சதைச் சுருணைகள்

சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் மூன்றாம் ஆண்டு படிக்கும் என்னுடைய மூத்த மகள் பவித்ரா வெள்ளிக்கிழமை மாலை வீட்டுக்கு வந்திருந்தாள்.
சதைச் சுருணைகள்

சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் மூன்றாம் ஆண்டு படிக்கும் என்னுடைய மூத்த மகள் பவித்ரா வெள்ளிக்கிழமை மாலை வீட்டுக்கு வந்திருந்தாள். வரும்போது கையில் ஓர் அட்டைப் பெட்டியை ஜாக்கிரதையாய் கொண்டு வந்து மேஜை மேல் வைத்தாள். 

""இன்னாதும்மா கண்ணே ?''

அவள் முகமெல்லாம் மகிழ்ச்சி வழிய, ""திறந்து பாருங்க'' என்றாள். 

""ஐயோ! இன்னா பீடிகை பலமாக இருக்கு'' 

கட்டை அவிழ்த்து மெதுவாக திறந்தவன் அப்படியே நின்று விட் டேன். உள்ளே இன்னும் கண்களைக் கூட திறக்காத, சிறகுகளே முளைக்காத, சதைச் சுருணைகளாக, தலை மட்டும் சற்று பெரியதாக, இரண்டு கிளிக்குஞ்சுகள். மூக்கின் அமைப்பினாலும், மேலே படர்ந்திருக்கும் ஒன்றிரண்டு பச்சை வர்ண ரோமங்களாலும் தான்  கிளிக்குஞ்சு என்று அடையாளம் காண முடிந்தது. மற்றபடி கைகளில் எடுக்க கூசும்படி மிருதுவான  சதைச் சுருணைகள். அச்சத்தினாலோ, அனிச்சை செயலாகவோ அவைகள் மூலையில் ஒன்றன் மேல் ஒன்றாய் ஒடுங்கிக் கொண்டிருந்தன. 

சின்னவள் விசாலி எட்டி பார்த்துவிட்டு. ""ஹைய்யா...ஹைய்யா'' என்று குதிக்க ஆரம்பித்து விட்டாள். எனக்கு சுரு சுருவென்று ஆத்திரம் எழுந்தது.

""உனக்கு இது எங்கே கிடைச்சிது''                                                                                                                                      
""மூர் மார்கெட் பின்னால விக்கிறாங்கப்பா. ஜதை 250/- ரூபா. என் ஃப்ரண்ட்ஸ் எல்லாம் கூட வாங்கினாங்க''
""உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா? பாவி..பாவி... கண்களைக் கூட திறக்காத இந்த பச்சை மண்ணை அதும் அம்மா கிட்ட இருந்து பிரிச்சிட்டியே. அந்த பாவம் நம்மளை சும்மா விடுமா? இந்த ஸ்டேஜ்ல அதுங்க அம்மாவுடைய கதகதப்பிலேதான் வளரணும். அப்பத்தான் உசுரு தக்கும். பார்த்துக்கிட்டே இரு ரெண்டும்  கண்டிப்பா செத்துரும். நம்மால காப்பாத்த முடியாது பாவி'' அவளுக்கு புர்ரென்று வந்துவிட்டது.

""அப்பா! நான் ஒண்ணும் அத பிரிச்சி கொண்டாரலே... எவனோ கொண்டாந்து விக்கிறான், வாங்கியாந்தேன்.   ஆனா என்னை பழி சொல்லணும் உங்களுக்கு'' 

""த்தூ! பேசாத. நீ வாங்கறதாலதான் அவன் விக்கிறான். இதுங்களை வளர்க்கிறப்ப இருக்கிற சந்தோஷத்தை விட செத்து போறப்ப ஏற்பட்ற வலி இருக்கே அது ரொம்ப கொடுமை. நான் சின்ன வயசில அனுபவிச்சிருக்கேன்'' வேதனையுடன் சொன்னேன். 

அன்றைக்கெல்லாம் கோபமாய் முறுக்கிக் கொண்டு நின்ற பவித்ரா, மறுநாள் விடியற்காலையே கிளிக் குஞ்சுகளை அப்படியே போட்டுவிட்டு நிம்மதியாக கிளம்பி விட்டாள். இது அவளுடைய இயல்பு. அவள் எப்பவுமே இப்படித்தான். கொஞ்சுவதற்கு மட்டும் தான் அவளுக்கு ஒரு பெட் தேவை. பாடு எடுக்கிறது குடும்பத்தில இருக்கிற மற்றவங்க... எனக்கு சுபாவத்திலேயே பூஞ்சை மனசு. காப்பாத்தறது பெருசில்லை, எப்படி அவைகளை அதன் கூட்டத்தில் 
சேர்க்கிறது?  

