்பிடப்பட வேண்டியவர்கள்.
1946-ஆம் ஆண்டில் லூஜி பார்மோலின் என்ற இத்தாலிய எழுத்தாளர் "பை சைக்கிள் தீவ்ஸ்' என்று ஒரு குறுநாவல் எழுதினார். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இத்தாலியர்கள் வேலையில்லாமல், உணவு இல்லாமல் இருந்த நிலையைச் சித்திரிக்கும் நாவல். இரண்டாண்டுகள் கழித்து அது இத்தாலிய மொழியில் விக்டோரியா டீ சிகா என்ற இயக்குநரால் திரைப்படமாக எடுக்கப்பட்டது. கதையும், கதை சொன்ன விதமும் "பை சைக்கிள் தீவ்ஸ்' படத்தை உலக மகா திரைப்படமாக்கிவிட்டது.
தமிழ்நாட்டில் சைக்கிள் ஓட்டிக் கொண்டும், சைக்கிள் பற்றியும் சிறப்பாகக் கதைகள் எழுதியவர்கள் தி.ஜானகிராமன், அசோகமித்திரன். சென்னை வானொலி நிலையத்தில் தி.ஜானகிராமன் பணியாற்றிய காலம் முழுவதும், அவர் சைக்கிளில் தான் வந்து கொண்டிருந்தார். நண்பர்களைச் சந்திக்க சைக்கிளில் போவதுதான் வழக்கம். அசோகமித்திரன் சைக்கிள் பயணி. அவர் "கணையாழி' அலுவலகம், பிரிட்டீஷ் கெளன்சில் நூலகம், அமெரிக்க நூலகம், சினிமா தியேட்டர்கள் என்று எல்லா இடத்திற்கும் சைக்கிளில் தான் செல்வார்.
ஒரு முறை சைக்கிளில் வந்து கொண்டிருந்த ஜானகிராமன், எதிரே வரும் அசோகமித்திரனைப் பார்த்து விட்டார். உடனே சைக்கிளை விட்டிறங்கி வந்து "இல்லஸ்டிரேடட் வீக்லி' ஆங்கில இதழில் வெளிவந்திருக்கும் சிறுகதையைப் பற்றி புரட்டாசி வெய்யிலையும் பொருள்படுத்தாமல் பேசினார்; நானும் இடையிடையே பேசினேன் என்று எழுதியிருக்கிறார்.
ஆர்.கே.நாராயண், "சண்டே அப்சர்வர்' என்ற ஆங்கிலப் பத்திரிகை நிருபராக மைசூரில் இருந்தார். தன் தம்பி லட்சுமணனோடு சைக்கிளில் சென்று செய்தி சேகரித்து, எழுதி சைக்கிளில் தந்தி ஆபிஸ் சென்று அனுப்பியதாக ஒரு சமயம் குறிப்பிட்டார்.
தியாகராய நகரில் உள்ள கலைஞன் பதிப்பகத்துக்கு ஒரு நாள் மாலையில் சென்றேன். கலைஞன் மாசிலாமணியோடு ஜெயகாந்தன் பேசிக் கொண்டிருந்தார். நானும் அவர்களோடு சேர்ந்து கொண்டேன். ஒரு மணி நேரம் சென்றது.
""புறப்படலாம்'' என்று ஜெயகாந்தன் எழுந்தார். நானும் அவரோடு எழுந்தேன்.
""வாங்க மடத்திற்குச் செல்லலாம்'' என்றார். அவர் மடம் என்று குறிப்பிட்டது ஆழ்வார்பேட்டையில் உள்ள அவர் அலுவலகம்.
""சரி''
""எப்படி போறது''
""நான் சைக்கிள் வைத்திருக்கிறேன்''
""அதிலேயே போயிடலாம்''
நான் சைக்கிள் பூட்டைத் திறந்தேன்.
