காத்திருப்பு

எழும்பூர்  ரயில் நிலையம். கார்டு எனப்படும் ரயில் காப்பாளர் ஓய்வறையில் காப்பாளர்கள்  மகிழ்ச்சியில் மிதந்து கொண்டிருந்தனர்.
காத்திருப்பு

எழும்பூர்  ரயில் நிலையம். கார்டு எனப்படும் ரயில் காப்பாளர் ஓய்வறையில் காப்பாளர்கள்  மகிழ்ச்சியில் மிதந்து கொண்டிருந்தனர். முப்பத்து ஐந்து வருடங்களாக சாமான் வண்டி காப்பாளராக இருந்த சுந்தரம் இன்று பயணிகள் வண்டி காப்பாளராகப் பதவி உயர்வு பெற்று முதல்நாள் பணி முடித்து இறங்கப்
போகிறார்.  இன்று இரவு உடன்பணியாற்றும் சக பணியாளர்களுக்கு விருந்து தரப் போகிறார் 

முதலில் சுந்தரம் விருந்து தர சம்மதிக்கவில்லை. முப்பத்தைந்து வருஷம் சாமான் வண்டி காப்பாளராக இழுபட்ட தொந்தரவுக்கு பயணிகள் வண்டி காப்பாளர் பதவியில் பெரிய அளவில் மாற்றமில்லை. ஓர் ஆண்டுக்கான ஊதிய உயர்வும் அதற்கான அகவிலைப்படி உயர்வும் தான் கிடைக்கும். ஆனால் வெயிலில் மழையில் நின்று இன்னல்படத் தேவையில்லை. இத்தனை வருஷங்களாக சாமான் வண்டி காப்பாளராக  நொந்து, உடலும் மனமும் தளர்ந்து விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பிக்க யோசித்துக் கொண்டிருந்த தருணத்தில் பதவி உயர்வு வந்தது. கசப்பை உமிழ்ந்து சக பணியாளர்களுடன் சேர்ந்து மகிழ்வாய் நினைத்து துயரத்தை கொண்டாடித் தீர்ப்போம் என்று தான் விருந்துக்கு ஒப்புக் கொண்டார். 

சுந்தரம் இன்று மாலையில் ஓய்வுக்கு இறங்கியதும் இரவு எட்டுமணி வாக்கில் பக்கத்திலுள்ள ஓர் அறுசுவை உணவகத்தில் விருந்து. பத்துபேர் தான் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்பதால் அவரவர் விருப்பத்திற்கு  அவரவர் தேவைக்கு உண்ணலாம் என்ற மகிழ்வில் திளைத்தனர். சுந்தரத்தின் வருகைக்காக காத்திருந்தனர்.  

சுந்தரம் இரண்டாமாண்டு  பி.எ படித்துக் கொண்டிருந்த போது அவரது அப்பா குட்ஸ் வண்டி ஓட்டிச் செல்லும் போது  மாரடைப்பில் இறந்து போனார். சங்கத்துக்காரர்கள்  முயற்சியால்  கருணை அடிப்படையில் சுந்தரத்திற்கு சாமான் வண்டி காப்பாளராக பணி வழங்கப்பட்டது. எழுத்தர் பணிவழங்க வேண்டி கெஞ்சினான். கதறினான். நிர்வாகத்தின் காதில் விழவே இல்லை. ""தொழில்நுட்ப பணியாளர் மகனுக்கு தொழில்நுட்ப பிரிவில் தான் வேலை கொடுக்க முடியும் . வேலை பார்த்துக்கொண்டே பட்டப்படிப்பு முடித்துவிட்டு வாருங்கள். எழுத்தர் பணி வழங்க பரிந்துரை செய்கிறோம்'' என்று சொல்லப்பட்டது. கிடைத்த வேலையை மறுத்தால் குடும்பத்தைப் பராமரிக்கவும் முடியாது; குடியிருப்பிலும் தங்க அனுமதி இல்லை என்ற நிர்பந்த செக்கில் சிக்கி சுழன்றான். 

