

மகாகவி பாரதியின் படைப்புச் செல்வங்கள் நாட்டு மக்களிடையே பரவ வேண்டும் என்கிற உயர்ந்த நோக்கத்துடன் தன்னலம் கருதாமல் செயல்பட்ட பெருமக்கள் பலராவர். பாரதியின் கவிதை அழகில் சொக்கிப் போன வி. கிருஷ்ணசாமி ஐயர் 1907-ஆம் ஆண்டு முதன்முதலாகப் பாரதியின் மணியான மூன்று பாடல்கள் கொண்ட சிறு நூலை வெளியிட்டார்.
பாரதியைத் தெய்வீகப் புலவராகவும் தமிழ்நாட்டின் ரவீந்திரராகவும் கண்ட பாரதியாலே அன்புடன் தம்பி என்று அழைக்கப்பட்ட பரலி சு. நெல்லையப்பர் பாரதியின் பாடல்களை வாயுள்ள மக்கள் எல்லாம் பாட வேண்டும், காதுள்ள மக்கள் எல்லாம் கேட்டு இன்புற வேண்டும் என்கிற ஆசைப் பெருக்கால் உந்தப்பட்டு, 1917 முதல் 1919 வரை பாரதியின் நான்கு நூல்களைப் பிரசுரம் செய்தார்.
இதன் பின்னர், 1918- 1920 ஆகிய காலகட்டங்களில் பாரதியின் மொழிபெயர்ப்பு நூல்களையும், கதை நூல் ஒன்றையும் "சுதேசமித்திரன்' காரியாலயத்தார் பதிப்பித்து வெளியிட்டனர்.
1919- 1920 -ஆம் ஆண்டுகளின் வாக்கில் புதுச்சேரியில் இயங்கி வந்த "இந்தியப் பதிப்புச் சாலை' பதிப்பித்திருந்த தாகூர் கதைகளின் இரு தொகுதிகளில் பாரதி மொழி பெயர்த்த எட்டுக்கதைகள் இடம் பெற்றன.
1921 செப்டம்பர் 12- இல் பாரதியின் மரணத்தை அடுத்து, பாரதி நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, செல்லம்மா தமது சகோதரர் அப்பாத்துரையின் உதவியோடு, "பாரதி ஆசிரமம்' என்றவொரு புத்தக வெளியீட்டு நிறுவனத்தை நிறுவினார்.
பாரதியின் நூல்கள் முழுமையும் பன்னிரண்டு தொகுதிகளாக வெளியிடத் திட்டமும் வகுக்கப்பட்டது. முதல் கட்டமாக, 1922- இல் "சுதேச கீதங்கள்' என்ற தலைப்பில் பாரதி பாடல்களின் முதலிரு தொகுதிகள் பிரசுரமாயின. எதிர்பார்த்த அளவு நூல்களின் விற்பனை உற்சாகம் தரும்படியாக இல்லை. பன்னிரண்டு தொகுதிகள் வெளியிடப்படும் என்று அறிவிப்புச் செய்ததுடன், பாரதி ஆசிரமம் மேற்கொண்டு பாரதி நூல்களை வெளியிடும், திட்டத்தைக் கைவிட்டு விட்டது; புத்தக வியாபாரமும் நின்று விட்டது.
இந்த விதமான நெருக்கடி நிலையில், பாரதியின் குடும்ப நலனை உத்தேசித்தும், நூல்களின் விற்பனையைக் கருத்தில் கொண்டும், பலவிதப் பிரச்னைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கத் திட்டமிட்டார், பாரதியின் இளைய தம்பி சி.விசுவநாதர் என்கிற அதிசய மாமனிதர்.
விசுவநாதர் மிகுந்த துணிச்சலுடன் பாரதிநூல்களை வெளியிடுவதற்கென்றே "பாரதி பிரசுராலயம்' என்ற நிறுவனத்தை 1924- இல் நிறுவினார். பாரதியின் உறவினர் ஹரிஹரசர்மா மற்றும் பாரதியின் மாப்பிள்ளை நடராஜன் ஆகியோரைக் கூட்டாளிகளாகச் சேர்த்துக் கொண்டார்.
விசுவநாதரின் கூட்டுப் பொறுப்பில் அமைந்த பாரதி பிரசுராலயம் பாரதியின் நூல்களை வெளியிடும் மாபெரும் பொறுப்பை ஏற்றுக் கொண்டது. அது முதலாகப் பாரதியின்நூல்கள் முறையாகத் தொடர்ந்து வெளி வரலாயின.