ராத்திரியெல்லாம் விதவிதமான யோசனைகள், திட்டங்கள். காலையில் நான் எழுந்திருக்க ஏழு மணியாயிடுச்சி. ஹாலில் அம்மாவும், சின்னவள் விசாலியும் கிளிகளை மடியில் வைத்துக் கொண்டு அரைத்த ஆப்பிள் சோற்றை அலகுகளைப் பிளந்து ஊட்டிக் கொண்டிருந்தார்கள். என்னைப் பார்த்தவுடன் மகிழ்ச்சியுடன் 

""அப்பா...அப்பா! எவ்வளவு சீக்கிரம் சாப்பிட கத்துக்கிச்சிங்க பாருங்க'' பார்க்கும் போது அலகில் ஊட்டிய பழ மசியலை "லபக் லபக்' என்று முழுங்கிக் கொண்டிருந்தன. நான் என் பங்குக்கு சிறிதளவு தண்ணீரைக் கொண்டுவந்து பில்லர் மூலம் சொட்டு சொட்டாய்ப் புகட்டினேன். போதாக் குறைக்கு என்னுடைய அம்மாவும் வேறு சில பத்தியங்களை சொல்லிக் கொண்டிருந்தார்கள். இப்படித்தான் எங்கள் வீட்டில் கிளி வளர்ப்பு ஆரம்பமாயிற்று. 

வீட்டில் எல்லாருமே செவிலித் தாயாக மாறியதில் எந்நேரமும் அதுங்க வயிறு "பம்' என்று உப்பிக் கிடக்கும்... இப்போதெல்லாம் விதவிதமான  பழவகைகளை தேடிப் பிடிச்சி வாங்க  ஆரம்பித்தேன். ஒருநாள் பழுத்த கொடுக்காப்புளி பழம், மறுநாள் நாவற்பழம், இன்னொரு நாள் அத்திப்பழம், ஒன்றையும் விட்டுவைக்கவில்லை. மெனு லிஸ்டில் வாதுமை பருப்புகளும், முந்திரி பருப்புகளும், வேர்க்கடலை பயறுகளும், நெல்லும், சோளக்கதிர்களும், அடக்கம். உழவர் சந்தையில ஒருநாள், மார்க்கெட்ல, ஆரணி கூட்ரோடில, வார சந்தையில... வில்லியர்கள் கிட்ட சொல்லி வெச்சி ஒருநாள். இப்படித்தான் சேகரிக்கிறேன்... இதுதான் வேலியில் போற ஓணானை எடுத்து மடியில விட்டுக்கிட்டவன் கதை. இது தொழிலற்றவன் வேலைன்னு தோணுதில்லே... என்ன பண்றது? மனசு கேட்கவில்லையே. கொடுக்கும் ஊட்டத்தில் அவற்றுக்கு வேகமான வளர்ச்சி. இரண்டு மூணு மாதங்களில் உடல் முழுக்க நன்றாக சிறகுகள் முளைத்து விட்டன. ஆட்களை பார்த்துவிட்டால் க்கீ...கீ...கீ... என்று குரல் கொடுக்க கற்றுக் கொண்டன.

வந்து ரெண்டொரு நாளிலேயே பெருசா ஒரு கூண்டு வந்து இறங்கி விட்டது என்று சொல்லத் தேவையில்லை. பூனை உலாத்துகிற வீடு இது. ஸ்கூல் போற நேரம் தவிர மற்ற நேரங்களில் கிளிகளை எடுத்து வெச்சிக்கிட்டு கொஞ்சுகிறதுதான் விசாலியின் வேலை.                    

அன்றைக்கு மதியம் நான் உள்ளே வேலையாய் இருந்தேன். க்கீ...கீ..கீ... ரெண்டும் போடுகிற கூச்சல் தெருவரைக்கும் கேட்கிறது.                                 

