ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்
எனக்கு வயது 44. உடம்பில் - கையிலோ, காலிலோ, முதுகிலோ மாறி மாறி அரிப்பு எடுக்கிறது. சொறிந்தால் திட்டுத் திட்டாகத் தடித்துக் கொள்கிறது. கொஞ்ச நேரம் போனால் தானாகவே மறைந்துவிடுகிறது. சில மணி நேரங்கள் கழித்து மறுபடியும் வேறு இடத்தில் இது போலவே ஏற்படுகிறது. ஆபூர்வமாக முகத்திலும் அரிப்பு ஏற்பட்டு சொறிந்தால், தடிப்பாகி முகம் வீங்கிவிடுகிறது. இது எதனால்? எப்படி இதைச் சரிப்படுத்தமுடியும்?
-பத்மநாபன், திருச்சி.
"சீதபித்தம்' என்று இந்த பிரச்னைக்கு ஆயுர்வேதம் பெயர் வைத்திருக்கிறது. "அர்டிகேரியா' என்று ஆங்கில மருத்துவத்தில் குறிப்பிடுகிறார்கள். உடலில் உண்டாகும் பித்த சம்பந்தமான சில கழிவுப் பொருட்கள் சரியான வகையில் உடலிலிருந்து நீக்கப்படாததால், அவற்றை ரத்தத்திலிருந்து பிரித்தெடுத்து வெளியேற்றிவிடும் சிகிச்சையை முதலில் செய்து கொள்ள வேண்டும். இரண்டாவதாக, இவ்வாறு தங்கிய கழிவுப் பொருட்களின் விளைவாக சருமத்திலேற்படும் உபாதையைத் தடுத்துச் சகிப்புத் தன்மையை சருமத்திற்கு ஏற்படுத்துவது என்ற இரு வகையில் சிகிச்சை செய்யப்பட்ட வேண்டும்.
திராக்ஷôதி என்ற கஷாய மருந்தை சுமார் 15 மி.லி. எடுத்து, 60 மி.லி. வெது வெதுப்பான தண்ணீர் கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட, ஒன்றிரண்டு தரம் மலம் கழியும். தினமும் சாப்பிட வேண்டிய அவசியமில்லை. சிகிச்சையின் ஆரம்பத்தில் முதல் இரண்டு அல்லது மூன்று நாட்கள் சாப்பிட்ட பிறகு, வாரம் ஒரு முறை என்று மாற்றிக் கொள்ளலாம். பிண்ட தைலம் அல்லது தூர்வாதி (தூர்வா என்றால்
அறுகம்புல்) தைலத்தையோ நமைச்சலும் தழும்பும் உள்ள இடங்களில் சதும்ப தடவிவிட்டு விடவும். தைலம் ஊற ஊற, நமைச்சல், தழும்பு, வீக்கம் போன்றவை குறையும்.
முருங்கை மரத்திலுள்ள கம்பளிப்பூச்சி நம் உடலில் பட்டால் போதும், நீங்கள் குறிப்பிடும் வகையில் தோல் உபாதை ஏற்படத் தொடங்கும். அது போலவே, அவரைச் செடியிலுள்ள சிவப்பு எறும்புகள் மற்றும் பூச்சிகள் கடித்துவிட்டால், சீதபித்தம் எனும் அர்டிகேரியா உபாதை ஏற்படும். கம்பளிப்பூச்சி, அவரைச் செடிப்பூச்சி, எட்டுக்கால் பூச்சி முதலியவை ஊர்ந்து சென்ற சுவர்கள், அவை கழித்த மலம் சிறு நீர் விஷங்கள் ஆகியவற்றின் மீது சாய்ந்து உட்கார நேர்ந்தால், விஷம் நம் உடலில் தொற்றிக் கொண்டு, அரிப்பை ஏற்படுத்தும். துவைத்து காயப்போட்ட ஆடைகளின் மீது இப்பூச்சிகள் ஊர்ந்து, தமது சுணையையோ, மலம், சிறு நீரையோ விட்டு விட்டுச் சென்றிருக்கலாம். அவ்வகை ஆடைகளைஅணிந்து கொள்வதாலும் இந்த உபாதை ஏற்படலாம்.
