திரைக் கதிர்

மும்பைக்கு வருவதற்கு முன் விமான நிலையத்தில் இருக்கும் புகைப்படத்துடன் உருக்கமான பதிவை சோனாலி பகிர்ந்திருந்தார். அதில், ""என் இதயம் இருக்கும் இடத்தை நோக்கி புறப்பட்டேன்.
திரைக் கதிர்
Updated on
3 min read

"காதலர் தினம்' உள்ளிட்ட தமிழ்ப் படங்களில்  நடித்தவர் சோனாலி பிந்த்ரே. பல்வேறு ஹிந்தி படங்களிலும் அவர் நடித்திருக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன் திடீரென்று ஒரு தகவலை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார் சோனாலி. புற்று நோய் பாதித்திருப்பதாக அவர் தெரிவித்ததையடுத்து திரையுலகினரும் ரசிகர்களும் அவர் குணம் அடைய பிரார்த்திப்பதாக ஆறுதல் கூறி பதிவுகளை அனுப்பினர். அமெரிக்காவில் தங்கி நோய் பாதிப்புக்கான சிகிச்சை பெற்று வரும் சோனாலி, சமீபத்தில் தனது தலை முடியை முற்றிலுமாக அகற்றி  மொட்டை தோற்றத்துக்கு மாறினார். இந்நிலையில் அனைவரது பிரார்த்தனையுடனும், மன வலிமையுடனும் சிகிச்சை பெற்று வந்த சோனாலி, தற்போது முழுமையாகக் குணம்அடைந்து நாடு திரும்பியுள்ளார். 

மும்பைக்கு வருவதற்கு முன் விமான நிலையத்தில் இருக்கும் புகைப்படத்துடன் உருக்கமான பதிவை சோனாலி பகிர்ந்திருந்தார். அதில், ""என் இதயம் இருக்கும் இடத்தை நோக்கி புறப்பட்டேன். இந்த உணர்வை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. எனிலும் முயற்சிக்கிறேன். எனது நண்பர்கள், குடும்பத்தைக் காண ஆவலாக இருக்கிறேன். நோய் உடனான எனது போராட்டம் முழுவதுமாக தீரவில்லை என்றாலும், சிறிய இடைவெளி கிடைத்துள்ளதில் மகிழ்ச்சி'' என்று நெகிழ்ந்துள்ளார்.  

-------------------------


ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படத்தில் அவரது வேடம் ஏற்கவுள்ளார் நித்யாமேனன். தற்போது இது தொடர்பாக அளித்துள்ள பேட்டியில், அது பற்றி பேசியிருக்கிறார்.   ""ஜெயலலிதா வேடத்தில் நடிக்க என்னிடம் இயக்குநர் பிரியதர்ஷினி கேட்டபோது அவர் அந்த பாத்திரத்துக்காக எவ்வளவு அர்ப்பணிப்புடன் பணியாற்றி உள்ளார் என்பது எனக்குத் தெரிந்தது. அதே பொறுப்பு எனக்கும் நிச்சயம் இருக்கிறது. ஜெயலலிதா போன்ற பெரிய தலைவர் வேடத்தில் நடிப்பது சாதாரணமானது அல்ல. இதற்காக உடலளவிலும், மனதளவிலும் நான் அவராக மாற வேண்டியிருக்கிறது. அது சாதாரண விஷயம் கிடையாது. அதற்காக அர்ப்பணிப்புடன் நானும் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.  ஹிந்தியில் விண்வெளி படமொன்றில் நடிக்கிறேன். அக்ஷய்குமார் ஹீரோ. இப்படத்தின் கதை என்னை வியப்பில் ஆழ்த்தியது. சந்திரனுக்கு இந்தியா விண்கலம் அனுப்புவது என்பது ஒரு வரலாற்றுச் சாதனை. அதுபோன்ற கதை அம்சம் கொண்டு இப்படத்தில் நடிப்பதை பெருமையாக கருதுகிறேன்'' என்று தெரிவித்துள்ளார் நித்யாமேனன்.

-------------------------

தற்போது "இந்தியன்' படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது. தனது அரசியல் களத்தில் தீவிரமாக இயங்கி வரும் கமல், அரசியல் நுழைவுக்குப் பின் இந்தப் படத்தில் நடிக்கிறார். திரைக்கதை அமைக்கும் பணிகளை முடித்து விட்ட, ஷங்கர் படப்பிடிப்புக்குத் தயாராகி விட்டார். அதற்கு முன்னதாக கமலுக்கு பிரத்யேக இந்தியன் தாத்தா வேடம் போடப்பட்டு மேக்கப் டெஸ்ட் எடுக்கப்பட்டது. இதையடுத்து இந்த மாதம்14-ஆம் தேதி படப்பிடிப்பு சென்னையில் தொடங்குகிறது. இதில் முதல் முறையாக கமல்ஹாசன் ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். கமல்ஹாசன் மற்றும் காஜல் அகர்வாலுக்கு அமெரிக்காவில் மேக்கப் டெஸ்ட் நடந்தது. இதில் பங்கேற்ற காஜல் அகர்வால், மேக்கப் போட்ட பிறகு ஆளே அடியோடு மாறிவிட்டாராம். முதல்முறையாக கமல்ஹாசன், ஷங்கர் கூட்டணியில் இணைந்துள்ள அவர், இந்த படத்தின் படப்பிடிப்பு முடியும் வரை புதுப்படத்தில் நடிப்பதில்லை என முடிவு செய்துள்ளார். வேறு எந்த படத்திலும் நடிக்க கூடாது என பட ஒப்பந்தத்திலும் கையெழுத்து இட்டுள்ளார் காஜல்.