முதல்நாள் பணியில் பயிற்சி கொடுக்க மூத்த காப்பாளர் வந்திருந்தார். அவர் இவரது அப்பாவின் கடமை உணர்வையும் நட்பு பாராட்டும் பாங்கையும் சொன்னார். அப்பாவைப் போலவே கிடைத்த வேலையை தக்க வைத்துக் கொண்டு குடும்பத்தை பாதுகாத்து அப்பாவின் பெயரைக் காப்பாற்ற வேண்டும் என்று சொல்லி சுந்தரத்தின் மனதை இளக்கினார். 

காப்பாளர் சுந்தரத்தின் பெட்டி இரும்பால் வடிவமைக்கப் பட்ட பாதி அறையாக இருந்தது. கார்டு சேம்பர் என்று சொல்லப்பட்டாலும் அந்த அரைப்பெட்டி அறையாகவும் இல்லை. சேம்பராகவும் இல்லை. உள்ளே கழிவறைத்தொட்டி இல்லை. மாறாக இரும்புத் தரைதளத்தில்  வட்டமாக பெரிய துளை இருக்கும். 
அந்த துளையின் மீதமர்ந்து தான் இயற்கை உபாதைகளைப் போக்க வேண்டும். மொத்த பயண நேரமும் பெட்டியை சுற்றி உள்ள இரும்புக் கம்பியை பிடித்துக்கொண்டே நிற்க வேண்டும். மழை வந்தால் கேபின் ஜன்னல் வழியாக வெளியே பார்த்தபடி தண்டவாளத்தையும், ரயிலின் தடத்தடா சத்தத்தையும் கூர்ந்து கவனிக்க வேண்டும். வண்டி ஓட்டத்தின் தாள லயம் பிசகினால் உடனே சிவப்புக் கொடி அசைத்து ஓட்டுநருக்கு எச்சரிக்கை செய்ய வேண்டும். ஓட்டுநர் கவனிக்கவில்லை என்று உணர்ந்தால் உடனே காப்பாளர்அறையிலுள்ள நெம்புகோலைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்த வேண்டும். தக்க காரணமின்றி  நெம்புகோலைப் பிடித்து இழுத்து நிறுத்தினால் காப்பாளருக்கு எச்சரிக்கை குறிப்பாணை கொடுக்கப்படும். இப்படி மூன்று முறை எச்சரிக்கை குறிப்பாணை பெற்றால் காப்பாளரின் ஊதியம் பிடிக்கப்படும். இப்படி அடுக்கடுக்கான தண்டனை  விசாரணை, பணிஇடைநீக்கம் வரை நீளும். இதெல்லாம் கேட்கும்போது சுந்தரத்துக்கு தெரியாத்தனமாக வந்து மாட்டிக் கொண்டோமோ என்று நினைக்கத் தோன்றியது. 

இந்த வேலையையும் விட்டு விட்டால் தன்னை நம்பி இருக்கும் அம்மா, ஒரு தம்பி, இரு தங்கைகள் என ஐந்து பேர் சாப்பாட்டுக்கு என்ன செய்வது? குடியிருப்பை காலி செய்து வெளியே போனால் எவ்வளவு வாடகை கொடுக்க வேண்டியதிருக்கும். அதற்கு பணத்திற்கு எங்கே போவது?அப்பாவுக்கு கொடுக்கப்படும் பணத்தை பத்திரப்படுத்தி தங்கைகளுக்கு கல்யாணம் செய்யவும், தம்பியைப் படிக்க வைத்து நல்ல நிலைக்குக் கொண்டு வர வேண்டும். இதை எல்லாம் சரியாகச் செய்ய வேண்டும் என்றால் நாம் இந்த வேலையை பல்லைக் கடித்துக் கொண்டு பார்த்தாக வேண்டும். ஓய்வு கிடைக்கும் போது மூன்றாமாண்டு படிப்பை அஞ்சல் வழியில் முடித்து விட்டோம் என்றால் சங்கத்துக்காரங்க மூலமா எழுத்தர் பணி வாங்கி விடலாம். அப்பத்தான் நிம்மதி! இந்த நடமாடும் தனிமைச் சிறையிலிருந்து  தப்பிவிடலாம். இப்படி கம்பியைப் பிடித்துக் கொண்டு மண்ணையும் கல்லையும் மரத்தையும் பார்த்தபடி குனிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. அதுவரைக்கும் பொறுத்திருப்போம் என்று நினைத்துக் கொண்டான். பணிமுறைமை சொல்லித் தர வந்த மூத்தகாப்பாளர் வாழ்த்து சொல்லி செங்கல்பட்டு சந்திப்பில்  இறங்கிக் கொண்டார். 

