வரலாறாகவே வாழ்ந்த அறவாணன்!

இ.சுந்தரமூர்த்தி, முன்னாள் துணைவேந்தர், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் அருணாசலம் என்ற இயற்பெயரைக் கொண்ட தமிழறிஞர் க.ப.அறவாணன் தஞ்சாவூர் மாவட்டம் கடலங்குடியில் பிறந்தவர்.
வரலாறாகவே வாழ்ந்த அறவாணன்!
Updated on
3 min read

இ.சுந்தரமூர்த்தி, முன்னாள் துணைவேந்தர், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் அருணாசலம் என்ற இயற்பெயரைக் கொண்ட தமிழறிஞர் க.ப.அறவாணன் தஞ்சாவூர் மாவட்டம் கடலங்குடியில் பிறந்தவர்.  அங்கு விஷ்ணுபுரம் ஜார்ஜ் உயர்நிலைப் பள்ளியில் பயின்றவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புலவர், பி.ஓ.எல்.  பட்டங்களைப் பெற்றவர். பின்னர் கேரளப் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. பட்டமும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றார். 

சிறு வயது முதலே தமிழில் ஈடுபாடு கொண்ட அவர், 12 வயதிலேயே பள்ளியின் பொது மேடையில் ஏறிப் பேசியவர். தமிழக அளவில் நடைபெற்ற சிறுகதைப் போட்டியில் 1959-ஆம் ஆண்டு பரிசு பெற்றார். கடுமையான முயற்சிகளை மேற்கொண்ட  அறவாணன், பகுதி நேரமாக உழைத்துக் கொண்டே பட்டங்களையும் பல்கலைக்கழக அளவிலேயே முதலிடங்களைப் பெற்றவர். தமிழில் முதுநிலைப் பட்டம் பெற்ற அவர், பாளையங்கோட்டை சேவியர் கல்லூரியில் நேர்முகத் தேர்வின்றியே 1967-இல் விரிவுரையாளராகத் தேர்வு செய்யப்பட்டார். 

பின்னர் திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் திருவள்ளுவர்  கல்லூரியின் முதல்வராகப் பணியாற்றினார். பின்னர் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். தொடர்ந்து, சென்னை லயோலா கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவரானார். 1987 முதல் 1998-ஆம் ஆண்டு வரை புதுச்சேரி  பல்கலைக்கழக தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றினார். 1991-ஆம் ஆண்டின் சிறந்த மனிதராக "அமெரிக்க பயோஃகிராப்பிக்கல்'நிறுவனம் இவரைத் தேர்வு செய்தது. 1998-ஆம் ஆண்டு முதல் 2001-ஆம் ஆண்டு வரை திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் துணைவேந்தராகப் பணியாற்றினார். 

இடையில் சில காலம் ஆப்பிரிக்காவில் உள்ள தக்கார் பல்கலைக்கழகத்தில் செனகல் அதிபர் செங்கோர் அழைப்பின் பேரில் அங்கு பணியாற்றினார்; மொழி சார்ந்த மானுடவியல் ஆய்வை அங்கு மேற்கொண்டார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் அவர் பெற்ற மானுடவியல் படிப்பில் சான்றிதழே இதற்கு அடித்தளமாக அமைந்தது. 

இலக்கண அறிஞராகவும் இலக்கிய அறிஞராகவும் திகழ்ந்த க.ப.அறவாணன், நூற்றுக்கணக்கான கட்டுரைகளையும் நூல்களையும் தமிழுக்கு வழங்கியுள்ளார். "700 ஆண்டுகளில் நன்னூல்...', "அவிநயம்', "அமுதசாகரம்', "இந்திரகாளியம்' முதலான இலக்கண நூல்களையும் எழுதியுள்ளார். அவருடைய சங்க இலக்கிய ஆய்வான  "அற்றைநாள் காதலும் வீரமும்...' எனும் நூல் குறிப்பிடத்தக்கது. "சைனரின் தமிழ் இலக்கண நன்கொடை' என்னும் அவருடைய நூல், சமணத் தமிழின் பங்களிப்பைக் காட்டும். 

இலக்கணம், இலக்கியம் மட்டுமல்லாமல், திறனாய்விலும் க.ப.அறவாணன் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். "கவிதையின் உயிர், உள்ளம், உடல்...', "கவிதை கிழக்கும் மேற்கும்...' ஆகிய திறனாய்வு நூல்கள் தொடக்க காலத்தில் முதுநிலைப் பட்ட தமிழ் மாணவர்களுக்கு பெரிதும் துணையாக இருந்தன. 