""நான் சைக்கிள் ஓட்டுறது இல்லை. சின்ன வயதில் சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொண்டபோது முட்டியில் அடிப்பட்டு விட்டது. அதில் இருந்து சைக்கிள் ஓட்டுவதை விட்டுவிட்டேன்'' என்றார் ஜே.கே.
""சைக்கிள் பின்னால் உட்காருவதில் உங்களுக்கு சிரமம் ஒன்றும் இல்லையே''
""எதிலும் எனக்குச் சிரமம் இல்லை'' என்றபடி லாகவமாக ஓடும் சைக்கிளில் தாவி ஏறி உட்கார்ந்து கொண்டார். ஆலையம்மன் கோயில் தாண்டி, எஸ்.ஐ.டி. கல்லூரி வழியாக ஆழ்வார்பேட்டை மடம் வந்து சேர்ந்தோம்.
""நான் கொஞ்சம் பயந்தபடி தான் சைக்கிளில் ஏறினேன். ஆனால் பரவாயில்லை. பத்திரமாகக் கொண்டு வந்து சேர்த்து விட்டீர்கள்'' என்றார்.
முப்பதாண்டுகளுக்கு மேலாக மெரினா கடற்கரை சாலையில் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருக்கிறேன். அப்பொழுதெல்லாம் புத்தகங்கள் படிப்பதுண்டு. பல சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் சைக்கிள் பயணத்தில் உருவானதுதான். நடந்து போவதற்கும், சைக்கிளில் பயணிப்பதற்கும் வித்தியாசம் தெரிந்ததில்லை.
சைக்கிள் அற்புதமான வாகனம். மனிதர்களின் கண்டுபிடிப்புக்களில் அதிகம் மாறுதல் அடையாமல் இருக்கிறது. சக்கரங்கள் தான் அதன் பலம். இரண்டு சக்கரங்கள் ஒரு செயினால் இணைக்கப்பட்டு மிதிக்கும் போது முன்னே போகிறது. சைக்கிளில் உள்ள ஒரே குறை அது பின்னோக்கிப் போக முடியாது என்பது தான்.
சைக்கிள் அதிகமாக தொந்தரவு கொடுக்காத வாகனம். ஆனால் சட்டமும் அதை அமல்படுத்தும் போலீஸýம் தொந்தரவு கொடுத்தது. சைக்கிளில் டபுள்ஸ் போகக் கூடாது. பெல் கட்டாயம் இருக்க வேண்டும். பின்னால் அபாய அறிவிப்பு செய்யும் சிவப்பு வில்லை இருக்க வேண்டும். மாலை ஆறு மணியாகி விட்டால் சைக்கிளில் விளக்கு எரிய வேண்டும் என்பது கட்டாயம். சைக்கிள் ஓட்டிகளை போலீஸ் கொடிய குற்றவாளிகளைப் பிடிப்பது மாதிரி மறைந்து நின்று கொண்டு திடீரென்று பாய்ந்து பிடிப்பார்கள்.
ஒருமுறை கலைவாணர் அரங்கில் சினிமா பார்த்துவிட்டு, இரவு ஒன்பது மணிக்கு வெளியில் வந்தேன். டைனமோ சைக்கிள். டைனமோவை டையரில் உராயவிட்டு விளக்கு எரிகிறதா என்று பார்த்தேன். விளக்கு எரியவில்லை. பல்பை திருடிக் கொண்டு போய்விட்டார்கள். இரண்டு மூன்று முறைகள் இப்படி நடந்தன. ஒருமுறை டைனமோவை திருடிக் கொண்டு போய்விட்டார்கள். எனவே ஆயில் விளக்கிற்கு மாறினேன்.
சர்தார் என்ற பெயரில் சைக்கிளுக்கென்றே கச்சிதமாக வடிவமைக்கப்பட்ட விளக்கு பஞ்சாப்பில் இருந்து வந்து கொண்டிருந்தது. எண்ணெய் ஊற்றி திரிபோட்டு கொளுத்த வேண்டும். கண்ணாடி வழியாக வெளிச்சம் பரவும். திருட்டுப் போகாமல் தடுக்க சங்கிலி போட்டு மூட முடியும்.