தனிமையில் நின்றபடி சிறிய பெரிய நிலையங்கள் பேதமில்லாமல் ஒவ்வொரு நிலையத்தின் அலுவலருக்கும் , சைகை கூட  ஊழியருக்கும் பச்சைக்கொடி அசைத்தான். மூத்த காப்பாளர்  ஆலோசனைகளை நினைவு கூர்ந்து இவனது வண்டி நிற்குமிடத்தில் அடுத்த நேரத்திற்கு தேவையான உணவு,  தண்ணீரை வாங்கிக் கொண்டான். 
வீட்டில் அம்மாவுக்கு கணவன் இறந்த கவலையை விட பட்டாம்பூச்சி கணக்காகச் சுற்றி திரிந்த படித்துக் கொண்டிருந்த உலக அனுபவமில்லாத பிள்ளையை குடும்பச் சுமையை சுமக்க வச்சிட்டானே குருட்டுப் பய கடவுள்  என்ற கவலை பெரிதாக இருந்தது. "அந்த மனுஷன் இன்னும் நாலஞ்சு வருஷம் இருந்திருந்தாருன்னா இந்த ரெண்டு பிள்ளைகளையும் கரை சேர்த்திருக்கலாம்! பசங்களும் படிப்பை முடிச்சு வேலையில் உக்காந்திருவானுக. இப்படி நட்டாத்துல விட்டுட்டுப் போயிட்டாரே' என்று புலம்பினாள்.  ""படிப்பில் கவனம் செலுத்தி நல்லவேலைகள்ல  உக்காந்திரணும்.  அண்ணன் மனம் நோகாமல் நடந்துக்கணும்'' என்று இளைய மகனிடமும், இருமகள்களிடமும் அம்மா கனிவுடன் சொன்னாள்.

முதல் முதலில் காப்பாளர் பணியில் சேர்ந்த சுந்தரம், எழுபத்திரண்டு மணி நேரப் பணி முடித்து வந்தான். வெள்ளைச்சீருடை எல்லாம் புகைக்கரி படிந்திருந்தது. சிவந்த முகம் புழுதி பழுப்பு அப்பிக் கிடந்தது. வேற்று கிரக மனிதனாகத் தென்பட்டான். வீட்டுக்கு வந்ததும் கழிவறை போய் வந்தவன் சாப்பிடவில்லை. தாக சாந்திக்கு தண்ணீர் கூட குடிக்கவில்லை. படுத்தவன் தான்,  தம்பி தங்கைகள் மறுநாள் கல்லூரிகளுக்குப் போனபின் அம்மா அவன் உடம்பை உலுக்கி எழுப்பவும் கண்களைத்  திறக்க முடியாமல் திறந்தான். அம்மா வெந்நீர் விளாவிக் கொடுத்து குளிக்கச் செய்தாள். அவன் குளித்து கட்டிய துண்டுடன் வெளிவந்தான். இடது தொடையில் முழங்கால் வரை சிராய்ப்பு புண். இரத்தம் உறைந்து கருஞ்சிவப்பில் பக்கு கட்டி இருந்தது. அம்மாவுக்குத் தெரியாமலிருக்க வேகவேகமாய் புண்ணின் மேல் தேங்காய் எண்ணெய் தடவினான். அவனது பரபரப்பைக் கண்டு, ""என்னப்பா தம்பி, என்ன அது?  ரத்தம் உறைஞ்சமாதிரி இருக்கு? எங்கே காட்டு'' என்று படபடப்போடு அவனருகில் வந்தாள். 

""ஒண்ணுமில்லம்மா!''

""சொல்லுப்பா, என்ன ஆனது?'' தழுதழுத்த குரலில் கேட்டாள். 

