தென்னையைப் பெற்றவள்

""ஊருக்கு மணக்கும்  சந்தனம்னு... உங்க அம்மா  உங்களைச்  சொன்னது  தப்பு'' என்று மனைவி புலம்பினாள். 
தென்னையைப் பெற்றவள்

""ஊருக்கு மணக்கும்  சந்தனம்னு... உங்க அம்மா  உங்களைச்  சொன்னது தப்பு'' என்று மனைவி புலம்பினாள். 

""என்ன காலையில் மாமியார் செத்த  பின்னாலே புகழஞ்சலி  பாடுறே?'' என்று இவன்  கேட்டான். 

""ஒண்ணுமில்லை, நான் அதைத் திருத்தி ""ஊருக்கு மணக்குமாம் தாழம்பூ; அதுக்கு கீழே  கிடக்குமாம்  முள்ளும் புதரும்ன்னு  மாற்றி சொல்லணும்''

""சரி, காலையிலே என்ன புதுப் பாராயணம் ? நேரடியா  விஷயத்தை சொல்லு ''

""அப்புறம் என்னங்க, வீட்டுக்கு முன்னால நின்ன  வேப்ப  மரம்  குடை சாய்ந்தது கணக்கா புயல் காற்றில் விழுந்து ரெண்டு நாளா கரண்டே வராம குகைக்குள்ள குடியிருக்கிற மாதிரி  இருட்டிலே தடுமாறி கிட்டு இருக்கோம். அதுக்கு  ஒரு ஏற்பாடு பண்ணி சீக்கிரமா கரண்டு வர்ற  வழியைப் பாக்காம புயல் நிவாரணப்பொருள் திரட்டி லாரியோட போய்  கொடுக்கப் போறோமுன்னு  கிளம்பிட்ட மனுசனை வேற  என்ன   சொல்றது ?''              

""உனக்கு  இப்போ என்ன ? ஜெனேரட்டர்  வாடகைக்குப்  பிடிச்சி தொட்டி நிறைய தண்ணி  நிரப்பியாச்சு. இன்னும் மூணு நாளைக்கு நமக்கு குடிக்கவும் , குளிக்கவும் தண்ணிக்குப் பஞ்சமில்லை . அக்கம்பக்கம் கேட்கிறவங்களுக்கும் கொடுக்கலாம். பலசரக்கு இருக்கு. பாலிருக்கு. அப்புறம் ஏன் புலம்புற? குடிக்கத் தண்ணியும்,  உடுத்த துணியும் , வவுத்துக்கு  சோறும் இல்லாத ஜனங்களுக்கு  நாம் ஏதாவது  செய்யணுமா இல்லையா ?'' 

""நீங்க சொல்றது சரிதான். நானொண்ணும்  ஈவு இரக்கமில்லாதவ இல்ல. தீபாவளிக்கு எடுத்ததில்  கூடுதலா எடுத்த இரண்டு நைட்டியையும், ஒரு சேலையையும் தர்றேன், நல்லா எடுத்துட்டுப் போய் குடுங்க. நான் வேண்டாமுன்னு குறுக்கே நிற்கல்லை. ஆனா அக்கம்பக்கம் என்ன நடக்குதுன்னு தெரிஞ்சிக்கவாவது  டிவி பார்க்க ஏற்பாடு பண்ணிட்டுப் போங்கன்னுதான் சொல்றேன்'' 

மனைவியின் பேச்சில்  இவனுக்கு மகிழ்ச்சி என்றாலும் காரைக்குடி நகரெங்கும் மின்மாற்றிகள்  வெடித்து, மின்கம்பங்கள் விழுந்து ஊரே அல்லோகலப்பட்டு கிடக்குது. நமக்கும் மட்டும் கரண்டு உடனே வந்துருமா என்று கேள்வி எழுந்த போதே இவனுக்கு ஒரு யோசனை மின்னியது ! 