சர்தார் சைக்கிள் விளக்கு பெரும் காற்றடித்தால் அணைந்துவிடும். மேடு பள்ளத்தில் சைக்கிள் விழுந்து எழுந்தாலும் அணைந்துவிடும். அடிக்கடி விளக்கு எரிகிறதா என்று உள்ளங்கையை முன்னே நீட்டிப் பார்த்துக்கொள்ள வேண்டும். அணைந்த விளக்கை ஏற்ற கைவசம் ஒரு தீப்பெட்டி வைத்திருக்க வேண்டும்.
ஒருநாள் கன்னிமரா நூலகம் சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தேன். பச்சையப்பன் கல்லூரி வரும் போது மாலை ஆறு மணிக்கு மேலாகிவிட்டது. தெரு விளக்குகள் எரிய ஆரம்பித்தன. எனவே, சைக்கிளை நிறுத்தி சர்தார் விளக்கை ஏற்றிக்கொண்டு சென்றேன். வழியில் அமைந்தகரை காவல் நிலையம். அதைத் தாண்டிதான் வீட்டிற்குப் போக வேண்டும். சைக்கிள் விளக்கு எரிகிறதா என்று பார்த்துக்கொண்டே சென்றேன்.
காவல் நிலையத்திற்கு சற்று முன்னால் சாலையில் ஒரு பள்ளம். சைக்கிள் பள்ளத்தில் விழுந்து எழுந்தது. போலீஸ் கண்களில் படவில்லை, சைக்கிளை மிதித்தேன்.
தூங்குமூஞ்சி மரத்தடியில் மறைந்து நின்று கொண்டிருந்த ஒரு போலீஸ்காரர் முன்னே பாய்ந்து வந்து சைக்கிளைப் பிடித்து நிறுத்தி, "" என்ன தைரியம் இருந்தால், போலீஸ் நிலையத்திற்கு முன்னேயே விளக்கு இல்லாம போவ'' என்று மிரட்டினார்.
"" விளக்கு எரிந்தது சார். பள்ளத்திலே விழுந்ததால் அணைந்து போய்விட்டது. நீங்கள் வேண்டுமானால் விளக்கைத் தொட்டுப் பாருங்க. சூடா இருக்கும்'' என்றேன்.
"" உன் சைக்கிள தொட்டுப் பார்க்கறதுதான் என் வேலை'' என்றவர், சைக்கிளை பின்னால் கொண்டு போய் நிறுத்த சொன்னார். அங்கே ஐந்தாறு சைக்கிள்கள் நிறுத்தப் பட்டிருந்தன.
போலீஸ்காரர் சைக்கிளை பூட்டி சாவியை எடுத்துக் கொண்டு உள்ளே சென்றார். நானும் அவர் கூடவே சென்றேன். நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு,
""உன்னை மாதிரி ஆளையெல்லாம் சும்மா விடக்கூடாது'' என்று சொல்லிக் கொண்டே, ஒரு நோட்டுப் புத்தகத்தை எடுத்து அப்பா பெயர், என் பெயர், முகவரி எல்லாம் கேட்டு எழுதினார். என்னிடம் ஒரு பிரதி கொடுத்து "" நாளை காலை பதினொரு மணிக்கு ஜார்ஜ் டவுன் ஏழாவது கோர்ட்டுக்கு பணத்தோட வா'' என்றார்.
"" சார், சைக்கிள்''
"" சைக்கிளா, பத்திரமா இருக்கும். ஃபைன் கட்டிட்டு ரசீது கொண்டாந்து காட்டிட்டு எடுத்துக் கொண்டு போ''
""வீட்டுக்கு இரண்டு கிலோ மீட்டர் நடக்கணும் சார்''
நான் சொன்னதைக் காதில் வாங்கிக்கொள்ளாமலேயே, விளக்கு இல்லாமல் வரும் சைக்கிள்களைப் பிடிக்க அவசர அவசரமாகச் சென்றார்.