""இன்னாடா அங்க சத்தம்''  கையில் டானிக் பாட்டிலையும் பில்லரையும் எடுத்துக்கிட்டு வெளியே வந்தேன்... கிளிகள் கிட்ட பவித்ரா நிற்கிறாள். எப்ப வந்தாள்?  ""இதென்னப்பா ஹால்ல மரம் வளர்க்கறீங்க?''- கைகளை துடைத்துக் கொண்டே வந்த நீலா, "" அதை ஏன் கேக்கற. ரெண்டு நாளுக்கு ஒரு கிளை மாத்தியாவுது. தோட்டத்து வேப்பமரத்தை இன்னும் ஒருவாரத்தில மொட்டையடிச்சிடுவாரு. கிளிங்க மரத்தில வாழற ஃபீலிங்கோட வளரணுமாம்''

""சரி...சரி...நீ எப்படா வந்த? சொல்லாம கொள்ளாம வந்து நிக்கிற'' அவள் சிரித்து விட்டு ""இன்னாப்பா பொழுது சந்தோஷமா போறாப்பல தெரியுது? எங்களுக்கு என்னைக்காவது ஒரு ஹார்லிக்ஸ் வாங்கி குடுத்திருப்பீங்களா? கிளிக்குட்டிகளுக்கு, டானிக்காமே, வித விதமா பழ தினுசாம். கீரைக்கட்டு வேற. டெய்லி எனக்கு மெசேஜ் வந்திடுது'' எனக்கு லஜ்ஜையாக இருந்தது. சிரிச்சிட்டேன்.

""என்ன பண்றது அதுங்களை காப்பாத்தி கிளிங்க கூட்டத்தில சேர்த்து விட்டுடணுமே. இதுங்களின் எலும்பு வளர்ச்சிக்கு கால்ஸிய சத்து அவசியம் வேணுமாம். அதான்''

""ஊர்ல தாய் கிளிகள்லாம் எந்த கடையில டானிக் வாங்குதோ தெரியலையே ஏம்பா''  சொல்லிவிட்டு சிரித்தாள்.                                                       

""சரி சரி இனிமே கிளிக்குட்டீன்னு கூப்பிடாதீங்க. அதுங்க பேரு ஜிப்ஸி, பெப்ஸி, பேரை சொல்லி பழக்கப் படுத்துங்க'' 

அன்றையில இருந்து அதுகளுக்கு வீட்டில் ஆளாளுக்கும் டியூஷன் எடுக்க ஆரம்பிச்சிட்டோம். அடுத்த வார கடைசியில வந்திருந்த பவித்ரா இதையெல்லாம் பார்த்துட்டு டியூஷனில் ஒரு ஒழுங்குமுறையை கொண்டு வந்தாள். 

""அப்பா! நீங்க "அப்பா'ன்ற ஒரு வார்த்தையை மட்டும் கத்துக் கொடுங்க. அம்மா "அம்மா'ன்ற ஒரு வார்த்தையை மட்டும் கத்துக் கொடுக்கட்டும். அதுபோல நானு "அக்கா'ன்றதையும், ஆயா "ஆயா'வையும் சொல்லித் தருகிறோம். ஏய்! விசாலி! நீ சின்னக்கான்னு சொல்லணும் சரியா? அப்பத்தான் அதுகள்  அப்பாவைப் பார்த்தா அப்பான்னுதான் கூப்பிடுமே தவிர அம்மான்னு கூப்பிடாது''

அவள் கொண்டுவந்த சட்ட ஷரத்துகள் ஏகமனதாக நிறைவேறின. 