""குட்ஸ்வண்டியில் டாய்லெட் போனப்ப வண்டி ஓட்டத்தின் ஆட்டத்தில் தடுமாறி அந்த துளைக்குள்ளே இடது கால் உள்ளே போயிடுச்சு. சமாளிச்சு எந்திரிச்சிட்டேன். பயப்படறதுக்கு ஒண்ணுமில்லம்மா. சின்ன சிராய்ப்பு தான்! தேங்கா எண்ணெய் தேச்சா ஆறிரும்''”என்று  வெட்கத்தோடு சொன்னான். “
""அய்யோ கடவுளே,  ஏப்பா,  நல்ல கக்கூசு வசதி கூட கிடையாதா? எந்த சாமி புண்ணியமோ, ஓட்டைக்குள்ள  விழுகாமத் தப்பிச்சே'' என்று கண்ணீர் பொங்கினாள். ""காலக்கிரகம் இந்த வயசில் குடும்பப்பாரத்தை சுமக்க வச்சிருச்சு.  தம்பி, பார்த்து சூதானமா நடந்துக்க. கஷ்டப்பட்டு அந்தக்குறை வருஷ  படிப்பை முடிச்சிட்டினா வேற வேலைக்கு மாறிக்கலாம்! அது வரைக்கும் பார்த்து சூதானமா நடந்துக்க தம்பி!''”என்று சொல்லி இவளும் தேங்காய் எண்ணெய் தடவி விட்டாள். பின்  சாப்பிட்டு விட்டு  தூங்கினான்.  எழுபத்திரண்டு மணி நேரம் வேலை பார்த்ததுக்கு பதினாறு மணிநேரம் தான் ஓய்வு.  மீண்டும் பகல் ஒரு மணிக்கு வேலைக்குப் போக வேண்டும். 

அடுத்து கோவை வழியாக கொச்சின் செல்லும் குட்ஸ்வண்டியில் பணி ஒதுக்கினார்கள்.  தண்டவாளத்தில் வண்டி செல்லும்போது எழும் சத்தத்தை கவனிக்கத் தொடங்கினான்.  "தடக் தடக்' என்று கேட்ட ஒலி, "தக்க தும் தக்கதும்' என்றும் "சிக்கு  புக்கு  சிக்கு புக்'கென்றும் கேட்டது. கேட்பவர் மனலயத்துக்கு ஏற்ப ஒலிப்பது போல் கேட்கிறது. எது சரியான ஒலி,  எது பழுதான ஒலி என்று எப்படிக் கண்டுணர்வது என்று கவலை வந்தது. ஜோலார்ப்பேட்டையை  வண்டி கடக்கும் பொழுது "சரசர... சட்சட்'' என்று வித்தியாசமான ஒலி கேட்டது. முன்னோக்கி வண்டியின் இடப்புறமும் வலப்புறமும் பார்த்தான். வலப்புறத்தில் இருந்து இடப்புறம் கடக்க  முயன்ற எருமை ஒன்று இரு பெட்டிகளுக்கிடையில் மாட்டி இழுபட்டுக் கொண்டிருந்தது. இவன் உடனே சிவப்புக் கொடியை  அசைத்தான். ஓட்டுநர் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. இவனுக்கு சொல்லியிருந்த  அறிவுறுத்தல்படி இவன் தனது அறையிலிருக்கும் நெம்புகோலை இழுத்தான். வண்டி பெரும் குலுக்கலோடு நின்றது. இவன் இறங்கி முன்னோக்கி  ஓடினான். ஓட்டுநரும் , உதவியாளரும் பின்னோக்கி ஓடி வந்தனர். இரு தரப்பினரும் எருமை சிக்கி இழுபட்ட இடத்தில் சந்தித்தனர். 

""எருமைக் கழுதைக்கெல்லாம்  வண்டியை நிறுத்த லாமா?'' என்றான்  உதவியாளன்.

""இழுபடும் கழுத்து முறிஞ்சு எருமைக் கொம்பு தண்டவாளத்தில் மாட்டி அதன் மீது வீல் ஏறினால் வண்டி தடம்புரளும் வாய்ப்பு உண்டல்லவா?''” 

என்றான் சுந்தரம்.”