சொல்லப் போனால், பாரதியின் நூல்களை வெளியிடும் மாபெரும் பொறுப்பைச் சந்தர்ப்பவசத்தால் ஏற்க நேர்ந்தாலும், அப்பணியை விசுவநாதர் தேசியத் திருப்பணியாகவே கருதினார்.
அச்சில் வெளிவராமலும், சிதிலமான நிலையில் அச்சுப் பிரதிகளாகவும், கையெழுத்துப் பிரதிகளாகவும் இருந்தனவற்றையெல்லாம் சீர் செய்து, ஒழுங்குப்படுத்தி நூல் வடிவம் தர வேண்டி, விசுவநாதர் படாதபாடுபட்டார்.
ஏற்கெனவே வெளியான நூல்களை மறுபதிப்புகள் செய்தார். பாரதி நடத்திய - தொடர்பு கொண்ட இதழ்கள், கைப்பிரதிகள் எங்கெங்கு கிடைக்கும் என்பதான தேடல் முயற்சிகளை மேற்கொண்டார்.
பாரதியார் காலத்தில் வெளியான நூல்களிலேயே ஒரு சில பாடல்கள் இடம் பெறவில்லை. பாரதியின் அருமைத் தம்பியான இவரோ, தம் தேடலில் கண்டறிந்த பாரதி பாடல்கள் பலவற்றை அவ்வப்போது வெளியிட்ட நூல்களில் பிரசுரம் செய்தார்.
1928-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு பாரதி நூல் தொகுதிகளான சுதேசகீதங்களுக்குத் தடை விதித்தது. பாரதி பிரசுராலயமும் போலீஸ் சோதனைக்குப் பலமுறை உள்ளானது; நூல் பிரதிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
இரண்டாம் உலக யுத்த காலத்தில் கடும் காகிதப் பஞ்சம் ஏற்பட்டு, அது பாரதி நூல்களின் பதிப்புப் பணிகளையும் பாதித்தது. அச்சுத்தாள் விலை ஏற்றம் காரணமாக, அச்சுத்தாள்களுக்குக் கட்டுப்பாடும் விதிக்கப்பட்டது.
இந்த நிலையிலும், மனம் தளராமல், துணிவையே துணையாகக் கொண்டு, பாரதி நூல்களை விசுவநாதர் அச்சிட்டு வழங்கினார்.
பாரதியின் தம்பி என்கிற ஒரே காரணத்தினால், படித்துப்பட்டம் பெற்றும், தகுதி இருந்தும் விசுவநாதருக்கு அரசுப் பள்ளியில் உத்தியோகம் தர அரசு மறுத்துவிட்டது.
இப்படிப்பட்ட சோதனைகளுக்கு இடையேதான் பாரதி நூல்கள் பிரசுரமாயின என்பதை நினைத்துப் பார்க்கும்போது தான் விசுவநாதர் செய்த சேவையின் அருமையும் பெருமையும் நமக்கு நன்கு விளங்கும்.
தம்முடைய ஆசிரியர்பணி, குடும்ப சம்ரக்ஷனை ஆகிய இவற்றுக்கிடையேயும் பாரதியின் படைப்புகளைத் தாங்கி வெளிவந்த "சுதேசமித்ரன்', " இந்தியா', "ஞானபாநு' ஆகிய இன்னபிற பத்திரிகைகளின் அசல் பிரதிகளைத் தேடிப்பிடித்தார் அவற்றைக் கட்டுரைகள் வரிசையில் நூல்களாகப் பதிப்பித்தார்.
பாரதியின் தமிழ்ப்படைப்புச் செல்வங்களைத் தேடிப் பெற்று, பதிப்புச் செய்வதில் எந்த அளவுக்கு முனைப்பு காட்டினாரோ, அதே அளவுக்கு ஆங்கிலப் படைப்புகளைத் தேடிப் பெறுவதிலும் விசுவநாதர் முனைப்புடன் செயல்பட்டார்.
அன்னிபெஸண்ட் அம்மையார் நடத்திய " நியூ இந்தியா', "காமன் வீல்' போன்ற பத்திரிகைகளின் பழைய பிரதிகளில் இடம் பெற்றிருந்த பாரதியின் ஆங்கில எழுத்துக்களைச் சேகரித்தார்.