கிளிகளுக்கு பேச்சுப் பயிற்சி மும்முரமாக நடந்து கொண்டிருக்க, அவற்றை வீட்டுக்குள்ளே ஃப்ரீயாக விட்டுட்டோம். ரெண்டும் குறுக்கும் நெடுக்கும் வேகமாக பறக்க ஆரம்பிச்சிட்டுதுங்க. மேலும் சில வார்த்தைகளை உச்சரிக்க தெரிந்துக் கொண்டன. பகலெல்லாம்  வெளிக் கதவையும், தோட்டக் கதவையும் மூடியே வைக்கிறது நடைமுறைக்கு வந்து விட்டது. பகலில் வீட்டில என்ன புழுக்கமாக இருந்தாலும் யாரும் ஃபேன் போடுவதில்லை. ஜன்னல்களுக்கு நெட்லான் அடிச்சிருக்கு பயமில்லை. யாரு வெளியே போய் உள்ளே வந்தாலும் இரண்டும் கீ..கீ..கீ... என்று கத்திக் கொண்டே எங்கிருந்தாலும் பறந்து வந்து அவங்க தோளில் உட்கார்ந்து கொள்ள தெரிந்து கொண்டன. உட்கார்ந்து காதுகிட்ட நகர்ந்து வந்து கிள்ளைக் குரலில் "அப்பா..அப்பா' அதுபோலவே "அம்மா' ,  விசாலி கிட்ட "சின்க்கா'. அவை  பேசப் பேச தன்னால வளரும் ரோமம் போல கொஞ்சம் கொஞ்சமாக நாங்கள் தன்வசமிழந்து நெருக்கமாகிப் போனோம். எங்கள் குடும்பத்தில ஒருத்தராகவே நினைக்க ஆரம்பிச்சிட்டோம்...  விடிந்தப்புறம் யாரும் படுக்கையில் புரண்டுகிட்டிருக்க முடியாது. பறந்து அங்கேயே வந்துவிடும் காதுகிட்டே வந்து ரெண்டும் ஒரே கூச்சல். எழுந்து வெளியே போகும் வரைக்கும் விடாதுகள். இதை யார் சொல்லிக் கொடுத்தாங்க? என் அம்மாவுக்கு கொள்ளை சந்தோஷம். அவ்வப்போது எங்கிட்டேயும், மருமவ கிட்டேயும் சொல்லிச் சொல்லி மகிழ்வாள். 

அடுத்த மாசத்தில் ஒருநாள் என் அடுத்த கட்ட நடவடிக்கைக்காக  காயை நகர்த்தினேன். 

இன்றைக்குத்தான் ஜிப்ஸி, பெப்ஸிகளை கொண்டு போய் கிளிக்கூட்டத்தில விட்டுட்டு வர முடிவு செய்திருக்கிறேன்'' என்றேன். 

வீடு நிசப்தமாக இருக்கிறது. மூன்று பேரும் மவுனமாக இருந்தார்கள். யாருக்கும் சம்மதமில்லை.

""தோ பாருங்க, எனக்குக் கூட மனசுக்கு கஷ்டமாகத்தான் இருக்கு, நம்ம வீட்டு குழந்தைங்க மாதிரி எட்டு மாசமா அதுங்க நம்ம கூட வாழ்ந்தாச்சில்ல? அதான் நமக்கு கஷ்டமாயிருக்கு...''  ""இருந்தாலும் நான் செய்யறதுதான் சரி. பலதடவை அதுங்களை கூண்டோடு கொண்டுபோய் மொட்டை மாடியில வெச்சிருக்கேன். அப்படி வைக்கிறப்போ கொஞ்ச நேரத்தில எவ்வளவு கிளிங்க அங்க வந்து சேர்ந்துடும் தெரியுமா? கீ..கீ..கீ..ன்னு ஒரே கூச்சல். கூண்டை சுத்தி வந்து உட்கார்ந்துக்கிட்டு. கோரஸாக கத்தும். அப்பல்லாம் இதுங்க ரெண்டும் எவ்வளவு சோகமாயிடும் தெரியுமா? பாவம் இதுங்க. வாணாம் விட்ருவோம். ரெண்டும் பெருசாயிடுச்சி. வெளியே போனால் சமாளிச்சிக்கும்'' விசாலி அப்பவே அழ ஆரம்பிச்சிட்டாள்.       

மறுநாள் காலையிலேயே விசாலியின் அழுகையினூடே அவற்றைக் கூண்டில் வைத்து டூ வீலரில் மாட்டிக் கொண்டு கிளம்பி விட்டேன். என்னுடைய ஆபீஸூக்கு ஈசானிய மூலை பக்கம் சற்று தூரத்தில் ஒரு பெரிய ஆலமரம் இருக்கிறது. பிரமாண்டம். மரத்துக்குக் கீழே ஒரு குடும்பம் வசித்துக் கொண்டு, மூங்கில் கூடை முடையும் தொழிலை செய்து  கொண்டிருந்தன. அந்த மரத்தில் நிறைய கிளிகள் இருப்பதை பார்த்திருக்கிறேன். அந்த பக்கம் போறப்போ கீ...கீ...கீ... என்று ஒரே சத்தம். என்ன இனிமையான சத்தம்? அந்த மரத்தில விட்டுடணுங்கிறது திட்டம்.

அங்கே வண்டியை நிறுத்தும் போதே கூடை முடையும் கிழவி எழுந்து வந்தாள். 
""வா சாரு...  இன்னா வோணும் மொறமா, மூங்க கூடையா?''

