

"தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை' என்பது புரட்சிக் கவிஞன் பாரதிதாசனின் பொய்யாமொழி.
அந்த வகையில் தமிழுக்குத் தொண்டு செய்த செல்லப்பனார் அவர்களுக்கும் மரணம் என்பது இல்லை. நம்மோடு அவர் படைத்த இலக்கியச் செல்வங்களால் உறவாடிக் கொண்டு இருக்கிறார்.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தவர் சிலம்பொலியார்.
1963 ஆம் ஆண்டு வாக்கில் சிலம்பொலி செல்லப்பனாரிடம் அறிமுகம் செய்து கொள்ளும் சந்தர்ப்பம் கிடைத்தது. பின்னர் மிக நெருங்கிப் பழகும் வாய்ப்பும் வசதியும் கிடைத்தன. இனிமையாக எவரிடமும் சகஜமாகப் பழகும் சுபாவமுடைய இவர், நாளாவட்டத்தில் நான் ஆற்றி வருகிற பாரதிப் பணிகளால் என்னிடம் அன்பு பாராட்டினார். அவர் என்னை அன்பாக "சீனி' என்றுதான் அழைப்பார்.
தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் பதிவாளராக - பதிப்புத்துறையின் இயக்குநராகச் செயல்பட்ட தருணத்தில் பாரதியின் படைப்புகளைச் செம்மையாகப் பதிப்பிக்கத் திட்டமிட்டபோது, என்னைப் பதிப்புக்குழு உறுப்பினராக்கினார்.
இதனையடுத்து அன்றைய துணைவேந்தர் டாக்டர் வ.அய்.சுப்பிரமணியம் அவர்களிடம் நான் ஆற்றிவந்த பாரதி நூல்கள் பதிப்புப் பணிகளை எடுத்துச் சொல்லி, பாரதி பாடல் தொகுப்புப் பணியை எனக்கு வழங்க உறுதுணையாக இருந்தார்.
இந்தக் காலகட்டத்தில், நான் சிலம்பொலி அவர்களிடம் மிக நெருங்கிய தோழமை கொள்ள நேர்ந்தது. பாரதி பாடல் தொகுதி மிகச் சிறப்பான முறையில் அமைய வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாகச் செயல்பட்டவர் சிலம்பொலியார்.
இரவு - பகல் என்று பாராமல் நான் தயாரித்தளித்த கைப்பிரதியை மூலத்தோடு எழுத்தெண்ணிச் சோதித்தவர் சிலம்பொலியார்.
அதோடு மட்டுமின்றி, என் ஊதியம் தொடர்பாகச் சிக்கல் நேர்ந்தபோது, துணை வேந்தரிடம் உழைப்பிற்கான தகுந்த ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று எனக்காகப் பரிந்துபேசியவர் சிலம்பொலி செல்லப்பனார் என்பதை நான் நன்றியுடன் இத்தருணத்தில் நினைவு கூர்கிறேன்.
1984 ஆம் ஆண்டு நான் "மகாகவி பாரதி; சில உண்மைகள்' என்பதாக எழுதிய நூலுக்கு சிலம்பொலியாரை அணுகி அணிந்துரை கேட்டபோது, நூலை வரி விடாமல் படித்துப் பார்த்து பத்தொன்பது பக்கங்கள் அச்சில் வருகிற அளவுக்கு அணிந்துரை வழங்கினார்.
அணிந்துரையில் என்னைப் பற்றியும், நூலைப் பற்றியும் புகழ்ந்து எழுதினார்.
"பாரதி நூல்களையும், அவர் பற்றிய குறிப்புகளையும் தேடிக் கண்டுபிடித்துத் தொகுத்து வருபவர்களில் திரு.சீனி.விசுவநாதன் தலையாயவர் எனில் அது மிகையாகாது ...
பாரதி பற்றி இதுவரை வெளியாகாத பல உண்மைகளைத் தக்க ஆதாரங்களோடு " மகாகவி பாரதி: சில புதிய உண்மைகள்' என்னும் நூலில் சீனி.விசுவநாதன் தந்துள்ளார்...
இந்நாள் வரை பாரதி ஆய்வாளர்கள் கூறி வந்த செய்திகளில் உண்மைக்கு மாறானவற்றைச் சுட்டி, உண்மை நிலையை அவர் இந்நூலில் உணர்த்துகிறார்...
இதுவரை பிறரால் சொல்லப்படாத புதிய தகவல்களை இந்நூலின் வாயிலாக நாம் அறிய முடிகிறது'
இந்தவிதமாக என்பேரில் மதிப்பு வைத்தும், நான் ஆற்றி வருகிற பாரதிப் பணிகளில் நம்பிக்கை கொண்டும் மனந்திறந்து பாராட்டுப் பெற்றதை நான் எண்ணி எண்ணி மகிழ்கிறேன். தமிழ் வளர்ச்சித்துறையின் இயக்குநராகச் செல்லப்பனார் பொறுப்பு வகித்தபோது, அடிக்கடி அவரைச் சந்தித்து உரையாடி வருவதை வழக்கமாகக் கொண்டேன்.
அப்போது அவர் பேச்சுவாக்கில் பாரதியைப் பற்றி புதிய கோணத்தில் நூல் ஒன்று வெளியிட வேண்டும் என்று என்னிடம் யோசனை தெரிவித்தார்.
சிலம்பொலியார் எந்த மாதிரியான கோணத்தில் நூல் வெளிப்பட வேண்டும் என்று விரும்புகிறார் என்று எனக்குப் புரியவில்லை.
என் சந்தேகத்தை அவரிடமே நான் தெளிவுக்காகக் கேட்டேன்.
அப்போது அவர் நான் ஏற்கெனவே பதிப்பித்த பாரதி நூல்களுக்கான விவர அட்டவணைத் தொகுதிகளை நினைவூட்டி, அந்த மாதிரி ஒரு நூலை வெளியிடுவது பொருத்தமாக இருக்கும் என்று தெரிவித்தார்.
அப்போது அவரிடம் நான் எனக்குள்ள நடைமுறைச் சிக்கல்களைப் பற்றி பிரஸ்தாபித்தேன். அவர் என் சிக்கல்களைப் புரிந்து கொண்டு, "" கவலைப்பட வேண்டாம். தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களை வெளியிட நிதி உதவி வழங்கும் தமிழ்நாடு அரசின் திட்டத்தின் கீழ் நிதி உதவி பெறலாம்'' என்று சொல்லி எனக்கு உற்சாகமூட்டினார்.
நீண்ட நேர யோசனைக்குப் பிறகு அவரே ""பாரதி நூல்களின் பதிப்பு வரலாற்றைபப் பற்றி நூல் எழுதுங்கள்'' என்று ஆலோசனையும் வழங்கினார்.
அவரது யோசனைப்படியே உருவான நூல்தான் "பாரதி நூல்கள்: பதிப்பு வரலாறு' என்பதாகும். நூல் 1989 நவம்பரில் வெளியானத.
இந்த மாதிரி பிறருக்குத் தம்மால் முடிந்த அளவுக்கு உதவி புரிவதில் சிலம்பொலி செல்லப்பனாருக்கு நிகர் செல்லப்பனாரே ஆவார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.