அடுத்த நாள் பத்து மணிக்கே பணத்தோடு
நீதிமன்றம் சென்றேன். பத்து பன்னிரண்டுக்கும் மேற்பட்டவர்கள் நின்று கொண்டிருந்தார்கள். நான் எட்டாவது ஆளாக கூப்பிடப்பட்டேன். நீதிபதி கறுப்பு கோட்டுப் போட்டுக்கொண்டு உயரமான மேடையில் அமர்ந்திருந்தார். கீழே நீதிமன்ற அலுவலர். அவர் மேசை மீது நோட்டுப் புத்தகங்கள், ரசீது புத்தகங்கள் இருந்தன. நீதிமன்ற பணியாளர் என்னைப் பார்க்காமலேயே, ""சைக்கிளிலில் லைட் இல்லாமல் போனீயா?'' என்று கேட்டார்.
""லைட் இருந்தது சார்''
என்னை திடீரென தலை நிமிர்ந்து பார்த்தார். அப்புறம், ""என்ன சட்டம் பேசுறீயா. நீ சைக்கிளில் சவாரி செய்து கொண்டு போனபோது, சைக்கிளிலில் இருந்து லைட் எரிந்து கொண்டிருந்ததா?''
""இல்லை''
""ஐந்து ரூபாய்''
அவரிடம் பணம் கட்டிவிட்டு, ரசீது வாங்கிக் கொண்டு பன்னிரண்டு மணிக்கு நீதிமன்றத்தைவிட்டு வெளியில் வந்தேன்.
சைக்கிள் எனக்கு அதிகமான பிரச்னைகள் கொடுத்ததில்லை. நான் தான் சைக்கிள் ஓட்டி நிறைய பிரச்னைகளை உண்டாக்கிக் கொண்டு இருக்கிறேன். ஒருமுறை டபுள்ஸ் போய் பிடிபட்டு மூன்று ரூபாய் கொடுத்து தப்பியிருக்கிறேன். சைக்கிள் பெல் கப்பை யாரோ திருடிக் கொண்டு போக, கப் இல்லாத சைக்கிள் ஓட்டியதற்காக வால் டியூப்பைப் கழற்றி, காற்றை வெளியேற்றி விட்டுவிட்டு ஒரு போலீஸ்காரர்,
""இனிமேல் ஒழுங்காகப் போ'' என்று வால் டியூப்பைக் கொடுத்து அனுப்பினார். சட்டம் என்பது மதிக்கப்பட வேண்டியது என்று சைக்கிள் கற்றுக் கொடுத்தது. தமிழக முதல்வராக எம்.ஜி.ஆர். வந்ததும் சைக்கிள் லைட்,
டபுள்ஸ் போவது என்பதற்கு விடுதலை கொடுத்தார்.
புதுச்சேரி பிரெஞ்சு கலாசார நகரம். புதுச்சேரியில் பலரும் பிரெஞ்சு நாட்டு தயாரிப்பான சைக்கிளை ஓட்டிக் கொண்டிருந்தார்கள். அதில் பெண்களும் உண்டு. சாதாரணமாகப் பள்ளிக்கூடம் போகும் மாணவிகள் சைக்கிள் ஓட்டிக்கொண்டு இருந்தார்கள். புதுச்சேரி நகர அமைப்பில் சைக்கிள் போக பாதை இருந்தது.
ஒருமுறை புதுச்சேரிக்கு ஓர் இலக்கியக் கருத்தரங்கிற்குச் சென்றிருந்தேன். கருத்தரங்கு பகல் விருந்துக்குக் கலைந்தது. பிரபஞ்சன் கண்களில் பட்டார்.
""வாருங்கள். கார் இருக்கிறது. விருந்துக்குப் போகலாம்'' என்றழைத்தேன்.