""அம்மா எனக்கு ஒரு தகவல் சொல்லு, இந்த மரத்தில நிறைய கிளிங்க இருக்குதில்ல''

""ஆமா சாரு. சாயரட்சைக்கு வந்து பாரு இன்னா கூச்ச போடுதுங்கன்னு. ஆமா இன்னா விசயம்''

""எம் பொண்ணு ரெண்டு கிளிக்குஞ்சுங்களை மெட்ராஸில இருந்து வாங்கியாந்துட்டா. எனக்கு தாங்கல அதன் கூட்டத்தோட இருக்கிறதுதான் சரி. அதனால இங்க கிளையில விட்டுட்டா, அதுங்க கூட்டத்தோட சேர்ந்துப்புடும்னு கொண்டாந்தேன்'' 

அவள் அவசர அவசரமாக கையால் மறுத்தாள்:

""வாணாம்...வாணாம்பா! அதுங்க இத்த கூட்டத்தில் சேர்க்காதுப்பா. அப்படித்தான் உன்ன மாரியே ஒரு ஆளு ஒரு கிளியைக் கொண்டாந்து வுட்டாரு. அவ்வளவுதான் உடனே எல்லாம்  சர்ர்ருன்னு இறங்கி வந்து அத கொத்தி கொத்தி ரெண்டு நிமிசத்தில கொன்னு போட்டுட்டு பூட்ச்சிங்க சாரு. இப்ப நீ வுட்ட, உன் கண்ணெதிரிலேயே இதுங்களை கொன்னு போட்ரும். மேல பாரு எம்மாங் கிளிங்க... அதுங்களோட குஞ்சிங்க கூட்டுல இருந்து தவறி கீழே விழுந்துபுட்டா கூட சேர்க்கிறதில்லபா. அத்தையும் அப்பவே கொன்னு போட்டுட்துங்க. எம்மாம் பாக்கிறேன்''

எனக்கு வருத்தமாக இருந்தது. இப்படி ஒரு விஷயம் இருக்கிறதை நான் எதிர்பார்க்கவில்லை. இதுக்கு மேல என்ன பண்ணுவதென்று புரியவில்லை. விட்டால் கொலை பாதகமாயிடும் போலிருக்கே. கவலையாக இருந்தது. இதுகளை தாய்க்கிளி கிட்டயிருந்து பிரிச்ச தோஷத்துக்கு என்ன பரிகாரம் செஞ்சி திருத்துப்பாடு பண்ணப் போகிறோமோ? பகவானே!  சரி... நடக்கிறது நடக்கட்டும் என்று அவற்றுடன் வீட்டுக்குக் கிளம்பினேன்.

கூண்டை சிட்வுட்டில் வைத்து விட்டு உள்ளே போனேன். பின் வாசலில் மாமியாரும் மருமவளும் மவுனமாக உட்கார்ந்திருந்தனர், விசாலி அழுது ஓய்ந்து இப்போது அம்மாவின் மடியில் கண்முடி படுத்திருக்கிறாள்.

""வூடே வெறிச்னு போச்சுடா. கீ..கீ..கீன்னு எந்நேரமும் என்னா சத்தமா இருக்கும்.  அப்படி உட்காரக் முடியாது. ரெண்டும் ஓடியாந்து என் தோள்ல தொத்திக்கும். ஆயா... ஆயான்னு என்னமா கூப்புடும்? தடால்னு இப்படி பிரிச்சிட்டியடா'' கொஞ்ச நேரம் யாரும் எதுவும் பேசவில்லை. துக்க வீடுமாதிரி நிசப்தம்.

க்கீ...கீ...கீ...  திடுக்கிட்டு என்னைப் பார்த்தார்கள். அவநம்பிக்கையாய் சந்தோஷக் கீற்று. விசாலி ஓடிப்போயி ஹாலில் தேடுகிறாள்

""அதுங்களை திருப்பி கொண்டு வந்துட்டேன். சிட்டவுட்ல கூண்டு இருக்கு''

எல்லாரும் "ஜிப்ஸீ...பெப்ஸீ..' என்று கத்திக் கொண்டு எழுந்தோடினார்கள். 

க்கீ..கீ..கீ.., அம்மா... ! வா, ஆயா! சின்க்கா!  - இரண்டும் ஒரே கத்தல். அன்றைக்கு அப்படி சிரித்தார்கள். 

