பாடலும் பகாடியும்!

இசையுணர்வு இதயத்தை இனிமையாக்கும்; துன்பத்தைத் துரத்திவிடும்; சோகத்தைக் கூட சுகமாக்கும். பிள்ளைகளுக்குக் குழந்தை பருவத்திலேயே தாலாட்டுப் பாடலால் இசையுணர்வைத் தாய்மார்கள் தந்தார்கள்.
பாடலும் பகாடியும்!

இசையுணர்வு இதயத்தை இனிமையாக்கும்; துன்பத்தைத் துரத்திவிடும்; சோகத்தைக் கூட சுகமாக்கும். பிள்ளைகளுக்குக் குழந்தை பருவத்திலேயே தாலாட்டுப் பாடலால் இசையுணர்வைத் தாய்மார்கள் தந்தார்கள். இது லோலாக்கு தொங்க மேலாக்கு பறிபோன காலம்! தாலாட்டும் தமிழும் தள்ளப்பட்டு விட்டன!
இசையைப் பள்ளிப் பாடத்திட்டத்திலேயே சேர்த்துப் பயிற்றுவித்தல் வேண்டும். எல்லாரும் இசையை எளிதாகக் கற்றுக் கொள்ளலாம். திரைப்பட இசை மேதைகள் தாங்கள் அமைத்த வர்ணமெட்டுகளால் அதற்கு வழிவகுத்திருக்கிறார்கள்.
ஒரு நல்ல பாடலைப் பாடும்போது, அப்பாடல் எந்த ராகத்தில் அமைந்தது என்று அறிந்து கொள்ளும்போது இதயம் மகிழ்கிறது; இசையறிவும் ஏற்படுகிறது.
"பகாடி' என்னும் ராகத்தைப் பார்க்கலாம். "பகாடி' வடநாட்டு ராகம் என்றாலும் நெஞ்சைத் தாலாட்டக்கூடிய நேர்த்தியானது. பழைய "பாமாவிஜயம்' திரைப்படத்துக்கு எஸ்.வி.வெங்கட்ராமன், சி.ஆர்.சுப்பராமன் ஆகிய இருவரும் இசையமைத்திருந்தனர். திரைப்படங்களில் வடநாட்டு ராகங்களை முதலில் அதிகம் மெட்டமைத்தவர் எஸ்.வி.வெங்கட்ராமன்.
"பாமாவிஜய'த்தில் 

"இன்பம் பொங்கும் நன்னாளிலே
உன்தன் ஜன்ம பொன்னாளிலே
மணிவண்ணனா கண்ணா வா'

எனும் கம்பதாசன் பாடலுக்கு வெங்கட்ராமன் பகாடி ராகத்தில் மெட்டமைத்துள்ளார். 

"அழகு நிலா' என்ற படத்தில் சித்தூர் வி.நாகையா வாயசைத்து நடிக்கிறார். குட்டி பத்மினியும் குழந்தையாகி துறுதுறுவென நடக்கிறார். மெல்லிசைவாணர் பி.பி.ஸ்ரீநிவாஸ் பாடுகிறார்.

அந்தப் பாடல்:

"சின்ன சின்ன ரோஜா
சிங்கார ரோஜா
அன்னநடை நடந்து - அழகாய்
ஆடிவரும் ரோஜா'

இந்தப் பாடலுக்கு திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன் பகாடி ராகத்தில் மிக அற்புதமாக மெட்டமைத்துள்ளார்.

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் பகாடி ராகத்தில் காலத்தை வெல்லும் பலவர்ண மெட்டுகளைப் போட்டுள்ளார். அதில் "கர்ணன்' திரைப்படத்தில் அமைத்த பகாடி ராக மெட்டும், கவியரசர் கண்ணதாசனின் பாடலும் சுசீலாவின் குரலும் சேர்ந்து வரும் நேரெமல்லாம் செவியில் தேன் பாய்கிறது. சிந்தையில் சுகம் தோய்கிறது, விழியில் நீரூறுகிறது.

"கண்ணுக்குக் குலமேது - கண்ணா!
கருணைக்கு இனமேது
விண்ணுக்குள் பிரிவேது - கண்ணா
விளக்குக்கு இருளேது'

எனும் பல்லவி, இரண்டாவது சரணத்தில் வரும் 

"தருபவனில்லையோ கண்ணா நீ
தருமத்தின் தாயே கலங்காதே' 

எனும் வரிகளை சுசீலாவின் குரலில் கேட்கும்போது, நிலவூறித் ததும்பும் வழிகளும் நீரூறித் ததும்புமல்லவா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com