

காலை நேர பரபரப்பில் உழவர் சந்தை சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. காய்கள் வாங்கிய பையை எடுத்துக் கொண்டு சந்தையைவிட்டு வெளியில் வந்து கொண்டிருந்தான் சிவகுமார்.
""சார் ...சார் ...சாரோய் ...'' யாரோ கூப்பிடும் குரல் கேட்டது. தன்னைத் தான் கூப்பிடுகிறார்களா என்றபடி மெல்ல திரும்பி குரல் வந்த திசையைப் பார்த்தவன், தன்னைத்தான் என்பதை உணர்ந்து ""என்னம்மா என்னையா கூப்பிட்டே?'' என்றவாறு அங்கே கடை போட்டிருக்கும் பெண்மணியைப் பார்த்துச் சென்றான்.
என்ன சார் ...போன வாட்டி வந்தப்பவே நாட்டு பப்பாளி இல்லையான்னு கேட்டே... இன்னிக்கு ஒனக்காகவே வாங்கிட்டு வந்து வச்சிருக்கேன் கண்டுக்காம போறியே?'' என்றாள்.
""இல்லம்மா. பக்கத்து வீட்ல காய்ச்சதா ரெண்டு பழம் குடுத்தாங்க. அது இருக்கு இப்போ. இன்னும் ரெண்டு மூணு நாள் கழிச்சி வாங்கிக்கலாம்னு போயிட்டேன். பரவாயில்ல குடு ...'' என்று பழத்தை வாங்கிக்கொண்டு காசைக் கொடுத்துவிட்டு பைக் நிறுத்தியிருந்த இடம் வந்து பையை வண்டியின் பக்கவாட்டிலுள்ள கொக்கியில் மாட்டிவிட்டு ஸ்டார்ட் செய்து புறப்பட்டான்.
நேரே வீட்டுக்குச் செல்லாமல் பைபாஸ் சாலை சென்று பரசுராமர் கோயில் எதிர் தெருவில் குடியிருக்கும் தன் அலுவலக நண்பன் மூர்த்தியின் வீட்டுக்குச் சென்றான். கேட்டைத் திறந்து உள்ளே சென்று குரல் கொடுத்தான்.
நண்பனின் மனைவி கீதா வந்து கதவைத் திறந்து, ""அடடே... வாங்கண்ணா, என்ன காலங்காத்தால விசிட்? அதுவும் இன்னிக்கு உங்களோட நாள்ல'' என்றாள். சோபாவில் அமர்ந்தான் சிவகுமார்.
""இன்னிக்கு எங்களோட நாள்னியே... அப்படின்னா? இன்னிக்கு நண்பர்கள் தினமா என்ன?'' என்றான்.
""நண்பர்கள் தினமில்லை... இன்னிக்கு ஞாயித்துக்கிழமை. அதாவது ஆம்பளைங்களும் பிள்ளைகளும் காலை ஒன்பது மணி பத்து மணி வரைக்கும் தூங்குற நாள்னு சொன்னேன்'' என்றாள்.
அதைக் கேட்ட சிவகுமார், ""உன் புருஷன் மாதிரியில்லை நான். ஞாயித்துக்கிழமையாயிருந்தாலும் வழக்கப்படி எழுந்திரிச்சிடுவோம் தெரியும்ல''
""சரி... சரி... என்ன குடிக்கிறீங்க? காபியா? டீயா?''
""ஒண்ணும் வேணாம். வீட்ல குடிச்சிட்டுத்தான் சந்தைக்கு வந்தேன். எனக்கு நேத்தைய பேப்பர் வேணும். அதை வாங்கிட்டுப் போவலாம்னு வந்தேன். பேப்பர்காரப் பையன் நேத்து தூக்கிப் போட்ட பேப்பர் அங்க கேட்டுக்குப் பின்னால தண்ணியிருந்த பக்கெட்ல விழுந்து சுத்தமா நனைஞ்சிருச்சி. பிரிச்சி படிக்கவே முடியலை. அதான் உங்ககிட்டே வாங்கிட்டுப் போவலாம்னு வந்தேன்...'' என்றான்.
""அதோ ஸ்டூல் மேல ரெண்டு மூணு பேப்பர் இருக்கு. அதுல பாத்து எடுத்துக்கங்கண்ணா'' என்ற கீதா, ""அவரை எழுப்பிவிடவாண்ணா?'' என்றாள்.