""ஏங்க! இனிமே அதுகளை விடுகிற பேச்சே வாணாம். நம்ம கூடவே இருந்துட்டு போய் சேரட்டும்'' 

""எவ்வளவு நாளைக்கு... கிளியின் சராசரி வயசு என்ன தெரியுமா... அம்பது வருஷம்... அவ்வளவு வருஷங்களும்  கூண்டு சிறையிலேயே கிடந்து தனக்குன்னு ஒரு வாழ்க்கையே இல்லாம, ஜோடி இல்லாம, சாவணுமா? இந்த பாவம் நம்மள சும்மா விடாதடீ''

""ஏன் இப்ப ஜோடியாத்தான இருக்கு?''

ரெண்டுமே ஆண்கிளிங்க''.  

""சும்மா நேரத்துக்கு ஏத்தாப்பல கதை விடாதீங்க. ஆண் பொண்ணு என்றதை அவ்வளவு சுலுவா கண்டுபிடிக்க முடியாதாம். மூணாவது வயசுல முட்டை போட்றதை வெச்சித்தான் கண்டு பிடிப்பாங்களாம், படிச்சிருக்கேன். நீங்க எப்படி கண்டுபிடிச்சிட்டீங்களாம்.'' 

""ரெண்டு நாளைக்கு முன்னால ஒரு ஜோலியா காஞ்சீபுரம்  போய் வந்தேனே, இன்னா ஜோலி? கிளிகளை புடிச்சி வந்து கிளிஜோஸ்யத்துக்கு பழக்கற கும்பல் ஒண்ணு காஞ்சீபுரம் ஒலிமுகமது பேட்டையில இருக்குது தெரியுமா?அங்கபோயி தெரிஞ்சிக்கிட்டு வந்தேன்டீ. தெரிஞ்சிக்கோ... ஆண்கிளின்னா வாலை இடவலமாத்தான் ஆட்டுமாம். பெண்கிளி மேலுங் கீழுமா மட்டுந்தான் ஆட்டுமாம். இங்க ஜிப்ஸியும், பெப்ஸியும் இடவலமாத்தான் ஆட்டுதுங்க. செக் பண்ணிட்டுத்தான் சொல்றேன்''

என்ன சொல்லியும் மாமியாரும் மருமவளும், சின்னவளும், ஒண்ணுசேர்ந்துவிட, என் கட்சி பலவீனப் பட்டு போச்சுது.

ஆனாலும் நான் விடுவதாக இல்லை. நல்லவனுக்கு அர்த்தம் சொல்லாம செய்யறதுதான்... சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தேன். அந்த ஒரு நாளும் வந்தது. அன்று ஞாயிற்றுக்கிழமை. காலை எட்டு மணியிருக்கும். காலை ஆறுமணிக்கெல்லாம் ஜிப்ஸியையும், பெப்ஸியையும் கூண்டிலிருந்து திறந்து விட்டாச்சி. ரெண்டும் துணி போடும் கொடிமேலே உட்கார்ந்திருந்தன.பவித்ராவும் வந்திருந்தாள். நீலாம்பாள் சமையற்கட்டில் பிஸியாக இருக்க, அம்மா தெருக்கோடி பிள்ளையார் கோவிலுக்குப் போயிருந்தாள், பவித்ரா ராத்திரி ரொம்ப நேரம் எதையோ படித்து குறிப்பு எடுத்துக் கொண்டிருந்ததால் இன்னும் எழுந்திருக்க வில்லை. அக்காவும் தங்கச்சியும் போட்டி போட்டுக்கிட்டு தூங்கறாளுங்க. நான் பின் கதவை மெதுவாக திறந்து வைத்துவிட்டு காத்திருந்தேன். அதுவாக போயிடுச்சின்னா மனசு குத்தாது. சர்ரென்று இரண்டும் மேலெழும்பி இரண்டு முறை ஹாலில் குறுக்கும் நெடுக்கும் பறந்து விட்டு சரேலென வெளியே பாய்ந்து விட்டன.

""ஐய்யய்யோ! ஜிப்ஸி!..., பெப்ஸி...''

நான் போட்ட கூச்சல் அதன் காதுகளில் விழுந்ததோ இல்லையோ வீட்டிலுள்ளவர்கள் காதில் விழுந்து விட்டது. நீலாவும், பவித்ராவும், விசாலியும், ஓடிவர, அப்போதுதான் உள்ளே நுழைந்து கொண்டிருந்த என்னுடைய அம்மாவுக்கும் ஏதோ விபரீதம் என்று புரிஞ்சி போச்சி. ஓடிவந்தார்கள்.