மானுடவியல் ஆய்வில் பெரிதும் ஈடுபாடு கொண்ட அவர், தமிழர்களின் வீழ்ச்சிக்கான காரணங்களைப் பல நூல்களில் துணிச்சலோடு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. "தமிழர் அடிமையானது ஏன், எவ்வாறு?', "தமிழர் மேல் நிகழ்ந்த பண்பாட்டுப் படையெடுப்புகள்...', "தமிழர்தம் மறுபக்கம்...', "தமிழர் தன்னம்பிக்கை-தற்கொலை...' ஆகிய சமூக-மானுடவியல் ஆய்வு  நூல்கள் உலகத் தமிழ் மக்களிடையே புதிய விழிப்புணர்ச்சியைத் தோற்றுவித்தன. 

படைப்பிலக்கியத்திலும் ஈடுபாடு கொண்ட அவர், "அவன்-அவள்-அது...', "நீ ஒரு பண்புத் தொகை...' முதலாகிய நூல்களைப் படைத்துள்ளார். இளமைக் காலம் முதலே கவிதை எழுதுவதிலும் சிறந்து விளங்கினார். 

தமிழ் ஆராய்ச்சியாளர்களுக்குப் பயன்படும் விதத்தில் பல அரிய தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். அவற்றில் தமிழின் முதல் இலக்கண நூலான தொல்காப்பியத்தை அடிப்படையாகக் கொண்ட "தொல்காப்பியக் களஞ்சியம்' என்னும் நூலும், அறநூல்களை அடிப்படையாகக் கொண்ட "திருக்குறள் அறநூல் களஞ்சியம்' என்னும் நூலும் குறிப்பிடத்தகுந்தவை.  

பல நேரங்களில் அவருடன் உரையாடியபோது, அவர் நெஞ்சில் நிலைத்து நின்ற தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் குறித்துக் கூறுவார். அவர்கள் இருவர். ஒருவர், தொடக்கப் பள்ளியில் பாடம் நடத்திய கிருஷ்ணமூர்த்தி ஐயர். "என் காதுகளையும் கன்னங்களையும் கிள்ளித் திருகி கற்றுத் தந்த ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி ஐயரை மறக்க முடியாது; அதாவது, ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி ஐயர் கையில் படிந்துள்ள சாக்கட்டியின் வெள்ளை நிறம் பதியுமாறு என்னுடைய காதுகளும் கன்னங்களும் திருகப்பட்டன; அப்போது வலித்தன; ஆனால், அந்த வலியால் நான் செய்ததவறுகள் திருந்தின; எனவே, இவற்றுக்காக அவரை என்னால் இப்போதும் வாழ்க்கையில் மறக்கவே முடியவில்லை' என்பார். 

இன்னொருவர், "எனக்கு எட்டாம் வகுப்பு வரை பாடம் கற்பித்த ஆசிரியர் சீதாராம ஐயர். சிவந்த தோற்றமும் சிரித்த முகமும் தலைக் கொண்டையும் உடைய அவர், கண்டிப்பான ஆசிரியர். வகுப்பிலேயே அழகாகப் பாடி பாடம் எடுப்பவர். 1951-52 நவம்பர் 14-ஆம் நாள் என்னைப் பள்ளி பொது மேடையில் ஏற்றி நேருவைப் பற்றிப்  பேச வைத்தவர். என்னுடைய முதல் மேடைப் பேச்சும் அதுவே. இவர் தமிழ்ப் பேச்சு கொஞ்சலாகவே இருக்கும்' என்பார். 

அறவாணனின் உயர்நிலைப் பள்ளி வாழ்க்கையில் உச்சமாக அவர் நினைவில் இருப்பவர் தமிழ் ஆசிரியர் வித்துவான் இரா.கந்தசாமி. "என் 20 ஆண்டுகள் கற்றல் வாழ்க்கை முழுமையிலும் மிக மேலாகவும் முதலாகவும் இருப்பவர் இவரே. என்னுடைய தமிழ்த் திறமையை அடையாளம் கண்டு ஊக்குவித்தவரும் இவரே. இவர்கள் இல்லையேல் நான் இல்லை' என்பார். 

தன்னுடைய வாழ்க்கை வெற்றிக்கும் திருப்புமுனைக்கும் காரணமாகத் திகழ்ந்தவர்களை அவர் எப்போதும் நன்றியுடன் குறிப்பிடுவது வழக்கம். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக முதல் துணைவேந்தராக விளங்கிய பேராசிரியர் வி.ஐ.சுப்பிரமணியம், இளமைக் கல்விக்குத் துணை நின்ற ஆசிரியர் இரா.கந்தசாமி, துறவி நா.காசிநாதர், வாழ்க்கை நிலைக்குத் துணை நின்ற அருள்திரு சூ.ராசநாயகம் அடிகளார் உள்ளிட்டோர் குறிப்பிடத் தகுந்தவர்கள். 

