

எனக்கு வயது 50. கடந்த 4 ஆண்டுகளாக நீரிழவு நோயால் அவதியுறுகிறேன். 2 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு கருப்பையை எடுத்துவிட்டார்கள் (HYSTERECTOMY - TOTAL). என்னுடைய தற்சமய எடை- 90 கிலோ, உயரம் 5 அடி. பல டெஸ்டுகள் செய்துவிட்டேன். கொலஸ்டிரால், தைராய்டு டெஸ்ட் அனைத்தும் நார்மல். எடை அதிகமாக இருப்பதால் கால் வலி ஏற்படுகிறது. என்னுடைய எடையைக் குறைக்க தாங்கள் நல்ல அறிவுரை, மருந்து வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
-விஜயலட்சுமி, சென்னை.
உடலில் கொழுப்பு சத்து அதிகம் வளர்ந்துவிட்டால், உடல் உட்புற நுண்ணிய ஓட்டைகள் அடைபடுகின்றன. அதனால் ஏற்படும் தடையால், வாயு வயிற்றுக்குள் அதிகம் பரவி பசித்தீயைத் தூண்டிவிடச் செய்கிறது. அதனால் பசி, தாகம் அதிகப்படுகிறது.
வியர்வையைப் பெருக்கும் நரம்புகள் கொழுப்பிற்கு இருப்பிடமாக இருப்பதாலும், கொழுப்பு உருகும் தன்மையுடையதாலும், கபத்துடன் கலந்திருப்பதாலும், அதிகப் பருமன் உள்ளவர்களின் உடலிலிருந்து வியர்வை அதிகம் வெளிப்படுகிறது.
அதிக பருமனான மனிதர்களுடைய உடல் உட்புற ஓட்டைகளின் அடைப்பினால், வயிற்றில் உள்ள உணவுச் சத்து, உடல் முழுவதும் பரவுவதில்லை. கொழுப்பு அதிகரிக்கிறது. கொழுப்பில் மிஞ்சிய உணவுச் சத்து, சிறிதளவே இருப்பதால் இரத்தம் போன்ற தாதுக்களை வளர்ப்பதற்குப் போதுமானதாக இருப்பதில்லை. கொழுப்பினால் பருத்த உடலுடையவர்கள் மேல்மூச்சு, காய்ச்சல், மகோதரம், பவுத்திரம், நீரிழிவு, சிறுகட்டிகள், பெருங்கட்டிகள் போன்ற உபாதைகளால் அடிக்கடி துன்புற நேரிடும். மேலும் அளவுக்கு மீறி உடல் பருமானாவதால், உற்சாகமின்மை, புட்டம், வயிறு, மார்பகம் பெரிதாகுதல் போன்றவையும் ஏற்படுகின்றன.
அதனால் உங்களைப் போன்ற உடல் பருமனால் அவதியுறும் நபர்களுக்கு வாதத்தையும், கொழுப்பையும், கபத்தையும் நீக்கக் கூடிய உணவுப்பட்டியல் அவசியமாகிறது. அந்த வகையில்-
• கொள்ளு, காராமணி, யவை எனும் வாற்கோதுமை, கம்பு, மொச்சை, பயறு போன்ற தானியங்களை காலை உணவாகப் பயன்படுத்தல் நலம் தரும்.
• தேன் கலந்த தண்ணீரை உணவிற்குப் பிறகு குடிக்கப் பயன்படுத்தவும்.
• லோத்ராசவும், அயஸ்கிருதி, நிம்பாமிருதாஸவம் போன்ற ஆயுர்வேத மருந்துகளை மருத்துவர் ஆலோசனைப்படி பயன்படுத்தலாம்.
• தெளிந்த மோர், ஊடுருவும் தன்மையும், சூடான வீரியமும், வறட்சியை ஏற்படுத்தக் கூடியதும், பிளக்கும் தன்மையுடையதுமான சில ஆயுர்வேத மருந்துகளாகிய வரணாதி கஷாயம், காஞ்சநாரகுக்குலு எனும் மாத்திரை மேதோஹரகுக்குலு மாத்திரை, திரயோதசாங்ககுக்குலு மாத்திரை, சிலாசத்து பற்பம் , யோகராஜகுக்குலு மாத்திரை போன்றவையும் மருத்துவரின் ஆலோசனைப்படி தேர்ந்தெடுத்துச் சாப்பிட தரமான மருந்துகளாகும்.
• கவலைப்படுதல், உடற்பயிற்சி, வாந்தி- பேதிக்குக் கொடுத்து உடலைச் சுத்தம் செய்தல், குறைவாகத் தூங்குதல் போன்றவற்றை உடலுக்கு ஏற்றவாறு கடைப்பிடிக்க வேண்டும்.
• இதே போன்று, வறட்சியளிக்கக் கூடிய ஏலாதி சூரணம், ராஸ்னாதி சூரணம், கச்சோராதி சூரணம் போன்ற மருந்துகளில் ஒன்றிரண்டை உடலில் தேய்த்துக் குளிக்க பயன்படுத்த வேண்டும்.
• கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் இவற்றின் தூளாகிய திரிபலா சூரணத்தைத் தேனில் கலந்து பருகச் செய்தலும் நல்லதே.
• யவ அரிசி எனும் வாற்கோதுமையை, நெல்லிமுள்ளி சூரணத்துடன் கொடுத்தால் அது அதிகப் பருமனைக் குறைக்கும்.
• மஞ்சளை உணவில் சற்று தூக்கலாகப் பயன்படுத்தினால் சர்க்கரை உபாதையின் தாக்கத்தையும், உடல் பருமனையும் குறைக்கும்.
• கோரைக்கிழங்கும், கருங்காலிக்கட்டையும் சுமார் 15 கிராம் மொத்தமாக எடுத்து, ஒருலிட்டர் தண்ணீரில் வேக வைத்து, அரைலிட்டராகக் குறுக்கி, வடிகட்டி, ஒரு நாளில் பல தடவை, சிறுக சிறுகப் பருகுவதால் அது உடல் பருமனைக் குறைக்க உதவிடும்.
• பெருங்காயத்தையும் ஓமத்தையும் பொடித்து தயிர்த்தெளிவுடன் சாப்பிட, நீர்ச்சுருக்கு, கிருமிநோய்கள், சர்க்கரை உபாதை, பருமன் போன்றவை கட்டுப்
படும்.
• சுக்கு, மிளகு, திப்பிலி சூரணத்திற்கு "திரிகடுகம்' என்று பெயர். நீர்மோருடன் சாப்பிட நல்லது.
• "உத்வர்த்தனம்' எனும் சிகிச்சை முறை உங்களுக்கு உதவிடலாம். புளித்த மோரை உத்வர்த்தனம் எனும் சூரண மருந்துடன் கலந்து சூடாக்கி உடலெங்கும் கீழிருந்து மேலாகவும் உருட்டி உருட்டித் தேய்க்கும் சிகிச்சை முறையாலும் உடல் பருமனைக் குறைக்கலாம்.
(தொடரும்)
பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.