முன் குறிப்பிட்ட பித்தக் கழிவு தேக்கம், பின் குறிப்பிட்ட பூச்சிகளின் தொல்லையால் ஏற்படும் இந்த தோல் உபாதைக்கு கிராமங்களில் வரட்டி சாம்பலையோ திருநீறு எனப்படும் விபூதியையோ உடலில் அரிப்புள்ள இடங்களில் தாராளமாக எடுத்து தேய்த்துவிடும்படி அறிவுறுத்துவார்கள். இதனால், நமைச்சல் நன்றாகக் குறையும். அதன் பிறகு, திராக்ஷôதி கஷாயம், தைலம் போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.
திக்தகக்ருதம் எனும் நெய் மருந்தை ரத்தத்தில் கலந்துள்ள பித்த விஷப் பொருட்களை அகற்றுவதற்காக, காலை, மாலை சுமார் 10 -15 மில்லிலிட்டர் வீதம் நீராவியில் உருக்கி, வெறும் வயிற்றில் சாப்பிடலாம். அரிப்புள்ள பகுதிகளில், மருந்தை உருக்கியும் பூசலாம். கருங்காலிக் கட்டையை சிராத்தூள் போலச் சீவி, 15 கிராம் எடுத்து 1 லிட்டர் தண்ணீருடன் காய்ச்சி, ணீ லிட்டராகக் குறுகியதும் வடிகட்டி, சிறிது சிறிதாகக் குடிக்கப் பயன்படுத்தலாம். வேப்பம்பட்டை, சரக்கொன்றைப்பட்டை, அரசம்பட்டை, ஏழிலம்பாலைப்பட்டை, நால்பாமரப்பட்டை போன்றவற்றில் கிடைத்தவற்றைக் கொண்டு, தண்ணீரில் கொதிக்கவிட்டு குளிக்கப் பயன்படுத்தலாம்.
பித்தத்தினுடைய கழிவுகளை பேதி மூலம் அகற்றும் அவிபத்திகர சூரணத்தை, 5 கிராம் எடுத்து 10 மி.லி.தேன் குழைத்து தினம் இரு வேளை உணவிற்கு அரை மணிநேரம் முன் சாப்பிட்டு வர, திடீர் திடீரென்று வரும் சீதபித்த உபாதை அறவே நீங்க வாய்ப்பிருக்கிறது.
ஒவ்வாமை உணவு வகைகள், நிறைய திரவ உணவுப் பொருட்கள், எண்ணெய்யில் பொரித்து எடுத்தவை, எளிதில் செரிக்காதவை, இயற்கை உந்துதல்களாகிய வாந்தி, மலம், சிறுநீர், குடல்காற்று போன்றவற்றை வலுக்கட்டாயமாக அடக்குதல், உணவு உண்ட பிறகு கடும் வெயிலில் நடந்து செல்லுதல், சென்றுவிட்டு வந்தவுடன், உடல் சூடாக இருக்கும் போதே குளிர்ந்த நீரைப் பருகுதல், புதிதாக அறுவடை செய்யப்பட்ட நெல்லை அரிசியாக்கிச் சாப்பிடுதல், தயிர், மீன் அதிக உப்பு, புளிப்புள்ள உணவுகள், கறுப்பு உளுந்துடன் முள்ளங்கி அரிசி மாவு, மைதா, கோதுமை மாவு கலந்த உணவுப் பொருட்கள், எள்ளு, பால், வெல்லம், பகல் தூக்கம் போன்றவற்றைத் தோல் உபாதையால் பாதிக்கப்பட்டவர்கள் தவிர்க்க வேண்டும்.
(தொடரும்)
பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
நசரத்பேட்டை -600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.