""பரவாயில்லை! உன் உடம்பில் உங்கப்பாவின் ரயில்வே ரத்தம் ஓடுது'' ”என்று ஓட்டுநர் இவன் முதுகை தட்டி பாராட்டினார். பின் மூவரும் சேர்ந்து எருமைத் தலையை  வெளியே இழுத்து அப்புறப்படுத்தி அவரவர் வேலை இடத்திற்குப் போயினர். இவனுக்கு மனசு  ஓர்மைப்படவில்லை. இவன் தனக்கு சொல்லிக் கொடுத்தது போல் இவனறையிலிருந்த வெள்ளைத் தாளில்  எருமை  அடிபட்டு அப்புறப்படுத்திய  விவரத்தை எழுதி இதற்கான கூலாங்கல்லால் சுருட்டி தயாராக வைத்திருந்து அடுத்த ரயில் நிலைய அலுவலர் அறையை நோக்கி எறிந்தான். இதை எடுப்பவர் ரயில்வே ஊழியர்களைக் கொண்டு சம்பந்தபட்ட ஊராட்சியில் தெரிவித்து இப்படி எருமைகள் இனி தண்டவாளத்தை கடக்காமல் நடவடிக்கை எடுப்பர். யானை இப்படி மாட்டி செத்தாலும் இதுதான் நடைமுறை.

இன்னொரு சமயம் வடமேற்கு மாவட்டங்களில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.  காட்பாடி நிலையத்துக்கும் ஆம்பூருக்கும் இடையே ஓரிடத்தில் இவன் வண்டி செல்லும் இணை தண்டவாளத்தில் பொருத்தப்பட்ட இரும்பு வட்டுகள் கழட்டப்பட்டிருந்தன. இந்த தருணத்தில் வாக்கிடாக்கி என்னும் நடைப்பேசி தொடர்பு நடைமுறைக்கு வந்து விட்டது.  இவன் உடனே ஓட்டுநருக்கு தகவல் சொல்லி விட்டு ஆம்பூர் ரயில்நிலையத்திற்கும் தெரிவித்தான். 

இதனால் எதிர்த்திசையில் வர வேண்டிய கோவை விரைவு ரயில் பெரும் விபத்திலிருந்து தப்பியது. சுந்தரம் பெருமிதத்தோடு நினைத்துக் கொண்டான் தனது பதவி ஞ்ன்ஹழ்க்  அல்ல  எர்க்! பல்லாயிரக்கணக்கான மக்களை ஆபத்திலிருந்து காப்பது !  இவனது சமயோசித எச்சரிக்கை   சுந்தரத்திற்கு பாராட்டுகளையும் விருதையும் ஈட்டித்தந்தது.

இதேபோல்  சேலத்துக்கும் வாலாஜாவுக்கும் இடையில் ஒரு சிறுபாலத்தில் வண்டி மெல்ல ஊர்ந்தது. அப்போது நான்கைந்து உருவங்கள் வண்டியில் தொற்றி ஏறுவது போல் தெரிந்தது.  சுந்தரம் உடனே ஓட்டுநருக்குத் தகவல் தெரிவித்தார். ஓட்டுநர் வண்டியின் வேகத்தை அதிகரிக்கவும் ஏறிய உருவங்களில் இரண்டு கீழே விழுந்து கூக்குரல் எழுப்பின.   சுந்தரம் பக்கத்திலுள்ள சிறிய ஸ்டேஷனுக்கும்   சேலத்துக்கும் தகவல் சொன்னார்.  

இடையிலுள்ள எல்லா சைகைகூடங்களுக்கும்   தகவல் பரவ வண்டி தடங்கல் இல்லாமல் சேலத்துக்குள் நுழைந்ததும்  இரயில்வே  பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மதுசூதனன் குழுவினர் வண்டி நகர்விலே துப்பாக்கி காட்டி மிரட்டி கைது செய்தனர்.  இந்நிகழ்வுக்கு பின்  சுந்தரத்துக்கும் ஓட்டுநர் முகமதுவுக்கும் ரயில்வே பாதுகாப்பு படை மதுசூதனன் குழுவினருக்கும் விருதுகள் கொடுக்கப்பட்டன.

எந்த விருது கிடைத்தென்ன பயன்?  என்னை வேறு வேலைக்குச் செல்ல நிர்வாகம் அனுமதிக்கவே இல்லை என்று சுந்தரத்தின் வருத்தம் தீர்ந்த பாடில்லை!  மாற்ற முடியாததுக்கு தக்க தனக்கான தனித்தன்மையுடன் தகவமைத்துக் கொள்ள வேண்டியதுதான் என்று  மாறிக் கொண்டான். பணியில் சேர்ந்த புதிதில் போர்டம், மொனாட்டனஸ் என்ற வார்த்தைகள் தனக்கென்று உருவாக்கப்பட்டவை என்று நினைத்தான்.  நாளடைவில் அலுப்பு, சலிப்பு என்ற சொற்களே அவனது புழக்கத்தில் இல்லை.  இவனது பாதையில் அனைத்து மரங்களும், பறவைகளும் இவனுக்கு உறவாகிவிட்டன. 