""என்ன... என்ன..? கிளிங்க எங்கடா?''  

""பறந்துபோயிடுச்சிங்க'' 

""இன்னாடா சொல்ற'' 

""வாசலுக்கு போவலாம்னு பின் கதவை திறந்தேம்மா... அவ்வளவுதான். நினைக்கவே இல்லை சர்ர்னு போயிடுச்சிங்க''

""ஐயோ ...ஐயோ ...  அதுங்களுக்கு எம்மாம் பாடு எடுத்திருப்பேன்? போறன் வரேன்னு ஒரு வார்த்தை சொல்லலியே'' பாச மேலீட்டில் பேசும் வார்த்தைகளில் அர்த்தம் இருப்பதில்லை, உணர்ச்சி மட்டுமே வெளிப்படும் என்பது நிஜந்தான்.
""அட அதுங்க என்கிட்டியே சொல்லலம்மா'' நானும் எதிர் தாளம் போட்டு முடித்துவிட்டேன்.  

இப்போது இரண்டும் பின் வீட்டு தென்னை மரத்தில் உட்கார்ந்திருந்தன. அத்தனை சீக்கிரத்தில் கிளிகள் கூட்டம் வந்து சூழ்ந்து  கொண்டிருந்தன. எப்படியும் ஒரு இருபது இருக்கும். மெதுவாக ஜிப்ஸி, பெப்ஸியை அவை நெருங்கிக் கொண்டிருந்தன. 

போச்சி... போச்சி... இன்னையோட அதுங்க ஆயுசு முடிஞ்சிடும். பெருசாயிடுச்சிங்க எந்த சூழலையும் சமாளிக்கும்னு நாம போட்ட கணக்கு தப்போ?ஐய்யயோ! தப்பு பண்ணிட்டேனே. பதற்றமாய் இருந்தது.

பெப்ஸீ!...ஜிப்ஸீ... அவை  கொல்லப்பட்டுவிடும் என்பதில் என்னுடைய அம்மாவும் , நீலாம்பாளும் கலவரமாய் அவற்றைப் பார்த்து கத்துகிறார்கள். பவித்ரா கைகளைப் பிசைந்துக் கொண்டிருந்தாள். எல்லோருமே பதட்டமாய் இருந்தோம். விசாலி கீழே உட்கார்ந்து தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தாள். வளர்த்த பாசம் கொடியதுன்னு சும்மாவா சொன்னாங்க? நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அந்த கிளிக் கூட்டம் தாக்கும் நெருக்கத்துக்கு போய்விட்டன. 

""போச்சு... போச்சு ஐயோ! குட்டீ! ஜிப்ஸீ... பெப்ஸீ... ஜிப்ஸீ... பெப்ஸீ... ஓடி வந்துட்றீ''  நீலாவுக்கும், என் அம்மாவுக்கும் குரல் உதறியது. கண்ணெதிரில் அவை  மடிவதை பார்க்க மனமில்லாமல் அம்மாவும், நீலாவும் கண்களை மூடிக் கொள்ள, க்..க்..கே... "கர்.ர்.ர்ர்.. !, க்..க்..கே..கே... கர்.ர்.ர்.ர்' கர்ணகடூரமான தொனியில் பெருங் கூச்சலுடன் ஜிப்ஸியும், பெப்ஸியும், கிளிக் கூட்டத்தின் மீது பாய,  அந்த கூச்சலுக்கே எல்லா கிளிகளும் மிரண்டு ஒடின. நாங்க கொடுத்த ஊட்டத்தினால் ஜிப்ஸியும், பெப்ஸியும், ஹைட் அண்டு வெயிட்டாக இருக்க, அந்த பர்சனாலிட்டிக்கு அவை  மிரண்டு போயிருக்கணும். இப்போது இரண்டும் கீ..கீ..கீ.. என்று கத்திக் கொண்டே பறந்து வந்து எங்கள் வீட்டு வாசலில் குளியலறையின் மேற்கூரை மேல் உட்கார்ந்தன. கூடவே கிளிக்கூட்டமும் வந்து சூழ்ந்து உட்கார்ந்தன. ஒவ்வொரு கிளியும் கழுத்து ரோமங்கள் சிலிர்க்க சீற்றத்துடன் இருப்பதில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பது புரிந்து விட்டது. ஆனால் கிளிகள் ஒன்றுகூட கிட்டே நெருங்கவில்லை என்பதையும் கவனித்தேன். பதட்டம் சற்று குறைந்தது. விசாலி உரக்க, ""ஜிப்ஸீ... பெப்ஸீ...'' என்று கத்தினாள். அவை   தலையைச் சாய்த்து அவளை ஒரு முறை பார்த்தது. அவ்வளவுதான் "சின்க்கா... கீ..கீ..கீ..'  குரல் கொடுத்து விட்டு எழும்பியது. நாங்கள் "ஜிப்ஸி..பெப்ஸீ..' என்று கத்திக் கொண்டே இருக்க, அவை  எழும்பி சடக்கென்று தென் திசை பக்கம் பறந்து போயின. கூடவே மொத்த கிளிக் கூட்டமும் ஆக்ரோஷத்துடன் துரத்திக் கொண்டு சென்றன. எல்லாரும் செயலற்று நிற்க, "சின்க்கா' என்ற சின்னக்கா ஓவென்று அழ ஆரம்பித்தாள். அவ்வளவுதான் அதற்கப்புறம் திரும்பவும் நாங்கள் அவற்றைப் பார்க்கவே இல்லை வீடு மவுனமாக துக்கம் அனுஷ்டித்துக் கொண்டிருந்தது.

