

வேலைக்காரன்' படத்தைத் தொடர்ந்து பொன்.ராம் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். 24 ஏ.எம் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் சமந்தா, சிம்ரன், நெப்போலியன், சூரி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சிவகார்த்திகேயன் பிறந்த தினத்தை முன்னிட்டு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கையும் பெயரையும் அறிவிக்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. பொன்.ராம் படத்தைத் தொடர்ந்து "இன்று நேற்று நாளை' இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சிவகார்த்திகேயன். இப்படத்தையும் 24 ஏ.எம் நிறுவனமே தயாரிக்கவுள்ளது. இப்படத்தின் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக படக்குழு அறிவித்திருக்கிறது. இதன் மூலம் சிவகார்த்திக்கேயன் படத்துக்கு முதன்முறையாக இசையமைக்கவுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான். 2019-ஆம் ஆண்டில் இப்படம் வெளியாகும் என்றும் அறிவித்திருக்கிறார்கள். முழுக்க அறிவியல் சம்பந்தப்பட்ட படம் என்பதால், இப்படத்திற்கான முதற்கட்ட பணிகள் நீண்டகாலமாகவே நடைபெற்று வருகின்றன.
தர்மதுரை' படத்துக்குப் பின் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தை இயக்குகிறார் சீனுராமசாமி. திரைக்கதை முழுமையான நிலையில், இப்படத்தின் ஆரம்பக் கட்டப் பணிகள் தொடங்கியுள்ளன. "நிமிர்' படத்தினை விளம்பரப்படுத்தும் பணிகள் முடிவடைந்தவுடன், சீனுராமசாமி இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். இதன் முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தமன்னா, ராமு, சரண்யா பொன்வண்ணன், வடிவுக்கரசி, கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் இப்படத்துக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். ஜனவரி 19-ஆம் தேதி முதல் மதுரையில் படப்பிடிப்பு தொடங்குகிறது. படப்பிடிப்பு முடிவடைந்த பின்னர் படத்துக்கு பெயர் சூட்டப்படும் என்று சொல்லப்பட்டது. ஆனால் தற்போது படத்துக்கு "கண்ணே கலைமானே' எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. வைரமுத்து பாடல்கள் எழுத, யுவன் இசையமைக்கவுள்ளார். ஒரே கட்டமாக மொத்த படத்தையும் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. ஏப்ரல் மாதத்தில் படம் திரைக்கு வருவதற்கான வேலைகள் தொடங்கியுள்ளன.
அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, நித்யா மேனன், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் "மெர்சல்'. இப்படம் வெளியானபோது, அதில் இடம்பெற்றிருந்த டிஜிட்டல் இந்தியா மற்றும் ஜிஎஸ்டி வரி தொடர்பான வசனங்கள் குறித்து பெரும் சர்ச்சை உருவானது. இப்படத்தின் வசனங்களுக்கு பாஜகவினர் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். பல்வேறு தரப்பினர் "மெர்சல்' படக்குழுவிற்கு ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில், விருது வழங்கும் விழா ஒன்றில் சிறந்த நடிகருக்கான விருதை விஜய்க்கு கமல்ஹாசன் வழங்கினார். இதில் விஜய் பேசும்போது... ""சர்ச்சைக்குரிய வசனங்கள் இடம் பெற்றதால் "மெர்சல்' திரைப்படம் பிரச்னைகளைச் சந்தித்தது. அப்போது ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி'' என்றார் விஜய். மேடையிலிருந்து கீழே இறங்கும் போது விஜயிடம் புகைப்படம் எடுக்க ரசிகர் ஒருவர் பாதுகாவலர்களைத் தாண்டி முன்வந்தார். அப்போது பலரும் அவரைத் தடுத்தனர். அந்த ரசிகரை விடுவித்து, அவரோடு நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார் விஜய்.
காற்று வெளியிடை' படத்தைத் தொடர்ந்து தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார் மணிரத்னம். திரைக்கதை இறுதியான நிலையில் படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த பேச்சுவார்த்தை தொடங்கியது. பல்வேறு ஆலோசனைகளுக்குப் பின் அரவிந்த்சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, பகத் ஃபாசில், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடிப்பது உறுதி செய்யப்பட்டது. மணிரத்னம் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக இச்செய்தி வெளியிடப்பட்ட நிலையில், கதாபாத்திர வடிவமைப்பில் சிறு சிறு மாற்றங்களைக் கொண்டு வர மணிரத்னம் முடிவு செய்தார். முன்னதாக விஜய் சேதுபதிக்கு முக்கிய கதாபாத்திரம் வழங்கப்பட்டிருந்தாலும், அது கதையில் சிறிய அளவிலேயே இருக்கும் என்று சொல்லப்பட்டது. ஆனால், தற்போது படம் முழுக்க விஜய் சேதுபதி வரும் அளவுக்கு கதையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. "விக்ரம் வேதா' படத்துக்குப் பின் விஜய் சேதுபதிக்கான வரவேற்பு அதிகரித்திருக்கும் நிலையில், அவரது கதாபாத்திரத்தை விரிவாக்கம் செய்திருக்கிறார் மணிரத்னம். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவாளராக பணியாற்றுக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்கிறார். 17-ஆவது தயாரிப்பாக மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
தீரன் அதிகாரம் ஒன்று' படத்தின் பணிகளை முடிந்துவிட்டு, பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கினார் கார்த்தி. சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்க முன்வந்த நிலையில், தற்போது படத்தின் ஆரம்பக் கட்டப் பணிகள் தொடங்கியுள்ளன. முதற்கட்ட படப்பிடிப்பு தென்காசியைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றது. சாயிஷா சைகல், சத்யராஜ், சூரி, ஸ்ரீமன், ப்ரியா பவானி சங்கர், பானுப்ரியா, மெளனிகா உள்ளிட்ட பலர் இதில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். இதன் பெரும்பகுதி படப்பிடிப்பை முடித்துவிட்டது படக்குழு. வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, இமான் இசையமைப்பாளராகப் பணிபுரிந்து வருகிறார். படத்தின் தலைப்பு என்ன என்பது தெரியாமல் இருந்தது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, படத்தின் பெயர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி "கடைக்குட்டி சிங்கம்' என்ற பெயர் அடங்கிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சூர்யா தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டார். இப்போஸ்டரில் இடம்பெற்றுள்ள "பயிர் செய்ய விரும்பு' என்ற வாசகம் சமூகவலைத்தளத்தில் வரவேற்பைப் பெற்றது. சமீபத்தில் தமிழகத்தில் நிகழ்ந்த விவசாயிகளின் தற்கொலையும், காவிரி பிரச்னையும்தான் கதை என்கிறது படக்குழு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.