இப்படி தன்னை  மாற்றிக் கொண்டதன் மூலம் "ட' எழுத்தை தலைகீழ் நிறுத்தியது போல் இவன் இரும்புக் கம்பிகளைப் பிடித்துக் கொண்டு உடலை வளைத்து பார்க்கும்போது ஏற்படும் உடம்புவலியை  மறக்க முடிந்தது. செங்கருப்புநிற செம்பூத்துகள் முதல் வேலியில்  தவ்வி தவ்வி உறவாடும் தவிட்டுக்குருவிகள் , காக்கை, குயில்கள், குந்தி குந்தி பறக்கும் புறாக்கள், மழலை மிழற்றும் கிளிகள் வரை பார்த்து தனது மனதை விரிக்க பழகிக் கொண்டான்.  குடும்ப துயரை  மறக்க முடிந்தது.   

ரயில் பாதையோர மரங்கள்  உதிர்ப்பதும், தளிர்விப்பதும், பூப்பதும், கனிவிப்பதும் போல்  அம்மா இறந்தது,  தம்பி, தங்கைகள் வேலைகளில் அமர்ந்ததும் இவன் கல்யாணம் செய்து கொண்டதும்,  தம்பி, தங்கைகளுக்கும் திருமணம் செய்வித்ததும், நால்வருக்கும் பிள்ளைகள் பிறந்து படித்துக் கொண்டிருப்பதும் நிகழ்ந்தேறின. 

என்னதான் இயற்கையோடு ஒன்றி பணித்துயரத்தை மறந்தாலும் உடலின் வளர்சிதை மாற்றங்கள்  முதுமையையும் தளர்ச்சியையும் மறைக்கவில்லை. நின்று நின்று மூட்டுத் தேய்மானமும் ஆறடி உயரம் மடிந்து கூன் விழுந்த தோற்றத்தையும் தவிர்க்க இயலவில்லை! காகிதத் தாளில் எழுதி கல்சுருட்டி எறிந்து தகவல் சொன்ன காலம்; நடைப்பேசியில் தகவல் சொன்ன காலம்; இன்று செல்லிடப்பேசியில் தகவல் சொல்லும் காலம்வரை  நின்று, குனிந்து, விழுந்து பணி செய்தாகி விட்டது. முப்பத்தைந்து வருஷம் வேலை பார்த்தாயிற்று. உடல் ஒத்துழைக்கவில்லை.  விருப்ப ஓய்வு கொடுத்து மருத்துவ சோதனை செய்து தேவையான சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். குடும்பத்தாரோடு பொழுதைக் கழிக்கலாம். பிள்ளைகளை வாழ்க்கையில் அமர்த்தப் பார்ப்போம் என்று யோசித்துக்  கொண்டிருந்தார். இந்த தருணத்தில் பதினைந்து வருடமாகத் தள்ளிப் போன பயணிகள் ரயில் காப்பாளர் பதவி உயர்வு கதவைத் தட்டியது! 

சாமான் வண்டி மாதிரி பயணிகள் வண்டியில் எந்த நேரமும் வெட்டவெளியில் நிற்றல், குனிதல், நெளிதல் இல்லை. சிக்னல் சேம்பர் எனப்படும்  சைகைக்கூடம் நெருங்குகையில்   வெளியே நின்று பச்சைக்கொடி  காட்ட வேண்டும். நிலையத்துள் நுழையும் போதும் வெளியேறும் போதும் அதற்கொப்ப  பகலில் கொடியும் இரவில்  நிற விளக்கையும் காட்டவேண்டும். பயணிகள் வண்டி பாதுகாப்பு என்பது பலரின் கூட்டுப் பொறுப்பு! சாமான்வண்டியளவு சிரமங்கள் இல்லை. காப்பாளரின் அறையில் உட்கார்ந்தவாறே வண்டியின் சத்தத்தைக் கவனிக்கலாம். இருக்கை எல்லாம் பயணிக்குள்ளவாறு  மெதுமெதுப்பான இருக்கை தான். 