-------------------------


அஜித் - சிவா கூட்டணியில் உருவாகி வரும் "விஸ்வாசம்'  படப்பிடிப்பு முடிந்து இறுதிக் கட்டப் பணிகள் நடக்கின்றன. பொங்கலுக்கு திரைக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஹிந்தியில் ஹிட்டான "பிங்க்' பட தமிழ் ரீமேக்கில் நடிக்கிறார் அஜித்.  ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். "தீரன் அதிகாரம்' ஒன்று படத்துக்கு பிறகு இந்தப் படத்தை வினோத் இயக்குகிறார். ஹிந்தியில் அமிதாப்பச்சன் நடித்திருந்த வேடத்தில் அஜித் நடிக்கிறார். படத்தில் அமிதாப் மற்றும் டாப்ஸி உள்ளிட்ட 3 நடிகைகள் தாம் முக்கிய பாத்திரங்கள். இதில் டாப்ஸி வேடத்தில் நடிக்க நஸ்ரியாவிடம் பேசப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. சில நாள்களுக்கு முன் சுட்டுரையில், "" விரைவில் தமிழ் படத்தில் நடிக்கப் போகிறேன். அறிவிப்பு வரும்'' என நஸ்ரியா பதிவிட்டிருந்தார். அது பிங்க் பட ரீமேக்தான் என பேசப்பட்டது. இதற்கிடையில் நஸ்ரியாவுக்கு பதில் டாப்ஸியே அவரது வேடத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என்ற கருத்தும் படக்குழுவினர் மத்தியில் பரவியுள்ளது. இதனால் அஜித்துடன் நஸ்ரியா நடிப்பாரா அல்லது டாப்ஸி நடிப்பாரா என்பது உறுதியாகவில்லை. இருவருமே இந்த வாய்ப்பைப் பிடிக்க போட்டி போடுவதாக கோடம்பாக்க வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.  


-------------------------


தொடக்க காலத்தில் போஜ்புரி படங்களில் மட்டுமே நடித்து வந்த ராதிகா ஆப்தேவுக்கு மற்ற மொழிகளில் பட வாய்ப்புகள் குறைவாகவே இருந்தன. அழகு, திறமை இருந்த போதிலும் நட்சத்திர அந்தஸ்து அடைவதற்காக அவர் பல வருடம் காத்திருந்தார்.  நடிப்பு ஒரு வகையில் கைகொடுத்த போதும், அடிக்கடி அவர் அதிரடியாக கருத்துகள் தெரிவித்து பரபரப்பு ஏற்படுத்தினார். பிரபல ஹீரோக்கள் மீது பாலியல் புகார்கள் கூறியும், கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிட்டும், மீடியாக்களின் கவனத்தை ஈர்த்தார். இந்நிலையில் உடல் எடை கூடியதால் பட வாய்ப்பைப் பறிகொடுத்த சம்பவம்பற்றி ராதிகா ஆப்தே கருத்து வெளியிட்டுள்ளார்:  

""வழக்கமாக ஹீரோக்களுக்கு வரும் பட வாய்ப்புகள் போல் எனக்கும் ஒரு வாய்ப்பு வந்தது.  எனக்காக எழுதியிருப்பதாக கூறியதால் நானும் ஆர்வமாகக் கேட்டேன், கதையும் பிடித்திருந்தது.  அதில் நடிக்க சம்மதித்தேன். தயாரிப்பாளரும் படத்தைத் தயாரிக்க முன்வந்தார். படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பாக நான் விடுமுறைப் பயணமாக சென்று திரும்பினேன். அதற்குள் என்ன நடந்ததோ தெரியவில்லை, என்னை அப்படத்திலிருந்து நீக்கிவிட்டு வேறு நடிகையை ஒப்பந்தம் செய்திருந்தார்கள். 

"ஏன் இப்படிச் செய்தீர்கள்?' என்று கேட்டேன். அதற்கு அவர், "நீங்கள் முன்பு இருந்ததைவிட ஊருக்கு சென்றுவந்தபிறகு உடல் எடை கூடிவிட்டீர்கள். அதனால்தான் வேறு நடிகையைத் தேர்வு செய்தோம்' என்றார்கள். "சிறிது அவகாசம் கொடுங்கள் கதாபாத்திரத்துக்கு ஏற்ப உடல் எடையை குறைத்துக்கொள்கிறேன்' என்று நான் கூறியபோதும் அது அவரது காதில் விழவில்லை'' என வருத்தப்பட்டுள்ளார் ராதிகா ஆப்தே. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com