
அண்மையில் காலமான தினமணி முன்னாள் ஆசிரியரும், கல்வெட்டு ஆராய்ச்சியாளருமான ஐராவதம் மகாதேவன்,தனது மறைந்த மகன் வித்யாசாகர் பெயரில் நடத்தி வந்த கல்வி அறக்கட்டளை பணம் ரூ 40 லட்சம் தொகையை ராமகிருஷ்ணமடத்துக்கு வழங்குமாறு உயில் எழுதி இருந்தார்.
மறைந்த ஐராவதம் மகாதேவனுக்கு பல ஆண்டுகளாக பணிவிடை புரிந்து உதவியாளராக இருந்த ஆர். லட்சுமி கூறியது:
""எந்த ஒரு பணியையும் திட்டமிட்டபடி குறித்த சமயத்தில் முடித்து விட வேண்டும் என்பதில் ஆர்வமாக இருப்பார். தான் உண்மை, நேர்மையைக் கடைப்பிடிப்பது போல் பிறரும் உண்மையாகவும்,நேர்மையாகவும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்.
இந்திய ஆட்சிப்பணியில் சேர்வதற்கு முன்பு அன்றைய பிரதமர் நேரு அவரிடம் அயல்நாட்டுத் தூதரகப் பணியில் சேருமாறு கூறியபோது, நாட்டு மக்களுக்குப் பணிபுரிய விரும்பும் நான் இங்கு தான் பணிபுரிவேன் என்று மறுத்து இந்திய ஆட்சிப் பணியில் சேர்ந்தார். முதன்முதலாக அவர் உதவி ஆட்சியராகப் பணிபுரிந்த ஊர் பொள்ளாச்சி.
அவர் இந்திய ஆட்சிப்பணியில் 25 வருடங்கள் நிறைவு செய்து,தொழில்துறைச் செயலராக ஓய்வு பெறுவதற்கு முன் அவர் மேற்பார்வையில் கரூர் அருகில் புகளூரில் தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனம், தமிழ்நாடு உப்பு உற்பத்திக் கழகம், தூத்துக்குடியில் தூத்துக்குடி அல்கலிக் கார்ப்பரேஷன் உள்ளிட்ட சில நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. தில்லியில் வெற்றிகரமாகச் செயல்பட்டு வந்த தனியார் சூப்பர் மார்க்கெட் பாணியில், சென்னையில் காமதேனு கூட்டுறவு அங்காடியைத் தொடங்கியதும் அவர் தான்.
நேர்மைக்கு உதாரணபுருஷராகத் திகழ்ந்த அவருக்கும் வருமானவரித்துறையால் ஒரு சோதனை ஏற்பட்டது. திருவான்மியூரில் இருந்த அவருக்குச் சொந்தமான வீட்டை அவர் சந்தை விலைக்கும் குறைவாக குறைந்தவிலைக்கு விற்பனை செய்ததாகவும்,அதில் முறைகேடு நிகழ்ந்து விட்டதாக வருமானவரித்துறை அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது.
விசாரணைக்குப் பின்னர் தனது தவறை வருமானவரித்துறை ஒப்புக்கொண்டு அவரிடம் மன்னிப்புக் கோரியது.
ராமகிருஷ்ண மடம் உள்ளிட்ட சில சமூக சேவை நிறுவனங்களுக்கு பல ஆண்டுகளாக நன்கொடை வழங்கி வந்தார். மறைந்த தனது மகன் வித்யாசாகர் பெயரில் கல்வி அறக்கட்டளை தொடங்கி, ஜாதி, மதம், இனம் வேறுபாடு இல்லாமல், அதிக மதிப்பெண் பெற்ற ஏழை, எளிய மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கி வந்தார்.
தனது மறைவுக்குப்பின் கல்வி அறக்கட்டளையில் இருக்கும் பணத்தை ராமகிருஷ்ண மடத்துக்கு வழங்க வேண்டும் என்று உயில் எழுதி வைத்து இருந்தார். அவர் விருப்பப்படி அறக்கட்டளை கணக்கில் இருந்த ரூ.40 லட்சம் பணத்தை ராமகிருஷ்ண மடத்துக்கு வழங்குமாறு அமெரிக்காவில் வசித்து வரும் அவரது மகன் ஸ்ரீதர் கூறிவிட்டார்'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.