ஆனால் தூங்கவோ, பாட்டு கேட்கவோ, கைப்பேசியை நோண்டவோ முடியாது. அது அலுவலக சிம் குறிப்பிட்ட செயலிகள் மட்டுமே கொண்டவை! சாமான் வண்டிபோல வெட்ட வெளி வெக்கையில் வெந்திடாமல் குளிர்ச்சியை அனுபவிக்கலாம். காற்றாடியில் புழுக்கத்தை விரட்டலாம். பயணிகள் இறங்குவதை  ஏறுவதைப் பார்த்துதான் கொடி அசைக்கணும்!  பாதுகாப்பு காவலர்கள் கண்காணித்து விசில் அடிப்பார்கள். எனினும் தான் கவனமாக இருக்க வேண்டும்! 

கூடுதலாக ஓர் ஊக்க ஊதியமும் அதற்கான பஞ்சப்படி முதலானவை கிடைத்தாலும் இத்தனை நாள் வெயிலில்  வெந்ததுக்கு நிழலை கொஞ்சம் அனுபவிப்போமே என்று பயணிகள் வண்டி காப்பாளர்  பணியை ஏற்றுக் கொண்டார். 

முப்பத்தைந்து வருட சிரமங்களை நினைத்துப் பார்த்ததில் அயற்சியும், வெயிலில் கிடந்தவனை குளிரில் நடுங்க விட்ட  வெப்பநிலை மாற்றமும் உடலை ஏதோ செய்தது . அப்படியே  இருக்கையில் சாய்ந்தார். 

எழும்பூர் ரயில் நிலையத்தில் நண்பர்கள் ஆர்வமுடன் காத்திருந்தனர். நரசிம்மன், நிலைய மேலாளரிடம் வண்டி தாமதம் பற்றி விசாரித்து விட்டு, மேலாளரையும் விருந்துக்கு வருவதை  உறுதிப்படுத்தக் கேட்டுக் கொண்டார். மேலாளர் எள்ளலாகச் சிரித்தார். நரசிம்மன், நிலைய மேலாளரிடம் சிரிப்பின் அர்த்தம் கேட்டார். “""நீங்க, சுந்தரம் பதவி உயர்வுக்கு விருந்து எதிர்பார்த்து காத்துகிட்டிருக்கீங்க. ஆனா சுந்தரத்திற்கு மெமோ கொடுக்க மூன்று ஸ்டேஷன்களிலிருந்து சிபாரிசு மின்னஞ்சல்களாக வந்துருக்கு''

“""என்ன சார் சொல்றீங்க? விவரமா சொல்லுங்க!''” 

“""நரசிம்மா,  சுந்தரம் திண்டிவனத்திலிருந்து செங்கல்பட்டு வரைக்கும் எந்த ஸ்டேஷனிலும் சிக்னல் காட்டலையாம்! விளக்கம் கேட்கச் சொல்லி அந்தந்த ஸ்டேஷன்களிலிருந்து மின்னஞ்சல் வந்து  இருக்கு! வண்டி தாம்பரத்தை நெருங்கிகிட்டிருக்கு. அவரது போனுக்கு அடிச்சா... பதில் இல்லை! தாம்பரத்தில் இரண்டு நிமிடம் நிற்கும். எதுவும் பதில் வருதான்னு பார்ப்போம்''” என்றார். நரசிம்மன் உள்ளிட்ட நண்பர்கள் பதறிப் போனார்கள்.

தாம்பரம்,  மாம்பலம் நிலையங்களிலுருந்து எந்த விதத்திலும் தகவலும் இல்லை. அடுத்த அரைமணி யில் வண்டி எழும்பூர் நிலையத்துக்குள் நுழைந்தது.  நண்பர்கள் காப்பாளர் அறைக்குள் பதட்டத்துடன் நுழைந்தனர். அங்கே சுந்தரம் மயங்கிய நிலையில் கிடந்தார். வாயில் எச்சில் வடிந்திருந்தது. நிலைய மருத்துவருக்கு தகவல் சொல்லப்பட்டது.  நண்பர்கள் தங்களுக்குத் தெரிந்த முதலுதவி செய்து கொண்டு மருத்துவர் வருகைக்காக காத்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com