
வாழ்க்கையே வெறுத்துவிட்டது. பொழுது விடிந்து பொழுது போனால் தொல்லை... தொல்லை... தொல்லைதான்...
என்ன சுகம் வேண்டிக் கிடக்குது? பேசாமல் சந்நியாசம் கொள்ளப்போகிறேன் என்று சொல்லிக் கொண்டிருந்த சிவா உண்மையிலேயே சந்நியாசி ஆகிவிட்டார்.
காவியுடை தரித்து, வேதங்களையும் புராணங்களையும் கரைத்துக் குடித்தாயிற்று...
பிரசங்கங்கள் செய்ய அவை பயன்பட்டனவே தவிர, அவர் உண்மையில் தேடிய உள்ளத் தெளிவோ, சந்தோஷமோ, ஆத்ம திருப்தியோ கிடைக்கவேயில்லை.
ஆரம்பத்தில் அவர் காசிக்குப் போனார்.
பின், திருக்கயிலாய மலை யாத்திரை செல்லும் வடஇந்திய யாத்திரிகர்களோடு சேர்ந்து இமயமலை ஏறினார்.
வழியிலிருந்த பல்வேறு இடங்களில், அமைதியாக உட்கார்ந்து தவம்புரிந்து கொண்டிருந்த சந்நியாசிகளைப் பார்த்தபோது அவருக்குப்
பொறாமையாக இருந்தது.
லெளகீக வாழ்வை வெறுத்து, துறவறம் மேற்கொண்ட பிறகும் அடுத்தவரைப் பார்த்துப் பொறாமைப்படும் புத்தி மட்டும் போகவில்லையே என்று தன்னையே நொந்து கொண்டார்.
அதன் பிறகு சிவா அந்த சந்நியாசிகளுடன் இருந்து தவம் புரிந்து பார்த்தார்.
இமயமலை கிளைமேட் அவருக்கு ஒத்துக்கொள்ளவில்லை.
பேசாமல் இறங்கிவிட்டார்.
திரும்ப வடஇந்தியாவில் பல இடங்களைச் சுற்றினார். ஒரு குஜராத் யோகி கொஞ்சம் இரக்கப்பட்டு முறையாக அவருக்கு
யோகாசனத்தைச் சொல்லித்தந்தார்.
ஒன்றும் பலனில்லை.
எத்தனையோ நாட்கள் பட்டினி கிடந்து நோன்பிருந்து பார்த்தார்.
மயக்கம் வந்ததே தவிர, உண்மையான மெய்யறிவு கிட்டவில்லை.
மனத்தை அடக்கவோ, புலன்களை அடக்கவோ அவரால் முடியவில்லை.
ஆனாலும், அவர் உடைக்கும் உருவத்திற்கும் மதிப்பு தந்த சமூகம், துறவி என்று மதித்து, அங்கீ
கரித்துவிட்டது.
அன்று மயிலாப்பூரில் பிரசங்கம் ஏற்பாடாகியிருந்தது.
சுவாமி மேடைக்கு அழைத்து வரப்பட்டார்.
ஆன்மிக மகாசபை தலைவரொருவர் ஒரு பெரிய ரோஜாப்பூ மாலையைப் போட்டு, பட்டு சால்வையைப் போர்த்தி, அவருடைய பெருமைகளைச் சொன்னார்.
சுவாமி பிரசங்கத்தை ஆரம்பித்தார். லெüகீகத்தில் ஏற்படும் கஷ்டங்களையும், துறவறம் கொள்வதன் மூலம் நிம்மதியாக இருக்க முடியும் என்பதையும் விரிவாக எடுத்துக் கூறினார்.இருபது வருஷங்களுக்கு முன், பல்வேறு குடும்பச் சிக்கல்களின் காரணமாக பந்தபாசங்களை வெறுத்து, தான் துறவுநெறி மேற்கொண்டு விட்டதையும் எடுத்துக் கூறினார்.
அப்போதுதான் அந்த சீட்டு வந்தது.
ஒரே வரி
"நான் தங்களிடம் பேச விரும்புகிறேன்'
கீழே கையெழுத்தில்லை.
சீட்டுக் கொண்டு வந்தவர், எதிரே கொஞ்ச தூரத்தில் கண்ணை மூடி அமர்ந்திருந்த இளைஞனைக் காட்டிவிட்டு இறங்கினார்.
பிரசங்கம் முடிந்தது.
சுவாமி தனியறையில் அமர்ந்திருந்தார். அந்த இளைஞன் உள்ளே நுழைந்து வணங்கினான்.
"உட்காரப்பா...''