தன்னுடைய வாழ்க்கைப் பாதையை தானே திட்டமிட்டு தனக்கென ஒரு வழியை அமைத்துக் கொண்டு வாழ்வில் முன்னேறிய அவர், தம் நூல்களில் பல இடங்களில் கூறும் தன்னம்பிக்கை மொழி இதுதான்: "பாதைகள் தாமாக அமைந்து கிடப்பதில்லை; அவற்றை நாம்தாம் அமைக்கின்றோம்; அமைத்தல் வேண்டும்'. 

1975 முதல் உலகின் ஐந்து கண்ட நாடுகளுக்கும் பயணம் செய்தவர் க.ப.அறவாணன். உலக நாடுகள் பலவற்றிலும் உள்ள மக்களின் வாழ்க்கை முறையை ஆராய்ந்தவர். அவர்களுடைய பண்பாடு, பழக்கவழக்கங்கள் அரசியல் பார்வை ஆகியவற்றைத் தமிழர்களின் வாழ்க்கை முறையோடு நுட்பமாக ஒப்பிட்டுப் பார்த்துத் தம் நூலில் பதிவு செய்தவர்.  

சென்னை பச்சையப்பன் கல்லூரி தமிழ்த் துறை விரிவுரையாளராகப் பணியாற்றியபோது, மாணவர்களை ஒருங்கிணைத்து "பண்பாட்டுப் பாசறை' என்னும் அமைப்பை உருவாக்கினார். ஞானபீடப் பரிசு பெற்ற எழுத்தாளர் அகிலன் அதைத் தொடங்கி வைத்தார்.

புதுச்சேரி பல்கலைக்கழகத் தமிழ்த்துறை தலைவராகப் பணியாற்றியபோது, "தேடல்', "முடியும்', "செய்தி விழுது' என்னும் வெளியீடுகளைக் கொண்டு வந்தார். இவை மூன்றும் புதுச்சேரி பல்கலைக்கழகத் தமிழ்த் துறை சார்பில் வெளியிடப்பட்டன. இவற்றில் ஆய்வாளர்கள், ஆசிரியர்களின் சிறந்த கட்டுரைகள் வெளியிடப்பட்டன.  "முடியும்' என்னும் வெளியீட்டில், மொழிபெயர்ப்புக் கட்டுரைகள், தரமான தமிழ்க் கட்டுரைகள் வெளியாகின. அனைத்திந்தியப் பல்கலைக்கழக ஆசிரியர்கள், கல்லூரித் தமிழ் ஆசிரியர்கள் ஆகியோர் ஆண்டுதோறும் ஒன்றுகூடி தமிழியல் ஆய்வுக் கருத்தரங்கம் ஒன்றை நடத்தினர். அந்த அமைப்பின் பொருளாளராக க.ப.அறவாணன் இருந்தார். இந்த மன்றத்தின் மேம்பாட்டுக்கு உழைத்தார். 

தமிழறிஞர் தவத்திரு தனிநாயகம் அடிகளார் தோற்றுவித்த "தமிழ்ப் பண்பாட்டு ஆய்வு மன்றம்'  செயலிழந்திருந்த நிலையில், அதைத்  தவத்திரு ஞானப்பிரகாச அடிகளாரோடு இணைந்து மீண்டும் பொலிவுறச் செய்தவர் க.ப.அறவாணன். தொல்பொருள் துறை ஆய்வாளர்கள், தமிழியல் துறை ஆய்வாளர்கள் ஆகியோர் இணைந்து ஆராய்ச்சி மன்றம் என்ற அமைப்பை உருவாக்கக் காரணமாக இருந்தார். அந்த அமைப்பின் சார்பில் "ஆய்வுக் கொத்து' என்னும் தொகுப்பினையும் வெளியிட்டார்.

அறிஞர் அறவாணரின் புகழ்பெற்ற மொழி: "முயன்று வரலாற்றைப் படித்தல் வேண்டும்; இயன்றால் வரலாற்றைப் படைத்தல் வேண்டும்; முடிந்தால் வரலாறாகவே வாழ்தல் வேண்டும்' என்பதாகும்.  தமிழகத்தின் வரலாற்றையும் உலக நாடுகளின் வரலாற்றையும் பேராசிரியர் அறவாணன் முயன்று படித்தார். அதனால், தமிழர்களின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் வரலாறாகப் படைத்தார். எளிய குடும்பத்தில் தோன்றித் தன் முயற்சியால் படித்து பல பட்டங்களைப் பெற்று கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் பணியாற்றித் துணைவேந்தராக உயர்ந்து இறுதிநாள் வரை  எழுத்தையே வாழ்க்கையாகக் கொண்டு அரிய நூல்களையும் கட்டுரைகளையும் படைத்துத் தமிழுக்கு வளம் சேர்த்து வரலாறாகவே வாழ்ந்து மறைந்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com