மற்றும், பாண்டிச்சேரியில் அரவிந்தரின் "ஆர்ய' பத்திரிகையிலிருந்தும் பாரதி எழுத்துகளைத் தொகுத்தார். இவ்வாறாகத் தேடிப்பெற்ற பாரதியின் ஆங்கிலப்படைப்புகளை முறைப்படுத்தி, அவற்றை AGNI AND OTHER POEMS AND TRANSLATIONS, ESSAYS AND OTHER PROSE FRAGMENTS என்ற தலைப்புகளில் 1937-ஆம் ஆண்டு நூலாக்கம் செய்து வெளியிட்ட பெருமையாளர், விசுவநாதர்.
ஆரம்ப காலத்தில் பாரதியைக் கவிஞராக அறிமுகப்படுத்திய நிலையை மாற்றி, பாரதி கவிஞர் மட்டுமல்லர், உரைநடை ஆசிரியர் , மொழிபெயர்ப்பாளர், ஆங்கில மொழியிலும் எழுதுவதில் வல்லவர் என்று இலக்கிய உலகத்திற்கு அறியச் செய்தவர், விசுவநாதர்.
பாரதியின் தம்பி விசுவநாதர் பள்ளி ஆசிரியர், பதிப்பாசிரியர் மட்டுமல்லர், நூலாசிரியருங் கூட அவர் 1929 -ஆம் ஆண்டிலே ‘BARATHI AND HIS WORK’ என்ற நூலை எழுதி உள்ளார். பாரதியின் நூல்களை ஆங்கிலம் படித்தவர்களும் படித்து இன்புற வேண்டும் பயனடைய வேண்டும் என்பதை வற்புறுத்துவதற்காகவே எழுதப்பட்ட நூல் அது.
படித்தவர்கள் ஒரு சிலரே பழகியவர்களில் சிலர் மட்டுமே பாரதியை அறிந்திருந்த நிலையில் உள்ளபடியே பாரதியின் பெருமையை பாட்டின் அருமையை படித்தவர், பாமரர் ஆகியோரிடையே பரப்பிய பெருமை மிக்கவர்களின் வரிசையிலே நமது விசுவநாதருக்கு ஒப்பற்ற ஸ்தானம் என்றுமே உண்டு.
பாரதியார் மேற்கொண்ட நூல் முயற்சிகள் பயனளிக்காத ஒரு நிலையில் செல்லம்மா பாரதியின் வெளியீட்டுப் பணிகள் வெற்றியடையாத நிலையில் வேறு எவரும் துணிந்து பாரதி நூல்களை வெளியிட முன் வராத நிலையில் விசுவநாதர் பாரதி நூல்கள் பதிப்பிப்பதற்கென்றே, "பாரதி பிரசுராலயம்' கண்டாரே, அதற்காகத் தமிழுலகம் அவருக்கு நன்றி செலுத்தக் கடமைப் பட்டிருக்கிறது.
விசுவநாதரும் பாரதி நூல்கள் வெளியீட்டு முயற்சியில் துணிச்சலுடன் கூட்டாளிகளுடன் இணைந்து செயல்படாமல் இருந்திருப்பாரேயானால், பெரும்பாலான பாரதியின் படைப்புச் செல்வங்களை நாம் இழந்திருப்போம்.
சுமார் 25 ஆண்டுக்காலம் பாரதிநூல்கள் வெளியீட்டுப் பணிகளில் ஈடுபட்டு, அயராமல் உழைத்த உத்தமசீலர் விசுவநாதர்.
1949 -ஆம் ஆண்டு பாரதியின் நூல்களை அரசுடைமையாக்கத் தமிழக அரசு முன் வந்தபோது, தம் நிகழ்காலத்தையும், தம் மக்களின் எதிர்காலத்தையும் பாதிக்கும்படியான முடிவை எடுத்த தியாக சீலர் விசுவநாதர்.
எந்தவிதப் பிரதிபலனையும் எதிர்பாராமல், அந்நாள் வரை தாம் காப்பாற்றி வைத்திருந்த பாரதியின் கையெழுத்துப் பிரதிகளையெல்லாம் தமிழக அரசிடம் ஒப்படைத்தார்.
பாரதி நூல்களை மட்டுமே வெளியிடும் பணியில் நான் ஈடுபட்ட நாள் முதலாக பாரதி பிரசுராலய பாரதி நூல்களில் அமைப்பு முறையால் ஈர்க்கப்பட்டு, என்னை அறியாமலே பாரதியின் தம்பி விசுவநாதரையே ஆதர்ஷ புருஷராக - ஞானாசிரியராக - வரித்துக் கொண்டுவிட்டேன்.