""வேணாம்... வேணாம்... தூங்கட்டும். நான் கிளம்பறேன். ஆமாம்... இன்னிக்கு விடுமுறையாச்சே? வெளியில் எங்கேயாவது போகலாம்னு திட்டம் போட்டிருக்கீங்களா? அவன் சாயங்காலம் ஃப்ரியா இருப்பானா?''
""அவர் ஃப்ரிதான். நானும் பசங்களும்தான் வெளில போறோம். என்னோட சினேகிதியோட தங்கச்சி சிங்கப்பூர்லேர்ந்து வந்திருக்கா. வா... வான்னு கூப்பிட்டிருந்தா. அதான் இன்னிக்கு சாயங்காலம் போயிட்டு வரலாம்னு இருக்கோம்''
""அப்படினா... சாயங்காலமா அவனை நம்ம வீட்டுக்கு வரச் சொல்லு'' என்ற சிவகுமார் பேப்பரை எடுத்துக் கொண்டு புறப்பட்டான்.
சிவகுமாரும் மூர்த்தியும் கல்லூரியில் படிக்கும்போது அறிமுகமாகி நண்பர்களானார்கள். பிறகு இருவருக்கும் வேலை கிடைத்து அலைபேசி மூலம் அவர்களின் நட்பு வளர்ந்தது. இப்போது இருவருமே திருவண்ணாமலையில் இரு வேறு அலுவலகத்தில் பணி புரிகிறார்கள்.
சிவகுமாருக்கு மேகலா என்ற மனைவியும். சங்கரி,
பூங்குழலி என்ற இரண்டு மகள்களும் உள்ளனர். மூர்த்திக்கு கீதா என்ற மனைவியும், லட்சுமி என்ற மகளும் சேகர் என்ற மகனும் உள்ளனர். திருமணத்திற்குப் பின்னும் அவர்களின் அன்பும் நட்பும் குறையாமல் அண்ணன், தம்பி போல் பழகி வருகிறார்கள்.
மாலை ஐந்தரை மணியைப் போல் மூர்த்தி வந்தான். வீட்டில் சிவா மட்டுமே இருந்தான். சிவா பக்கத்திலமர்ந்த மூர்த்தி,""என்னடா வீட்ல யாருமில்லையா? நிசப்தமாயிருக்கு'' என்றான்.
தொலைக்காட்சியின் சப்தத்தைக் குறைத்து பின் அணைத்துவிட்டு, ""அவங்க எல்லாரும் ரமணாஸ்ரமம் போயிருக்காங்க. இன்னிக்கு ரமண மகரிஷியோட நட்சத்திரம். விசேஷமா பூஜை நடக்கும். பஜனை செய்வாங்க. ஆரத்தி நடக்கும். அதனால அங்க போயிருக்காங்க''
""ஏன் நீ போகலையா?''
""போகலாம். நல்லாத்தான் இருக்கும். மனசுக்கு ஓர் அமைதி கிடைக்கும். ஆனா ரொம்ப நேரம் உட்கார முடியலை. நாம ரெண்டு பேரும் கிரிவலப் பாதைக்குப் போய் ரொம்ப நாளாகுதுல்ல. வா இன்னிக்கு நாம அங்க போவோம். என்ன சொல்றே?''
""ஓ.கே. போகலாம்... வா''
இருவரும் பைக்கில் சென்றனர். அங்கே கிரிவலச் சுற்றுப் பாதையில் அந்தப் பக்கம் வரும்போது வழக்கமாக டீ குடிக்கும் கடையில் வண்டியை நிறுத்தினார்கள்.
""என்ன சார்... ரொம்ப நாளா கடைப் பக்கமே காணமே ஒங்களை?'' என்றபடி அவர்களுக்கு இஞ்சி டீ தயார் செய்ய முனைந்தார்.
டீ குடித்துவிட்டு சற்று தூரத்தில் சாலையோர சிமெண்ட் பெஞ்சில் இருவரும் அமர்ந்தனர். இதமாக காற்று வீசியது. குரங்குகள் அங்குமிங்கும் ஆட்டம் போட்டன. காவி கட்டிய சந்நியாசிகள் ஆங்காங்கே உட்கார்ந்திருந்தனர். பெளர்ணமி நாளில் கிரிவலப் பாதை நிரம்பி வழியும். எதையாவது கீழே போட்டால் குனிந்து எடுப்பதற்குள் கூட்டம் தள்ளிக் கொண்டு பத்தடி தூரம் சென்றுவிடும். சாலையின் இந்தப் பக்கத்திலிருந்து அந்தப் பக்கத்திற்கு கடந்து போக மிகவும் பிரயத்தனப்பட வேண்டும்.