""இந்நேரம் மத்த கிளிங்கள்லாம் சேர்ந்து பெப்ஸி ஜிப்ஸிய கொன்னு போட்டிருக்குமாடா''மதியம் அம்மா பரிதாபமாக கேட்டாள். பவித்ரா கொஞ்சம் பரவாயில்லை. நீலா அவ்வளவு சுலபத்தில் துக்கத்தை வெளிக்காட்ட மாட்டாள். விசாலி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள். எல்லாரும் என் பதிலுக்காக காத்திருக்கிறார்கள்.

""என்னது கொன்னு போட்றதா... எல்லாரும் பார்த்தீங்கள்ல?, நம்ம பசங்க  போட்டஒரு சீறலுக்கே எல்லாம் தலை தெறிக்க ஓடிப் போச்சிங்களே.  அப்பா இன்னா மாதிரி ஒரு கர்ஜனை? நான் எதிர்பார்க்கவே இல்லை. இந்நேரம் அந்த கூட்டத்துக்கே நம்மாளுங்கதாம்மா தலைமை. தெரிஞ்சிக்கோங்க.. சும்மாவா?

பாதாம் பருப்பும், முந்திரி பருப்பும் கொஞ்சமாகவா இறங்கியிருக்குது''- நான் பகபகவென்று சிரிக்க, என் வார்த்தையில் எல்லாருக்கும் மனசு பளிச்சென்று தெளிஞ்சி போச்சி. மனம் விட்டு சிரித்தார்கள். நானும் சிரித்துவிட்டு, என் அறைக்குள் சென்றேன். பின்னாலேயே நீலாம்பாள் வந்தாள்.

""சொன்னது நிஜமாங்க? எப்படி சொல்றீங்க''

""ஒரு சாத்தியந்தான். எல்லா உயிர்களிடமும் இருக்கிற பொது பண்பு என்ன தெரியுமா? எதிரியை அடக்க ட்ரை பண்ணும், முடியலேன்னா அடங்கிப் போயிடும்.  ஆக உண்மை எப்படி வேண்டுமானாலும் இருந்துட்டுப் போகட்டும். நாம இப்படித்தான் பாஸிட்டிவ்வாக நினைச்சிக்கணும் தெரியுதா? இதுக்கெல்லாம் சும்மா அழுது ஆர்ப்பாட்டம் பண்ணிக்கிட்டிருக்கக் கூடாது. அதுங்களை வீடு வரைக்கும் கொண்டு வந்தது தப்பு, கொண்டு வந்துட்டோம். இப்ப அதுங்களை தன் இனங்களோடு சேர்த்து வெச்சி பரிகாரம் பண்ணிட்டோம்.. சரியா''  சொல்லிவிட்டு நான் அலட்சியமாக திரும்ப, நீலா சூட்சுமக்காரி... ஒரு கணப் பொழுதில்  என்னுடைய கண் ஈரத்தை கண்டுபிடித்து விட்டாள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com