எதிர்பாராத விதமாக, 1979- ஆம் ஆண்டின் முற்பாதியில் விசுவநாதருடன் கடிதத் தொடர்பு கொள்ள நேரிட்டது, பின்னர் அவரைச் சந்தித்து உரையாடும் பாக்கியமும் எனக்குக் கிடைத்தது.
நாளாக நாளாக எங்கள் இருவரிடையே - பணி ஒற்றுமை, பெயர் பெருத்தம் காரணமாகவோ, என்னவோ தெரியவில்லை. அடிக்கடி அவர் வாசம் செய்து வந்த மானாமதுரைக்குச் சென்று கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்ளும் அளவுக்கு எங்களது தொடர்பு நீடித்தது.
ஒரு சமயம், பாரதி நூல்களைப் பதிப்பிக்க நேர்ந்த சந்தர்ப்ப சூழ்நிலை குறித்து அவரிடம் நான் கேட்டுக் கடிதம் எழுதினேன்.
என் கடிதத்திற்கு 25.3.1979 ஆம் தேதிய கடிதத்தில் விளக்கம் தருகின்ற பாங்கில் அமைந்த வாய்மை மணக்கும் வாசகங்கள் வருமாறு:
""நான் பாரதியாரின் உடன் பிறப்பாகத் தோன்றியது ஒரு தற்செயலான சம்பவம். அதுபோன்று பாரதியின் நூல்களை வெளியிட நேர்ந்ததும் மற்றொரு தற்செயலான சம்பவம், சந்தர்ப்ப வசத்தால் இந்த மாபெரும் தேசியப் பணியை ஏற்க நேர்ந்தது.
ஏற்ற பிறகுதான் இப்பணியின் தன்மை என்ன, பரிமாணம் என்ன, இதிலுள்ள கஷ்டங்கள் எத்தனை என்பதையெல்லாம் அறிந்து கொண்டேன்.
நான் பாரதியாரின் சகோதரன் என்ற காரணத்தாலும், பாரதி நூல்களை வெளியிட்டுவந்தவன் என்ற காரணத்தாலும் என்னை அக்காலத்து அரசு கண்காணித்து வந்தது. என் கடிதங்கள் எல்லாம் போலீஸ் கமிஷனர் காரியாலயம் பார்வையிட்டு அனுப்பியது. எனக்கு அரசு நடத்தி வந்த கல்வி ஸ்தாபனங்களில் உத்தியோகம் மறுக்கப்பட்டது.
இத்தனை இன்னல்களுக்கிடையே நான் பாரதி நூல்களை வெளியிட நேர்ந்ததும், அதைப்பற்றி எனக்கு வருத்தமேயில்லை. அதை ஒரு கடமையாகவே, தேச சேவையாகவே கருதி வந்தேன்.
தவிர, இந்த வாய்ப்பு எனக்குக் கிடைத்தற்கரிய மாபெரும் பேற்றையளித்தது. நூல்களை வெளியிடும்போதே அவற்றைப் படிக்க நேர்ந்ததால், மிகக் குறுகிய காலத்தில் பாரதி எழுதிக் குவித்த அமர காவியங்களின் பரிமாணம், தன்மை, நயம் முதலியவற்றையெல்லாம் அனுபவிக்க முடிந்தது. அவை என்னைப் புதிய உயிராக்கி, எனக்கு ஏதும் கவலையறச் செய்து, என்றும் சந்தோஷங் கொண்டிருக்கச் செய்தன.''
- இந்தக் கடிதம் தனிப்பட்ட முறையில் விசுவநாதரால் எழுதப்பட்டது. என்றாலும் பாரதியின் படைப்புகளைப் படிப்பவர்களுக்கும் அந்தச் சுகானுபவம் கிட்டவே செய்யும்.
நான் அறிந்த பாரதியின் தம்பி விசுவநாதர், தாம் உண்மையென்று நம்பியதை மட்டுமே எழுதினார், பேசினார். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசத் தெரியாதவர். தெரிந்ததைத் தெரிந்தது என்றும், தெரியாததைத் தெரியாது என்றும் ஒப்புக் கொள்பவர். எல்லாவற்றுக்கும் மேலாகப் பாரதி பெயருக்குக் குந்தகம் நேராமல், புரளிக்கதைகளைப் பேசாமல், அடக்கத்துடன் வாழ்ந்தவர், பெயருக்கும் புகழுக்கும் பொருளுக்கும் ஆசைப்படாமல் எளிய வாழ்க்கை வாழ்ந்து காட்டிய மாமனிதர் 17-7-1984 -இல்
அமரரானார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.