இப்போதெல்லாம் பெளர்ணமி நாளில் தான் கிரிவலம் போகவேண்டுமென்ற சாஸ்திரத்தை மாற்றிக் கொண்டு பலரும் சாதாரண நாளில் கும்பல் கும்பலாக போக ஆரம்பித்துவிட்டார்கள். வருடம் 365 நாளும் சிறு சிறு கும்பலாக சுற்றிக் கொண்டுதான் இருக்கிறார்கள் மனிதர்கள்.
அடுத்த வாரம் சனி ஞாயிறு வருவதாக போன் பண்ணிய சித்தப்பாவுக்கு பதில் பேசி அலைபேசியை துண்டித்த சிவகுமார். ""காலைல நான் வீட்டுக்கு வந்தப்ப நல்லா தூங்கிக் கிட்டிருந்த போல. ஏன்... ஞாயித்துக் கிழமைன்னா சீக்கிரம் எழுத்திருக்க மாட்டீங்களா நீயும் புள்ளைங்களும்?'' என்றான்.
""கிடைக்கறது வாரத்துல ஒருநாள். அன்னிக்குத் தூங்காம எழுந்து என்ன செய்றது?'' என்றான் மூர்த்தி.
""சரி...நீ தூங்கி ரெஸ்ட் எடுக்கறே. கீதா என்ன செய்யுது. அதுக்கும் ஞாயித்துக்கிழமைதானே. அதுவும் உங்ககூட சேர்ந்து தூங்கலாம்ல ... ஏன் தூங்கலை?''
""ஞாயித்துக்கிழமையா இருந்தாலும் அவளுக்கு வழக்கமான வேலை இருக்குல்ல. காலைல எழுந்திருச்சி வாசல் தெளிச்சி கோலம் போடணும். பால் வாங்கணும். காபி போடணும். அடுத்து டிபன். ஞாயிறுன்னா பசங்களுக்குப் பிடிச்சதா பொங்கல், பூரி, சட்னி சாம்பார்னு செய்யணும். ஸ்கூலுக்கு சீக்கிரமா போறதால வாய்க்கு ருசியா செய்ய முடியாது. தினமும் இட்லி தோசைதான். அதனாலதான் அன்னிக்கு ஒரு நாள் அவங்களுக்குப் பிடிச்சதா செய்து தரணும்ல''
""ஆக... வாரத்துல உங்களுக்கு மட்டும்தான் ரெஸ்ட். கீதாவுக்கு கிடையாது. அது உனக்குத் தப்பா தெரியல? அல்லது பாவமா தோணல. பாவம்டா கீதா'' என்ற சிவா சற்று நிறுத்தி,""காலைல உங்க வீட்டுக்கு வந்தப்ப கீதா பூரிக்கு மாவு பெசஞ்சிக்கிட்டு இருந்துச்சி. அப்ப மணி ஏழரையோ ஏழே முக்கால்தான். காலைல அஞ்சு மணிக்கு எழுந்திருச்சி வேலையை ஆரம்பிச்சாதான் எல்லாம் முடிச்சி பசங்களை தயார் பண்ணி எட்டு மணிக்குள்ள ஸ்கூல் வேனுக்கு அனுப்ப முடியும். அதே மாதிரி ஞாயித்துக் கிழமையும் கீதா எழுந்திருக்கணுமா என்ன?''
""அதுக்கு நான் என்ன செய்யறது?''
""நீயும் கொஞ்சம் உதவி பண்ணணும். இருபது இருபத்திரண்டு வருஷம் அம்மா வீட்ல செல்லமா இருந்திருப்பாங்க பெண்கள். ஆனா இங்க வந்ததும் நாமளே கதின்னு நமக்கும் புள்ளைங்களுக்கும் உழைக்கிறாங்க. அதெல்லாம் பொம்பளைங்க வேலைன்னு சொல்லித் தப்பிக்கக்கூடாது. உன்னால முடிஞ்ச உனக்குத் தெரிஞ்ச வேலையை கீதாவுக்கு செய்து கொடுக்கணும். அப்ப அதுக்கு எவ்வளவு சந்தோஷமாயிருக்கும் தெரியுமா!''