""சரி, டிவி நியூஸ் தானே பார்க்கணும். இந்தா இந்த செல்லிடபேசியில்  இந்த அலைவரிசை செய்தியைப் பார்த்துக்கோ. கரண்டு வர இன்னும் ஒரு நாளாகலாம். அளவா பயன்படுத்திக்கோ. நீ குடுக்கிற துணிமணிகளை குடு, நாங்க  சேகரிச்சிருக்கிற துணிகளோட  சேர்த்துக்கிறோம்.  வீட்டிலே பச்சைக்கொடி காட்டியாச்சு. இனி எந்தத் தடங்களும் இல்லாமல் செல்லலாம்'' என்று  வாங்கிகொண்டு  தனது சங்க நண்பர்கள் குழுமும் இடத்திற்கு போனான்...

நண்பர்கள் நிவாரணப் பொருள்களை ரகம் வாரியாகப் பிரித்து  மூடைகள் கட்டும் பணியில் இருந்தனர்.இவனது மனைவியின் பங்களிப்பை கொடுக்கவும் அவர்கள் பாராட்டியது இவனுக்கு புதுத் தெம்பு பிறந்தது. உற்சாகமாக  கட்டு கட்டும் பணியில் ஈடுபட்டனர். இவர்கள்  அமர்த்திய சரக்குந்து வந்தது. பொருள்கள் சேதமுறா வண்ணம் கட்டியதை கவனமாக அடுக்கினர். காவிரி டெல்டாவின் கடைமடைப் பகுதியில் சாலைகள் துண்டிக்கப்பட்ட ஒரு குக்கிராமத்துக்கு  விநியோகிக்க வேண்டும் என்று அங்குள்ள  நண்பர்கள் மூலம் வருவாய்த்துறை அதிகாரிகளின்  ஒத்துழைப்பில்  குடும்பம் வாரியாக விநியோகிக்கத்   திட்டம். 

சாலைகள் காற்றில்  கிழிந்து, வசம் புரண்ட சேலைகள் போல்  நிலைகுலைந்து கிடந்தன. ஒரே நீர்வெளியாகத் தெரிந்தது. பயிர்பச்சைகள் எல்லாம் நீர்ப்போர்வை போர்த்தப்பட்டுக்   கிடந்தன. தென்னை மரங்கள் எல்லாம் பாதி எரிந்த பத்திக்குச்சிகள் போல  சாய்ந்து நின்றன. நின்று நின்று வலித்து காலாற படுத்துக் கிடப்பது போல் மின்கம்பங்கள் மட்டமல்லாக்க கிடந்தன. நிழல்குடைகளாக நின்ற வேப்பமரங்கள் சில கம்பிகள் உடைந்த குடைகள் விரிந்தும் மடங்கியும் சாய்ந்தும், குடை  பற்றிய விரல்கள் போல் வேர்தெரிய கிடந்தன. பார்க்கவே நெஞ்சை அறுத்தது. இதைவிடக் கொடுமை இவர்களின் வாகனத்தை மறித்து எங்க ஊருக்கு நிவாரணப் பொருள் வரவில்லை. "சாப்பிட்டு இரண்டு நாளாச்சு' என்று வழி நெடுக கூக்குரல்கள் கேட்டு மனசு பிசைந்தது... அவர்களைச் சமாதானப்படுத்தி ஓரடி நகர்வது பெரும்பாடாகி விட்டது. இந்த மக்கள் பாடு தீர உடனடி வழி ? சிந்தித்து    நடவடிக்கை எடுக்க வேண்டியவர் நாமல்லவே என்று புலம்புவதைத்  தவிர வேறு என்ன செய்ய ?கூகுள் வரைபடம் மூலம் ஊர்ந்தார்கள். அது காட்டும் வழி கிட்ட இருந்தது. ஆனால் ஊரோ எட்ட இருந்தது.    வருவாய்த்துறை மூலம்  சங்க நண்பர்கள் வழி சொல்ல ஒரு வகையாக  ஊரை எட்டினோம்.  கூடி நின்ற மக்கள் துயரம் வழியும் குரலில் வரவேற்றார்கள். இவர்களது தாமதம்  காத்திருந்த நண்பர்களிடமும் சோர்வையும் அச்சத்தை ஏற்படுத்தி இருந்தது. இது போன்ற நிவாரணப் பொருள்களை ஏற்றிவரும் சரக்குந்துகளை ஆங்காங்கே மக்கள் மறித்து தம்தம் கிராமங்களுக்கு  கடத்துகிறார்கள் என்ற தகவல் நண்பர்களுக்குச் சோர்வு உண்டாக்கியிருந்தது . இவர்களது வண்டியையையும் பதாகையையும் பார்த்த பின்னர் தான்  உயிர்த்ததுபோல் உணர்ந்தார்கள்.

