திரைக் கதிர்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் பெயரிடப்படாத படத்தின்
திரைக் கதிர்
Updated on
3 min read

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் முதற்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. 
இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில், கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகியுள்ளார்.  
ஒளிப்பதிவாளராக க்ரிஷ் கங்காதரன் மற்றும் படத்தொகுப்பாளராக ஸ்ரீகர் பிரசாத் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை தங்களுடைய  சுட்டுரைப் பக்கத்தில் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அறிவித்தது. 
இந்நிலையில், கடந்த 19-ஆம் தேதி  சென்னையில் பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது. 
தற்போது கிழக்கு கடற்கரைச் சாலையில் 100-க்கும் மேற்பட்ட படகுகளைக் கொண்டு முக்கியக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. 
இப்படத்துக்கு ஜெயமோகன் வசனம் எழுதுகிறார். 
தமிழக விவசாயத்தை மையப்படுத்தும் விதமாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

"கபாலி' படத்துக்குப் பின் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் "காலா'.  படப்பிடிப்பு முடிந்து படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. முதற்கட்டமாக படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளன. ரஜினிகாந்த் தனது காட்சிகளுக்கான டப்பிங்கை பேசி வருகிறார். சுமார் மூன்று வார காலம் ரஜினிகாந்த் இதற்காக டப்பிங் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை மயிலாப்பூரில் உள்ள நாக் ஸ்டுடியோவில் டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன.  ஏப்ரல் அல்லது மே மாதத்தில் இப்படம் திரைக்கு  வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிப்ரவரி மாதத்தில் படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெறவுள்ளது.  
 

இயக்குநர் மகேந்திரன், அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான "தெறி' படத்தில் வில்லனாக நடித்தார். இதைத் தொடர்ந்து "நிமிர்', "புகழேந்தி எனும் நான்' உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். கரு.பழனியப்பன் இயக்கத்தில் அருள்நிதி நடிக்கும் "புகழேந்தி எனும் நான்' திரைப்படத்தில் மகேந்திரன் நடித்து வந்தார். புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகம் பகுதியில் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.   படப்பிடிப்பின்போது இயக்குநர் மகேந்திரன் திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அங்கிருந்த படக்குழுவினர், அவரை  தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மகேந்திரனைப் பரிசோதித்த மருத்துவர்கள், உணவு ஒவ்வாமையால் மயங்கி விழுந்துள்ளதாகவும் தற்போது நலமுடன் இருப்பதாகவும் தெரிவித்தனர். தொடர்ந்து அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் மகேந்திரன் நலமுடன் இருப்பதாக இயக்குநர் கரு.பழனியப்பன் தெரிவித்துள்ளார். 
  

வாசகர்களின் மனம் கவர்ந்த நாவல்களை மையமாகக் கொண்டு திரைக்கதைகள் அமைக்கப்படுவது தமிழ் சினிமாவில் அவ்வப்போது நடந்து வருகின்றன. இந்த வரிசையில் உருவாகி வரும் படம் "சங்கத் தலைவன்'. "தறி' எனும் நாவலை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாக்கபப்படவுள்ளது. பாரதிநாதன் எழுதிய "தறி' நாவல் - ஜவுளித்துறையில் நடக்கும் அவல நிலையையும், அத்தொழிலை நம்பி உள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்க்கையையும் தழுவி எழுதப்பட்டதாகும். சேலம், கோவை மற்றும் ஈரோடு உள்ளடக்கிய பகுதிகளில் உள்ள ஜவுளித் தொழிலை களமாகக்  கொண்டு அந்த நாவல் படைக்கப்பட்டிருந்தது.  "உதயம் என் எச் 4' படத்தை இயக்கிய மணிமாறன் திரைக்கதை எழுதி இயக்குகிறார். இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் ஃபிலிம் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. சமுத்திரக்கனி, கருணாஸ், ரம்யா ஆகியோர் கதையின் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.   கடந்த 22-ஆம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. ஒரே கட்டப் படப்பிடிப்பில் முழு படத்தையும் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.  

தமிழில்  பெரும் வரவேற்பைப் பெற்ற படம் "விக்ரம் வேதா'. படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தின்  தெலுங்கு மற்றும் ஹிந்தி ரீமேக் உரிமையைக் கைப்பற்ற பெரும் போட்டி நிலவி வந்தது. பல தயாரிப்பு நிறுவனங்கள் முட்டி மோதிய நிலையில் அனைத்து மொழி ரீமேக்குகளையும் தானே தயாரிக்க உள்ளதாக அறிவித்தார் சஷிகாந்த். இந்நிலையில் அமேசான் வெப் சீரிஸில் மாதவன் நடிப்பில் உருவாகியுள்ள "ப்ரீத்' ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.  அப்போது மாதவனிடம் "விக்ரம் வேதா' ஹிந்தி ரீமேக் குறித்து பலரும் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதிலளித்து மாதவன் பேசுகையில்... ""இந்த ஆண்டு கண்டிப்பாக "விக்ரம் வேதா' ஹிந்தி ரீமேக் தொடங்கப்படும். எனது கதாபாத்திரத்தில் நானே நடிப்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. விஜய் சேதுபதி கதாபாத்திரத்துக்கு பெரிய வியாபார மார்க்கெட் உள்ள நடிகர்கள் தேதிகள் அளிக்கக் காத்திருக்கிறோம்''  என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com