""நீ சொல்றது நிஜம்தான் சிவா. என்னமோ நான் அப்படியே இருந்துட்டேன். ஆனா ஒரு நாள் கூட கீதா எங்ககிட்ட எதுவும் சொன்னதில்லையே''
""அவங்களா கேப்பாங்களா? சுமையை ஒரு கையால தூக்கி தலைல வைக்கிறதுக்கும் இரண்டு கையால தூக்கி வைக்கிறதுக்கும் வித்தியாசம் இருக்குல்லே. நாள் முழுக்க ஆபீஸ்ல கஷ்டப்பட்டுட்டு வர்றாரே. இங்க வந்தும்கூட அவரை எதுக்கு வேலை வாங்கணும்னு நெனைப்பாங்க. பொதுவா எல்லா மனைவிமார்களும் இப்படித்தான் நெனைப்பாங்க. அதே மாதிரி கணவன்களும் நெனைக்கணும். காலைல மனைவி எத்தனை மணிக்கு எழுந்திருக்கிறாங்க? என்னென்ன வேலை செய்யறாங்க? நைட்டு எத்தனை மணிக்கு படுக்கப் போறாங்கன்னு கொஞ்சம் யோசிச்சிப் பாத்தா நமக்கே மலைப்பா இருக்கும். நாமதான் அவங்க கஷ்டம் தெரிஞ்சி உதவி பண்ணணும். அவளும் ஒரு மனுஷி தானேன்னு நெனைக்கணும்.
என் மேகலாவுக்கு நான் உதவி பண்ணுவேன். இதுல வெட்கப்பட ஒண்ணுமேயில்லை. இது ஏதோ கல்யாணத்துக்கப்பறம் மனைவிக்காக செய்றேன்னு நெனைக்காத. இது எனக்கு சின்ன வயசிலேர்ந்தே பழக்கமாயிருச்சு. எங்க அக்கா ரெண்டு பேரும் கல்யாணமாகி போனப்புறம் வீட்ல அம்மா, அப்பா, நான் மூணு பேர்தான். வீட்ல வேலை அதிகமில்லேன்னாலும் அது கிராமமாச்சா சில பழக்கங்களை மாத்திக்க முடியாது. விடியல் காலைலேயே அம்மா எழுந்திருச்சி வாசல்ல சாணம் தெளிச்சி கோலம் போட ஆரம்பிச்சா அவங்களுக்கு ஏதாவது வேலை இருந்துகிட்டே இருக்கும். ஒண்டி ஆளு பார்க்கவே கஷ்டமாயிருக்கும். கிரைண்டர்ல மாவு அரைச்ச பிறகு அம்மாவால அந்தக் கல்லைத் தூக்க முடியாது. நான் தான் அதைத் தூக்கி மாவை வழிச்சிட்டு குழவியைக் கழுவி வைப்பேன்.
அம்மாவைக் கடைக்கெல்லாம் அனுப்பமாட்டேன். எது வேணும்னாலும் நானே வாங்கிட்டு வந்து கொடுத்துடுவேன். சாப்பிட உட்கார்றப்ப தட்டு எடுத்துட்டு வந்து வைப்பேன். தம்ளர்ல தண்ணி எடுத்துட்டு வருவேன். தம்பி... இதெல்லாம் பொம்பளைங்க வேலை. எல்லாம் நான் பாத்துக்கிறேம்பாங்க. ஆனாலும் நான் செய்வேன். அதுல எனக்கொரு சந்தோஷம் இருந்துச்சி'' என்ற சிவா சற்று நிறுத்திய போது -
""உண்மைதான் சிவா. எங்க வீட்ல நான் அம்மாவுக்கு எந்த உதவியும் செய்ததில்லே. இன்னும் சொல்லப்போனா கோவக்கார அப்பாவோட சேர்ந்து நானும் அம்மாவை வேலை வாங்கியிருக்கேன்'' என்ற மூர்த்தியின் வார்த்தைகள் வருத்தம் தோய்ந்து வந்தன.