சங்க நண்பர்கள் வருவாய்துறையினர் மூலம் குடும்பவாரியாக வரிசைப்படுத்தி முதலில் நிவாரணப் பொருள்களையும் ,பிறகு , தலைக்கு ஒன்றாக உணவுப் பொட்டலத்தையும் கொடுத்தார்கள். பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருடைய முகத்திலும் அவர்கள் பொருளை வாங்கும்போது கழிவிரக்கமும், நன்றியும் , இதோடு பிரச்னை தீர்ந்துவிடாதே என்ற ஏக்கமும் கலந்த கலவையான உணர்வுகள் தென்பட்டன. இதை   இவனால் எதிர்கொள்ள இயலவில்லை. இப்படியான பிரச்னைகளை உடனடியாக தீர்க்க  தான் அமானுஷ்ய சக்திபடைத்த மனிதனில்லையே என்ற ஏக்கம் இவனைப் பிழிந்தது.

மக்கள்  தாம் பெற்ற நிவாரணப் பொருள்களை ஒழுங்கு செய்துவிட்டு பெற்ற உணவை உண்டார்கள். அவர்கள் சாப்பிடும்போது  அவர்களது முகத்தைப் பார்த்தால் தெய்வீகம் என்று சொல்வார்களே அதை உணர முடிந்தது. "பசித்தவன் முன் உணவே தெய்வம்' என்று விவேகானந்தர் சொன்னது நினைவில் வந்தது. பின்னர் வருவாய்த்துறை அலுவலர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட மின்னூடகவியலார்கள் ஒவ்வொரு குடும்பத்தாரையும் நேர்காணல் செய்து கஜா புயலினால் ஏற்பட்ட இழப்புகள், அரசிடம் எதிர்பார்க்கும் நிவாரணம் போன்றவற்றை உருக்கமாகச் சொல்லி வருவாய்த்துறையினரும்  எழுத்தாளர்கள் சங்கமும் இணைந்து  வழங்கிய தற்காலிக நிவாரணத்திற்கு நன்றியை உணர்ச்சிப் பெருக்கோடு சொல்லிக் கொண்டு இருந்தார்கள். இந்த விளம்பர உத்தி இவனுக்குப் பிடிக்கவில்லை.மெல்ல நகர்ந்து வீழ்ந்த தென்னைகள் பக்கமாக நகர்ந்தான்.

அங்கே அறுபது வயது மதிக்கத்தக்க பெண்மணி பொட்டலத்தை அவிழ்த்து சாப்பிடாமல் தென்னை மரங்களைப் பார்த்து கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தார். எல்லாரும் சாப்பிட்டு பசித்தீயை அணைத்து மகிழ்ந்திருக்கிறார்கள். இந்தப் பெண்மணி மட்டும்  தனியே அமர்ந்து அழுதுகொண்டிருக்கிறாரே, இவன் அருகே போனான்.

""ஏனம்மா தனியே சாப்பிடாமல் அழுது கொண்டிருக்கிறீர்கள் ? உங்கள் வீட்டு பிள்ளைகள் ?''

""இல்லை தம்பி. இப்ப  நான் ஒருத்தி தான். எனக்கு இப்ப பசியில்லை.''

""உங்கள் பிள்ளைகள் எங்கேம்மா ?''

""ஆமாப்பா. அதோ சாய்ந்து கிடக்கிற பதினாறு தென்னம்பிள்ளைகளும், பத்து மாமரங்களும் தான் என் பிள்ளைகள் !அதுகெல்லாம் போனப்புறம் நான் சாப்பிட்டா என்ன ? சாப்பிடாட்டா என்ன ?''