""என்னிடம் சைக்கிள் இருக்கிறது. புதுச்சேரிக்கு சைக்கிள் போதும். நீங்கள் முன்னால் புறப்படுங்கள். நான் வந்துவிடுகிறேன்'' என்று சைக்கிளில் ஏறினார். அவர் சைக்கிள் அவர் போலவே சுத்தமாக இருந்தது.
சைக்கிள் பற்றி ஒரு டாக்குமெண்டரி தயாரித்தேன். அது பற்றி சென்னை தொலைக்காட்சி நிலைய இயக்குநராக இருந்த ஏ. நடராஜனிடம் சொன்னேன். அவர் அதனை ஒளிபரப்பி சன்மானமும் வாங்கிக் கொடுத்தார்.
ஐம்பதாண்டு காலம் சென்னை நகரத்தில் சைக்கிள் ஓட்டினேன். பெரிய விபத்து எதிலும் சிக்கிக் கொண்டதில்லை. சைக்கிளும் தொந்தரவு கொடுத்தது கிடையாது. வெளியில் புறப்படும்போது இரண்டு டயர்களிலும் காற்று இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ள வேண்டும். பிரேக் சரியாகப் பிடிக்கிறதா என்பதைப் பார்த்துக் கொள்ள வேண்டும். மணிக்குப் பதினைந்து கிலோ மீட்டர் வேகத்தில் போகும். அதனால் பயம் கிடையாது. சைக்கிள் பல ஆண்டுகள் தபால்காரர்கள், காவலர்கள் வாகனமாக இருந்தது. கையில் பத்து ரூபாய் இருந்தால் சைக்கிளை எடுத்துக்கொண்டு வெளியே கிளம்பி விடலாம். பஞ்சர் பார்க்க ஐந்து ரூபாய்; காற்றடிக்க இருபத்தைந்து காசு. சைக்கிளில் பாட்டுப் பாடிக் கொண்டு கதை சொல்லிக்கொண்டு, சில நேரத்தில் இரண்டு கைகளையும் விட்டுக்கொண்டு போகலாம். சினிமாவில் காதலர்கள் சைக்கிளில் பாடிக் கொண்டே சென்றார்கள்.
1958-ஆம் ஆண்டில் வாங்கிய சைக்கிளை ஐம்பதாண்டு காலம் ஓட்டிக் கொண்டிருந்தேன். சென்னை மாநகரமாக வளர்ந்து, வாகன நெருக்கடி ஏற்பட்டு, சைக்கிள் ஓட்ட முடியாது என்ற நிலை ஏற்பட்டபோது, ஒரு நண்பருக்கு அன்பளிப்பாகக் கொடுத்துவிட்டேன். சைக்கிள் ஓட்ட மனதும், கால்களும் பரபரத்துக் கொண்டே இருக்கின்றன. இளைய மகன் முரளி இருக்கும் கனடா நாட்டிற்குச் சென்றால் மேபிள் மரங்கள் நிழல் தரும் சாலையில், தலையில் கவசம் அணிந்துகொண்டு ஓட்டுகிறேன். கனடாவில் மோட்டார் சைக்கிளுக்கு உள்ள எல்லா சட்டவிதிகளும் சைக்கிளுக்கும் பொருந்தும்.
சென்னையில் உள்ள எட்டு வயதான என் பேரனுக்கு ஒரு சைக்கிள் வாங்கிக் கொடுத்து இருக்கிறேன். ஆனால், ஓட்ட இடமில்லாமல் ஒரு மூலையில் சைக்கிளைப் போட்டு வைத்திருக்கிறான். ஒரு தலைமுறைக்குக் கிடைத்த அனுபவங்கள் பின்வரும் தலைமுறைகளுக்குக் கிடைக்காமல் போகிறது என்பதில் சைக்கிள் ஓட்டும் அனுபவமும் சேர்ந்து போகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.