""அதே பழக்கம் தான் எனக்கு இங்கேயும் வந்தது. தாய்க்குப் பின் தாரம்னு சொல்லுவாங்க. அந்த தாரம் நமக்கு மனைவி மட்டுமல்ல. நல்ல சினேகிதியா நெனைக்கணும். குறிப்பிட்ட வயசுக்கப்பறம் மனைவி நமக்கு தாய் மாதிரி. இப்ப எங்க பசங்களுக்கு சரியா 7.50-க்கு ஸ்கூல் வேன் வந்துரும். அதுக்குள்ள எல்லா வேலையும் முடிச்சாகணும். மேகலா அஞ்சு மணிக்கு எழுந்திருப்பா. நான் அடுத்த அரை மணிக்கெல்லாம் எழுந்திருவேன். அவ எழுந்து காபிக்கு பால் வச்சிட்டு ஒரு அடுப்புல இட்லி ஊத்தி வச்சிடுவா. இட்லி வெந்ததும் நான் அதை "ஹாட்பேக்'ல எடுத்து வச்சிடுவேன். ஒரு அடுப்புல குக்கர்ல சோறு ரெடியாகும். கீழே உட்கார்ந்து அருவாமனைல காய் நறுக்க மேகலாவுக்கு சிரமமா இருக்கும். அதனால நானே டேபிள்ல காய்கள், வெங்காயம் இதெல்லாம் வெச்சி கத்தியால கொஞ்ச நேரத்துல வெட்டிக் கொடுத்திடுவேன். சாதம் வெந்ததும் தட்டுல கொட்டி ஆற வெச்சி அன்னிக்கு பசங்களுக்கு லஞ்சுக்கு என்ன கொடுக்கணுமோ அதை நான் ரெடி பண்ணுவேன். மேகலா புள்ளைங்களை எழுப்பி பாத்ரூம் போகவச்சி குளிக்க வச்சி தலைசீவி யூனிஃபார்ம் போட்டு ரெடி பண்ணுவா. இது தினப்படி நடக்கும். ஞாயித்துக்கிழமை மட்டும்தான் புள்ளைங்க கொஞ்ச நேரம் அதிகப்படியா தூங்கும்''
சிவாவை நிமிர்ந்து பார்த்தான் மூர்த்தி.
""என்ன மூர்த்தி பாக்கறே? என்னடா இவ்வளவு மோசமான பொண்டாட்டிதாசனா இருக்கானேன்னு பாக்குறியா?''
""இல்லைடா. பெருமையா பாக்கறேன். உன்னை மாதிரி நானில்லையேன்னு வருத்தமாயிருக்கு. இன்னிக்கு பெண்கள் ஆண்களுக்கு சமமா படிக்கிறாங்க...வேலைக்குப் போய் நிறைய சம்பாதிக்கிறாங்க. கீதாவும் படிச்சவதான். முதல் குழந்தை பிறந்ததும் வேலைக்குப் போக வேணாம். குழந்தையையும் குடும்பத்தையும் பாரு. புருஷன் சம்பாத்தியம் போதும்னு எங்கம்மா சொல்லிட்டாங்க. அதனால வேலையை விட்டுட்டு வீடே கதின்னு இருக்கா. நல்லா படிச்சவ. நல்ல வேலைக்கு கெளரவமா போய்க்கிட்டிருந்தவ. இப்போ கூண்டுல அடைச்சிவெச்ச கிளியா இருப்பதை நெனைச்சி எவ்வளவு வேதனைப் படுறாளோ தெரியலை'' மூர்த்தியின் குரல் தழுதழுத்தது.
""நோ... நோ... அப்படியெல்லாம் இருக்காது. அப்படியேதும் இருந்திருந்தா அந்த வேதனையும் கசப்பும் கோபமா மாறி உன்கிட்ட சண்டை போட்டிருக்கலம்ல''
""சண்டை போடலை. என்கிட்ட கோவிச்சிக்கிட்டு அம்மா வீட்டுக்குப் போறேன்னு போகலை. ஆனா...ஒரு தடவை உன் மேகலா எங்க வீட்டுக்கு வந்தப்ப அவங்க கிட்ட நிறைய பேசியிருக்கா. அதுல என்னைப்பத்தி ஒரு குறையும் சொல்லலே. ஆனா. தான் அனுபவித்து வரும் வேதனையை ஒரு வித சலிப்போட சொன்னதைக் கேட்டேன்''
""அப்படியா?''