""அம்மா உங்க குறைகளை அந்த டிவி காரங்க முன்னால சொன்னா, அதைப் பார்த்து அரசாங்கமோ, எங்களைமாதிரி தன்னார்வ  சங்கங்களோ வேண்டிய உதவியை செய்யலாம், சாப்பிட்டிட்டுப் போய் , எங்களுக்கு நன்றி சொல்லாமல் உங்கள் குறைகளை மட்டும் சொல்லிட்டு வாங்கம்மா. தயவுசெஞ்சு போங்கம்மா. உங்க குறைகளை வெளியே சொல்லலையின்னா எங்களை மாதிரி சங்கத்துக்காரங்க முயற்சி எடுத்ததுக்கு பலனில்லை''

""இல்ல தம்பி. நான் டிவியில எதாவது சொல்லி அதை என் மகன், மருமகள் கேட்டாங்கன்னா அவங்களுக்கு அவமானம்ன்னு  நினைப்பாங்க. நான் இப்படியே என் தென்னம்பிள்ளைகளோடையே  ஆயுசை முடிச்சுக்கிறேன்.''

""என்னம்மா, உங்களுக்கு மகன், மருமகள் இருக்காங்களா சொல்லுங்கம்மா. நாங்க எந்த சிக்கலும் இல்லாம சேர்த்து வைக்கிறோம்''

""தம்பி, நான் பெத்தபிள்ளை இல்லை.வளர்த்த பிள்ளை. என் வீட்டுக்காரருக்கும் என் அக்காவுக்கும் பிறந்த பிள்ளை. பிள்ளை பெறந்த மறுநாளே எங்கக்கா செத்துப்போச்சு. அத்தான்  கைப்பிள்ளையோட கஷ்டப் படராறேன்னு , அந்த பிள்ளையை வளர்க்க நான் இஷ்டப்பட்டுதான் அவரை ரெண்டாம் தாரமாக கட்டிகிட்டேன். அக்கா பிள்ளையை வளர்க்க நான் பிள்ளையை பெத்துக்கல. அத்தானுக்கும் பிள்ளைக்கும் எந்த குறையையும் இல்லாம குடும்பத்தை காபந்து பண்ணினேன். பையனும் அவன் கல்யாணம் கட்டிகிறவரைக்கும் அம்மான்னு அவ்வளவு பாசமும்  பிரியமும் காட்டினான்... ம்ம்ம், கல்யாணம் முடிச்சதும் பட்டினத்தில் பொண்டாட்டி கூடவே இருந்திட்டான்.பிறந்த பேரப்பிள்ளைகளைக் கூட கூட்டிட்டு வந்து காட்டலை. அக்கா பெத்த பிள்ளைக்காக   நீ பிள்ளை பெத்துக்காம குடும்பத்தைக்  காப்பாத்தினே. பிள்ளை நம்மளை அம்போன்னு கைவிட்டுட்டான்.இப்போ நானும் நட்டாத்துல விட்டுட்டு போகப் போறேனே என்று அழுத என்புருஷன் எனக்கு கடைசிவழி துணையாய்  பதினாறு தென்னம்பிள்ளைகளையும், பத்து மாமரங்களையும் விட்டுட்டு செத்தாரு. இந்த தென்னம் பிள்ளைகளை   வச்சுதான் வயித்துப் பாட்டை ஓட்டினேன்.  அதுகளும் என்னை நிர்கதியாய் விட்டுட்டுப் போக வச்சுருச்சே இந்த எமகாதக புயலு'' அந்த அம்மா சொல்ல சொல்ல இவனுக்கும் கண்களில் புயல்நீர் பொங்கியது.

""அம்மா கவலைப்படாதீங்க, வேர் சாய்ந்த மரத்தையும், பாதி முறிஞ்ச மரத்தையும்  உயிர்ப்பிக்கும் விஞ்ஞான நடைமுறைகள் இருக்கும்மா. அந்த வேர்கள் காய்ந்து விடாமல் சாணிபூசி பாதுகாத்து வைங்க.    இன்னும் மூணுநாளில் அதற்கான விவசாய விஞ்ஞானிகளை எங்கள் செலவிலே கூட்டிட்டு வந்து உங்களுக்கு ஆயுள்பரியந்தம் துணை நிற்கவும், உதவவும் நாங்க இருக்கோம்மா. தயவுசெஞ்சு  சாப்பிடுங்கம்மா'' என்று கண்ணீர் பொங்க  குரல் தழுதழுக்க சொன்னான்.

அந்த அம்மா இவனது தோளை தட்டி, உணவு பொட்டலத்தைப் பிரித்தாள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com