விபூதி பொட்டலத்திலிருந்து கட்டு விபூதி எடுத்து, "மந்திரமாவது நீறு; வானவர் மேலது நீறு' என்று பாடி, பூசிக் கொண்டார்.
"என்னப்பா உன் பிரச்னை?'' விபூதி கொஞ்சம் கையில் கொடுத்துவிட்டுக் கேட்டார்.
"ஸ்வாமி! லெüகீக வாழ்க்கையில் உள்ள கஷ்ட நஷ்டங்களைச் சொன்னீர்கள். நல்லது. ஆனால், உண்மையிலேயே லெüகீகத்திலிருந்து விலகிய துறவு ஆன்மதிருப்தியைத் தருமா ஸ்வாமி?''
துணுக்கென்றது.
"என்ன கேட்கிறான் இவன்?''
ஏன்டாப்பா, இருபது வருஷத்துக்கு முன்னால் பெண்டாட்டி புள்ளைய விட்டுட்டு, குடும்பத்தைச் சமாளிக்க முடியாம காவிகட்டிகிட்டு ஓடினியே, இப்ப நீ திருப்தியா இருக்கிறியாயென்று கேட்கிறானா? யார் இவன்? என்னை அடையாளம் தெரிந்து கொண்டு கேட்கிறானா? குத்திக்காட்டுகிறானா? குடும்பத்தைக் காப்பாற்றத் துணிவின்றி, துறவு பூண்டும் நினைவுகளைச் சாகடிக்க முடியாத தன்னுடைய கோழைத்தனத்தைத் தெரிந்து கொண்டானா?
மெல்ல கேட்டார்.....
"தம்பி! நீ எதற்காக இந்த ஐய வினாவை எழுப்புகிறாய்?''
இளைஞன் நன்றாக உட்கார்ந்து கொண்டான். சொல்ல ஆரம்பித்தான்.
"காரணம் உண்டு ஸ்வாமி! என் கதையை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இருபது வருஷங்களுக்கு முன்பு நான்கே வயதான என்னையும், என் தாயாரையும் தவிக்க விட்டு விட்டு சந்நியாசம் கொள்ளப் போய்விட்டார் என் தந்தை. ஊரெல்லாம் கடன்... இதற்கு நடுவில் எல்லோருடைய ஏச்சும் பேச்சும்... எப்படியோ என்னை வளர்க்கப் படாதபாடு பட்டுவிட்டாள் என் அன்னை. இப்போது படித்து முடித்து, ஏதோ ஓர் உத்தியோகமும் நான் தேடிக் கொண்டுவிட்டேன். சம்பாதிக்கிறேன். கடனை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக அடைத்துக் கொண்டிருக்கிறேன்.. ஆனால் ஸ்வாமி''
நிறுத்தினான்.
நிமிர்ந்து பார்க்க தயக்கமாக இருந்தது. மனவோட்டம் பிளாஷ்பேக் காட்டியது. இவன்சொல்கிற கதை தன் கதைதானா? இல்லை. இருக்காது. தான் விட்டு வந்தது தன் மனைவியோடு ஒரு ஆண், இரண்டு பெண் பிள்ளைகளையல்லவா? இவன் என் மகனல்ல. யாரோ இவன்? ஆறுதலுக்காக வந்திருக்கிறான். வெறும் ஆறுதல். நான்கு வாய்வார்த்தை போதும் இவனுக்கு. திருப்தி அடைந்து விடுவான்!
ஸ்வாமிக்கு குறுகுறுப்பு கொஞ்சம் அடங்குவதாகப்பட்டது.
அந்த இளைஞன் கொஞ்சம் தாமதித்துத் தொடர்ந்தான்.
"ஆனால் ஸ்வாமி! எனக்கு இப்போது உள்ள பிரச்னை என் அம்மாவினால்தான். அவரையே இன்னமும் நினைத்துக் கொண்டிருக்கிறாள். அவர் என்ன செய்கிறாரோ, எப்படிக் கஷ்டப்படுகிறாரோ என்று சதா புலம்பிக் கொண்டிருக்கிறாள். ஒவ்வொரு ஊராகப் போய் விசாரித்துத் தேடச் சொல்கிறாள். இந்த நிலையில் நான் என்ன செய்வது ஸ்வாமி?''
"தம்பி... உன் அம்மா பெயர் என்ன?'' - ஸ்வாமி கேட்டார்.
சொன்னான்.
ஸ்வாமிக்கு இதயத்தில் சட்டென்று ஒரு கூர்மையான முள் இறங்கியது. "மகனே' என்றவாறே மயங்கிச் சரிந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.