""ஆமாம். "எப்போ புள்ளைங்களுக்கு லீவு விடும்னு இருக்கேன் மேகலா'ன்னா. ஏன்? எங்கேயாவது ஊட்டி, கொடைக்கானல்னு டூர் போறீங்களான்னு மேகலா கேட்டாங்க. அதுக்கு கீதா, நீ ஒண்ணு. அதெல்லாமில்லே. ஒரு மாசம் முழுக்க அம்மா வீட்ல தங்கி நல்லா தூங்கி நேரம் கழிச்சி எழணும். அம்மா வந்து இந்தா காபி குடிச்சிட்டு அப்பறமா தூங்குன்னு சொல்லணும். அதை வாங்கிக் குடிச்சிட்டு திரும்புவும் தூங்கணும். இங்கதான் தினம் தினம் ஞாயித்துக்கிழமை லீவுன்னும் பாக்காம காலங்காத்தால எழுந்திருக்க வேண்டியிருக்குன்னு ரொம்ப சலிப்பா சொன்னதைக் கேட்டேன் சிவா. நான் அறையில தூங்கிக்கிட்டிருக்கேன்னு நெனைச்சிதான் இவங்க பேசிக்கிட்டிருந்தாங்க. உள்ளுக்குள்ள எவ்வளவு வேதனையும் வலியும் இருந்திருந்தா அவள்கிட்டேர்ந்து இப்படியொரு பேச்சுவரும். அப்பகூட நான் இதெல்லாம் நெனைச்சிப் பார்க்கலை. நீ சொன்ன பிறகு எனக்கு உணர்த்திய பிறகுதான் எல்லா தப்பும் எனக்குப் புரியுது. நமக்கு வாரத்துக்கு ஒரு நாளோ ரெண்டு நாளோ லீவு கெடைக்குது. அவங்களுக்கு ஏது? நமக்கு அம்பத்தெட்டு வயசுல ரிட்டையர் மெண்ட். ஆனா அவங்களுக்கு எப்போ ஓய்வு? காலம்பூரா உழைக்கிறாங்களே. இதுல வேலைக்கும் போய் வீட்லேயும் உழைக்கிறவங்க எத்தனை பேர்!... ச்சே... எதையுமே எண்ணிப் பார்க்காம கல் நெஞ்சனாட்டம் இருந்திருக்கேனே...'' தன்னையே நொந்து கொண்டான். தன் மேலேயே கோபப்பட்டான் மூர்த்தி.
""நாம நிறைய சம்பாதிக்கலாம். மனைவிக்கு நகை நட்டு துணி மணின்னு எவ்வளோ செய்யலாம். அதெல்லாம் அவ்வப்போது வந்து போற சந்தோஷங்கள். ஆனா... குடும்பத்துல வர்ற கஷ்ட நஷ்டத்துல ஒருத்தருக்கு ஒருத்தர் துணையா நின்னு ஆறுதல் சொல்லிக்கிறது இருக்கே. அதெல்லாம் என்னிக்குமே மறந்து போகாது. கல்வெட்டுல செதுக்கின எழுத்து மாதிரி நெனைச்சி நெனைச்சி குடும்பத்தை சந்தோஷமா நடத்திட்டுப் போக வைக்கும் சுவாரஸ்யமான விஷயங்கள்'' என்றான் சிவா.
"சிவா' என்று அவன் கையைப் பிடித்து மூர்த்தி மிகவும் உணர்ச்சிவசப்பட்டுப் போனான்.
""சிவா...மனைவி அமைவதும் கணவன் அமைவதும் மட்டுமல்ல, உன்னைப் போல நல்ல நண்பன் அமையறது கூட இறைவன் கொடுத்த வரம்தான்'' என்றான் மூர்த்தி.
மறுநாள் காலை கீதா எழுந்தபோதே மூர்த்தியும் எழுந்தான்.
""ஏன்?'' என்றாள்.
""தூக்கம் வரலை. சும்மா முழிச்சிக்கிட்டு படுக்கைல கிடக்கிறதைவிட உனக்கு ஏதாவது உதவி பண்ணலாம்னு வந்தேன்'' என்றான்.
அவளுக்கு அப்போது புரியவில்லை. போகப் போக புரிந்து கொள்வாள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.